157. க.நா.சு.வின் 55 ரஜாய் பெட்டிகள்

நேற்று எழுதிய இனிய அனுபவத்துக்கு ராம்ஜி ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார்.  அது:

செருப்பை வெளியில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக உங்கள் காலில் விழுந்து, தற்கொலை செய்து கொள்ளாமல் நான் இன்று வாழ்வதே உங்கள் எழுத்தை படித்த பின் தான் என்று எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வந்த அந்த இளம் மாணவன் சொன்ன தருணம். 80 வயது கடந்த மூதாட்டி புத்தக அரங்கிற்குள் வந்து பழுப்பு நிறப்பக்கங்களில் நீங்கள் தீ ஜாவை பற்றி எழுதியதைப் பேசி நெகிழ்ந்த தருணம். கலகம் காதல் இசையில் மட்டும் சொல்லப்பட்டிருக்கும் இசையில் ஒரு வருடமாக உழன்று கொண்டிருக்கிறேன் இன்னும் தெகிட்டவில்லை. என்று கோவையில் அந்த இளம் பெண் எங்களிடம் பேசிக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து உங்கள் கையப்பதை பொக்கிஷம் போல் தன் நெஞ்சில் புதைத்து கொண்டு சென்ற தருணங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். உங்கள் எழுத்தைக் கொண்டாடிய எல்லோருக்கும் தெரிந்த எழுத்தாளர்களை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் எவருக்குமே தெரியாத எத்தனை எத்தனை பேர் புத்தகக்கண்காட்சியில் நான் பார்த்திருக்கிறேன் வியந்திருக்கிறேன் நீங்க மாற்றிய மனிதர்கள் ஏராளம் sir.

பாலமுரளி கிருஷ்ணா ராம்ஜியிடம் சொன்ன ஒரு சம்பவம் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன்.  அமெரிக்காவில் பாலமுரளிக்கு ஒரு விருந்து நிகழ்ச்சி.  அப்போது அவரிடம் வந்த ஒரு நபர் “மிஸ்டர் பாலமுரளி, என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார்.  இவர் இல்லையே என்று சொல்ல, ”நேற்று நான் தான் உங்களுக்கு முடி வெட்டி விட்டேன்” என்கிறார்.  ஒரு தேசம் என்றால் அப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பாராம் பாலமுரளி.  அப்படி ஒரு விருந்து இந்திய நகரம் ஒன்றில் நடந்தது என்றால் அதில் யார் யார் கலந்து கொண்டிருப்பார்?  நீதிபதிகள், துணைவேந்தர்கள், கோடீஸ்வரர்கள், மேயர்.  இப்படித்தான் அமெரிக்காவிலும் கலந்து கொண்டிருந்திருப்பார்கள்.  ஆனால் அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, தொழிலாளிகளும் மேட்டுக்குடி மனிதர்களும் சமூகத்தில் சமம்தான்.  ஒரு இசைக் கலைஞனுக்குக் கொடுக்கப்படும் விருந்தில் அந்த ஊர் மேயரும் கலந்து கொள்ள முடியும், அந்த ஊரில் உள்ள ஒரு முடிவெட்டும் தொழிலாளியும் கலந்து கொள்ள முடியும்.  இந்தியாவில் அப்படி ஒரு விருந்தில் ஒரு ஆட்டோ டிரைவரோ, ரோட்டோரத்தில் வண்டி வைத்து இஸ்திரி போடுபவரோ, ஒரு தச்சரோ கலந்து கொள்ள முடியுமா?  முதலில் அவர்களின் தோற்றம் எப்படி இருக்கும்?  உள்ளே போகும் அளவுக்கு அவர்களிடம் ஆடை இருக்குமா?  சரி, உள்ளேயே போய் விட்டால் அவர்களுக்கு டாஸ்மாக்கையும் அஜித் விஜய்யையும் தவிர வேறு என்ன தெரியும்?  இதனால் மேட்டுக்குடியெல்லாம் புத்திஜீவிகள் என்று சொல்ல வரவில்லை.  இவர்கள் அஜித் என்றால் அவர்கள் ரஜினி என்பார்கள்.  அவ்வளவுதான் வித்தியாசம்.  ஆனால் விளிம்புநிலைத் தொழிலாளர்கள் அப்படி ஒரு மேட்டுக்குடி விருந்தில் கலந்து கொள்வது இந்தியாவில் சாத்தியமா?  நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

ஆக, அப்படிப்பட்ட இந்தியச் சூழலில் தச்சு வேலை செய்யும் ஒரு தொழிலாளி.  இவரே Gautier மாதிரி நூறு ஐநூறு பேரை வைத்து வேலை வாங்கினால் அது பிராண்ட்.  அவர் கோடீஸ்வர முதலாளி.  ஆனால் இவரோ அன்றாடம் வேலை செய்தால்தான் ஊதியம் என்ற நிலையில் வாழும் ஒருவர்.  கொரோனா சமயத்தில் வேலையே இல்லை.  உதவித் தொகை என்று அரசாங்கம் ரேஷன் கடை மூலமாக ஆயிரம் ரூபாய் அளித்தது.  அதையும் அவர் எனக்கு அனுப்பி வைத்து விட்டார்.  பெயர் தக்ஷிணாமூர்த்தி.  அவர்தான் புத்தக விழாவில் என்னைப் பார்த்தபோது – ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் வெளியே தன் காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு உள்ளே வந்து என் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியது.  அந்த வணக்கம் எனக்கா?  சரஸ்வதி தேவிக்கு.  நான் படித்த புத்தகங்களுக்கு.

பலரும் எதற்கெடுத்தாலும் டிப்ரஷன் டிப்ரஷன் என்கிறார்கள்.  எனக்கு டிப்ரஷன் என்றால் என்னவென்றே தெரியாது.  ஹெடோனிஸ்ட்.  மரணத்தைக் கண்டே அஞ்சாதவன்.  எனக்கு ஒருமுறை டிப்ரஷன் வந்தது.  தமிழில் மன உளைச்சலா?  தலையில் ஆயிரம் தேள்கள்.  பௌதிக வலி அல்ல.  மனவலி.  தற்கொலை உணர்வுகள்.  அப்போது அகஸ்மாத்தாக எஸ். ராமகிருஷ்ணனின் தஸ்தயேவ்ஸ்கி உரையைக் கேட்டேன்.  அந்தக் கணத்திலிருந்து வாழ்க்கை வேறு மாதிரி ஆகி விட்டது.  ஒரு உல்லாசனாக மாறி விட்டேன்.  எஸ்.ரா.வைப் பார்க்கும்போது எனக்கும் அவர் பாதம் பணிய வேண்டும் என்றுதான் தோன்றும்.  என்னை விடப் பத்துப் பதினைந்து வயது சிறியவர் என்பதால் அது சாத்தியமில்லை.  எனக்கு உயிர் கொடுத்தவர்.  இலக்கியம்தான் இந்த எல்லாவிதமான சித்துவேலைகளையும் செய்கிறது. 

நேற்று நேசமித்ரன், ஆத்மார்த்தி, அய்யனார் விஸ்வநாத் போன்ற பிரபலங்களின் பெயர்களைச் சொல்லி விட்டேன்.  தக்ஷிணாமூர்த்தியை விட்டு விட்டது என் தவறு.  யோசித்துப் பாருங்கள்.  ஒரு தச்சுத் தொழிலாளிக்கு இந்த சமூகத்தில் என்ன விதமான ஞானம் சாத்தியம்?  அவனுக்குத் தெரிந்தது மேலே சொன்ன இரண்டுதானே?  டாஸ்மாக், அஜித் விஜய்.  வேறு என்ன தெரியும்?  ஆனால் தக்ஷிணாமூர்த்தியிடம் ஒருவர் செல்லப்பாவைப் பேசலாம்.  க.நா.சு.வைப் பேசலாம்.  தஞ்சை ப்ரகாஷைப் பேசலாம்.  தமிழ் சமகால எழுத்தாளர் யாவரைப் பற்றியும் பேசலாம்.  என் நூல்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்திருக்கிறார்.  மெதூஸாவின் மதுக்கோப்பை மூலம் ஃப்ரெஞ்ச் இலக்கியமும் தெரியும்.  இப்படிப்பட்ட ஒருவர் சொல்கிறார், என் வாழ்க்கை உங்களால் ஒளி பெற்றது என்று.  இவரும் சக தச்சுத் தொழிலாளியும் தேநீர் அருந்தச் சென்றால் அது எப்படி இருக்கும்?  இவர் செய்யும் வேலைக்கும் படிக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்?  நான் இருபது வருடம் செய்த ஸ்டெனோ வேலை மாதிரிதான்?  எங்கள் அக்கவ்ண்டண்ட் சேகர் மதிய நேரத்தில் என்னிடம் வந்து சத்தமாக ஆர் யூ கம் ஃபாஆஆஆர் லஞ்ச் அறிவளகன் என்று கேட்பார்.  யோவ், இங்க்லீஷ்ல பேசித் தொலையாதய்யா என்றால் பேசிப் பேசிப் பழகுறேன் என்பார்.  தில்லிச் சூழல் இதை விடப் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

சிவசங்கரி, பாலகுமாரன் எல்லாம் சொல்வார்கள்.  எத்தனையோ ஆயிரக்கணக்கான பேரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறோம் என்று.  பல நூறு குடி அடிமைகள் சிவசங்கரியின் எழுத்தைப் படித்துப் புனர்வாழ்வு பெற்றுள்ளனர்.  எனக்கே தெரியும்.  பல ஆயிரக்கணக்கான தம்பதிகள் பாலாவின் எழுத்துக்குப் பிறகு அந்நியோந்யமாகி இருக்கிறார்கள்.  அதுவும் தெரியும்.  அப்படியானால் சிவசங்கரி, பாலா, சாரு எல்லாம் ஒன்றா?  சிவசங்கரி, பாலா ஆகியோரின் எழுத்தைப் படித்து நிகழ்ந்த மாற்றம் ஒரு ஆன்மீக குருவின் பேச்சைக் கேட்டு நிகழலாம்.  ஒரு சுய முன்னேற்றப் புத்தகத்தைப் படித்து மாறலாம்.  சரி, சிவசங்கரி, பாலா புத்தகங்களைப் படித்து மாறி விட்டார்கள்.  மாறிய பிறகு இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?  இவர்களால் சமூகத்துக்கு என்ன பயன்?  படிப்பதற்கு முன்னால் குடிகாரன், மனைவியை அடிப்பவன்.  படித்த பிறகு குடியை நிறுத்தி விட்டு வீடு கட்டுவான்.  பாரதி சொன்ன வேடிக்கை மனிதர்களைத்தானே சிவசங்கரியும் பாலாவும் உற்பத்தி செய்தார்கள்? 

தேடிச் சோறு நிதம்தின்று பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்

வாடித் துன்பமிக உழன்று பிறர்

வாடப் பல செயல்கள் செய்து நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போலே…

குறைந்த பட்சம் நீங்களும் நானும் இந்த வேடிக்கை மனிதர் கூட்டத்தில் வர மாட்டோம்தானே?  அது எப்படி நீங்கள் யார் என்றே தெரியாமல் அத்தனை உறுதியாகச் சொல்கிறேன் என்றால், என் எழுத்தைப் படிக்கும் ஒருவர் அதற்கு முன் எப்படி இருந்தாரோ அப்படி இருக்க முடியாது.  அந்த வசியத்தன்மை என் எழுத்தில் உண்டு என்று எனக்குத் தெரியும். 

ஆக, பாலாவும் சிவசங்கரியும் இப்படிப்பட்ட வேடிக்கை மனிதர்களைத்தான் உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள்.  முன்பு குடிகாரன்.  பிறகு ஒரு நல்ல குடும்பஸ்தன்.  ஆனால் இலக்கியம் பயின்றவன் ஒரு வளன் அரசுவாக மாறுகிறான்.  ஒரு தக்ஷிணாமூர்த்தியாக மாறுகிறான்.  நேற்று பிரபு காளிதாஸ் பெயரை மறந்து விட்டு விட்டேன்.  தற்கொலை செய்து கொள்ளப் போனவன், பைத்தியம் என்று பரிகசிக்கப்பட்டவன் சாதனா என்ற அற்புதமான எழுத்தாளனாக மாறுகிறான்.  ஒரு  புகைப்படக்காரன் எழுத்தாளனாகப் பரிணமிக்கிறான்.  எனக்குப் பிடித்த ஒரு எழுத்தாளர்.  பிறகு வெகுஜனப் பத்திரிகைகளால் வெகுஜனங்களுக்குப் ப்ரீதியாக எழுத ஆரம்பித்து விட்டார் போல.  முன்பு போல் இல்லை.  நண்பர்தானே என்று வெளியீட்டு விழாவில் விமர்சனம் பண்ணிப் பேசினேன்.  நண்பரோ எனக்குப் பதில் சொல்லும் விதமாக, இந்தக் கதை விகடனில் வந்ததும் எத்தனையோ பேர் எனக்கு போன் பண்ணிப் பேசினார்கள் என்றார்.  முடிந்தது கதை.  இதே கதையைத்தானே பாலாவும் சிவசங்கரியும் சொன்னார்கள்?  மாற்றம் எல்லாருக்குள்ளும்தான் நிகழ்கிறது.  ஆனால் என்ன மாதிரியான மாற்றம்?  அவர்களில் யாராவது ஒரு ஷோபா சக்தியாகவோ சாதனாவாகவோ மாறினார்களா?  ஒரு டால்ஸ்டாயின் கடிதத்தைப் படித்து காந்திக்குள் என்ன மாற்றம் நடந்தது?  பார்த்த ஒரே பார்வையில், கேட்ட ஒரே ஒரு வார்த்தையி இந்த ஆள் ஒரு மகத்தான கவி, உங்கள் மொழியின் சொத்து என்று காந்தியால் பாரதியைப் பார்த்து ராஜாஜியிடம் சொல்ல முடிந்ததற்குக் காரணம் என்ன?  ராஜாஜியால் அது ஏன் முடியவில்லை?  காந்தியின் இலக்கியப் படிப்புதானே காரணம்?

இங்கே எழுத்தாளர்களுக்கே தங்களுடைய அடையாளம் பற்றி, தங்கள் இடம் பற்றித் தெரியவில்லை என்பதுதான் என் வருத்தம்.  ஒரு எழுத்தாளர் பிரபல பத்திரிகையில் எழுதுகிறார்.  தன் புதல்வனால் தனக்கு ஏற்பட்ட ஞானத்தைப் பற்றி.  மகன் டாக்டர்.  இலக்கியமே படிப்பதில்லை.  ஏம்ப்பா இப்டி எதுவுமே படிக்க மாட்டேங்கிறே என்று வருத்தத்துடன் மகனைக் கேட்கிறார் எழுத்தாளர்.  எழுத்தாளர் ஒரு காலத்தில் மார்க்கேஸுக்கே சவால் விட்டவர்.  மார்க்கேஸ் அவர்களே, நீங்கள் எனக்குச் சமமாக முடியுமா என்று.  வெளிநாட்டு எழுத்தாளனெல்லாம் பெரிய கொம்பன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர் சூழலில் அவருடைய அந்தத் தெனாவெட்டை நான் அப்போது ரசித்தேன்.  மகன் அவருக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லி ஞானஸ்நானம் அளிக்கிறார்.  அப்பா, இன்னிக்கு ஒருத்தன் கை வெட்டப்பட்டு துண்டாகி விட்டது.  அதை ஒரு கவரில் போட்டுக் கொண்டு வந்தான்.  நேரம் கடந்து விடவில்லை. ஒரு நீண்ட நேர அறுவை சிகிச்சை செய்து கையைச் சேர்த்து விட்டேன்.  எனக்கு என்ன ஒரு திருப்தி தெரியுமா?  உன்னுடைய இலக்கியத்தால் இதைச் செய்ய முடியுமா?  உன் இலக்கியத்தால் என்னப்பா லாபம்? 

இப்படி என் பிள்ளை என்னைக் கேட்டிருந்தால் ஒரு பெரிய அரிவாளை எடுத்து என் வயிற்றைக் கிழித்து ஹராகிரி செய்து கொண்டு செத்திருப்பேன்.  எழுத்தாளரோ தனக்கு அன்று ஞானமே கிடைத்து விட்டதாக எழுதுகிறார்.  கையும் காலும் நன்றாக இருந்து மூன்று வேளையும் தின்று பேண்டு கொண்டிருந்தால் நல்ல சமூகம் என்று நினைக்கிறார்கள்.  ஞானத்தைப் பற்றிப் பேசினால் அது என்ன என்றே புரிந்து கொள்ள இயலாமல் பைத்தியத்தைப் போல் கையைச் சேர்த்தேன் காலைச் சேர்த்தேன் என்கிறான்.   இவர்களிடம் எதைச் சொல்லிப் புரியவைப்பது? 

ஒரு அற்புதமான பாடகன் இறந்தால், அதற்காக துக்கம் கொண்டாடினால் அதைப் போய் திட்டுகிறான் இந்த வக்கிரம் பிடித்தவன் என்று எழுத்தாளர் கூட்டமே என்னை வசை பாடியது.  நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளவே முயற்சிக்கவில்லை.  க.நா.சு. எப்படிப்பட்டவர்?  அவர் செய்தது என்ன?  அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி செய்தவர்.  கல்லூரியில் படித்த காலத்திலேயே அமெரிக்க இலக்கிய சஞ்சிகைகளில் ஆங்கிலத்தில் எழுதியவர்.  அவர் வாழ்நாள் பூராவும் சேகரித்த புத்தகங்கள் அவர் மரணத்துக்குப் பிறகு 54 ரஜாய் பெட்டிகளில் அடைக்கப்பட்டன. ரஜாய் பெட்டி என்றால் மூணு அடி உயரம், மூன்றரை அடி அகலம் இருக்கும்.  55வது பெட்டியில் அவர் எழுதி இன்னும் பிரசுரம் ஆகாதவை, இதுவரை பிரசுரம் ஆன பத்திரிகைகள், பத்திரிகைத் துண்டுகள்.  க.நா.சு.வின் மருமகன் பாரதி மணியின் வீட்டில் 55 பெட்டிகளையும் வைக்க இடம் இல்லை.  அதற்கு ஒரு பெரிய மாளிகைதான் வேண்டும்.  மேலும் மணியின் புதல்வி அப்போது நிறைமாத கர்ப்பிணி வேறு.  55 பெட்டிகளையும் ஒரு பதிப்பகத்திடம் கொடுத்து விட்டார்.  நானாக இருந்தாலும் அதைத்தானே செய்ய முடியும்?  வேறு என்ன வழி இருக்கிறது?  எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் அழிந்து போன கதை அது.   இதற்கு பாடும் நிலா பாலு என்ன செய்வார்?  தமிழ் சினிமாவின் கதை ஐயா இது.  தமிழ் சினிமாவின் கதை.  அசோகமித்திரன் தன் புதல்வர்களுக்கு இந்த சிரமத்தைத் தரவில்லை.  நான் பார்த்த போது அவருக்கு ஒரு சிறிய அறை.  மகன் வீடு.  தி. நகர்.  மருமகள்.  பேரன் பேத்தி.  மனைவி.  அந்த அறைக்குள் நானும் அழகிய சிங்கரும் போனால் கொஞ்சம் குறுக்கிக் கொண்டுதான் அமர வேண்டும்.  எங்கே சார் உங்கள் புத்தகங்கள் என்று நான் கேட்டபோது, எப்போதும் அவர் முகத்தில் படிந்திருக்கும் கைப்பு உணர்வு மேலும் கூட, என்னையும் அந்த அறையையும் ஒரு பார்வை பார்த்து “இதுல நாம மூணு பேர் ஒக்கார்றதே பெரிசு, புத்தகம் வேறயா?  அப்போப்போ ஃப்ரெண்ட்ஸ் கிட்ட குடுத்துட்டேன்” என்றார்.  என்னுடைய புத்தகங்கள் உங்கள் அனைவருக்குமான பொக்கிஷம்.  பத்தாயிரம் புத்தகங்கள்.  ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகு தொகுதிகள் எல்லாம் இருக்கின்றன.  சில மாதங்களுக்கு முன்புதான் 3000 ரூபாய் கொடுத்து வாங்கினேன்.  பா.ராகவன் மூலம்தான் கிடைக்கும் இடம் தெரிந்தது.  அதுவும் புத்தகங்களாகக் கிடைக்கவில்லை.  புகைப்பட நகல்.  இப்படி ஒரு அபூர்வமான புதையல் இது.  என் காலத்துக்குப் பிறகு அவந்திகா இதை என்ன செய்வாள்?  ராம்ஜியோ, காயத்ரியோ, என் வாசகர் வட்ட நண்பர்களோ இப்புத்தகங்களை எப்படிப் பாதுகாக்க முடியும்?  முதலில் இடம் வேண்டுமே?  எதுவுமே என் கையில் இல்லை. 

அசோகமித்திரன் மகன் வீட்டின் எதிரே ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது.  இவ்வளவு பெரிய அரண்மனை யாருடையது என்றேன் அசோகமித்திரனிடம்.  பெயரைச் சொன்னார்.  தமிழ் சினிமாவின் வழிபாட்டுக் கடவுள்.  எனக்கு அசோகமித்திரனின் புத்தகங்கள் இல்லாத அறையின் துக்கம் மனதில் கவ்வ, ஆ, இந்த மாதிரி அரண்மனையில் அல்லவா நீங்கள் இருக்க வேண்டும் என்றேன்.  யார்ரா இவன் பைத்தியக்காரனா இருக்கான் என்று ஒரு பார்வை பார்த்து விட்டு, மெதுவான குரலில், தன் அறையைக் காண்பித்து “ரைட்டர் இப்படித்தான் இருக்கணும்” என்றார். 

அது ஒன்றுமில்லை.  நான் கடவுள் பிச்சைக்காரக் கூட்டமாகவே வாழ்ந்து வாழ்ந்து அப்படியே நாம் நம்மைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டோம்.  நம்மிடம் என்ன இருக்கிறது?  எழுத்தாளன் என்ற அடையாளம்.  ஆனால் தமிழ்ச் சமூகம் அந்த அடையாளத்தையும் சினிமாவின் பெயரால் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டதை நீங்கள் அறியவில்லையா?  சோ. தர்மன் நிகழ்ச்சி தெரியும்தானே?  வயிற்றுவலியில் டாக்டரைப் பார்க்க வருகிறார்.  இரவு எட்டு மணி.  போலீஸ் பிடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு நட என்கிறார்.  காலையில்தான் விடுவார்கள்.  தர்மன் தனக்குத் தெரிந்த அதிகாரியை போனில் அழைக்கிறார்.  அதிகாரி அந்த கான்ஸ்டபிளிடம் போனில் “அவர் பெரிய ரைட்டர்யா, விட்ரு” என்று சொல்ல, போலீஸ் தர்மனிடம் “சார் என்னா சார் இது?  ரைட்டர்னு முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல?  எந்த ஸ்டேஷன்ல ரைட்டர் சார்” என்று கேட்டிருக்கிறார்.  அது கிராமம், அப்படி நடந்தது.  இங்கே நகரங்களில் ரைட்டர் என்று சொன்னால் எந்தப் படம் என்று கேட்பார்கள்.  உலக இலக்கியமெல்லாம் படித்த, ஜெயமோகனுக்கே நண்பராக இருக்கும் ஆனானப்பட்ட கமல்ஹாசனே போன பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தின போது ரைட்டர் ஷங்கர், எழுத்தாளர் ஷங்கர் என்று இரண்டு முறை சொல்லிச் சொல்லி அறிமுகப்படுத்தினார்.  இங்கே சினிமாவுக்கு எழுதுபவர்தான் எழுத்தாளர்.  இப்படி உங்களுடைய ஒரே அடையாளமான எழுத்தாளர் என்பதையும் தனக்காகப் பிடுங்கிக் கொள்ளும் ஒரு துறைக்காக எழுத்தாளர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.  இந்தத் துன்பத்தை எங்கே கொண்டு போய் சொல்ல? 

நேற்று ரொனால்ட் சுகேனிக் பற்றிக் குறிப்பிட்டேன்.  நாற்பது பேர்தான் என் வாசகர்கள் என்கிறார் அவர்.  அப்படியானால் அவர் பிச்சை அல்லவா எடுத்திருக்க வேண்டும்? அமெரிக்கர்களும் ஒன்றும் பெரிய அளவில் படிப்பாளிகள் கிடையாது.  என் புத்தக விழாவுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து என் வட இந்திய நண்பர்கள் நீங்கள் என்ன ராக்ஸ்டாரா என்பார்கள்.  ஆனாலும் ஜீவனோபாயத்துக்கு நான் வாசகர்களைத்தான் எதிர்பார்க்கிறேன்.  அமெரிக்காவில் இம்மாதிரி எழுத்தாளர்களைப் பல்கலைக்கழகங்கள் காப்பாற்றுகின்றன.  எல்லா எழுத்தாளர்களுமே ஏதாவது பல்கலைக்கழகங்களில்தான் வருகைதரு பேராசிரியராக இருக்கிறார்கள்.  அவர்களுக்கு ‘ரெஸிடென்ஸ்’ தருகிறார்கள். 

போதுமான அளவுக்கு என்னுடைய தமிழகமும் கேரளமும் கட்டுரையில் சொல்லி விட்டேன்.  இனிமேல் இது பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை. இப்போதும் கூட ராம்ஜியின் எதிர்வினை படித்து இத்தனையும் தோன்றியது.  இனிமேல் இதை வளர்த்திக் கொண்டு போக மாட்டேன். 

பின்குறிப்பு: பிரபு காளிதாஸ், எப்படி இருக்கிறீர்கள்?  

***

கோபி கிருஷ்ணன் உரைகள் இரண்டும் தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதுங்கள். மாதச் சந்தா/ நன்கொடை அனுப்புபவர்களுக்கு அந்த உரைகள் தேவையென்றாலும் தயக்கமில்லாமல் எழுதுங்கள். சிலர் எழுதிக் கேட்டு நான் அனுப்பாமல் விட்டிருக்கலாம். அவர்களும் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

சந்தா/நன்கொடை அனுப்ப முடிந்தவர்கள் அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

அடுத்த மாதாந்திர சந்திப்பு நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு நடைபெறும்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai