என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.
பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக பைத்திய நிலையிலிருந்து வெளியேறி விட்டிருந்தாலும் கடந்த கால நினைவுகள் அவ்வப்பொழுது என்னைத் துன்பப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து மீள்வது பெரும் துயரமாகவும், ஆகாத காரியமாகவுமிருக்கிறது. புத்தகங்கள் என்னை மாற்றின. குறிப்பாக, தாஸ்தாயேவ்ஸ்கியும், ஆன்டன் செகாவும், சாருவும், சோபாசக்தியும் என்னை மாற்றினார்கள்.
இலக்கியத்தில் உங்கள் ஆதர்சங்கள் யார்? (ஈழ/தமிழ்/ உலக)
நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதோவொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவர்கள். இதில் எழுதும் ஆசையைத் தூண்டியது சாரு. நான் கண்டைந்து கொண்ட மொழியில் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவரின் எளிமையான, எல்லோருக்கும் புரியும்படியான கதை சொல்லல் முறை நான் பார்த்து வியந்த ஒன்று. அப்புறம் ஷோபாசக்தி என்னுடைய மிகப்பெரிய ஆதர்சனம். சிறுகதை எழுதும் நுட்பத்தை நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். இது தவிர பொதுவான ஒருவரும் உண்டு. அவர் எஸ். சம்பத். அவருடைய இடைவெளி நாவல் எப்போதும் என் பையில் இருக்கும்.
பதாகை இதழில் வெளிவந்த சாதனாவின் நேர்காணலில் ஒரு பகுதியே மேலே இருப்பது. கிட்டத்தட்ட ஷோபா சக்தி, அராத்து ஆகிய இருவருக்குப் பிறகு என் பெயரை தைரியமாக பொதுவெளியில் சொன்ன மூன்றாவது குரல் சாதனாவினுடையதுதான். மற்றபடி என்னைக் கொண்டாடும் நண்பர்கள் பலர் உண்டு. நேசமித்ரன், ஆத்மார்த்தி, அய்யனார் விஸ்வநாத் மற்றும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் இவரிடம்தான் கற்றேன் என்று சொல்ல இரண்டு பேர். அதிலும் ஷோபா சக்தி பலமுறை சாருவின் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலைப் படித்துத்தான் நாமும் எழுதலாம் என்ற தைரியத்தைப் பெற்றேன் என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஷோபா சக்தியின் கதைகளைப் பாராட்டுபவர் சாரு இலக்கியவாதியே இல்லை என்கிறார். ஆக, நான் எதை எடுத்துக் கொள்ளலாம்?
இரண்டு தினங்களுக்கு முன் நான் சற்று வருத்தத்தில் இருந்தேன். முதிய எழுத்தாளர்களிலிருந்து இளம் எழுத்தாளர் வரை என் பெயரைச் சொல்லவே கூசுகிறார்களே, என்ன உலகமடா இது என்று. வண்ணநிலவன், வண்ணதாசன், பூமணி, கலாப்ரியா, நீல. பத்மநாபன் என்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் ஒருவர் கூட என் எழுத்தின் ஒரு வரியைக் கூடப் படித்திருப்பார்களா தெரியாது. இவர்களைப் பொறுத்தவரையும் கூட நான் இலக்கியவாதி இல்லைதான். அதை நான் மிகவும் மதிக்கிறேன். அசோகமித்திரன் போன்றவர்களுக்கும் கூட என் எழுத்து பிடிக்காது. ஆனால் அசோகமித்திரனுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்ன என்றால், மற்றவர்கள் என்னைப் படித்ததே இல்லை. ஆனால் அசோகமித்திரன் என்னைப் படித்து விடுவார். மிக நெருங்கிப் பழகுபவர்கள் கூட மற்றவர்கள் பெயரைப் போடும்போது என் பெயரைத் தவிர்த்து விடுவதை முந்தாநாள் கூடப் பார்த்தேன். ஒரு புத்திஜீவி – அவரைப் பற்றி நான் எழுதாத நாள் இல்லை. அதையெல்லாம் பற்றி அவர் பொருட்படுத்தியதாகத் தெரிந்ததே இல்லை. ஃபூக்கோ, தெரிதா, ரொலான் பார்த் போன்ற ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களையெல்லாம் கற்றவர். என்னை ஒருத்தன் சாக்க்டை என்றும் இன்னும் கேவலமாகவும் திட்டி எழுதியிருப்பதைக் கொஞ்சமும் வெட்கம் இன்றித் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் பகிர்ந்ததற்குக் காரணம், அவருடைய எழுத்தை அந்த ஆள் பாராட்டி விட்டான். அவருக்கு உடனே அந்தப் பக்கத்தை வாட்ஸப்பில் அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து பதிலே இல்லை. பகிர்ந்ததையாவது நீக்குவார் என்று பார்த்தேன். செய்யவில்லை. நண்பர்களிடம் சொன்னபோது அவருக்கும் உங்களைப் பற்றி அதுதான் கருத்து போலும் என்றார்கள். படித்தவர்களே இப்படி இருக்கும்போது படிக்காத பாமரர்கள் எப்படி இருப்பார்கள்? இந்தச் சூழ்நிலையில்தான் நேற்று சாதனாவின் பேட்டியைப் படித்தேன்.
நேற்று என் வாழ்க்கையில் மிகவும் திருப்தி அடைந்த நாள். சிறுகதையின் உச்சம் என்று கொண்டாடப்படுகின்ற ஷோபா சக்தி என்னிடமிருந்து கற்றேன் என்கிறார். சாதனாவும் அதையே சொல்கிறார். அராத்துவோ இன்னும் ஒரு படி மேலே போய் நான் எழுதுவதே எனக்காகவும் சாருவுக்காகவும்தான் என்கிறார். இதை விட ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன வேண்டும்? எனக்கு வேறு எந்த அங்கீகாரமும் விருதும் தேவையில்லை. இந்த அங்கீகாரமும் நேசமித்ரன், ஆத்மார்த்தி, அய்யனார் விஸ்வநாத் போன்ற இனிமையான நண்பர்களும், அமல்ராஜ் ஃப்ரான்சிஸ் போன்ற புதிய இளம் எழுத்தாளர்களும், வழக்கம் போல் என்னுடைய fanatics என்று சொல்லத்தக்க வாசகர் வட்ட நண்பர்களுமே எனக்குப் போதும்…