பொதுவாக தொலைக்காட்சி நேர்காணல்களில் நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் என்பது போன்ற அறிவான கேள்விகளே கேட்கப்படும். ஆனால் இப்போது கொஞ்சம் மாறி விட்டது. மக்கள் தொலைக்காட்சியில் என்னோடு உரையாடிய கௌதம் மற்றும் அபர்ணா இருவரும் அந்த நேர்காணலை மிகவும் சுவாரசியமாகவே செய்தனர். என் எழுத்தோடு நன்கு பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தனர். அந்த நேர்காணல் இன்று காலை மக்கள் தொலைக்காட்சியில் காலை ஏழு மணிக்கு ஒளிபரப்பப்பட்டதாக அறிந்தேன். பார்த்தவர்கள் நன்றாக இருந்ததாகத் தெரிவித்தனர். நான் கடந்த சில தினங்களாக கோபி கிருஷ்ணனின் எழுத்துலகில் மூழ்கியிருப்பதால் இதையெல்லாம் மறந்து போனேன். நடைப்பயிற்சிக்குச் செல்லும் போதுதான் எங்கு பார்த்தாலும் கரும்பைப் பார்த்ததும் இன்று பொங்கல் என்பதே ஞாபகம் வந்தது. அந்த மக்கள் தொலைக்காட்சி நேர்காணல் மீண்டும் ஒளிபரப்பாகுமா என்று எனக்குத் தெரியவில்லை.
நியூஸ் 7 என்ற சேனலில் நண்பர் உமா மகேஸ்வரன் என்னைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டி நாளை ஒளிபரப்பாகலாம். அது யூடியூபிலும் வெளிவரும். உமா மகேஸ்வரன் என் எழுத்துக்களை மனப்பாடம் செய்திருப்பார் போலிருக்கிறது. எனக்கே மறந்து போனதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறார். அற்புதமான மனிதர். நீண்ட நேரம் நாகேஸ்வர ராவ் பூங்காவில் உரையாடினோம். அதுவும் நாளை ஒளிபரப்பாகும். உமா மகேஸ்வரன் என் மதிப்புக்குரிய ஆசிரியர் புலியூர்க் கேசிகனின் பேரன் என்று சொன்னார். இரட்டிப்பு சந்தோஷம்.
நேற்று ராயப்பேட்டை புத்தக விழாவுக்கு ஐந்து மணி அளவில் சென்று உயிர்மை அரங்கில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தேன். சாரிசாரியாக மக்கள் வரிசையில் நின்று மனுஷ்ய புத்திரனிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஒரே ஒரு அம்மணி என்னைப் பார்த்து நீங்கள் மணியம் செல்வனா என்றார். இல்லை, பொன்னியின் செல்வன் என்று மனதில் நினைத்துக் கொண்டு ஆமாம் என்று தலையாட்டினேன்!) ஆமாம் என்று தலையாட்டினேன். மனுஷைப் பார்த்து ரொம்பப் பெருமிதமாக இருந்தது. (பொறாமை என்று சொன்னால் தப்பாச்சே?) எவ்ளோ உயரத்துக்குப் போய் விட்டார் மனிதன்! மற்றபடி விழாவில் கூட்டமே இல்லை. விளம்பரம் இல்லை என்று சொன்னார்கள். ஒரு கடையில் ஆயிரம் ரூபாய் புத்தகமெல்லாம் நூறு இருநூறுக்கு அள்ளித் தருகிறார்கள். கையில் நூறு ரூபாய்தான் இருந்தது. அந்தப் பக்கம் வந்த பிரபு காளிதாஸிடம் கேட்டேன். 150 ரூபாய் இருக்கிறது என்றார் என்னை விடப் பிச்சைக்காரனாக இருக்கிறாரே, 150 ரூபாயில் குமுதம் ஆனந்த விகடன் தானே வாங்க முடியும் என்று நொந்தபடி அலைந்த சமயத்தில் உயிர்மை அரங்கில் இருந்த செல்வியிடம் இது பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தேன். என் புலம்பலைப் பார்த்து விட்டு அவர் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தார். (போய் வரிசையில் நின்று விடாதீர்கள் நண்பர்களே!) ஆயிரத்துக்கு அள்ளினேன். ஆனால் அதற்கு மேலும் புத்தகங்கள் இருந்தன. பணம் இல்லை. மீண்டும் செல்வியிடம் கேட்டால் நன்றாக இருக்காதே? யோசித்தபடி, ஒரு புத்தகத்தை எடுத்து இதை ஒளித்து வையுங்கள், நாளை பணம் புரட்டிக் கொண்டு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றேன் கடைக்காரரிடம். அவரோ சும்மா எடுத்துச் செல்லுங்கள் என்றார். நாளை வந்து காசு தந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன். 200 ரூ கொடுக்க வேண்டும். இன்று யாரிடமாவது 200 ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போய் அந்தக் கடைக்கார நண்பரிடம் கொடுத்து விடலாம் என்று ப்ளான் பண்ணியிருக்கிறேன். எந்தக் கடை என்று சொல்ல மாட்டேன். இன்றும் போய் இன்னும் கொஞ்சம் புத்தகங்களை அள்ள வேண்டும். அள்ளி விட்டு எந்தக் கடை என்று சொல்கிறேன். எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். யாரிடம் கேட்கலாம் என்ற யோசனையில் இருக்கிறேன்… மாலை நான்கு மணிக்குள் பெருமாள் கண்ணைத் திறப்பார் என்று நம்பிக்கை…