கீழ்க்காணும் சிறு பதிவு அராத்து முகநூலில் எழுதியது. இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் – கெட்ட வார்த்தை மற்றும் பத்திரிக்கை என்ற வார்த்தை தவிர – மற்ற எல்லாவற்றையும் நானும் எழுதியதாகக் கொள்ளவும். (நானும் சுவற்றில் மோதிப் பார்த்தேன், தரையில் விழுந்து புரண்டு அழுது பார்த்தேன். பத்திரிக்கை இல்லை, பத்திரிகை என்று. ஆனாலும் என் நண்பர்கள் கேட்பதே இல்லை. எனவே இது போன்ற சிலது தவிர்த்து இந்தக் கட்டுரை என் கட்டுரை. இந்த ஜெயகாந்தனின் மரணப் படுக்கையில் வைரமுத்து கோல்மால் பண்ணியது எனக்குத் தெரியாது. ஆனால் அசோகமித்திரனிடமும் அப்படி ஒரு கையெழுத்து வாங்கப் பார்த்தார் வைரமுத்து. அசோகமித்திரன் சோப்ளாங்கியாக இருந்தாலும் வைரமுத்துவை சமாளித்து விட்டார். இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டே இருந்து கடைசியில் டாட்டா சொல்லி விட்டார். ஆனால் கடைசி காலத்தில் ஒரு கையெழுத்துக்காக வைரமுத்து பண்ணின அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அசோகமித்திரன் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டார். இனி அராத்து:
வைரமுத்துவும் இலக்கியமும் பின்னே தமிழ் இந்துவும் அல்லது அஜக்கு என்றால் அஜக்குத்தான் குமுக்கு என்றால் குமுக்குத்தான்.
தமிழ் இந்து தெரிந்தே ஏன் நடித்துக்கொண்டிருக்கிறது என்று புரியவில்லை. மற்ற நாளிதழ்களை விட தன்னை புத்திசாலி நாளிதழாகவும், பண்பாட்டு நாளிதழாகவும் காட்டிக்கொள்ள முயலும் த.இ இப்போது நெளிந்து பல்லிளித்துக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தையே தினத்தந்தி செய்திருந்தால் இது இவ்வளவு சிக்கலாகி இருக்காது. ஆனால் வணிக நாளிதழ் என்று கிண்டல் அடிக்கப்படும் தந்தி இதைப்போன்ற விஷயங்களில் தமிழ் இந்துவை விட சென்ஸிபிளாக இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனுக்கு இதைப்போல இரண்டு பக்கங்கள் ஒதுக்கிக் கொண்டாடினோம் என்கிறது. சுந்தர்.சி 50 ஆண்டு கால திரைப்பட வாழ்வை இப்படி தமிழ் இந்து கொண்டாடுமா ? 100 படங்களுக்கு மேல் இயக்கிய மறைந்த இயக்குநர் இராம. நாராயணனுக்கு இதைப்போலச் செய்தார்களா ? அங்கு மட்டும் மகேந்திரன் – சுந்தர் .சி வித்தியாசம் தெரிந்த இந்துவுக்கு இங்கு ஏன் அசோகமித்திரன் – வைரமுத்து வித்தியாசம் தெரியவில்லை. கவிதை என்றால் என்னவென்றே சரிவரத் தெரியாத என்னைப்போன்ற சோட்டா பச்சாக்களுக்கே தெரிகிறது- பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், தேவதேவன், தேவதச்சன் , முகுந்த் நாகராஜன் போன்ற கவிஞர்கள் வேறு – வைரமுத்து, நா.முத்துகுமார், வாலி, கமல்ஹாஸன், தனுஷ், யோகி பி போன்ற பாடலாசிரியர்கள் வேறு.சிறுபத்திரிக்கை பாரம்பரியத்தில் வந்த, தமிழ் இந்துவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய அத்தாரிட்டியான அந்த மூன்று பேருக்குத் தெரியாதா ? (“போன்ற” க்கு பழிக்குப் பழி “அந்த”)இலக்கியம், பாடல், கேளிக்கை இதில் உயர்வு தாழ்வு என்றெல்லாம் எந்த பஞ்சாயத்தும் இல்லை. வரலாற்றுப் பேராசிரியர் தன்னை அப்ளைட் மேத்தமேட்டிக்ஸ் அறிஞர் என்று சொல்லிக்கொள்வாரா? கணிதத்தில் நோபல் பரிசுக்கு முயல்வாரா? சினிமாவில் பேர், புகழ், பணம் என்று எல்லாம் கிடைத்தும் இந்த இலக்கிய வாக்கரிசிக்கு ஏனோ வைரமுத்து போன்ற சிலர் பாடுபடுகிறார்கள். அது அவர்களின் உரிமை. அதற்கு தமிழ் இந்து காவடி தூக்குவதுதான் கேள்வி கேட்கப்படுகிறது. கமல்ஹாஸன் ஞானக்கூத்தனுடன் ஃபிரண்ட் ஆனார். அவரை மேடையில் வைத்துக்கொண்டே அவரிடம் தன் “கவிதையை”ப் படித்துக் காட்டினார். ஞானக்கூத்தன் “மம்மி” போல அமர்ந்திருந்தார். இதை என் கண்ணால் நான் பார்த்தேன். ஞானக்கூத்தன் எப்போதாவது கமலிடம் , “நான் அடிச்சா நீ செத்துருவ ” என்றோ , “கண்ணு வேணும்னு கேட்டியாமே” என்பது போலவோ நடித்துக் காட்டி, சினிமாவில் ஒரு கேரக்டர் கேட்டிருப்பாரா? இதற்கே ஞானக்கூத்தன் ரிச் டாடி போல ஸ்கிரீன் ப்ரஸன்ஸ் கொண்டவர். வைரமுத்து இதேபோல திடீரென்று குமுதத்தில் “இலக்கியத்தரமான” சிறுகதைகள் எழுதி நம்மையெல்லாம் கால இயந்திரத்தில் ஏற்றி 1970 களுக்கு பின்னே கொண்டு சென்றார். அதோடு விஷயம் முடியவில்லை. அந்தச் சிறுகதைகளைப் பாராட்டி ஜெயகாந்தன் எழுதிய கடிதமும் குமுதத்தில் பிரசுரமானது.பின்னர்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜெயகாந்தன் குத்துயிரும் கொலையுயிருமாக சுயநினைவின்றி படுக்கையில் கிடக்கும் போது ஐயா கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தானே எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு போய் கையெழுத்து போடச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். எமன் வந்து விட்டானோ என திருதிருவென ஜெயகாந்தன் விழித்துக்கொண்டு இருக்கையில் , ஜெயகாந்தனால் கையெழுத்து கூட போட முடியாது என்று தெரியவருகிறது. அதனால் ஐயாவே கையெழுத்துப் போட்டுக்கொள்கிறார். இதையெல்லாம் ஜெயகாந்தன் மகள் ஃபேஸ்புக்கில் போட்டு உடைக்கிறார். இது எல்லாம் தமிழ் இந்துவுக்குத் தெரியும். பெயர், புகழ், அரசியல் செல்வாக்கு, மத்திய அரசு விருதுகள், பணம் எல்லாம் இருந்தும் ஏன் இவர்கள் இந்த இலக்கிய திருவோட்டுக்கு அலைகிறார்கள்… ஏனென்றால் அந்த திருவோடு மட்டும் வரலாற்றில் இடம்பெறும். இந்த சினிமா கவர்ச்சி, பணம், புகழ் எல்லாம் அடுத்த 50 ஆண்டுகளில் மறக்கப்பட்டுவிடும். இலக்கிய எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் மேற்சொன்ன பணம் செல்வாக்கு ஏதும் கிடையாது. வெறும் இலக்கியம் என்னும் திருவோடு மட்டுமே. அந்தத் திருவோட்டையும் அவர்கள் கையில் இருந்து திருட்டுத்தனமாக பிடுங்கினால் எப்படி ? ஏற்கனவே வெளிநாட்டு வாழ் பொதுத் தமிழர்கள் மத்தியில் இலக்கியம் என்றால் வைரமுத்து என்று ஸ்தாபித்தாகி விட்டது. உலகத் தமிழ் வரலாற்றிலும் நவீனத் தமிழ் இலக்கிய ஆளுமைகளை எல்லாம் கொட்டையடித்து கொன்றுபோட்டு கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் நவீனத் தமிழ் இலக்கியமாக முன்னிறுத்தி நவீனத் தமிழ் இலக்கியத்தை முண்டகட்டையாக கூனிக் குறுக வைக்கவேண்டும். வைரமுத்து என்ற ஒற்றை மனிதன் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவதற்கு ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கிய உலகமும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். தன்னுடைய செல்வாக்கு, சினிமா புகழ், லாபி செய்யும் திறமை, பணபலம் இதையெல்லாம் வைத்து வைரமுத்து செய்வது ஒரு தமிழ் லிட்ரேச்சர் ஜெனோசைட் இல்லையா ? இதற்கு துணை போவதுதான் தமிழ் இந்துவின் வேலையா ? – தொடரும்
அடுத்து வைரமுத்துவும் இளம் ஃபிகர்களும் பின்னே திராவிட இயக்க முற்போக்காளர்களும் அல்லது “பள்ளப்பட்டி ஓடையில கோக்குமாக்கு ஆகிப்போச்சி எனக்கு”