எதிர்மறையான விஷயங்களை எழுதக் கூடாது என்று நினைத்தாலும் நடப்பது பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன. நண்பரைப் பற்றிப் பாராட்டி எழுதி ஈரம் காயவில்லை; அதற்குள் அவர் வைரமுத்து போற்றி எழுதிவிட்டார். இங்கே பிரச்சினையே என்னவென்றால், சிறு பத்திரிகைகளில் 22 வயது இளைஞர்கள் முதல் சிறுகதை எழுதுவார்கள். அவர்களது பயிற்சி, புதுமைப்பித்தன், செல்லப்பா, க.நா.சு., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், ஆதவன் என்று தொடங்கி வந்திருக்கும். இந்த முன்னோடிகளிடமிருந்து கற்ற பிறகு பயந்து பயந்து ஒரு சிறுகதை எழுதிப் பார்ப்பான் இளைஞன். கவிதை எழுதிப் பார்ப்பான். சிறுகதைக்கு அபாரமான பாராட்டு கிடைக்கும். கொஞ்சம் துணிச்சல் வந்து ஒரு நாவலையும் எழுதி விடுவான். அப்படி எழுதியதுதான் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும். அப்படி எழுதியதுதான் ரப்பர். இப்படித்தான் எல்லா இளைஞர்களும் இலக்கியத்தின் உள்ளே நுழைகிறார்கள். இப்படி நுழைந்த இளைஞர்கள் தங்கள் ஆரம்ப காலத்தில் எழுதிப் பார்க்கிறார்கள் இல்லையா சிறுகதை, கவிதை என்று, அதன் நிழலைக் கூடத் தொடும் அளவுக்கு இலக்கியத்தில் எதுவும் செய்திராதவர் வைரமுத்து. அவர் இலக்கியம் என்று நினைத்து எழுதியது எல்லாமே அகிலன் வகையறா எழுத்து. அகிலனை என்ன சொன்னார் சுந்தர ராமசாமி என்பது இதற்குள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
இது வைரமுத்துவுக்கும் தெரியும். ஆனாலும் சினிமா புகழ் ஒருவரது ஆயுளோடு போய் விடும். வைரமுத்து அவரது சினிமா பாடலுக்காக பல முறை மத்திய அரசு விருது வாங்கியவர். சிவாஜிக்கெல்லாம் அந்த விருது ஒருமுறை கூட கிடைக்கவில்லை. ஆனால் வைரமுத்து பலமுறை வாங்கியிருக்கிறார். அதற்குத் தகுதியானவரும் கூட. அவரது சினிமாப் பாடல்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் இந்தக் கவிப் பேரரசு என்பதெல்லாம் சும்மா பம்மாத்து வேலை. கண்ணதாசனை மக்கள் அன்பின் மிகுதியால் கவியரசு என்று அழைத்ததால் வைரமுத்து பேரரசு ஆக்கிக் கொண்டார். மற்றபடி கண்ணதாசனை நேசிக்கப்பட்ட அளவுக்கு வைரமுத்து மக்களால் நேசிக்கப்பட்டவர் அல்ல. இத்தனைக்கும் கண்ணதாசனின் குடிப் பழக்கமும் இறுதிக் காலத்தில் பெத்தடின் போதை ஊசிப் பழக்கமும் ஆரம்ப காலத்திலிருந்தே பெண் சகவாசமும் ஊர் அறிந்த விஷயம். பொதுவாக ஒழுக்கம் சார்ந்த விதிகளைச் சார்ந்து தங்கள் ரசனையை வளர்த்துக் கொள்ளும் தமிழ்ச் சமூகம் கண்ணதாசனைப் பொறுத்தவரை இந்தப் பெண்கள் விஷயத்தைக் கண்டும் காணாமல் அல்ல, கண்டு கொண்டே ரசித்து மகிழ்ந்தது. கவிஞன் அப்படித்தான்யா இருப்பான் என்று சொன்னது. ஏன் தெரியுமா? ஒரே காரணம். கண்ணதாசன் ஒரு காலத்திலும் predatorஆக இருந்ததில்லை. அந்தக் காலத்து சுல்தான்களைப் போல் வாழ்ந்தவர். மேலும், அவர் காலத்தில் அவரைப் போன்ற இடத்தில் இருந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எம்.ஆர். ராதா போன்று பல உதாரணங்கள். Predator என்றால் என்ன? பெண்களைத் தங்களின் இரைகளைப் போல் நினைப்பது. தங்களின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, பெண்களைப் பணிய வைப்பது. அவர்களுக்கு வேறு வழியே இல்லாமல் ஆக்குவது. சான்ஸ் வேண்டும் என்றால் படு. இதுதான் ப்ரீடேட்டரின் பாணி. கண்ணதாசன் ஒருபோதும் இதைச் செய்ததில்லை. இப்போது விவாதத்துக்கு உட்பட்டவர் அப்படிப்பட்ட predator என்கிறார்கள் திரைத்துறைப் பெண்கள். இது அவர்களும் வைரமுத்துவும் சட்டமும் சம்பந்தப்பட்ட விஷயம்.
ஆனால் இலக்கியத்துக்குச் சம்பந்தமில்லாத ஒருவர் இலக்கிய அந்தஸ்துக்காக ஏன் இப்படி அலைகிறார்? சினிமா புகழ் ஒருவரது ஆயுளோடு முடிந்து விடும். அந்தக் காலத்து சூப்பர் ஸ்டாரான பாகவதரை இன்று யாருக்குத் தெரியும்? பி.யு. சின்னப்பா? அதற்கும் முன்னால் எஸ்.ஜி. கிட்டப்பா? பெயரையே கேள்விப்பட்டதில்லை. அதை விடுங்கள். பாடல்களில் வாலி கண்ணதாசனுக்கு முந்தைய பெயர்கள் அனைத்தும் மறைந்து விட்டன. என்னைப் போன்ற ஆட்கள் சிலருக்கு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் பாபநாசம் சிவனும் தெரியும்.
அராத்து நேற்று பிரமாதமாக எழுதியிருந்தார். இலக்கியவாதியிடம் புகழும் கிடையாது, புண்ணாக்கும் கிடையாது. அதிகாரம்? புகழே கிடையாது என்றால் அதிகாரம் எங்கிருந்து வரும்? எழுத்தாளனிடம் இருப்பது ஒன்றே ஒன்றுதான். திருவோடு. இந்தத் திருவோட்டின் மகிமை என்னவென்றால், இது இருபது நூற்றாண்டுக்கு மேல் நிற்கும். அதை எழுத்தாளன் கையிலிருந்து பிடுங்கு என்கிறார் வைரமுத்து. அவ்வளவுதான் விஷயம். அதைக் கூட அவர் செய்து கொண்டு போகட்டும் என்கிறேன் நான். ஞானபீடம் கூட வாங்கிக் கொள்ளட்டும். ஏனென்றால், காலத்துக்குத் தெரியும், யார் நிஜத் திருவோடு, யார் காகிதத் திருவோடு என்று. காகிதம் மக்கி விடும். ஆனால் வைரமுத்து எழுத்தாளனின் திருவோட்டைப் பிடுங்கிக் கொள்ள இங்கே உள்ள எழுத்தாளக் குஞ்சுகளே ஏன் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகின்றன? அதுவும் இத்தனை நாள் இலக்கிய உலகில் தாதாவாக வலம் வந்து விட்டு? ஷங்கர் ராமசுப்ரமணியனைத்தான் சொல்கிறேன்.
நல்லவேளை, நான் எப்போதும் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கிறேன். அதனால் எனக்கு வருமானம் இல்லை. வீடு இல்லை. வாடகை வீடுதான். என்னுடைய பத்தாயிரம் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக அலைய வேண்டியிருக்கிறது. மைலாப்பூர் பிராமணர்கள் சைவ உணவுக்கு மட்டுமே வீடு என்று சொல்லி என்னைத் துரத்தி அடிக்கிறார்கள். மாதம் ஒருமுறைதான் மீன் சாப்பிடுவேன் என்றாலும் இடமில்லை. ஒரே ஒரு மனிதாபிமான பிராமணர் ஸ்விக்கியில் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள், நோ அப்ஜெக்ஷன் என்றார். சார், ஸ்விக்கியெல்லாம் அவந்திகாவின் மீன் சமையலுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும் என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன். ஒரு வீட்டில் 50000 ரூ. வாடகை, வெஜெடேரியன்ஸ் ஒன்லி என்று பெரிய போர்டு போட்டிருந்தது. எனக்கென்று என் புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை, ஒன்றே ஒன்றைத் தவிர.
அதுதான் பணத்தை விடவும், சொந்த வீட்டை விடவும், புகழை விடவும் மதிப்பு மிகுந்ததாக எனக்குத் தோன்றுகிறது. அது பிரமுகர்களின் நட்பு. எனக்கு மணி ரத்னமோ கமல்ஹாசனோ இயக்குனர் ஷங்கரோ நெருங்கிய நண்பராக இருந்தால் வைரமுத்து பற்றி இப்படியெல்லாம் எழுதினால் அவர்களிடமிருந்து போன் வரும். வந்தாலும் எழுதுவேன். நட்பு முறிந்து விடும். அதை விட இப்படியே யாருக்கும் தெரியாமல் என் இஷ்டப்படி இருந்து விட்டுப் போவது சுகம்.
ஆக, என் சுதந்திரமே என் ஆகப் பெரிய சொத்து.
இதை நான் 25 ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பரிடமிருந்து கற்றேன். கமல்ஹாசனிடமிருந்து அவருக்கு மூன்று பக்கக் கடிதம். நானே பார்த்தேன் என்பதால் நான் அதை நம்பித்தான் ஆக வேண்டும். ஏன் நமக்குள் பகை, நாம் சந்திக்க வேண்டும். இதுதான் மூன்று பக்கத்தின் சுருக்கம். நண்பரிடம் கேட்டேன். சந்தித்து விடுங்களேன். சந்தித்தால் என் சுதந்திரம் பறிபோய் விடும். எனக்கு கமல் நினைப்பது போல் அவரிடம் பகை ஒன்றும் கிடையாது. சுதந்திரமாக எழுதுகிறோம். கலாய்க்கிறோம். சந்தித்தால் சுதந்திரம் போய் விடும். வைரமுத்துவிடமிருந்து கடிதத்துக்கு மேல் கடிதம். பிறகு தூது. அந்த விஷயத்தில் கமலை விட வைரமுத்து திறமைசால். கமலால் முடியாததை வைரமுத்து சாதித்து விட்டார். சந்திக்கவில்லை. ஆனால் அதற்கு மேல் டைமண்டு என்று எழுதுவதில்லை. நண்பர் சொன்னார். ஒரு பெரிய இடத்துக்குப் போய் விட்டால், யாரோடும் நட்பு பாராட்டக் கூடாது. அது தொல்லையாகப் போய் விடும். நம் சுதந்திரத்தை பாதிக்கும்.
எத்தனையோ சினிமா நண்பர்கள் ப்ரிவியூவுக்கு அழைப்பார்கள். செல்வேன். வெளியே வரும்போது மைக்கை நீட்டுவார் ஒரு தம்பி. விடியோவில் நம் கருத்து ப்ரமோவாகப் போகும். குப்பைப் படமாக இருக்கும். ஆஹா ஓஹோ என்று சொல்ல வேண்டும். இயக்குனர் நண்பர். நான் மட்டுமே ஒன்றும் சொல்ல மாட்டேன். இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு நழுவி விடுவேன். ஒரு முறை. படம் படு குப்பை. முகநூலில் எழுதியிருப்பேன். ஆனால் இயக்குனர் என்னிடம் வந்து ”ஐந்து ஆண்டாக படம் எதுவும் இல்லை. இதுதான் கிடைத்தது. படம் உங்களுக்குப் பிடித்திருக்காது என்று நினைக்கிறேன். பிடித்திருந்தால் நீங்களே வந்து என்னிடம் சொல்லியிருப்பீர்கள். என் ஒரே வேண்டுகோள்தான். படம் பற்றி எதிர்மறையாக எழுதி விடாதீர்கள். என் எதிர்காலமே உங்கள் கையில் இருக்கிறது” என்றார். எழுதவில்லை. இன்று வரை படம் வெளிவரவில்லை. நானும் அந்தப் படம் பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை. நீங்களும் யூகிக்க முடியாது. ஏனென்றால், வெளிவராத படங்கள் பல உண்டு. அதிலிருந்து நான் ப்ரீவ்யூவுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டேன்.
என்னிடம் எதுவுமே இல்லை. ஆனால் சுதந்திரம் இருக்கிறது. அதுதான் ஆகப் பெரிய சுகம்.
***
இந்த மாத சந்தா சற்று சுணக்கமாக உள்ளது. கவனியுங்கள்.
26-ஆம்தேதி க.நா.சு. சந்திப்புக்காகப் படிக்க ஆரம்பித்து விட்டேன். வழக்கம் போல் இந்திய நேரம் காலை ஆறு மணி. ஞாயிறு. மூன்று மணி நேரம் போகும். ஏதேனும் கேள்விகள் இருந்தால் அனுப்பலாம்.
யாரும் என்னுடைய அரூ பேட்டியைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒரு எதிர்வினை கூட இல்லை. 60 பக்கம் என்பதால் ஒத்திப் போட்டு விட்டார்கள். நல்லது. நெருங்கிய நண்பர்களிடம் கூட கேட்டேன். குற்ற உணர்வு மிக இன்னும் படிக்கவில்லை என்றார்கள். அதிலிருந்து கேட்பதை நிறுத்தி விட்டேன். ஏன் நம்மால் மற்றவர்களுக்குக் குற்ற உணர்ச்சி? ஆனால் தவறாமல் அராத்து கட்டுரையைப் படித்திருந்தார்கள். கேடயம் அராத்துவுக்குப் போய் விட்டது. சும்மா சொல்லக் கூடாது. என்னைப் பற்றி இதுகாறும் எழுதப்பட்டவைகளில் ஆகச் சிறந்த கட்டுரை அராத்துவினுடையதுதான். இடது கண்ணைச் சிமிட்டியபடி என்ற என்னைப் பற்றிய அவரது சித்திரத்தை மிகவும் ரசித்தேன். நான் அதைப் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது.
***
நேற்று கணினிக்குச் செல்லும் ஒயரை பூனைக்குட்டி கடித்து விட்டதால் நேற்று முழுவதும் இண்டர்நெட் இல்லை. ஆனால் நாவலை எடிட் செய்யவும் நாவல் எழுதவும் அது தேவையில்லை என்பதால் அந்த வேலையில் இருந்தேன். ஏர்டெல் ஆசாமிக்கு போன் செய்திருந்தாள் அவந்திகா. மாலையில் வருவதாகச் சொல்லியிருந்தார் அன்பர். வரவில்லை. நான் வேலையில் ஆழ்ந்து விட்டேன். காலையில் எழுந்ததும் வாயில் நல்லெண்ணையை வைத்துக் கொண்டே ஏர்டெல் ஆசாமிக்கு போன் செய்யச் சொன்னாள் அவந்திகா. செய்தேன். அவரோ 121க்கு போன் செய்யுங்கள், அங்கே போன் செய்யாமல் நான் வர இயலாது என்று சொல்லி விட்டார். ஆஹா, இதை நேற்றே சொல்லியிருந்தால் ஒரு நாள் மிச்சமாகி இருக்குமே என்று நினைத்துக் கொண்டு அதை மறந்து விட்டேன். உடனே அவந்திகா ஓடி வந்து 121க்கு போன் போடச் சொன்னாள். போட்டேன். ஏதேதோ ஒன்றை அழுத்துங்கள், ரெண்டு அழுத்துங்கள், மூன்றை அழுத்துங்கள் என்று பதிவு செய்யப்பட்ட குரல் வந்து கொண்டே இருந்தது. நானும் குரல் சொன்னபடி அழுத்திக் கொண்டே இருந்தேன். கடைசியில் ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஒரு உயிருள்ள குரல் கேட்டது. குரல் அல்ல. மனிதர்தான். அவர் பேசியது ஆங்கிலம் என்று தெரிந்து கொள்ளவே இரண்டு நிமிடம் எடுத்தது. தெரிந்து கொண்ட பிறகு நான் விஷயத்தைச் சொன்னேன். உங்கள் எண் என்ன என்று கேட்டார். அதற்குள் அவந்திகா என் எண்ணைக் கொடுத்தாள். கொடுத்தேன். அதற்குப் பிறகு அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஐந்தாறு கேள்விகள் கேட்டார். எதற்குமே எனக்குப் பதில் தெரியவில்லை. புரிந்தால்தானே பதில் தெரிவதற்கு? அவர் பிஹாரியாக இருக்க வேண்டும். தில்லியிலிருந்து பேசுவாராயிருக்கும். மல்லுக்கட்டி, அவரும் மல்லுக்கட்டி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சித்து கடைசியில் அவர் வென்றார். ஐந்து கேள்விகளில் ஒரே ஒரு கேள்வியை மட்டும் எனக்குப் புரிய வைத்து விட்டார். எந்தத் தொலைபேசி எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்? என் எண்ணைச் சொன்னேன். இணைப்பு பதிவு செய்யப்பட்ட போது இந்த எண் கொடுத்திருக்கவில்லையே என்று மீண்டும் அதகளம். அவந்திகாவிடம் வந்தேன். அதற்குள் அவள் வாய் பேசும் நிலைக்கு வந்திருந்தது. நல்லெண்ணெய் இல்லை. என்னிடமிருந்து போனை வாங்கி அவளுடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்தாள். அதைத்தான் கொடுத்திருக்கிறாளாம்.
அரை மணியில் ஆள் வந்து பிரச்சினை சரி செய்யப்பட்டது.
கீழே காண்பது அரூ நேர்காணல்
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai