நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு புதுமைப்பித்தன் பற்றிப் பேசுகிறேன். அந்த Zoom சந்திப்பை ஒருங்கிணைத்துக் கொடுக்க உங்களில் யாராலும் முடியுமா? சதீஷ்வருக்கு வேலை வந்து விட்டது. ஐந்து சந்திப்புகளைத் தொடர்ந்து செய்து கொடுத்தார். முடிந்தவர்கள் எனக்கு எழுதுங்கள். நிறைய பேர் முன்வருவார்கள் என்று எண்ணி சும்மா இருந்து விடாதீர்கள். இப்படிப் பொத்தாம் பொதுவாகப் போடும்போது ஒரு எதிர்வினை கூட வருவதில்லை என்பதே என் அனுபவம். ஆனால் நான் போன் செய்து கேட்டால் ஓ, யாரும் இல்லையா, நான் செய்கிறேன் என்று சொல்வார்கள். அப்படி நான் பத்துப் பதினைந்து பேருக்கு போன் செய்து கேட்க வேண்டியிருக்கும். அதை விட நீங்களே எழுதினால் நலம்.
இரண்டாவது, பூனை உணவு. Whiskas என்று மட்டும் அல்ல; எந்த ப்ராண்டாக இருந்தாலும் சரி. விஸ்காஸ் மட்டுமே சாப்பிடும் என் எட்டுப் பூனைக்குட்டிகளையும் ஒரு நல்ல ஷெல்டரில் கொடுத்து விட்டேன். பூனைகள் வீட்டை விட்டு வெளியே போய் சுற்றி விட்டு வருகிறோம் என்று கூறின. நாங்கள் தயார். ஆனால் குடியிருப்புவாசிகள் இந்தக் கொரோனா காலத்தில் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால் ஷெல்டரில் விட்டோம். அதற்கும் மாதாமாதம் உணவு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். கீழ்த்தளத்தில் சுதந்திரமாக பத்து பூனைகள் வளர்கின்றன. அதற்குத்தான் பூனை உணவு தேவை. எனக்குக் கட்டுப்படி ஆகவில்லை. மாதம் 20000 ரூ. ஆகிறது. நமக்கென்ன என்றும் இருக்க முடியவில்லை. காலை நேரம் வந்து அவந்திகா கீழே போக கொஞ்சம் தாமதம் ஆனாலே பசியில் கதறுகின்றன. சாமியார் பூனை வளர்த்த கதைதான். மெரினா கடற்கரையில் நூற்றுக்கணக்கான புறாக்களுக்கு சேட்டுகள் தானியம் போடுகிறார்கள். அவர்கள் சேட்டுகள். மேலும் பத்துப் பதினைந்து பேராகச் சேர்ந்து செய்கிறார்கள். இங்கே பூனை நாய் என்றால் ஒற்றையாகத்தான் செய்ய வேண்டியிருக்கிறது.
எனக்கு மின்னஞ்சல் செய்தால் முகவரி தருகிறேன்.
charu.nivedita.india@gmail.com
***
இனி வரும் கட்டுரையை சிறார்களும் பெண்களும் படிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கென்று ஒரு பிரத்யேக மொழி இருந்தது. அந்த மொழியைப் பிறர் பேசி அதிகம் கேட்டதில்லை. ஒரு ஹிப்பாக்ரட் சமூகமான தமிழகத்தில் அது ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள் என்பதை கவனித்து அங்கேயாவது நம் மொழி உயிரோடு இருக்கிறதே என்று மகிழ்ச்சியும், தமிழில் மட்டும் இப்படி அழிந்து விடும் போலிருக்கிறதே என்ற விசனமும் அடைந்தேன். யேசு பேசிய அராமிக் மொழியை இன்று மூவாயிரம் பேர்தான் பேசுகிறார்கள் என்று கேள்வி. அதேபோல் என்னுடைய பிரத்யேக மொழியும் என்னோடு போய் விடுமோ என்று அஞ்சிய நிலையில் –
அந்தப் பிரபல இயக்குனரை சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வீட்டில் சந்தித்தபோது – இரவு எட்டு மணியிலிருந்து அதிகாலை வரை பேசிக் கொண்டிருந்தோம் – அவர் என்னுடைய பிரத்யேக மொழியை வெகு சரளமாகப் பேசுவதை அறிந்து மகிழ்ச்சி மிகக் கொண்டேன். ”அந்தப் புண்டாமவன் பெரிய ஜீனியஸ் சாரு” என்று அவர் சொன்னபோது முதலில் சொன்னது சரி, ரெண்டாவது ரொம்பத் தப்பு என்றேன். நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரித்தார். என்ன பேசினோம், எப்படிப் பேசினோம் என்று கோடி கூடக் காட்ட முடியாது. எல்லாமே பெரிய இடத்து விவகாரம். ஆனால் என்ன? அவரும் என்னை விட மூத்தவர். எங்கள் இரண்டு பேரோடு எங்களின் மொழி முடிவுக்கு வந்து விடும். இடையில் ஒரு ஒளிக்கீற்று தெரிந்தது. என் வாரிசு. கார்த்திக். தகப்பன் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி. விளாசு விளாசு என்று விளாசுவான். மரைன் எஞ்சினியர் வேறா, கேட்கவே வேண்டாம். கேட்க சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதிலும் யாரோ கண் போட்டு விட்டார்கள். இப்போது அவன் வாயிலிருந்து வருவதெல்லாம் மராட்டி. இருபத்து நாலு மணி நேரமும் மராட்டிதான். அந்த மொழி பேசினாலே சண்டை போடுவது போல் இருக்கும்.
நானும் என் பிரத்யேக மொழியைப் பேசி பத்து ஆண்டுகள் இருக்கும். எல்லாம் என் பெண் நண்பர்களால் வந்த வினை. நான் என்ன சீனியா? என்னுடைய பெண் நண்பர்களெல்லாம் சங்க காலம். அங்கவை, சங்கவை, ஒக்கூர் மாசாத்தியார், மாறோகத்து நப்பசலையார் ரகம். இதில் ஔவையைக் கூட சேர்க்கவில்லை, கவனியுங்கள். ஔவை புரட்சிக்காரி. அதியமானோடு சேர்ந்து தண்ணியெல்லாம் அடித்தவள். அதைப் பற்றி எழுதவும் செய்தவள். கடைசி பெக் இருந்தால் அதைத் தான் குடிக்காமல் எனக்குக் கொடுத்து இன்புறுவான் அதியமான் என்கிறார் ஔவை. ஆக ஒக்கூர் மாசாத்தியார் போன்ற என் பெண் நண்பர்கள் என்னுடைய பிரத்யேக மொழியைப் பார்த்து விட்டு வெறுமனே விமர்சித்திருந்தால் பரவாயில்லை. விமர்சனத்துக்கெல்லாம் யார் அஞ்சுவார்? பலஹீனமான பகுதியில் தாக்குவார்கள். வயதானவர்களின் பலஹீனம் எது? வயது. அங்கே போட்டுத் தாக்குவார்கள். இவ்ளோ வயசாச்சு, வயசுக்குத் தகுந்த பேச்சு வேண்டாமா? முடிந்தது கதை. பிரத்யேக மொழி பேசி பத்து ஆண்டுகள் ஆயிற்று. ஆனால் என் பிரத்யேக மொழிக்கு ஒரு எதிர்பாராத இடத்திலிருந்து பெரும் ஆதரவு உண்டு. அது அவந்திகா. அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அதெல்லாம் அய்யங்கார் aberration என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். முட்டாப்புண்ட ஏன் இப்டி என்னை டார்ச்சர் பண்றே என்று கோபத்தில் கத்தினால் ஒரு பெண் என்ன செய்வாள்? குறைந்த பட்சம் மூணு நாள் பேசக் கூடாது. கடும் கோபம் கொள்ள வேண்டிய விஷயம். அல்லது, எதிர்த்தாவது சண்டை போட்டு ரகளை பண்ணலாம். இவ்வளவையும் விட்டுவிட்டு ஹஹ்ஹா என்று சிரிப்பாள். இந்தத் திவ்யப் பிரபந்தத்தையெல்லாம் நீ எங்கேதான் கற்றுக் கொண்டாய் சாரு என்பாள். போடி லூசுக் கூதி என்று அதற்கும் கத்தி விட்டு வந்து விடுவேன். பத்து வருடமாச்சு கனிந்து. நேற்று கூட அவந்திகா கேட்டாள், சாரு நீ ரொம்ப மாறிட்ட. எப்டிம்மா? முன்னல்லாம் ஒரே திவ்யப் பிரபந்தா பேசுவே. இப்போ ஒண்ணுத்தையும் காணோமே?
என்னுடைய பிரத்யேக அந்த திவ்யப் பிரபந்தம் அமெரிக்காவில் ஆங்கில மொழியில் அதிகம் பயன்படுத்துவதை அமெரிக்க சீரியல்களின் வழி அறிகிறேன். பதிமூணு வயதுப் பெண் தன் பேச்சின் இடையே ஃபக் ஃபக் என்கிறாள். உடனே தகப்பன் மைண்ட் யூர் லாங்வேஜ் என்கிறான். அவள் சுதந்திரத்தில் ரொம்பத் தலையிடாதீர்கள் என்று அம்மா தன் கணவனை அதட்டுகிறாள். இப்படி பதிமூணு வயதுப் பெண்கள் ஃபக் சொல்லும் காட்சி இல்லாத அமெரிக்க சீரியலே இல்லை என்ற அளவுக்கு விரவிக் கிடக்கிறது. ஆனாலும் பஞ்சாபியிலும் ஸ்பானிஷிலும்தான் இந்தப் பிரத்யேக மொழி கொடிகட்டிப் பறக்கிறது என்று சமீப காலம் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். Inmate சீரியல் பார்த்ததும் அந்தக் கருத்து மாறி விட்டது. இது விஷயத்தில் ஸ்பானிஷை அடித்துக் கொள்ள முடியாது. பூத்தா (Puta) இல்லாமல் ஸ்பானிஷே பேச முடியாது போல. இன்மேட் பார்த்து விட்டு தமிழிலேயே அடிக்கடி நான் பூத்தா பூத்தா என்று சொல்லிக் கொண்டு திரிந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சீலேவில் என் வழிகாட்டி ரொபர்த்தோ ரொம்பக் கற்பாக ஸ்பானிஷ் பேசுவதைப் பார்த்து நீங்கள் பேசுவது ஸ்பானிஷ் மாதிரியே தெரியவில்லையே என்றேன். முழித்தார். பூத்தா விஷயம் சொன்னேன். ஓ, அதெல்லாம் அந்நியர்கள், பெண்கள், குழந்தைகள் முன்னால் பேசுவதில்லையாம். நண்பர்களிடையேதானாம்.
எல்லாம் அபிலாஷின் பதிவை காலையில் பார்த்ததும் தோன்றியது. http://thiruttusavi.blogspot.com/2020/10/blog-post_9.html
கிரிக்கெட்டில் தமிழ் வர்ணனை வந்து விட்டதாம். வந்து முப்பது வருஷம் ஆச்சு என்று என்னிடம் சொல்லாதீர்கள். எனக்குக் கிரிக்கெட் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் லியொனல் மெஸ்ஸி பற்றி மணிக்கணக்கில் பேச முடியும். அந்தக் காலத்தில் ஒரு எழுத்தாளரைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் பல இடங்களிலும் பல பேரும் அதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்படி பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் பற்றியும் சலவைக்காரன் கதை உண்டு. அதேபோல் டெஸ்ட் டியூப் கதையும் உண்டு. கோயம்பத்தூரில் ஒரு பெண்கள் கல்லூரியையே டெஸ்ட் ட்யூப் கல்லூரி என்பார்கள். இதெல்லாம் இன்றைய இண்டர்நெட் உலகில் நடப்பில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதே போன்றதுதான் எழுத்தாளர் கதையும். கிரிக்கெட் பற்றி அவர் கேட்டாராம், கிரிக்கெட் மைதானம் பூராவும் பச்சையாக இருந்தாலும் நடுவில் கோமணம் மாதிரி ஒரு சின்ன இடம் மட்டும் ஏன் வெள்ளையாக இருக்கிறது என்று. கிட்டத்தட்ட என்னுடைய கிரிக்கெட் அறிவும் அப்படிப்பட்டதுதான்.
சரி, அபிலாஷுக்கு வருவோம். கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர்கள் பிராமணக் கொச்சையிலேயே பேசுகிறார்களாம். இது கேட்க நாராசமாக இருக்கிறது. கரெக்ட். எனக்கு இது வாந்தியே வருகிறது. ஆனால் நான் பிராமணக் கொச்சை மொழியின் அடிமை. எனக்கு அது அவ்வளவு பிடிக்கும். இது என்ன முரண்பாடு என்று உங்களுக்குத் தோன்றும். இன்றைய தினம் பிராமணக் கொச்சை அடியோடு அழிந்து விட்டது. தஞ்சாவூர் மாவட்ட பிராமணப் பேச்சுக்கு ஈடு இணை கிடையாது. ஈடு இணை கிடையாது என்றா சொன்னேன்? ம்ஹும். பாலக்காட்டு பிராமணக் கொச்சை எங்கே போயிற்று? அதற்கு இணை உலகத்திலேயே கிடையாது. மைக்கேல் மதன் காமராஜன் எல்லாம் சும்மா. கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு பாலக்காட்டு பிராமணர் தன் மனைவியைப் பற்றிக் குறை சொல்லும் ஒரு கால் மணி நேரப் பேச்சை எனக்கு ஒரு டஜன் பேராவது வாட்ஸப்பில் ஷேர் செய்திருப்பார்கள். இது போல் ஒவ்வொரு இனத்துக்கும், இனக்குழுவுக்கும், மாவட்டத்துக்கும், ஊர்களுக்கும் ஒரு பேச்சு மொழி இருக்கிறது. நாகூர், கூத்தாநல்லூர் பக்க முஸ்லீம்களின் பேச்சும் கேட்க கவிதை போல் இருக்கும். நாஞ்சில் மொழி. இப்படி நூற்றுக்கணக்கான பேச்சு மொழிகள் இன்று அழிந்து வருகின்றன. அதில் முதல் இடத்தில் இருப்பது பிராமணக் கொச்சை. அதிலும் பல மாதிரிகள் உள்ளன. இப்போது அது எல்லாமே ஒரு பொது மொழி ஆகி விட்டது. வந்துண்டு போயிண்டு என்ற ’ண்டு’ தான் எஞ்சி நிற்கிறதே தவிர வேறு எல்லாமே போய் விட்டது. இது பற்றிய ஆழ்ந்த வருத்தம் எனக்கு உண்டு. நாளை நாகூருக்குப் போனால் அங்கே உள்ள முஸ்லீம்கள் எல்லோரும் பொதுத் தமிழைப் பேசினால் எப்படி வருந்துவேனா அதேபோல். பல பிராமண இளைஞர்களுக்கு ‘ண்டு’ கூட வருவதில்லை. ஆனால் சிலர் இருக்கிறார்கள், அ-பிராமணர்களிடம் பொதுத் தமிழ், பிராமணர்களிடம் பிராமணத் தமிழ். அது ஒரு அட்டகாசமான விஷயம். என் மைத்துனியின் மகள் இரண்டு வயதாக இருக்கும்போது என்னிடம் நாளைக்கு எப்ப வருவீங்க பெரியப்பா என்று மழலையில் கேட்பாள். அதே சமயம் அவந்திகாவிடம் நாளைக்கு எப்போ வருவேளு என்பாள். ரெண்டு வயதில் பேச ஆரம்பிக்கும்போதே இப்படி. அவந்திகாவெல்லாம் வெகு சரளமாக அவள் உறவுகளிடம் அய்யங்கார் பாஷையும் என்னிடம் பொது பாஷையிலும் பேசுவாள். பார்த்தால் சட்டென்று அந்நியன் படத்தில் விக்ரம் செய்வது போல் இருக்கும். அந்த அளவுக்கு சட் சட்டென்று மாற்றுவாள். ஆனால் சில தத்திகள் இருக்கின்றன. இப்போது அம்மாதிரி தத்திகளைப் பற்றித்தான் அபிலாஷ் பேசுகிறார்.
அபிலாஷின் குற்றச்சாட்டோடு நான் நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். அது எப்படி கிரிக்கெட் வர்ணனைக்கு வந்து விட்டு பிராமணக் கொச்சையில் பேசுகிறீர்கள்? எஸ். ஆனந்த் எனக்குப் பிடித்த கவிஞர். என் வயது இருக்கும். அவர் கொடுத்த ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பார்த்தால் சுத்த பிராமணக் கொச்சையில் பேசுகிறார். என்னோடு பேசும்போது ரசித்த அதே பேச்சை தொலைக்காட்சியில் கேட்ட போது அருவருப்பாக இருந்தது. தயவுசெய்து என்னைத் திட்ட ஆரம்பிப்பதற்கு முன் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கோவில்களில் எல்லாம் பெண்கள் நைட்டி அணிந்து வராதீர்கள், கைலி அணிந்து வராதீர்கள் என்று ஒரு போர்ட் இருக்கும். அப்படித்தான் நான் சொல்கிறேன். நைட்டிக்கும் கைலிக்கும் கோவில் நிர்வாகம் எதிரியா என்ன? பொது இடத்தில் பின்பற்ற வேண்டிய சில விதிகள் இருக்கின்றன. அதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும். பொதுத் தமிழ் தெரியாதா? ஊடகத்தில் பேசாதே. அவ்வளவுதான். சொல்லப் போனால் பிராமணத் தமிழ் அழிந்து விட்டதே என்ற மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால் இது வேறு. அந்த கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அத்தனை பேரும் மொக்கைகள். அவர்களுக்கு கிரிக்கெட் தவிர வேறு எதுவுமே தெரியாது. மேட்டுக்குடியாகவும் இருக்க வேண்டும். கேட்க வேண்டுமா? மேட்டுக்குடியினர் லும்பன்களை விட மரண மொக்கைகள்.
இந்த மொழி விஷயத்தை இப்போது நாம் நீட்டித்துப் பார்க்க வேண்டும். ஒருவர் விபூதியோ, ஸ்ரீசூர்ணமோ அணிந்து கொள்வதில் யாதொரு ஆட்சேபணையும் இல்லை. ஆட்சேபணை இல்லை என்று சொல்வதே ஒரு அநாகரீகம். அதெல்லாம் அவரவர் சுதந்திரம். ஆனால் ஒரு நீதிபதி அவ்விதம் வரலாகாது. மற்றவர்களுக்கு அவர் மீது நம்பிக்கை வராது. அதேபோல் ஒரு ஆசிரியர் அப்படி வரலாகாது. ஒரு மருத்துவர் அப்படி வரலாகாது. சொல்லப் போனால், யாருமே – கவனியுங்கள் – யாருமே தங்கள் மத அடையாளங்களோடு வெளியே வரக் கூடாது. சீக்கியர் மட்டுமே விதிவிலக்கு. அவர்களை முடியை வெட்டு என்று சொல்ல முடியாது. அது அவர்களின் உடல் உறுப்பு. அதேபோல் ஒரு முஸ்லீம் தாடி வைத்திருந்தால் அதையும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் ஆடைகளிலும் நான் மதத்தைப் பின்பற்றுவேன் என்றால் அதை அவர்கள் அவர்களுடைய நாட்டில்தான் செய்து கொள்ள வேண்டும். ஐரோப்பாவில் செய்வது தவறு. பொதுவில் ஸ்ரீசூர்ணமும் விபூதியும் வைத்துக் கொண்டு வருவதே தவறு என்று சொல்லும் நான் ஐரோப்பாவில் ஹிஜாப் அணிவது பற்றி என்ன விதமான கருத்து வைத்திருப்பேன் என்று நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். மதம், கடவுள், வழிபாடு போன்ற அனைத்தும் மிகவும் அந்தரங்கமானது. அதனால் அது வீட்டுக்குள்ளேதான் இருக்க வேண்டும். அப்படித்தான் ஒரு நாகரீகம் அடைந்த மனிதன் சிந்திக்க முடியும். கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவர் மனிதர்களின் மதச் சண்டைகளையும் மதத்தின் பேரால் ரத்த ஆறு ஓடுவதையும் பார்த்துச் சிரிப்பார். அவர் அதையா விரும்புவார்? லண்டனில் ஒரு பகுதியில் மதுபானங்களை கடையில் விற்கக் கூடாது என்று கலவரம் செய்து கடைகளை அடித்து நொறுக்குகிறார்கள். இதனால் யாருக்கு நஷ்டம்?
மேலும், bat, pitch, run, score போன்ற வார்த்தைகளை ஏன் தமிழில் சொல்ல வேண்டும். நாம் என்ன திரைப்படம் என்றா பேச்சு வழக்கில் சொல்கிறோம்? சினிமா என்றுதானே பேசுகிறோம்? அதேபோல் கிரிக்கெட் வர்ணனை என்பது வியாசமா என்ன? பேச்சுதானே? இதை நான் குமுதத்தில்தான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் மத விஷயம் குறுக்கிடுவதால் அங்கே எழுத முடியாது.
எழுதி முடித்த பிறகு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. சென்ற ஆண்டு ஔரங்கசீப் என்ற இந்திரா பார்த்தசாரதியின் நாடகத்தைப் பார்த்தேன். உலகத் தரமான நாடகமாக எழுதியிருப்பார் இ.பா. நிகழ்த்தியவர்களும் ரொம்பவே முயற்சி செய்திருந்தார்கள். ஆனால் எல்லோருமே பிராமண உச்சரிப்பில் தமிழ் பேசினார்கள். அல்லாஹ்வைக் கூட அல்லா என்றார்கள். ஔரங்கசீப் பிராமணத் தமிழ் பேசுவதைக் கேட்க வேடிக்கையாக இருந்தது. பிராமணர்கள் மட்டும் சமூகத்தில் தனிமைப்பட்டுப் போனது இப்படியாகத்தான்.