160. பணம்

அதிகாரம், புகழ், காதல் போன்ற வார்த்தைகள் மனித வாழ்க்கையில் செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றி எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே போகலாம்.  மொத்த மகாபாரதமே அதிகாரம் என்ற ஒரே வார்த்தையில் அடங்கி விடும்.  இன்றைய நிலையில் ஒவ்வொரு தேசத்தின் ராணுவ நடவடிக்கைகளும் அதற்கு செலவிடப்படும் தொகையும் அதிகாரத்தில் வரும்.  என் கடவுளே உன் கடவுளை விட உசத்தி என்ற எண்ணத்திலிருந்து உருவாவதே இன்றைய மதக் கலவரங்கள்.  செப்டம்பர் 11 தாக்குதலும் அஃதே.  உலக வரலாற்றையே இந்த மூன்று வார்த்தைகளில் அடக்கி விடலாம்.  இந்திய சுதந்திரமே ஒரு பெண்ணின் காதலால்தான் கிடைத்தது என்று கருதுபவர்களும் உண்டு.  அதிகாரத்துக்கான போட்டியில் தோற்றுப் போன பிரிட்டன் இந்தியாவை அதற்கு மேல் ஆள்வதற்குக் கையாலாகாமல் போன போது அந்தக் காதல் விவகாரமும் குறுக்கிட்டு பிரிட்டனின் அதிகாரப் பிடியைத் தளர்த்தியது.  ஒரு பெரிய மனிதர் – உழைப்பால் மிகப் பெரிய இடத்தை அடைந்தவர் – வயதான காலத்தில் ஒரு பெண்ணின் மீது ஏற்பட்ட ஒருதலைக் காதலால் அந்தப் பெண்ணின் கணவனைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்து கொலைக் கேஸில் சிக்கி அவர் கடைசி வரை நீதிமன்றத்துக்கும் சிறைக்குமாக அலைந்து லோல்பட்டு இறந்த கதையை நாம் அறிவோம்.  காதல் எல்லாவற்றையும் மறைத்து விட்டது.  பணத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஆனால் புகழை அழித்து விட்டது.  அந்தப் பெரிய மனிதரிடம் அதிகாரம் இல்லை.  இருந்திருந்தால் கொலையை மூடி மறைத்திருக்கலாம்.  அதுபோல் எத்தனையோ கொலைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.  சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மிகப் பெரிய செல்வாக்கான மந்திரியின் தம்பி படு பயங்கரமாகக் கொலை செய்யப்பட்ட போது கொலையாளிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.  கொலையுண்ட காரணமும் தெரியவில்லை.  அல்லது, எதுவுமே வெளியே சொல்லப்படவில்லை.  அது, அதிகாரத்துக்கும் அதிகாரத்துக்கும் நடந்த மோதல். 

மேலே குறிப்பிட்ட அதிகாரம், புகழ், காதல் ஆகியவற்றோடு பணம் என்ற ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  வீரப்பனிடம் எக்கச்சக்கமான பணம் இருந்தது.  அதிகாரம் இல்லை.  கொல்லப்பட்டான். சினிமா நடிகர்களிடம் இரண்டு வலுவான விஷயங்கள் உள்ளன.  புகழ், பணம்.  இது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.  ஆனால் அதிகாரம் சிறிதும் இல்லை.  பணத்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலம் என்பது ஒரு மாயை.  பணம் எல்லா இடத்திலும் செல்லுபடி ஆகாது.  வைரமுத்து தன் சிறுகதைகளை அசோகமித்திரன் பாராட்டி எழுதுவார் என்று எத்தனையோ முயன்றார்.  ஜெயகாந்தனை மடக்கியது போல் மடக்கலாம் என்று நினைத்தார்.  இத்தனைக்கும் அசோகமித்திரன் ஜெயகாந்தனைப் போன்ற வீரதீர சாகசக்காரரும் இல்லை.  பயந்தாங்கொள்ளி.  ஆனாலும் கடைசி வரை பாராட்டி எழுதவில்லை.  புகழும் பணமும் அதிகாரமும் செல்லுபடியாக இடங்கள் இப்படிச் சில இருக்கின்றன.  மல்லையா என்ன ஆனார்?  இப்போது லண்டனில் மெத்ரோ ரயிலில் அவர் செல்லும் காணொலியை சமீபத்தில் பார்த்தேன்.  என்ன இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அதிகாரத்துக்கு நிகராக எதையும் சொல்ல முடியாது.  அதேபோல் கண்ணுக்குப் புலப்படாத அதிகாரமும் இருக்கிறது.  உதாரணமாக, திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகருக்கும் சென்னை போன்ற பெருநகர பிஷப்புகளுக்கும் உள்ள அதிகாரத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?  இவர்களின் முகம் கூட நமக்குத் தெரியாது.  ஆனால் பிஷப்பைத் தொட்டால் ட்ரம்பிடமிருந்து மோடிக்கு போன் வரும்.  தொட்ட அதிகாரி சத்தீஸ்கர் நக்ஸலைட் ஏரியாவுக்கு மாற்றப்படுவார்.  தொடுதல் என்றால் physical intimidation அல்ல, சும்மா ஒரு ஃபோன் மூலமான விசாரணையையே சொல்கிறேன். 

ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் உங்களிடம் எத்தனை பணம் இருந்தாலும், புகழ் இருந்தாலும் சட்டத்தின் எல்லோருமே சமம்.  அப்படி ஒரு நிலைமை இருந்தால்தான் அது நல்ல நாடு.  அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்ஸன் ஒரு கடவுள் ஸ்தானத்தில் இருந்த போதிலும் அவர் மீது சில புகார்கள் வந்த போது அவரது பிரபலத்துக்காக எந்த சலுகையும் காட்டப்படவில்லை என்பதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.  அப்படியும் ஃப்ரான்ஸ் போன்ற சில நாடுகளில் எழுத்தாளன் என்றால் அவன் சட்டத்துக்கு மேலானவனாகக் கருதப்பட்ட தருணங்களும் உண்டு.  ஜான் ஜெனே ஒரு உதாரணம்.  பீடஃபைல் உட்பட ஜெனே செய்திருந்த குற்றங்களுக்கு 300 ஆண்டுகள் தண்டனை கிடைத்திருக்கும்.  ஆனால் அவர் ஞானி என்று சொல்லி வெளியே விட்டு விட்டார்கள்.  அப்படிச் செய்த சமூகத்தையே அவர் மன்னிக்கத் தயாராக இல்லை.  என்னை செக்ஸ் குற்றவாளி என்றும் திருடன் என்றும் குற்றம் சாட்டிய ஃப்ரான்ஸ் என்ற இந்த நாட்டின் மண்ணில் என் பிணம் புதைக்கப்படலாகாது என்று சொன்னார்.  அதேபோல் அவர் அசந்தர்ப்பவசமாக ஃப்ரான்ஸில் இறக்க நேர்ந்த போதும் அவர் உடலை அவர் வாழ்ந்த மொராக்கோ கொண்டு சென்று அடக்கம் செய்தார்கள்.   

ஆக, அதிகாரம், புகழ், காதல் ஆகியவற்றோடு சேரக் கூடிய பணம் என்ற விஷயத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்.  இமயமலையில் வாழக் கூடிய, மடம் போன்ற நிறுவனங்களைச் சாராத துறவிகள் பணத்தை எப்படி மதித்தார்களோ அப்படித்தான் நேற்றுவரை நானும் மதித்தேன்.  40 ஆண்டுகளாக நான் எழுதிய பத்திரிகைகளிலிருந்து எதுவுமே பெற்றதில்லை.  இப்படி நான் சொல்வதே என் எழுத்தை அவமானப்படுத்துவதாகும்.  என் குழந்தைகளுக்குப் பால் கொடுத்தேன், உணவிட்டேன், அவைகள் எனக்கு பதில் எதுவும் செய்வதில்லை என்று சொல்வதைப் போல.  ஏனென்றால், அவனவன் தன் சொத்தை விற்றோ, சொத்து இல்லாதவன் தன் மனைவியின் நகைகளை விற்றோ, தனக்கு வரும் குமாஸ்தா சம்பளத்தில் மிச்சம் பிடித்தோதான் இலக்கியப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தான்.  அவனிடம் போய் நான் பணம் கேட்பது என்பது என் ரத்தத்துக்குக் காசு கேட்பது போல.  என் உயிருக்குக் காசு கேட்பது போல. 

அடிப்படையில் நான் ஒரு பயணி.  நான் செய்த பயணங்கள் பற்றி எழுதினால் என்னைப் பயண எழுத்தாளர் என்று கட்டம் கட்டி விடுவார்கள் என்று அஞ்சி தான் அதையெல்லாம் எழுதவில்லை.  ஏற்கனவே எல்லோரும் என்னிடம் உங்கள் நாவல்களை விட உங்கள் கட்டுரைகள் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த நிலையில் பயணக் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.  முப்பது நாவல் எழுதி, அதில் பதினைந்து நாவல்களைப் பிரசுரம் பண்ணியும், அதிலும் நாலைந்து நாவல்கள் உலகத் தரமாக இருந்தும், தன் ஜீவனோபாயத்துக்காக, காசுக்காக பத்திரிகைகளில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளை வைத்து க.நா.சு.வை விமர்சகர் என்று சொல்லித் தீர்த்துக் கட்டியது போல் என்னையும் பயண எழுத்தாளர் என்று தீர்த்துக் கட்டி விடுவார்கள் என்று பயந்தே பயணங்களை எழுதவில்லை.  முடிந்தால் பயண அனுபவங்களை நாவலிலேயே கோர்த்து விடுவேன்.  பாரிஸ் அனுபவங்களை ராஸ லீலாவில் சேர்த்த மாதிரி. 

திருமாறன் என்ற மலேஷிய நண்பரோடு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே திபெத் போக வேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது.  ஏதோ காரணத்தால் அது முடியாமல் போய் விட்டது.  அந்தப் பயணம் பயண முகவர்களால் திட்டமிடப்பட்டது அல்ல.  பயணத்தையே வாழ்க்கையாகக் கொண்ட சில தனியார் பயணக் குழுக்களோடு இணைந்து செல்வதே இமயம் சார்ந்த நாடுகளுக்கான பயணத்துக்கு நல்லது.  அப்படித்தான் செல்ல இருந்தோம்.  இப்போது 10000 அடிக்கு மேல் போனால் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது என்பதால் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து உள்ளேன்.  அலோபதியும் தொடர்கிறது.  அலோபதியில் என்ன பிரச்சினை என்றால், இறுதி வரை ஹார்ட் அட்டாக்கைத் தடுக்கும் என்றாலும், இதயக் குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றாது.  பதினைந்து ஆண்டுகளாக அலோபதி சாப்பிட்டும் இதுதான் நிலை.  அது பற்றிய எதிர்பார்ப்பும் இல்லாததால் ஏமாற்றமும் இல்லை.  கொரோனா முடிந்த கையோடு திபெத் செல்ல வேண்டும்.  பயணத்தில் எவரெஸ்ட் பேஸ் கேம்பும் உண்டு.  அங்கிருந்தபடியே எவரெஸ்டை அண்ணாந்து பார்க்கலாம்.  பேஸ் கேம்ப் 18000 அடி உயரம்.  எனக்கு அதை விட மானஸரோவர் பார்ப்பதில்தான் ஆர்வம்.  அதை விட அங்கே உள்ள சில குறிப்பிட்ட மடாலயங்களைப் பார்க்க வேண்டும்.  (எல்லாம் அசோகாவுக்குப் பிறகு) இதற்காகவெல்லாம் இதயத்தைத் தயார்ப்படுத்த வேண்டும்.  அதனால்தான் ஆயுர்வேதம்.  ஆயுர்வேதம் என்பது ஆயுள்வேதம்.  ஆயுர்வேதத்துக்கு மாதம் 3000 ரூ.  அலோபதிக்கு 4000 ரூ.  ஆயுர்வேத மருந்துகளை ஒரு நண்பரும் அலோபதி மருந்துகளை வேறொரு நண்பரும் வாங்கி அனுப்பி விடுகிறார்கள்.  இவர்களுக்காக எல்லாம்தான் இப்படி பேய் மாதிரி எழுதிக் கொண்டிருக்கிறேன். 

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  இமயத்தில் உள்ள சந்நியாசிகள் பணத்தை எப்படிப் பார்க்கிறார்களோ அப்படியே பார்த்துக் கொண்டிருந்த நான் அந்தப் பழக்கத்தை சமீப காலமாக மாற்றிக் கொண்டு விட்டேன்.  காரணம், அமெரிக்க வீசா அதிகாரிகள்.  கண்ட கண்ட பொதுஜனம் எல்லாம் மகளைப் பார்க்கப் போகிறேன், மகனைப் பார்க்கப் போகிறேன், மச்சானைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னால் இளித்துக் கொண்டு வீசா கொடுக்கும் அவர்கள் ”நான் ஒரு எழுத்தாளன், நான் ஒரு பயணி, அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க வேண்டும்” என்று சொன்னால் உன் கணக்கில் பணம் இல்லை என்று சொல்லித் துரத்தி விட்டு விடுகிறார்கள்.  அமெரிக்க வீசா நான்கு முறையும், கனடா வீசா ஒரு முறையும், பிரிட்டிஷ் வீசா ஒரு முறையும், ஜெர்மன் வீசா ஒரு முறையும் எனக்கு மறுக்கப்பட்டது.  இப்படியே எண்பது வயதாகி விடும் என்பதால் இப்போது வங்கிக் கணக்கை கவனிக்க ஆரம்பித்தேன்.  ஆனாலும் பணத்துடனான அடிப்படை உறவில் எந்த மாற்றமும் இல்லை.  இப்போதும் பணம் வாங்காமல்தான் பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.  கொரோனா காலத்தில் எந்த வருமானமும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.  ஆனால் நமக்கோ செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது.  பணம் கேட்டும் உணவு கேட்டும் மனிதர்களும் உயிரினங்களும் வந்து கொண்டே இருக்கின்றனர்.  துணி இஸ்திரி போடுபவரை முன்பெல்லாம் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்க வேண்டும்.  இன்று போன் பண்ணினால் நாலு நாள் கழித்தே வருவார்.  இப்போது அவராகவே வந்து துணி கொடுங்கள் என்று கேட்கிறார்.  ஆள் துரும்பாக இளைத்து விட்டார்.  எட்டு மாதமாக யாருமே துணி கொடுக்கவில்லையாம்.  அவந்திகா 500 ரூ. பணம் மட்டும் கொடுத்து அனுப்பினாள்.  நேற்று பூனைக்கு உணவு கொடுக்கச் சென்ற போது ஆட்டோ டிரைவர்கள் சொன்னார்களாம், என்ன மேடம் உங்களையும் சாரையும் பார்க்கவே முடியவில்லை.  வருமானமே இல்லை என்று கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.  வீட்டுக்கு வந்து 500 ரூபாயை எடுத்துக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்தாள். 

எனக்கு அமெரிக்காவில் என் குடும்பம் என்று சொல்லத்தக்க அளவில் பத்துப் பதினைந்து நண்பர்கள் உண்டு.  யாரையும் சந்தித்தது இல்லை.  எழுத்து மூலம் நண்பர் ஆனவர்கள்.  அவர்கள் அனைவரும் மாதம் தவறாமல் எனக்கு அவர்களால் முடிந்த தொகையை சந்தாவாக, நன்கொடையாக அனுப்பி விடுகிறார்கள்.  அவர்களைத் தவிர அமெரிக்காவிலிருந்து வேறு யாருமே ஒரு டாலர் கூட அனுப்புவதில்லை.  விதிவிலக்குகள் எப்போதுமே உண்டு.  ஒன்றிரண்டு பேர்.  அவர்களைத் தவிர்த்துச் சொல்கிறேன். 

கடந்த வாரம் முழுவதும் இரவு பகலாகப் படித்துக் கொண்டிருந்தேன்.  எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பிரதிகள்.  சில நூல்கள் பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.  நண்பர்களிடமிருந்து வந்த ஃபோன் அழைப்புகளை எடுக்கவில்லை.  பதில் மெஸேஜ் கூட அனுப்பவில்லை.  கடிதங்களுக்குக் கூட பதில் எழுதவில்லை.  ஒரு பத்தாம் நூற்றாண்டுத் துறவி பற்றி பதின்மூன்றாம் நூற்றண்டில் எழுதப்பட்ட நூல் 300 பக்கம் இருக்கும்.  அதன் 20 பக்க முன்னுரையைப் படிக்க இரண்டு நாள் எடுத்தது.  காரணம், நாம் பாட்டுக்கு வார்த்தைகளை வாக்கியங்களைப் படித்துக் கொண்டே போக முடியாது.  அவற்றின் அர்த்தம் புரிய வேண்டும்.  அந்த முன்னுரையில்தான் ஹ்ருதய சூத்ரம் வந்தது.  ஹ்ருதய சூத்ரம் என்னவென்று அறியாமல் அடுத்த வார்த்தைக்குப் போக முடியாது.  ஹ்ருதய சூத்ரத்திலேயே இரண்டு நாள் ஓடி விட்டது.  அதைத்தான் நாலு வரி எழுதினேன். 

என் நண்பர்களை விடுங்கள், வேறு யாரையும் ஹ்ருதய சூத்ரம் எதுவுமே செய்யவில்லையா?  உங்கள் உணர்வுகளில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லையா?  என் மூன்று ஆண்டுகளின் ஆழ்ந்த வாசிப்பின் பயன் அல்லவா அது?  சீனி பெயரையே அடிக்கடி சொல்வதற்காக மன்னியுங்கள்.  அவரும் வளன் அரசுவும்தான் feedback தருகிறார்கள்.  சீனிக்கு உறக்கம் வருவதில் சிரமம் உண்டு.  அதிகாலை மூணு மணிக்குப் படுத்து பத்து மணிக்கு எழுந்து கொள்ளும் வழக்கம்.  இது வழக்கம் கூட அல்ல.  இரவில் உறக்கம் வருவதில்லை.  அவ்வளவுதான்.  ஆனால் ஹ்ருதய சூத்ரம் கேட்டு உறக்கம் வந்தது என்றார்.  என் மூன்று ஆண்டு உழைப்புக்குப் பலன் கிடைத்து விட்டது.  அது மட்டும் அல்ல.  நான் கொடுக்கும் பாடல்களின் இணைப்புகளை அவர் கேட்கவே மாட்டார்.  என்னவோ அப்படி ஒரு படைப்பு.  இசை இஷ்டமில்லை, GOT பிடிக்கவில்லை என்று சொல்லக் கூடிய ஒரு படைப்பு.  இறைவனின் லீலா விநோதங்களை என்னவென்று சொல்வது!  அப்படிப்பட்டவரே ஹ்ருதய சூத்ரத்தை ஐம்பது முறையாவது கேட்டு விட்டேன் என்றார்.  அப்படிப்பட்ட சூத்ரம் அது.

இதைக் கண்டு பிடித்துச் சொன்னால் பாறாங்கல்லைப் போல் ஒரு அமைதி.   ஒரு நயாபைசா வரவில்லை.  மேற்கத்திய நாடுகளில் பார்த்திருக்கிறேன்.  சாலைகளில் அற்புதமாகப் பாடிக் கொண்டோ வாத்தியங்களை இசைத்துக் கொண்டோ இருப்பார் ஒரு கலைஞர்   மக்கள் அவருக்குக் காசோ பணமோ கொடுப்பார்கள்.  தியாகய்யர் உஞ்சவிருத்திக்குச் செல்லும்போது அவர் பாதங்களை வணங்கி அவரது பாத்திரத்தில் அரிசியைப் போடுவார்கள் என்று படித்திருக்கிறேன். 

ஆனால் இந்த விஷயத்தில் இந்தியாவில் வாழும் விளிம்புநிலை மக்கள் எத்தனையோ பரவாயில்லை.   இன்று ஒரு நண்பர் “இந்த மாதம் 250 ரூ. தான் அனுப்ப முடிந்தது.  அடுத்த மாதம் சேர்த்து அனுப்புகிறேன்” என்று எழுதியிருக்கிறார்.  ஆனால் ஓரளவு வசதியானவர்கள் யாரும் சலனமே இல்லாமல் இருக்கிறார்கள்.  ஒரு உதாரணத்தை எழுத விரும்புகிறேன்.  டாக்டர் சுப்ரஜா என்னுடைய ஆயுர்வேத மருத்துவர்.  அவரை நான் மஜீஷியன் என்றே அழைப்பதுண்டு.  அந்த அளவுக்கு ஒருவரின் நோயைக் குறித்துத் தன் விசாரணையாலும் ஞானத்தாலும் அறிந்து அதைக் குணப்படுத்த வல்லவர்.  தேவைப்பட்டவர்கள் அவருக்கு போன் செய்து ஆலோசனை பெற்றுக் கொள்ள ஏதுவாக அவரைப் பற்றி  எழுதி போன் நம்பரும் கொடுத்தேன்.  சுமார் இருபது பேர் போன் செய்திருக்கிறார்கள்.  அவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை உள்ளூர்க் கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம்.  பதினெட்டு பேர் கன்ஸல்டேஷன் கட்டணத்தை அவரது வங்கிக் கணக்கில் சேர்த்து விட்டார்கள்.  இரண்டு பேர் மட்டும் கட்டணமே செலுத்தவில்லை.  என் நண்பர்கள் என்று மட்டும் சொல்லிக் கொண்டார்களாம்.  டாக்டர் சுப்ரஜா சிரித்தபடியே சொன்னார், அவர்கள் இரண்டு பேரும் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.  பெயரைக் கேட்டேன்.  சமூகத்தில் அற ஆவேசம் கொண்டு பேசுபவர் ஒருத்தர்.  இன்னொருத்தர், பிரபல பத்திரிகையாளர்.  ஒரு முன்னூறு ரூபாயை ஏமாற்றி என்ன ஆகப் போகிறது?  ஏமாற்றி வாங்கும் மருந்து உடம்பில் எப்படி வேலை செய்யும்?  அமெரிக்கக் கதையைச் சொல்கிறேன்.  அங்கே மருத்துவ ஆலோசனைக் கட்டணம் நூறு டாலர், டாக்டர் சுப்ரஜா நாற்பது டாலர் வாங்குகிறார்.  இதுவரை பத்து பேர் ஆலோசனை பெற்றிருக்கிறார்கள்.  ஏழு தமிழர்.  ஒரு வட இந்தியர்.  இரண்டு அமெரிக்கர்.  ஏழு தமிழரும் கட்டணம் செலுத்தவில்லை.  வட இந்தியர் அரை மணி நேரம் பேசியிருக்கிறார்.  கட்டணம் செலுத்தவில்லை.  அரை மணி நேரத்தைக் காலி செய்தாரே என்ற எண்ணத்தில் அவருக்கு மட்டும் போன் பண்ணிப் பண்ணிப் பார்த்தால் போன் எப்போதுமே ஸ்விட்ச்ட் ஆஃப்.  அந்த இரண்டு அமெரிக்கர்களும் செய்ததைக் கேட்டால்தான் இந்தியா பற்றியும் அமெரிக்கா பற்றியும் நாம் புரிந்து கொள்ள முடியும்.  ஒரு அமெரிக்கர் நாற்பது டாலரை அனுப்பி விட்டார்.  இன்னொரு அமெரிக்கர் எண்பது டாலர் அனுப்பி வைத்திருக்கிறார்.  ஏனென்றால், மணி நாள் குழப்பத்தில் ஒரு நாள் முன்னதாகவே போன் செய்து விட்டார்.  நான் இப்போது மருத்துவமனையில் இருக்கிறேன், உங்களுக்கு நாளைதான் அப்பாய்ண்ட்மெண்ட் என்று சொல்லியிருக்கிறார் டாக்டர் சுப்ரஜா.  ஆக, அந்தத் தவறான அழைப்புக்கும் சேர்த்து எண்பது டாலர்.  இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.  அந்த இரண்டு அமெரிக்கர்களும் ஒன்றும் கோடீஸ்வரர்கள் அல்ல.   ஒருவர் டிரைவர்.  இன்னொருவர் விற்பனை நிலையத்தில் வேலை செய்பவர்.  இந்தியர்கள் பெரும்பாலும் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்.   எனக்குப் பணம் அனுப்புபவர்கள் அமெரிக்காவில் வசிக்கும் என் பத்து நண்பர்கள், தமிழகத்தில் விளிம்புநிலையில் வாழும் தக்ஷிணாமூர்த்தி போன்ற நண்பர்கள்.  இது தவிர நடுத்தர வர்க்க நண்பர்கள் மிக சொற்பம்தான்.  அதிகம் இல்லை.    

அவ்வப்போது என் வாசகர், பிறவாத பிள்ளை தக்ஷிணாமூர்த்தி பற்றி எழுதியிருக்கிறேன்.  தச்சுத் தொழில் செய்பவர்.  எப்போதும் எனக்கு வரும் கடிதங்களை அனுமதி இல்லாமல் வெளியிடுவதில்லை.  வெளியிட்டாலும் அதைப் பிழைதிருத்தம் செய்யாமல் வெளியிடும் வழக்கம் இல்லை.  ஆனால் இந்தக் கடிதத்துக்கு அனுமதி வாங்கவில்லை.  தக்ஷிணாவிடம் உரிமை எடுத்துக் கொள்ளலாம்.  இந்தக் கடிதத்தைப் பிழைதிருத்தமும் செய்யவில்லை.  அப்படியே வெளியிடுகிறேன்.  எப்படிப்பட்ட மனிதர்களில் ஆளுமையை என் எழுத்து மாற்றி அமைத்திருக்கிறது என்பதற்கு தக்ஷிணாவே எடுத்துக்காட்டு. 

அன்பு சாரு சார்,எப்படி இருக்கீங்க

மாதமாதம் ஸீரோ டிக்ரீ பதிப்பகம் போய் உங்க புத்தகம் அப்புறம் வேற யாரோட புது பத்தகமாவது வாங்குவேன்.மூனு வாரம் முன்னாடி  போய் அப்படி வாங்கும்போது ராம்ஜீ சார் நிறைய சலுகை குடுத்தார்.எனக்கு எதுவும் குறைக்க வேனாம் சார்னு சொன்னாலும் கேக்கல.புத்தகத்த காசு குறச்சி வாங்கறது ரொம்ப தப்புனு தோனுது சார்.புத்தகம் எவ்ளோ ஒஸ்தியானது அத எப்டி காச கொறச்சி வாங்க முடியம் ஆனா அவர் ஒத்துக்கல எல்லார்க்கும் தர மாதிரிதான்னு சொல்லி குடித்துட்டார்.அன்பானவர் சார் அவரு அவர் கூடவே உக்காந்திருக்கலாம் போல இருக்கு.உங்களுக்கு அடுத்து அவரிடம் தான் இந்த மாதிரி தோனியிருக்கு.அப்ப புத்தக அலமாரில சாதனா புத்தகத்தோட பின் அட்டைல நீங்க எழுதியிருந்தத பார்த்தேன்.உடனே வாங்கிட்டேன் படிச்சேன்.அற்புதம் சார் ஒவ்வொரு கதையும் என்ன சொல்றதுனே தெறியல ரொம்ப பிடிச்சி போச்சி எங்க சாரு முன்னுறை எழுதறார்னா சும்மாவானு தோனுச்சி(உண்மைல உங்க முன்னுறைக்காகத் தான் வாங்குனேன் முதல்ல)படிச்சிட்டு அந்த புத்தகம் பத்தி முகநூல்ல ஒரு வேகத்தில எழுதிட்டேன்.சிறுமி கத்தலோனா சிறுகதை தூங்கவிடல.யூதாசின் முத்தம் அற்புதம்,பழைய ஏற்பாடு ரொம்ப விரும்பி படிச்சிருக்கேன் சின்ன வயசுல அப்பதான் பாதர் கிட்ட ஒரு மிட்டாய் கிடைக்கும் அதனால பிறகு பைபிள் பிடிச்சி போச்சி.தாய் அக்கா,தலைப்பு கதை சிறிய பைபிள் ..என்ன சொல்ல சாரு சார் நீங்க நம்ப மாட்டீங்க அந்த புக் படிக்கறதுக்கு முன்னாடி  ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் படம் பாத்தேன்.. இந்த கோ இன்ஸிடென்ட்ஸ்தான சொல்வாங்க ..சாதனாவிடம் முகநூலில் சில சந்தேகம் கேட்டேன் .அப்ப அவர் பதாகை பேட்டி இணைப்பு அனுப்பினார்,சந்தேகம் தீர்ந்தது. அய்யோ நீங்க அசோகா நாவல் எழுதற நேரத்த வீணாக்கறனே இப்படி நான் ஒரு பைத்தியம் சாரு சார்.சாதனா ரொம்ப நல்லா  பேசினார் சார் நம்பர் குடித்தார் அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும்…இது எல்லாமே உங்களால் தான் லவ் யூ சாரு சார் …சாரி டைம வேஸ்ட் பன்னிட்டேன்..பரவால்ல நான் எப்பவாச்சிம்தான உங்களுக்கு மெய்ல் அனுப்பறேன்…..

தக்ஷிணாமூர்த்தியின் இந்தக் கடிதத்தையும் ஹ்ருதய சூத்ரம் என்ற அற்புதத்தைக் கேட்டும் எந்த சலனமும் இல்லாமல் இருக்கும் வாசகர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.

***

கோபி கிருஷ்ணன் உரைகள் இரண்டும் தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதுங்கள். மாதச் சந்தா/ நன்கொடை அனுப்புபவர்களுக்கு அந்த உரைகள் தேவையென்றாலும் தயக்கமில்லாமல் எழுதுங்கள். சிலர் எழுதிக் கேட்டு நான் அனுப்பாமல் விட்டிருக்கலாம். அவர்களும் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

சந்தா/நன்கொடை அனுப்ப முடிந்தவர்கள் அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

அடுத்த மாதாந்திர சந்திப்பு நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு நடைபெறும்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai