155. நேசமித்ரன், ஒக்தாவியோ பாஸ், ரொனால்ட் சுகேனிக் மற்றும் சிலர்…

சில தினங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் எனக்கு ஒரு கடிதம் எழுதி தான் ஒரு நாவல் எழுதியிருப்பதாகவும் அதை நான் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.  ஐயோ, அசோகாவை முடிக்கும் வரை (மார்ச்) என்னால் எந்தப் பக்கமும் திரும்பக் கூட முடியாதே என்றேன்.  நான் தான் அவரது ஆதர்சம் என்று அதற்கு முன்பே கூட சில கடிதங்கள் எழுதியிருக்கிறார்.  அவர் விடவில்லை.  நாவல் 150 பக்கம், வெறும் ஐந்து பக்கத்தைப் படித்தால் கூடப் போதும் என்றார்.  அஞ்சு என்ன பத்தே படிக்கிறேன், அனுப்பி வையுங்கள் என்றேன்.  பத்து பக்கம் படித்தேன். சுவாரசியமாகவே இருந்தது.  ஆனால் முதல் பக்கத்திலேயே ஒரு விஷயத்தை கவனித்தேன்.  நாவலில் எந்த நிறுத்தற்குறிகளும் இல்லை.  பக்கங்களை மாற்றினால் நூற்றைம்பது பக்கங்களிலும் எந்த நிறுத்தற்குறிகளும் இல்லை.  அது செயற்கையாகவும் இல்லை.  உடனே அவரை ஃபோனில் அழைத்து “ரொனால்ட் சுகேனிக் மாதிரியே இருக்கே” என்றேன் பரவசத்துடன்.  சாரு, ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா என்றார் சீரியஸான தொனியில்.  நான் சொன்னதற்கு அவர் சந்தோஷம் அல்லவா அடைந்திருக்க வேண்டும், ஏன் இந்த சீரியஸ் தொனி என்று குழப்பத்துடன் என்னங்க என்றேன்.  இப்போது சொன்னதை என் ஆயுள் பரியந்தம் வெளியே சொல்லாதீர்கள் என்றார்.  இதுதான் உதவியா?  ஆமாம் சாரு.  இதை நீங்கள் சொன்னால் போதும், எல்லோரும் என் நாவலை விட்டு விட்டு வாங்க ரொனால்ட் சுகேனிக் அவர்களே என்று என்னைக் கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  நாவல் அப்படியே போய் விடும். 

அடப்பாவிகளா, எப்பேர்ப்பட்டதொரு ஃபிலிஸ்டைன் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்துக் கொண்டேன்.  உலக இலக்கிய சமுத்திரத்தில் Ronald Sukenick என்ற ஒரே ஒருத்தர்தான் ஒரு முழு நாவலையும் நிறுத்தற்குறிகளுக்கான வழக்கமான பயன்பாட்டை உதறித் தள்ளிவிட்டு வேறு பாணியில் எழுதியிருக்கிறார்.  98.6 என்பது அதன் பெயர்.  அதை நான் என் இருபதாவது வயதிலேயே படித்துத் தொலைத்து விட்டேன்.  அது என் தவறா ஐயா? பல காலம் அந்த நாவல் நிறுத்தற்குறிகளே இல்லாமல் எழுதிய நாவலைப் போலவே என் மனதில் பதிந்து போய் இருந்தது.  அதைப் படிக்கும் யாருக்குமே அப்படித்தான் தோன்றும்.  ஆனால் நிறுத்தற்குறிகள் இருக்கும்.  இருந்தும் ஏன் நிறுத்தற்குறிகளே இல்லாத நாவல் போல் தோன்றுகிறது என்றால், அதன் எழுத்துப் பாணி அப்படி. வாக்கியத்தின் ஆரம்பத்தில் Capita letters இருக்காது.  உரையாடல்களுக்குப் பத்தியோ மேற்கோள் குறிகளோ இருக்காது.  எழுத்துப் பாணி சுகேனிக்குக்கு முன்னாலோ பின்னாலோ வேறு யாராலும் பின்பற்றப்படாததாகவே இருந்தது.  ஒரே ஒரு விதிவிலக்குதான்.  Walter Abish.  அவருடைய Alphabetical Africa என்ற நாவல் அவருடைய எழுத்தில் குறிப்பிடத்தகுந்தது.  இந்த நாவல் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  முதல் அத்தியாயத்தில் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் மட்டுமே இருக்கும்.  இரண்டாம் அத்தியாயத்தில் A மற்றும் B ஆகிய இரண்டு எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் மட்டுமே இருக்கும்.  இப்படியே மூன்றாம் அத்தியாயத்தில் A, B, C என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளால் அந்த அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.  இப்படி A-இலிருந்து Z வரை போகும்.  Z அத்தியாயத்தில்தான் எல்லா ஆங்கில எழுத்துக்களிலும் ஆரம்பிக்கும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  இதோடு முடியவில்லை.  பிறகு நாவல் இறங்கு வரிசையில் போகும்.  Zயிலிருந்து தொடங்கி திரும்பவும் A வரை.  கடைசி அத்தியாயத்தில் திரும்பவும் Aவில் ஆரம்பிக்கும் வார்த்தைகளால் மட்டுமே அத்தியாயம் இருக்கும். 

வால்டர் அபிஷை experimental writer என்று சொல்கிறார்கள்.  ஆனால் சுகேனிக் இன்னும் ஆழமானவர்.  கோட்பாடுகள் எல்லாம் எழுதியிருக்கிறார்.  ரொலான் பார்த் எழுத்தாளன் இறந்து விட்டான் என்று அறிவித்தார் அல்லவா?  சுகேனிக் நாவல் இறந்து விட்டது என்று சொல்லி அதை செயல்படுத்திக் காட்டுவதற்காகத்தான் 98.6 நாவலை எழுதினார்.  இதன் எழுத்து மொழி இதுகாறும் நீங்கள் கண்டிராததாக இருக்கும்.  ஆனால் என்னுடைய சில சிறுகதைகளிலும் ஸீரோ டிகிரி நாவலிலும் அந்தப் பாணியைக் காணலாம்.  ஆனால் அதை எழுதும் போது எனக்கு சுகேனிக்கின் எழுத்தில் அத்தனை தீவிர பரிச்சயம் இல்லை.  இப்படி இப்படியெல்லாம் இருக்கிறது என்று தெரியும், அவ்வளவுதான்.  அகஸ்தோ போவாலின் ஃபோரம் தியேட்டர் கோட்பாடு தெரியாமலேயே மதுரையில் ஒரு ஃபோரம் தியேட்டர் நாடகத்தை நிகழ்த்தவில்லையா, அது போல.  இப்போது நான் எழுதுவதை விழுந்து விழுந்து படித்து பாயைப் பிறாண்டிக் கொண்டிருக்கும் சைக்கோ என்ன தெரியும் தெரியுமா?  சுகேனிக்கின் பெயர் தெரிந்து விட்டதா, அதைப் போய் எட்டிப் பார்த்து சாரு சொல்வது பொய், இவன் அந்தப் புத்தகத்தையே பார்த்ததில்லை என்று ‘எவிடென்ஸ்’ காட்டும்.  அதற்கான தகவல் பிழைகள் இந்த என் கட்டுரையில் கிடைக்கும்.  உதாரணமாக, 98.6ஐ நான் என் இருபதாவது வயதிலேயே படித்து விட்டேன் என்று எழுதி விட்டேனா?  சாரு பிறந்த ஆண்டு 1953.  (நான் கூட மறந்திருப்பேன், சைக்கோ ஞாபகம் வைத்திருக்கும்.  என்னை வீழ்த்த என்ன செய்ய வேண்டும்?  என்னைப் பற்றின அத்தனை தகவல்களும் விரல்நுனியில் இருக்க வேண்டும்!) இருபதைக் கூட்டு.  1973.  98.6 வந்தது 1975.  இந்த சாரு மடையன் அந்தப் புத்தகத்தைப் பார்த்தது கூட இல்லை என்று கட்டுரை எழுதும்.  உடனே என் நண்பர்கள் தகவல் பிழையை சரி செய்யுங்கள் சாரு என்று எனக்கு மெஸேஜ் பண்ணுவார்கள்.  அட சைக்கோப் பயலே, உனக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றுதான் அப்படி எழுதினேன்.  நான் அதைப் படித்தது 1980.  நாவல் வந்தது 1975.  ஒருவேளை, நாவல் வந்தது 1985ஆகக் கூட இருக்கட்டுமே, நான் படித்தது 1980 என்று சொன்னால் என்ன கொள்ளை போயிற்று?  நான் என்ன பிஹெச் டி பட்டத்துக்குத் தீஸிஸா எழுதிக் கொண்டிருக்கிறேன்?  அல்லது, செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டுக் கொண்டிருக்கிறேனா?  நான் ஒரு படைப்பாளி.  ஆய்வாளன் அல்ல.  நான் எழுதுவதுதான் ஆண்டு.  என் வாசகர்கள் சரி செய்து படித்துக் கொள்வார்கள்.  நீ மூடிக் கொண்டு போ.  என்னுடைய கட்டுரைகளில் தகவல் பிழைகள் இருக்கத்தான் செய்யும்.  அதைச் சரி செய்ய வேண்டியது எடிட்டர்.  தமிழில்தான் எடிட்டர் என்ற ஜாதியே கிடையாது.  என்ன செய்வது?  ஆனால் இன்றைய கூகிள் காலத்தில் ஒரு தட்டு தட்டினால் எது என்ன என்பதெல்லாம் தெரிந்து விடும் என்பதால் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

போகட்டும், தமிழில் ஒரு ஆரோக்கியமான வாசிப்புச் சூழல் இருந்திருந்தால் என் எழுத்துக்கும் சுகேனிக்கின் எழுத்துக்குமான ஒற்றுமைகளைப் பற்றி ஒப்பிட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே யாரேனும் எழுதியிருக்கலாம்.  இன்றைய தினம் நான் ஸீரோ டிகிரியை எழுதியிருந்தால் இளைஞர்கள் அதைச் செய்திருப்பார்கள்.  25 ஆண்டுகள் முந்தி எழுதி விட்டேன். இன்றைய இளைஞர்கள் ஆங்கிலத்தில் நிறைய படிக்கிறார்கள். மேலும், தமிழ் இலக்கியத்தின் நோய்த்தொற்றுக்கு ஆளாகாதவர்களாக இருக்கிறார்கள்.  அதனால் வெகு சுலபத்தில் சுகேனிக்குக்கும் எனக்குமான ஒற்றுமையைப் பார்த்திருப்பார்கள். அந்தக் காலத்திலும் ஒரு இளைஞர் சுகேனிக் பெயரைச் சொன்னார்.  எப்படி?  சாரு சுகேனிக்கைக் காப்பி அடித்து எழுதி விட்டார்.  அவருக்கு சுகேனிக்கின் பெயரைச் சொன்னதே நான்தான்!  கதை அதோடு முடியவில்லை.  அன்னார் அடுத்த நாள் கொடுத்த பேட்டியில் ஸீரோ டிகிரியை நான்தான் எழுதிக் கொடுத்தேன் என்று வேறு சொன்னார்!  அடப்பாவி!  உச்சக்கட்ட நகைச்சுவைக் காட்சிகள்!

மற்றபடி இன்று மீண்டும் சுகேனிக் பற்றிப் படித்தபோது பல விஷயங்கள் ஆச்சரியமாக இருந்தன.  அவரும் என்னைப் போலவே ஒரு controversial writer.  ஏனென்றால், அவருடைய நாவல்களில் அவர் தன் பெயரையும் தன் நண்பர்களின் பெயர்களையும் அப்படி அப்படியே போட்டு விடுவார்.  உரையாடல்களைப் பதிவு செய்து நாவலின் இடையே சேர்த்து விடுவார்.  நாவலின் கட்டமைப்பில் நாவலுக்குரிய எந்தவித வழக்கமான அடையாளங்களும் இருக்காது.  அதேபோல், அவர் நாவல்கள் மற்ற எழுத்தாளர்களைப் போல் விற்பனை ஆவதில்லை.  அவர் சொல்கிறார், எனக்கு நாற்பதே நாற்பது fansதான்.  ஆனால் அவர்கள் அனைவரும் என் fanatics. 

Ronald Sukenick நாவல் 98.6 இலிருந்து ஒரு பக்கம்:

5/4 The Ancien Caja. How it emerges from the nonsense of a dream. How apt it is. How perfect. How well it describes. Describes what. What he’s looking for. But only the outside of and millions of yellow butterflies a jungle snowstorm of yellow butterflies.  Then in a clearing the yellow flutter thickens clots on the ground a golden clump of vibrating butter from which butterflies in flickering flecks the source of all yellow butterflies.  Not that.  But like that.  It’s like the slow throbbing of the fountain of blood in your hard prick your cranky mind for once asleep in the cradle of your body.  It’s like narrow hewn steps under massive stone blocks at the end of the darkness a pile of skulls. It’s like the secret code of the leopard’s fur and the tortoise shell.  Emerging.  From the nonsense.  Eyelid like a nostril.  Stormnuts. Eat my rubber bag.

இதையேதான் நானும் சொல்வேன், என் நெருக்கமான நண்பர்கள் யாவரும் என் தற்கொலைப் படை என்று.  சமீபத்தில் முகநூலில் என்னைத் திட்டிய சைக்கோ பற்றி காயத்ரி ஆங்கிலத்தில் எழுதியிருந்த வசை மொழிகள் ஒரு உதாரணம்.  பல வசைகளுக்கு நான் டிக்‌ஷரியைப் பார்க்க வேண்டியிருந்தது. 

இது எல்லாம் நிறுத்தற்குறிகள் இல்லாமல் நாவல் எழுதின இளைஞனின் பதிலைக் கேட்டபோது ஞாபகம் வந்தது.  ஒரு நாவலையோ கவிதையையோ படிக்கும்போது அதன் ஆங்கில, ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச் மொழி இணைகளைப் பற்றி ஒருவருக்கு ஞாபகம் வருவது தப்பா?

நேசமித்ரனின் கவிதைகள் பற்றி நான் பேசியபோதும் அவர் கவிதைகளை நான் ஒக்தாவியோ பாஸின் கவிதைகளோடு ஒப்பிட்டே பேசினேன். அய்யனார் விஸ்வநாத்தின் கதைகளையும் நாவல்களையும் படிக்கும் போதெல்லாம் எனக்கு மரியோ பர்கஸ் யோசாவின் ஞாபகமே மேலோங்கும்.  ஏனென்றால், தமிழில் யோசா அளவுக்கு சுவாரசியமாக எழுத ஆள் இல்லை.  அய்யனார் அவ்வளவு சுவாரசியமாக எழுதுகிறார்.  ஒரு கதையில் முடிவைப் பார்த்து விட்டு படிக்க ஆரம்பித்தேன்.  அப்போது நான் யோசாவின் பெயரைச் சொல்லலாமா கூடாதா?  யோசா பெயரை அமுக்கிக் கொள்ள வேண்டுமா? மேலும் ஒரு முக்கியமான விஷயம். இப்படி ஒப்பிடக் கூடாது என்று சொல்வதே ஒரு தாழ்வு மனப்பான்மை என்கிறேன்.  அவர்களெல்லாம் பெரிய கொம்பன்கள்.  நாம் பிச்சைக்கார நாய்கள்.  அப்படியா?  அப்படித்தான் நம் எழுத்தாளர்களே நினைக்கிறார்கள் போல் இருக்கிறது.  யோசா என்ன கொம்பனா?  மார்க்கேஸ் என்ன கொம்பனா?  அசோகமித்திரனும் கு.ப.ரா.வும், க.நா.சு.வும் எந்த விதத்தில் அவர்களுக்குத் தாழ்ந்து விட்டார்கள்?  ஒக்தாவியோ பாஸுக்கு எந்த விதத்தில் நேசமித்ரன் குறைந்து விட்டார்?  புத்தக எண்ணிகைதான் அளவுகோலா?  ஒக்தாவியோ பாஸைப் படிக்காதவர்களுக்குத்தான் நான் சொல்வது புரியாது போகும்.  மேலும்,  

என்னுடைய கதைகள், கட்டுரைகள், உரையாடல்கள் எல்லாமே நான் எனக்குள் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல்கள்தாம்.  அதெல்லாம் ஏன் பிரசுரம் ஆகின்றன என்றால், நான் எழுத்தாளன் என்பதால்தான். எனவே இதில் அது சரியில்லை, இது சரியில்லை என்பவர்களெல்லாம் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்

இயக்கி என்ற நேசமித்ரனின் சிறுகதையின் முதல் இரண்டு பத்திகளைப் பாருங்கள்.  இப்படிப்பட்ட உரைநடையை எழுத பத்தாண்டுகளுக்கு முன்பு யாரும் இல்லாமல் இருந்தது.  இன்று நேசமித்ரன் போல் ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள். நேசமித்ரனின் கவிதைகளும் இன்னும் பெருமளவுக்கு வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.  அவருடைய கவிதை நூல்களைத் தொடர்ந்து வாங்கிக் கொண்டே செல்வதை புத்தக விழாவில் நான் பார்த்தாலும் அவர் ஒரு underrated poet என்றே சொல்லத் தோன்றுகிறது.  ஆனால் அதற்கும் அவருக்கு இரண்டு முன்னோடிகள் இருக்கிறார்கள்.  தேவதேவன், தேவதச்சன்.  ஆத்மாநாம் ஒரு overrated poet.  காரணம், அவர் தற்கொலை செய்து கொண்டார்.  இதற்காக எல்லோரும் தற்கொலையா செய்து கொள்ள முடியும்.  அப்படியில்லாமலேயே இன்னொரு overrated poet இருக்கிறார். சுகுமாரன்.  இப்படிச் சொல்வதால் ஆத்மாநாமையும் சுகுமாரனையும் எனக்குப் பிடிக்காது என்று அர்த்தமல்ல.  இருவரையும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.  ஆனால் அவர்களை விட தேவதச்சனையும், தேவதேவனையும், அவர்களின் வாரிசு எனக் கொள்ளத்தக்க நேசமித்ரனையும் பிடிக்கும் என்கிறேன். 

இயக்கி சிறுகதையின் முதல் இரண்டு பத்திகள்:   

இலவமரம், நிறையக் கண்கள்விட்டு முடைந்த மிகப்பெரிய கோழிப்பஞ்சாரம் போல, தன் நிழலைப் பரப்பி இருந்தது. குளிப்பறையின் கோணிப்படல் திறந்து, இயக்கி வெளியேறுவது கேட்டது. அவன் பீடியை நுனிநெரித்துப் பற்றவைத்தான். அக்கணம் அவள், நிலம்மடிந்து அருவியாகும் ஆற்றிலிருந்து துள்ளிச்சாடி நீருள் மறையும் மீனைப் போல் தோன்றுவாள். எண்ணெய்க் காப்பு உதிரத்துவங்கிய கருஞ்சிலை மாதிரியான உடலை, இதுவரை,சூரியன் பார்த்ததில்லை. கடைசி இழுப்பை நெடியேற இழுத்துவிட்டு வீசும்போது, இசக்கி மயிர்க்கோதியைக் கொண்டு சட் சட்டென ஈரக் கூந்தலை அரப்பும் நீரும் தெறிக்க உலர்த்திக்கொண்டு இருந்தாள். இப்படியான இளவெயில் தருணங்களில், அப்போதுதான் குளித்து முடித்த அவளைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, இவ்வளவு சௌந்தர்யமும் மென்மையும் கொண்ட விரல்களால்தான் மயில்களை விஷம்வைத்துக் கொல்லவும் முடிகிறது என்பது நம்பகத்திற்கு நெருக்கமாய் இல்லைதான்.

நிலாப்பொடித்துப் பூசிய காற்றுச்சிற்பம் மாதிரி பொலிவுசுடரும் அழகு. மானுடப் பரிமாணம் எய்தியபோது, இயற்கை ரோமம் மீதம்வைத்த இடங்கள்தாம் எத்தனை நளினமும் யவ்வனமும் மிளிர்பவை! நாபியில், குளித்த கெண்டைக்கால் படிந்த ஈரக் கருங்கோதல்கள், ரோமக் கோடு பிடரியிலிருந்து இறங்கும் குறுமுகில் ஒத்து காற்றலைபவை – தீபத்திரிகள் காம்பாய்த் தோன்றும் – பித்தமேற்றுபவை! நான்காவது சிவபானச் சிமிட்டியில் உச்சிமயிர் இழுத்துச் சுண்டினாலும் தேள் கொடுக்கு தேகம் ஏறாது. பித்தம், “கொத்து! கொத்து!” என நாக்குநீட்டி உள்ளும் புறமும் அலைந்தது. மஞ்சளேறிய கருத்த உடல் விஷம் முறிய கீரிப்பிள்ளை தேடும் பச்சையம் பிலிற்றும் தாவர நிதம்பம். மிகச்சரியாய், ஒரு பாலூட்டும் மீனின் பிரசவக் காட்சியொத்து உப்பில் விழிக்கிறதொரு புதிய உயிர்போல் காமத்தின் உயிர் உந்தம். இசக்கி திரள்பவற்றின் வாசம் உணர்ந்தாள்.

சென்ற புத்தக விழாவில் நேசமித்ரனின் நான்கு கவிதைத் தொகுதிகள் வெளிவந்தன.  அவற்றில் நன்னயம் என்ற தொகுதிக்கு நான் கொடுத்த முன்னுரை கீழே:

அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளும் ஆண் பெண் உறவுச் சிக்கல்களுமே இன்றைய தமிழ்க் கவிதையின் பாடுபொருளை பெருமளவுக்கு ஆக்ரமித்திருப்பதாகத் தோன்றுகிறது.  தமிழ்நாட்டைப் போன்ற ஒரு பைத்தியக்கார வாழ்வியல் வெளியில் அதற்கான முழு நியாயமும் கூட இருக்கிறது.  கலாச்சாரத்தை முற்றாக இழந்து விட்டு அதை இழந்தது கூடத் தெரியாமல் பணத்தையும் போலி சந்தோஷங்களையும் தேடி ஓடிக் கொண்டிருக்கும் தமிழரின் வாழ்வைப் பற்றி எழுத ஏராளம் இருக்கிறது.  அதேபோல், மனித குல வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இன்றைய காலகட்டம் ஆண் பெண் உறவுச் சிக்கலின் உச்சத்தில் நிற்கிறது.  ஒரு கவிஞனால் இதைத் தாண்டி சிந்திக்கவே முடியாதபடி அவனை இறுக்கிக் கொண்டு கிடக்கின்றன இந்த இரண்டு பிரச்சினைகளும்.   

தற்காலத்திலிருந்து மீண்டு சற்றே பின்னோக்கிப் பார்த்தாலும் கடந்த 2000 ஆண்டுக் கால தமிழ் இலக்கிய வரலாற்றில் தத்துவம் சார்ந்த கவிதைகள் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.  வள்ளுவனையும் கணியன் பூங்குன்றனையும் கூட வாழ்வியல் நெறி சார்ந்த போதனையாளர்கள் என்றுதான் சொல்லலாமே ஒழிய தத்துவம் சார்ந்தவர்கள் என்று சொல்ல முடியவில்லை.  ஆனால் சம்ஸ்கிருதத்தில் தத்துவத்துக்கு மிக நீண்ட மரபும் பாரம்பரியமும் இருக்கிறது.  ரிக் வேதத்தில் வரும் நாஸதீயசூக்தம் அது எழுதப்பட்டு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் ஐரோப்பாவில் ‘அறிமுகமான’  எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தைப் பேசுகிறது. 

அங்கே சூன்யமும் இல்லைஇருப்பும் இல்லை.

அங்கே காற்றும் இல்லைசொர்க்கமும் இல்லை.

எல்லாவற்றையும் சூழ்ந்திருந்தது எது?  எல்லாம் எங்கே இருந்தது?  யார் இதையெல்லாம் கவனித்துக் கொண்டது?

அங்கே மரணமும் இல்லைஜனனமும் இல்லை

இரவும் இல்லைபகலும் இல்லை.

இப்படியாகப் போகும் அந்தப் பாடல் இவ்வாறு முடிகிறது:


ஆனால் கடைசியில் யாருக்குத் தெரியும்யாரால் சொல்ல முடியும்,

இது எல்லாம் எப்படித் தோன்றியதுஎப்படி வந்தது என்று?

சிருஷ்டிக்குப் பிறகுதான் கடவுள்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவே சிருஷ்டியின் ரகசியத்தைக் கடவுள் எப்படி அறிந்திருக்க முடியும்?

எல்லா சிருஷ்டிக்குமே சிருஷ்டிகர்த்தா இருக்க வேண்டும் என்றால் அந்த சிருஷ்டிகர்த்தாவுக்குத்தான் – அது ஆணா பெண்ணா தெரியவில்லை – இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்ஒருவேளை தெரியாமலும் இருக்கலாம்


இந்தப் பாடலின் கடைசி வாக்கியம்தான் கவி மனம்.  இத்தகைய தத்துவார்த்தம் ஏன் தமிழ் மரபில் இல்லாமல் போனது என்ற ஆராய்ச்சிக்குள் நான் போகவில்லை.  சமகாலத் தமிழ்க் கவிதையிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர்.  என் தலைமுறையில் தேவதச்சனும் எஸ். சண்முகமும்.  இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார்.  அவர் நேசமித்ரன்.

நேசமித்ரனை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர் என்னோடு ஏழெட்டு மணி நேரம் உரையாடுவதை அனுபவம் கொண்டிருக்கிறேன்.  அப்போது அவரை விட நான் முப்பது ஆண்டுகள் மூத்தவன் என்ற எண்ணமே தோன்றாது.  3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இருந்த தத்துவார்த்த உரையாடல் மரபே இங்கு நேசமித்ரனின் மூலம் மதுரையில் தொடர்கிறது என்று நினைப்பேன்.   

பொதுவாக தத்துவமும் கவிதையும் இணைவதில்லை.  (அதற்கும் விதிவிலக்காக இருந்திருப்பது வேதமும் அதன் மரபில் வந்த அற்புதக் கவியான ஆதி சங்கரனும்.)  காரணம், விஞ்ஞானத்தைப் போலவே தத்துவமும் உணர்வுகளைப் புறந்தள்ளி தர்க்கத்தை முன்னெடுக்கிறது.  கவிதையோ இதற்கு மாறாக, தர்க்கம் – அ-தர்க்கம் என்ற நிலைகளைத் தாண்டி பித்த நிலைக்குச் சென்று விடுகிறது.  ஆக, தர்க்கம் – பித்தம் என்ற இரண்டு எதிர்நிலைகளைக் கொண்ட ஒரு இருப்பு சாத்தியம்தானா?  சாத்தியம்தான் என்கிறது நேசமித்ரனின் இந்தத் தொகுப்பு.

***

மேற்கண்ட முன்னுரையில் நான் எந்த இடத்திலும் ஒக்தாவியோ பாஸ் பற்றிக் குறிப்பிடவில்லை.  ஆனால் நேசமித்ரன் பற்றிய என் பேச்சின்போது பாஸ் பற்றிக் குறிப்பிட்டேன்.  மூன்று ஆண்டுகளுக்கு முன் மேகா பதிப்பகத்தின் தொடக்க விழாவில் பேசியது.  இதெல்லாம் உலக இலக்கியத்திலேயே மூழ்கித் திளைத்துக் கொண்டிருப்பதால் நிகழும் விஷயங்கள்.  அதனால் உலக இலக்கியம் பற்றி ஏதுமறியாதார்கள் திகைக்கிறார்கள்.  மேலும் என் இயல்பே அப்படித்தான்.  சுஜாதா ஒருமுறை என்னிடம் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டார்.  கணையாழி கஸ்தூரி ரங்கனிடம் நான் ஒருமுறை சாரு நிவேதிதாவைப் பார்க்க வேண்டும் என்றாராம் சுஜாதா.  அதனால் அவர் வீட்டுக்குப் போனேன்.  கணையாழில் நினைவுகளின் புதர்ச் சரிவுகளிலிருந்து என்ற கதையை நான் எழுதின போது கஸ்தூரி ரங்கனிடம் “இது யார் புது சாரு நிவேதிதா?  அந்தப் பெயரில்தான் ஏற்கனவே ஒருத்தர் எழுதுகிறாரே?” என்று சுஜாதா கேட்க, கஸ்தூரி ரங்கன் அவர்தான் இவர் என்று சொல்ல, ம்ஹும், நம்ப முடியவில்லையே, வைஷ்ணவராக இல்லாத ஒருவர் எப்படி இந்த மாதிரி எழுத முடியும், நான் அவரைப் பார்க்க வேண்டுமே… இதுதான் நான் சுஜாதா வீட்டுக்குப் போன கதை.  அவர் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டதும் நான் சட்டென்று எதுவும் யோசிக்காமல் எந்த நாட்டில் என்று கேட்டேன்.  அரபி இலக்கியம், லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்று ஊர் ஊராகத் தேடிப் படித்துக் கொண்டிருக்கும்போது அவர் எதைக் கேட்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்பினேனே ஒழிய அகம்பாவமாகக் கேட்கவில்லை.  அதற்கு அவர் என்ன சொன்னார் என்று ஞாபகம் இல்லை.  ஆனால் பல நண்பர்களிடம் நான் கேட்டதை சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டாராம்.  இப்படியெல்லாம் படிக்கிறார்கள் இன்றைய எழுத்தாளர்கள் என்று. 

மேற்கண்ட இணைப்பில் நேசமித்ரன் பற்றிய என் உரையைக் கேட்கலாம். இணையத்தில் பாஸின் கவிதையைத் தேடிய இந்தக் கணத்தில் ஸ்ரீராம் பாஸின் தெரு கவிதையை எடுத்துப் போட்டிருக்கிறார்:

Here is a long and silent street.
I walk in blackness and I stumble and fall
and rise, and I walk blind, my feet
trampling the silent stones and the dry leaves.
Someone behind me also tramples, stones, leaves:
if I slow down, he slows;
if I run, he runs     
I turn :
nobody.

Everything dark and doorless,
only my steps aware of me,
I turning and turning among these corners
which lead forever to the street
where nobody waits for, nobody follows me,
where I pursue a man who stumbles
and rises and says when he sees me:
nobody.

நேசமித்ரன்

நன்னயம் தொகுதியிலிருந்து…

பார்வையற்றவன்

உடுப்பு மாற்றுவதாய்

மேகங்கள் துழாவி மூடுகின்றன

கார்கால இரவு வானத்தை

காட்சிசாலையில்

பிரசவத்தில் தாயை இழந்த

குரங்கு

துணியால் செய்த தாயை

அணைத்து உறங்குகிறது

ஞாபகத்தைத் தழுவி

துயில்கிறேன் நான்

தான் உரித்த சட்டையை

தானே  உண்ணும்

மலைப்பாம்பு வாய்

இந்த

மழையுண்ணும் பூமியின் சித்திரம்

அன்பு

சுயத்தின் பலிமேடையை

நக்கும் நாய்

பிறகு பேய்க்கு வாலாட்டும்

ஆட்டுக் கிடை உறங்கும்

பஞ்சாரத்தின் மேல் பெய்கிறது

மழை

கரும் பக்குவம் அடைந்த காயத்தை

பஞ்சால் ஒற்றியெடுக்கும்

செவிலியாக

இன்னொரு கவிதை நன்னயம் தொகுதியிலிருந்து…

ஞாயிறு மாலைத் தேநீர்

சாவகாசத் தென்றல்

துப்பட்டா நூலை  மட்டும்

கொஞ்சி விட்டுப் போகிறது

எங்கிருந்தோ கேட்கும்

ராமனின் மோகனம்

டைப்ரைட்டரின் பக்கமுடிவு

எச்சரிக்கை மணியளவு

ஒரு ட்ரிங்

சைக்கிள் பூக்காரர்

‘நாளைக்கு ஸ்கூல் லீவு’ என

அடம்பிடிக்கும் குழந்தை

விடைபெறும் விருந்தாளிகள்

சட்டென்று குடிகாரர்கள் அற்றுப் போன

நகரத்தின் தூய வீதிகள்

புங்கை மர இலைகளைக் கூட்டி எரிக்கும்

அந்திநேரப் புகை

ஒரு கோடையின் நாளிறுதி

எதேச்சையாய்க் கண்டு

காலண்டரில் குறித்து வைத்திருந்த

ஒரு மரணத்தின் நினைவு நாளை

வேகமாக கிழித்தேன்

இந்த விடுமுறை நாள்

அதன் மந்தமான மௌனத்துடன் முடிவதில்

யாதொரு நட்டமும் இல்லை

பாஸின் கவிதைக்கும் நேசமித்ரனின் கவிதைக்குமான mood பற்றி யோசியுங்கள்.  சார்வாகன் என்னிடம் சொன்னார், இப்படியெல்லாம் யாரையும் யாரோடும் ஒப்பிட்டுப் பாராட்டாதீர்கள்.  உங்களுடைய credibility போய்விடும்.  இப்படித்தான் சாரு யாரையாவது பிடிச்சா தூக்கி வச்சுக் கொண்டாடுவாரு, பிடிக்கலேன்னா தூக்கிப் போட்டு மிதிப்பாருன்னு பேசுவாங்க. 

இது அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த ஒரு தறுதலை சார்வாகனிடம் சொன்னதாக இருக்கும்.  ஏனென்றால், சார்வாகன் காலமான பிறகு அவன் என்னைப் பற்றி எங்கெங்கும் அவதூறு சொல்லும் ஒரு ஆளாகத் தெரிய வந்தான்.  போகட்டும்.  சார்வாகனிடம் அன்று நான் அரை மணி நேரம் ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டிருந்தேன்.  நான் கேட்ட முதல் கேள்வி, எழுத்தாளனுக்கு ஏன் நம்பகத்தன்மை இருக்க வேண்டும்?  நம்பகத்தன்மை என்றால் என்ன?  இன்று உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது.  பிடித்திருப்பதன் காரணங்களை அடுக்கி அடுக்கி வைக்கிறேன்.  சும்மாங்காட்டியும் போகிற போக்கில் எனக்கு சார்வாகனைப் பிடிக்கும் என்று சொல்லவில்லையே?  மாதக் கணக்கில் படித்து நாள் கணக்கில் உட்கார்ந்து எழுதுகிறேன்.  உங்களுடைய எல்லா எழுத்தையும் எனக்குள் செரித்துக் கொள்கிறேன்.  உங்களுடைய முடிவற்ற பாதை என்ற கதையில் வரும் தபால்காரரைப் பார்த்து இனிமேல் யார் பொருள் மீதும் இச்சிக்கக் கூடாது, கடவுள் கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள வேண்டும், காரியத்தை மட்டும் செய்ய வேண்டும், பலனை எதிர்பார்க்கக் கூடாது, முக்கியமாக செத்தாலும் சாகலாமே தவிர அடுத்தவர் பொருளுக்கு ஆசையே படக் கூடாது என்றெல்லாம் முடிவுக்கு வருகிறேன்.  இப்படி என் வாழ்க்கைப் பார்வையையே புரட்டிப் போட்டவர் சார்வாகன் என்று கொண்டாடுகிறேன்.  நாளையே இது என்ன கேவலமான வாழ்க்கை, வாழ்நாள் பூராவும் உழைத்து கூலியே கிடைக்காமல் போய் விட்டதே, வாழ்நாள் பூராவும் பிச்சைக்காரனாகவே உழன்று விட்டோமே, இனிமேல் நாலு காசு சம்பாதிக்கப் பார்க்கலாம் என்று என் வாழ்க்கைப் பார்வை மாறினால் உங்கள் கதை எனக்குப் பிடிக்காமல் போகலாம் என்றேன்.  சிரித்தார்.  ஆனால் என் பார்வை எப்போதும் நிராகரிப்பையே நிராகரித்து விட்டு ஏற்றுக் கொள்ளுதலையே ஏற்றுக் கொண்டிருப்பதாக இருந்து வருகிறது.  கடவுளை நிராகரித்தேன்.   பிறகு ஏற்றுக் கொண்டேன்.  புதுமைப்பித்தனை நிராகரித்தேன்.  பிறகு ஏற்றேன்.  மறுதலிப்பிலிருந்து இப்போது ஏற்கும் நிலைக்கு வந்திருக்கிறேன்.  சாரு மாறி விட்டார், கனிந்து விட்டார், இந்துத்துவா, வலதுசாரி, நம்பகத்தன்மை இழந்து விட்டார்.  இப்படிப் பலவாறான விமர்சனங்கள் வருகின்றன.  நேற்றுதான் சுனில் கிருஷ்ணன் பற்றித் தெரிந்து அவருடைய தளத்தைப் படித்தேன்.  அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் என்றும் நேற்றுதான் தெரிந்தது.  நான் ஆயுர்வேதம் பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறேன் என்று பத்து ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  என் உடம்பையே சோதனைப் பொருளாக ஆக்கிக் கொண்டேன் என்பது பற்றி என் நெருங்கிய நண்பர் டாக்டர் ஸ்ரீராமுக்கு மட்டுமே தெரியும்.  சீனிக்குக் கூடத் தெரியாது.  நான்கு ஆண்டுகள் நீண்ட சோதனை அது.  அதில் ஒரு சிறிய தவறைச் செய்து விட்டதால் மரணம் நிகழ இருந்தது.  அதெல்லாம் இங்கே தேவையில்லை.  இந்தக் கொரோனா அறிமுகத்தின்போது கூட எழுதினேன்.  மனிதனின் பொருள் தேடல் பேராசை அதிகமாகி பிரபஞ்ச லயம் கெட்டதால்தான் கொரோனா வந்தது.  கர்ப்பிணிப் பூனையை காலால் உதைத்து எறிகிறான், பூனைக் குட்டியை ஒரு குடும்பமே காலால் நசுக்கி நசுக்கிக் கொன்று அதை விடியோ பிடித்து வெளியிடுகிறது, நாயை நாலாவது மாடியிலிருந்து தூக்கிப் போடுகிறான்கள் – இதனால்தான் பிரபஞ்ச லயம் கெடுகிறது என்று பல நூறு பக்கங்கள் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.  எப்படி என்றால், கேயாஸ் தியரிதான்.  இப்படி நான் ஒரு பாமரனைப் போல் எழுதினதையேதான் ஆய்வுபூர்வமாக ஒரு ஆயுர்வேத மருத்துவராக எழுதியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன்.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இதே பக்கங்களைப் படித்திருந்தால் சுத்தப் பேத்தல் என்று சொல்லியிருப்பேன்.

எழுத்தாளனுக்கு consistency ஏன் இருக்க வேண்டும்?  அவன் என்ன ஜடமா?  மூளையில்லாத மூடனா?  பல பேரைப் பார்க்கிறேன்.  25 வயதில் என்ன எழுதினார்களோ அதையேதான் 75 வயதிலும் எழுதுகிறார்கள்.  25 வயதில் அவர் நாஸ்திகராக இருந்தால் அது ஒரு probability.  அவர் தந்தை கம்யூனிஸ்ட்.  அதனால் இவர் ஒரு நாத்திகர்.  அந்த சந்தர்ப்பவசத்தையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அதையே தன்னுடைய சொந்தத் தேர்வாக, சொந்த அறிதலாக நம்பி இன்னும் இன்னும் அதைக் கெட்டிப்படுத்திக் கொண்டு 75 வயது வரை கடும் நாஸ்திகராக இருக்கும் அன்பர்களை எனக்குத் தெரியும்.  இதையே நீங்கள் எல்லாவற்றுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.  நம்பிக்கையாளனுக்கும் பொருத்தலாம்.  கேள்வியே கேட்க மாட்டீர்களா?  உங்கள் தந்தை நம்பினால் நீங்களும் நம்ப வேண்டுமா?  கடவுளை தத்துவமாகவோ தருணமாகவோ நீங்கள் அனுபவம் கொள்ள வேண்டும். 

புதுமைப்பித்தனின் சைவப்பிள்ளை ஜாதீயம் பிடிக்கவில்லை.  குப்பை என்றேன்.  2000.  பிறகு, அப்படிப்பார்த்தால் பெண்ணடிமைத்தனம் பேசும் வள்ளுவர், ஞானசம்பந்தரின் சமண துவேஷப் பாடல்கள் என்று எல்லாவற்றையும் நிராகரிக்க வேண்டியிருக்கும்.  எனவே இலக்கியத்தில் கோட்பாடுகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன்.  கீழ்க்கண்ட ஞானசம்பர் பாடலைப் பாருங்கள். 

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்

திண்ணகத்திரு வாலவாயாயருள்

பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண்

தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே

மண்ணுலகிலும் விண்ணுலகிலும் மற்றும் எல்லா இடங்களிலும் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கும் இறைவனே, பௌத்தரும் சமணரும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிக்கத் திருவுள்ளம் தருக.  கற்பழித்தல் என்பதை கல்வியை அழித்தல் என்றே பொருள் கொண்டேன்.  இதை விடப் படு பயங்கரமான பாடல்களெல்லாம் தேவாரத்திலும் திருவாசகத்திலும் உண்டு.  ஆனால் நான் நிராகரிப்பிலிருந்து ஏற்கும் இடத்துக்கு வந்து விட்டேன்.  அதனால் சுனில் கிருஷ்ணனின் ஆயுர்வேதக் கட்டுரைகளைப் படித்தபோது எனக்கு என் கருத்துக்களையே ஒருவர் ஆய்வுரீதியாக எழுதியதாக இருந்தது.  இதற்காக சாரு மாற்றி மாற்றிப் பேசுகிறான் என்பீர்களா?  அப்படியானால் அப்படித்தான் ஒரு படைப்பாளி மாற்றி மாற்றிப் பேச வேண்டும் என்கிறேன்.  இதை நான் ஒரு பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கிறேன்.  உங்களில் சிலர் சீரழிவு என்றும் பார்க்கலாம்.  ஆட்சேபணையே இல்லை.  ஆனால் சார்வாகன் சொன்னது போல் நம்பகத்தன்மை போய் விட்டது என்று சொல்ல மாட்டேன்.  ஏனென்றால், நாற்பது ஆண்டுகளாக எனக்கு நகுலன் நகுலன் தான்.  அசோகமித்திரன் அசோகமித்திரன் தான்.  இப்படி இலக்கியத்தில் எப்போதுமே ஒரே கதியில்தான் சென்று கொண்டிருக்கிறேன்.  தி.ஜானகிராமனும் புதுமைப்பித்தனும் மட்டுமே விதிவிலக்காக இருந்துள்ளனர்.  மேலும், சாமியார், இயக்குனர் போன்றவர்களை இன்று பாராட்டுவேன்.  நாளை திட்டுவேன்.  ஏனென்றால், இயக்குனர் இன்று நல்ல படம் எடுப்பார்.  நாளை ஒரு கொரியன் படத்தைத் திருடிப் போடுவார்.  அதற்கு நானா ஜவாப்தாரி?  நல்ல படம் எடுத்த நீ இப்போது ஏண்டா திருட்டுப் படம் எடுக்கிறாய் என்று அவரையல்லவா கேட்க வேண்டும்?  என்னிடம் வந்து நீ தினம் ஒன்று பேசுகிறாய் என்று கேட்பது என்ன நியாயம்?  சாமியார் நேற்று நான் கடவுள் என்றார்.  இன்று நடிகையோடு கட்டிலில் புரள்கிறார்.  அதற்கும் நானா காரணம்? 

எழுத்தாளன் என்பவன் இப்படித்தான் இருப்பான்.  நம்பகத்தன்மை என்பது படைப்பில் இருக்க வேண்டும்.  என்னுடைய நம்பகத்தன்மையை எக்ஸைலில் பார்த்தீர்களா இல்லையா?  ஏழெட்டு ஆண்டுகள் ஆயிற்று.  இப்போது அசோகாவில் பாருங்கள்.  கோட்பாட்டு அளவுகோல்படி பார்த்தால் எக்ஸைல் இந்துத்துவப் பின்னணி கொண்டது.  அதை யாரும் கவனிக்கவில்லை.  அசோகா?  பொறுத்திருந்து பாருங்கள்.

***

கோபி கிருஷ்ணன் உரைகள் இரண்டும் தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதுங்கள். மாதச் சந்தா/ நன்கொடை அனுப்புபவர்களுக்கு அந்த உரைகள் தேவையென்றாலும் தயக்கமில்லாமல் எழுதுங்கள். சிலர் எழுதிக் கேட்டு நான் அனுப்பாமல் விட்டிருக்கலாம். அவர்களும் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

சந்தா/நன்கொடை அனுப்ப முடிந்தவர்கள் அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

அடுத்த மாதாந்திர சந்திப்பு நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு நடைபெறும்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai

: