161. பிறவிப் பிணியும் பிறவிப் பேறும்…

இதுவரை பார்த்த வெப்சீரீஸில் (வெப்சீரீஸ் என்பதற்குத் தமிழ் என்ன?) என்னை ஆகக் கவர்ந்தது லூசிஃபர்.  (GOT பற்றிப் பேசவே கூடாது.  அது எல்லாவற்றையும் கடந்த ஒரு தனி ராஜ்ஜியம்.  அது வெப்சீரீஸே இல்லை.  அது ஒரு காவியம்.) அதில் வரும் நடிகர் டாம் எல்லிஸ் கிரேட் பிரிட்டனின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மட்டும் பிரிட்டிஷ் உச்சரிப்போடு பேச, மற்ற அனைவரும் அமெரிக்க உச்சரிப்பில் பேச படு ஜாலியாக இருந்தது.  என்னைப் போன்ற அவ்வளவு ஆங்கிலப் பரிச்சயம் அற்றவர்களுக்கு இரண்டு உச்சரிப்புகளின் வித்தியாசத்தைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.  இன்னொரு தொடரில் பார்த்தேன், அந்தப் பாத்திரம் பேசும் அமெரிக்க ஆங்கிலம் கதையில் வரும் பிரிட்டிஷ்காரர்களுக்குப் புரிய சிரமம் இருந்ததால், அவள் “சரி, நான் பிரிட்டிஷ் உச்சரிப்பில் பேசுகிறேன்” என்று முன்பு பேசியதையே பிரிட்டிஷ் உச்சரிப்பில் பேசுவார்.  அப்போது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் தெளிவாகப் புரிந்தது.  என்னவோ தெரியவில்லை, ஆங்கிலம் பிறந்த தேசமான பிரிட்டினைச் சேர்ந்தவர்கள் பேசும் ஆங்கிலம் கர்ண கடூரமாகவும் குடியேறியவர்களின் ஆங்கிலம் இனிமையாகவும் இருக்கிறது.  லூசிஃபரோடு என்னை ரொம்பவும் பொருத்திக் கொண்டதால் ஏதோ என் வரலாற்றை நானே பார்ப்பது போல் ஒரு சுவாரசியம்.  அதில் பல சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளன.  இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன. 

அந்தத் தொடரில் அமெரிக்கர்களின் வாழ்க்கை பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.  அதில் முக்கியமான ஒன்று, அவர்கள் பணத்தோடு கொள்ளும் உறவு.  சென்ற பதிவில் குறிப்பிட்டேன்.  மருத்துவரைத் தவறான நேரத்தில் அழைத்து விட்டதற்காகவும் சேர்த்து கட்டணத்தை இரட்டிப்பாக 40 + 40 என்று 80 டாலர் அனுப்பிய அமெரிக்கர்.  அதாவது, பண விஷயத்தில் அவர்கள் கறாராக இருக்கிறார்கள்.  அதனால்தான் என்னை விசாரித்த அமெரிக்க வீசா அதிகாரிக்கு  நான் சொன்ன ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  திரும்பத் திரும்பக் கேட்டார்.  நான் திரும்பத் திரும்ப விளக்கினேன்.  கடைசி வரை அவரால் புரிந்து கொள்ள முடியாமல் வீசாவை மறுத்து விட்டார்.  அவருக்குப் புரியவே புரியாத அந்த விஷயம், நான் நியூயார்க் சென்று என் நண்பர் வீட்டில் தங்கப் போகிறேன் என்று சொன்னதுதான்.  அது எப்படி நண்பர் வீட்டில் தங்க முடியும்?  அது எப்படி நண்பர் உங்களுக்கு செலவு செய்வார் என்று சொல்கிறீர்கள்?  திரும்பத் திரும்ப இதே கேள்விகள்தான்.  எனக்கோ அவர் கேட்டதுதான் புரியவில்லை.  இப்போது லூசிஃபர் பார்த்த பிறகு புரிந்து விட்டது.

லூசிஃபர் நரகத்திலிருந்து பூமிக்கு வந்தவன் என்பதால் இகவாழ்வின் பல விஷயங்கள் அவனுக்குப் புரிவதில்லை.  பல பெண்களோடு உறவு கொள்கிறான்.  ஒரே ஒரு பெண்ணைக் காதலிக்கவும் செய்கிறான்.  ஒருதலைக் காதல்தான்.  அவளுக்கும் இவன் மேல் ஈர்ப்பு இருந்தாலும் தினமும் இப்படி ஒவ்வொரு பெண்ணோடு உறவு கொள்ளும் ஒருத்தனை அவள் எப்படி விரும்புவாள்?  ஆனால் லூசிஃபருக்கு இந்த விஷயத்தில்தான் குழப்பம்.  இப்படி பல பெண்களோடு உறவு கொள்வதை காதலி ஏன் ஆட்சேபிக்கிறாள் என்று அவனுக்குப் புரிவதே இல்லை.  மனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே, நமக்குத்தான் ஏதோ கோளாறு என்று எண்ணி உளவியல் நிபுணரையெல்லாம் தொடர்ந்து பார்த்து ஆலோசனைகள் பெறுகிறான்.

அவன் காதலி க்ளோயி ஒரு போலீஸ் அதிகாரி.  அவளிடம் ஒரு கொலைக் கேஸ் வரும்போது, அது சம்பந்தமாக லூசிஃபரின் தோழிகளை விசாரிக்க நேர்கிறது.   அவர்கள் லூசிஃபர் பற்றிய சில அந்தரங்கமான தகவல்களையும் சொல்கிறார்கள்.  அதில் ஒன்று, அவன் படுக்கையில் ஒரு பேய். ஐயோ, வர்ணிக்கவே வார்த்தை இல்லை.  உடனே க்ளோயி மிக லஜ்ஜையுடன் பேச்சை மாற்றுகிறாள்.  (இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டது கூட இல்லை).  மற்றபடி லூசிஃபர் எப்படி?  மற்ற எல்லா விஷயத்திலும் ஜெண்டில்மன். 

விசாரணையின் இந்த இடத்தில்தான் எனக்கு அமெரிக்க வீசா அதிகாரியின் குழப்பம் புரிந்தது: அவன் உங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கிறானா?  அவர்களில் ஒருத்தருக்குக் கூட லூசிஃபர் சாப்பாடு வாங்கிக் கொடுத்ததில்லை.  ஆனால் பலமுறை க்ளோயிக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறான்.  ஆஹா, என்ன இருந்தாலும் நாம் தனிதான் என்று பெருமிதம் கொள்கிறாள் க்ளோயி.  காதலிக்காக சொத்தையே இழக்கத் துணியும் இந்தியாவில் வளர்ந்த எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது.

இன்னும் பல அமெரிக்கத் தொடர்களிலும் பார்த்திருக்கிறேன்.  உன் சாப்பாட்டுச் செலவை நான் ஏற்கிறேன் என்பார்கள்.  இப்படி ஒரு உரையாடல் இந்தியர்கள் மத்தியில் நடக்க வாய்ப்பே இல்லை.  இங்கே உணவகத்தில் செலவை ஏற்பது என்பது கௌரவம்.  அதிலும் காதலிக்கு வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் அதை விட அவமானம் வேறு எதுவுமே இல்லை.  சமீபத்தில்தான் படித்தேன்.  அல் பச்சீனோவை (வயது 80) அவருடைய காதலி மெய்த்தல் தோஹன் (Meital Dohan) (வயது 39) இந்த ஆண்டு ஃபெப்ருவரியில் பிரிந்த போது பச்சீனோ சரியான கஞ்சப் பிசுநாரி, பூங்கொத்துகள் மட்டுமே வாங்கிக் கொடுத்திருக்கிறார், அதனால்தான் பிரிந்தேன் என்றார்.  

எனக்குத் திரும்பவும் என்னுடைய அமெரிக்க வாசகர்களும் லூசிஃபர் தொடரில் கேட்ட வசனமும்தான் ஞாபகம் வந்தது.  இத்தனைக்கும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் பச்சீனோ.  இங்கே இன்னொரு சம்பவம்.  என் தோழி சொன்னது.  தோழி அமெரிக்கா சென்ற போது அங்கே தன் ஒன்றுவிட்ட சகோதரி அழைத்ததால் அவர் வீட்டுக்குச் செல்கிறார்.  தோழி மட்டும் அல்ல; தோழியின் சிநேகிதியும்.  பேசிக் கொண்டிருந்து விட்டு மூவரும் வெளியே கிளம்புகிறார்கள்.  இரவு உணவு சாப்பிடுகிறார்கள்.  ஒ.வி. சகோதரி சாப்பாட்டுக்குக் காசு கொடுக்கவில்லை.  பர்ஸை எடுக்கவே இல்லையாம்.  அது மட்டும் அல்லாமல் இங்கிருந்து போனவர்தான் பணம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது போலவும் இருந்ததாம்.  அதற்குப் பிறகும் கூட எதற்குமே பர்ஸைத் திறக்கவே இல்லை.  இத்தனையும் அந்தப் பெண்ணும் அவர் கணவரும் பதினைந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் நல்ல வேலையில் இருப்பவர்கள்.  தனியாக ஒரு வில்லாவில் வசிக்கிறார்கள்.  இரண்டு நாய்கள் இருக்கின்றன.  அமெரிக்கத் தரத்துக்கே அது உயர் நடுத்தர வர்க்கம்.  ஆனால் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஒன்று விட்ட சகோதரிக்கு ஒரு வேளை உணவு வாங்கிக் கொடுக்க மனம் இல்லை.  இந்த விஷயத்தில் மட்டும் அமெரிக்கர்களைக் காப்பி அடிக்கிறார்களே, நேரம் தப்பி அழைத்ததற்காக நாற்பது டாலர் சேர்த்து கட்டணம் கட்டினாரே அமெரிக்கர், அதை ஏன் கற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்?  எதையும் ஓசியில் பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற அமெரிக்கரின் பழக்கத்தை ஏன் இந்தியர்கள் கற்றுக் கொள்ளக் கூடாது? 

எந்த ஸூம் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும் ஓசிதான்.  என் நண்பரான ஆயுர்வேத மருத்துவர் சுப்ரஜாவிடம் மருத்துவ ஆலோசனை பெற்ற பத்து அமெரிக்கவாசிகளில் இரண்டு பேர் மட்டும் கட்டணம் கட்டுகிறார்கள்.  இரண்டு பேரும் அமெரிக்கர்.  எட்டு பேர் இந்தியர்.  ஏழு பேர் தமிழர்.  ஒருத்தர் வட இந்தியர்.  இந்த மனோபாவத்தையே என்னுடைய எழுத்தைப் படிக்கும் 75 சதவிகித அமெரிக்கத் தமிழர்களிடம் காண்கிறேன்.  மீண்டும் சொல்கிறேன்.  மாதாமாதம் எனக்குப் பணம் அனுப்பி விடும் பத்து அமெரிக்க வாழ் நண்பர்கள் இதில் சேரக் கூடாது.  அவர்கள் என் குடும்பம் மாதிரி.  நான் சீலேயில் பணம் இல்லாமல் தவித்த போது கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாயை ஓரிரு தினங்களில் அனுப்பி வைத்தவர்களும் அமெரிக்கவாழ் தமிழர்கள்தான்.  ஆனால் பொதுவான போக்கு என்னவென்றால், ஓசி வாசிப்புதான். என்னுடைய சமீபத்திய பணம் என்ற பதிவைப் படித்து பத்து இந்தியர்கள் முன்னூறும் ஐநூறும் அனுப்பியிருந்தார்கள்.  மொத்தம் பத்து பேர். அந்தப் பத்து பேரும் மத்தியதர வர்க்கம்.  மாதம் பத்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை ஊதியம் வாங்குபவர்கள்.  அவர்களால் முன்னூறோ ஐநூறோ அனுப்ப முடிகிறது.  அமெரிக்காவிலிருந்து ஒருவர் கூட அனுப்ப முடியவில்லை. இல்லை, ஒரே ஒரு நண்பர் 15 டாலர் அனுப்பியிருந்தார்.   இந்த முறை கொஞ்சம் வெளிப்படையாக எழுதி விடலாம் என்றுதான் எழுதுகிறேன்.  அந்த ஒரு நண்பர் 15 டாலர் அனுப்பியது பெரிய விஷயம்.  ஆனால் ஒரு முப்பது பேர் அனுப்பினால்தானே அதற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்? 

பூனைகளுக்கு உணவு வேண்டும் என்று என் தளத்தில் சமீபத்தில் எழுதியிருந்தேன்.  முன்பு அப்படி எழுதினால் குறைந்த பட்சம் ஐந்து பேராவது என்னிடம் வீட்டு முகவரி கேட்டு பூனை உணவை அனுப்பி வைப்பார்கள்.  இப்போது ஒரு கடிதம் கூட இல்லை.  அமெரிக்கா மட்டும்தான் எத்தியோப்பியா என்று நினைத்தேன்.  உலகமே எத்தியோப்பிய அகதிக் கூட்டமாக மாறி விட்டதா என்ன?  என்னால் யாரிடமும் எதுவுமே கேட்காமல் என் அறைக்குள்ளேயே அமர்ந்தபடி எழுதிக் கொண்டிருக்க முடியும்.  யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் என்ற குறள்தான் என் உயிர் வாழ்வின் அடிப்படை.  எது எதிலிருந்து நாம் நீங்கிக் கொள்கிறோமோ அது அதிலிருந்து வரும் நோவு இல்லை.  மனிதர்களின் பெரும் துயரம், சொந்தம்.  இன்ன தேசம் என்று இல்லாமல் தேசம், இனம், மதம் எல்லாவற்றையும் கடந்து மனிதர்கள் துயரம் கொள்வது தம் சொந்தங்களுக்காக.  இந்திய அன்னைமார் அனைவரும் துயரம் நோற்கத் தேர்ந்து கொண்டது தங்கள் புத்திர சிகாமணிகளுக்கு.  தந்தைமார் அனைவரும் கூட அவ்விதமே.  சிலருக்கு மனைவி.  பலருக்குக் கணவன்.  எல்லாம் துயரத்தின் தோற்றுவாய். சிலர் தங்கள் மனைவி இறந்தவுடன் தானும் இறந்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்.  அதேபோல் பெண்களும். இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட தம்பதியர் உளர்.  பெரும்பாலான துயர்களுக்குக் காரணம், பிள்ளைகள்.  சிலர் காதலியைப் பிரிந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  இந்தத் துயர் நோற்கும் விஷயங்களில் பெண்களை விட ஆண்களே பலஹீனர்கள்.  நான் இம்மாதிரி பந்தங்களிலிருந்து விலகியவன்.   எந்தப் பிரிவும் என்னை நோதலில் ஆழ்த்துவதில்லை.   இது ஒரு நம்பிக்கை.  ஆனாலும் என் அருகே வாழும் வாயில்லாப் பிராணிகளைப் பிரியும்போது அளப்பரிய துக்கம் மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.  அதனாலேயே எல்லா பந்தங்களிலிருந்தும் விலகியிருக்கிறேன், விலகியிருக்கவே விரும்புகிறேன்.   ஆனால் உலகத்துக்கும் எனக்குமான பாலமாக இருக்கிறாள் அவந்திகா.   அவள் பூனைகளுக்கு உணவிடுவதால் அது என் கடமையாக மாறி விடுகிறது.  நீ அதைச் செய்யாதே என்று எப்படி நான் தடுக்க முடியும்? பசித்த உயிர்களுக்கு உணவிடுவதைத் தடுக்கும் அளவுக்குக் கல்நெஞ்சம் பெற்றிருக்கவில்லை.  பூனைகளைப் பார்த்து காகங்களும் வந்து விட்டன.  வீட்டில் பூனை இருந்தவரை காகங்கள் கிட்டத்திலேயே வராது.  இப்போது சர்வ சுதந்திரமாக வீட்டுக்குள்ளேயே வந்து உணவு கொடு உணவு கொடு என்று ரகளை. 

காகங்கள் மிகுந்த புத்திசாலி ஜீவிகள்.  சில மாதங்களுக்கு முன்பு வரை நான் மொட்டை மாடியில் நடக்கும் போது என்னைத் தலையிலும் கழுத்திலும் முகத்திலும் அறைந்து விட்டுப் போகும்.  அடி பலமாகவே இருக்கும்.  அதிலும் திடீரென்று தாக்கும்போது நிலைகுலைந்து போகும்.  அதனால் கையில் ஒரு குச்சியை வைத்துத் தலைக்கு மேல் பிடித்தபடியே நடந்தேன்.  வரவில்லை.  ஆனாலும் நான் அசரும் நேரத்தில் அறைந்து விடும்.  வீட்டுப் பூனைகள் ஷெல்டருக்குப் போன பிறகு, காகங்கள் பால்கனியில் வந்து உணவு கேட்க ஆரம்பித்தன.  நானும் அவந்திகாவும் போடுவோம்.  இப்போது காலையில் நடக்கும்போது அறைவதை நிறுத்தி விட்டு என்னை ஜாலியாகப் பார்க்கின்றன.  நுணுக்கிப் பார்த்தால் காகங்களை நீங்கள் அடையாளம் கூடக் கண்டு பிடிக்கலாம்.  நான் அலகை வைத்துக் கண்டு பிடிப்பேன்.  என்னை மாடியில் அடித்த காகங்களில் ஒன்றின் கீழ் அலகு மேல் அலகை விடக் குட்டையாக இருக்கும்.  இப்படி பல்வேறு அடையாளங்களை வைத்துக் கண்டு பிடிக்கலாம்.  இந்த அலகு வேறுபட்ட காகத்தை மற்ற காகங்கள் சாப்பிட விடாததால் அது மட்டும் தனியாக வந்து சாப்பாடு கேட்கும். 

இரண்டு நாட்களுக்கு முன்னால் இரண்டு சம்பவங்கள் நடந்தன.  கீழ்த்தளத்தில் பத்து பூனைகள் உள்ளன.  இந்த எண்ணிக்கை குறையும், அதிகரிக்கும்.  இப்படி அவ்வப்போது எண்ணிக்கை மாறுவதற்குக் காரணம், பெண் பூனைகள்.  அவை போடும் குட்டிகள்.  ஆனாலும் பத்தை விட்டுத் தாண்டாததற்குக் காரணம், தாண்டினால் சில குட்டிகளைப் பிடித்துக் கொண்டு போய் பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் விட்டு விடுவார்கள்.  மூன்று தினங்களுக்கு முன்பு திடீரென்று ஒரு பூனைக்குட்டி.  அழகு என்றால் அப்படி ஒரு அழகு.  மிகச் சிறிய குட்டி.  அதை எங்கும் கொண்டு போய் விட வேண்டாம்.  பத்தோடு பதினொன்றாக இங்கே இருந்து விட்டுப் போகட்டும் என்றேன்.  என்னிடம் சரி சரி என்று தலையாட்டி விட்டு கொண்டு போய் விட்டு விட்டார்கள்.  கொஞ்சம் பெரிய குட்டியாக இருந்திருந்தால் கவலைப்பட மாட்டேன்.  இது மிகச் சிறிய குட்டி.  பட்டினப்பாக்கம் மீன் சந்தையில்தான் கடற்கரைச் சாலை ஓடுகிறது.  மூன்று தினங்களாக இந்தக் கவலைதான். 

ததாகதர் இந்த உலகம் வேதனைமயமானது என்கிறார்.  அதிலிருந்து மீள்வதற்கு ஒரு தீர்வும் வைத்திருக்கிறார்.  அந்தத் தீர்வில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஏனென்றால், அவரது அடிப்படையிலேயே எனக்கு முரண்பாடு இருக்கிறது.  அவர் வேதனை என்பதை நான் கொண்டாட்டம் என்கிறேன்.  பிறவிப் பிணி என்பதை பிறவிப் பேறு என்கிறேன்.  காரணம் ஒரு ரஸவாதம். வேதனை கலைஞனை வந்து அடையும்போது அனுபவமாக உருமாற்றம் அடைந்து விடுகிறது.

ஒரு சின்ன அனுபவத்தைச் சொல்கிறேன்.  பௌத்த பிக்குகள் retreatஇல் செல்வார்கள்.  சில மாதங்கள், சில ஆண்டுகள் கூட ஆகும்.  யாருமே தொடர்பு கொள்ள முடியாத ஒரு இடத்தில் அமர்ந்து தவம் செய்வார்கள்.  எழுத்தாளர்கள் அப்படித்தான் நாவல் எழுத வேண்டும்.  அப்படித்தான் மேற்கத்திய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.  இங்கே அதெல்லாம் கற்பனை கூட செய்ய முடியாத விஷயம்.  ஆனால் என்னைப் பொறுத்தவரை, எழுத ஆரம்பித்தால், மூன்று மணி நேரத்துக்கு யாரும் உள்ளே நுழைய முடியாது.  இப்போது அசோகா காலம்.  நேற்று காலை ஏழு மணிக்கு அமர்ந்தேன்.  பத்து மணிக்குத்தான் பசி தெரிந்தது.  பசி என்றால் மயக்கம் வந்துவிடக் கூடிய பசி.  முந்தின நாள் மதியம் மூன்று மணிக்குச் சாப்பிட்டது.  கிட்டத்தட்ட இருபது மணி நேரப் பட்டினி.  நான் இரவில் சாப்பிடுவதில்லை.  ஒரே ஒரு மாதுளைதான்.  அதுவும் இப்போதெல்லாம் நான் கடைக்குப் போகாததால் தெருவில் வாங்கும் மாதுளை நாட்டுக் கொய்யாக்காய் சைஸில்தான் வருகிறது.   எப்படிக் காணும்?  பசியில் கைகாலெல்லாம் நடுங்குகிறது.  அவந்திகா அப்போதுதான் எழுந்து வந்து பூனைகளுக்கு உணவு கொடுக்க கீழே போய் விட்டாள்.  அவள் இரவு மணிக்கு உறங்குபவள்.  அவளுக்கு இதுதான் அதிகாலை.  ஓட்ஸ் குடிக்கலாம் என்று பார்த்தால் இல்லை.  இனிப்பு ஓட்ஸை பாலில் போட்டு சாப்பிடலாம் என்று பார்த்தால் இல்லை.  இதெல்லாம் இல்லை என்று முன்பே தெரியும்.  அதெல்லாம் கவனமாக ஆர்டர் செய்யக் கூடிய அளவுக்கு லௌகீகம் சரியாக இல்லை.  எல்லாம் அசோகா.  அப்படித்தான் மாத்திரை இல்லை என்றே தெரியாமல் இரண்டு நாட்கள் மாத்திரை சாப்பிடாமல் இருந்து விட்டேன்.  நாவல் எழுதுவதைத் தவணை தவணையாக எழுத முடியாது.  கை காலெல்லாம் பசியால் நடுங்க, சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லாமல் அவந்திகா வந்து கோதுமை உப்புமா செய்து கொடுக்கும் வரை அரை மயக்க நிலையில் கிடந்தேன்.  நானே செய்து சாப்பிட்டு இருக்கலாம்.  அதெல்லாம் இத்தனை பசியில் முடியாது.  ஒரு எட்டு மணிக்கு என்றால் செய்து கொள்ளலாம்.  கொரோனாவுக்கு முந்தியெல்லாம் இது ஒரு பிரச்சினையே இல்லை.  இருக்கவே இருக்கிறது சங்கீதா உணவகம்.  இல்லாவிட்டால் ஸ்விக்கி.  இன்னும் எங்கள் வீட்டில் ஸ்விக்கிக்கு தடை இருப்பதால் எதுவும் சாத்தியம் இல்லை.  இவ்வாறாகத்தான் என்னுடைய பல காலை நேரங்கள் கொலைப்பசியில் கழிகின்றன.  எழுத்து மட்டுமே காரணம்.  இதெல்லாம் வேறொருவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.  எனக்கோ இது ஒரு அனுபவம் என்றே தோன்றுகிறது. 

இன்னொன்று.  எங்களுடைய எட்டு பூனைகளையும் SPCA ஷெல்டரில் கொண்டு விட்டாயிற்று என்றாலும் மாதம் ஒருமுறை ஏழு கிலோ விஸ்காஸ் உணவு வாங்கி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.  அப்படியே விட்டு விடக் கூடாது அல்லவா?  கொரோனா இல்லையென்றால் போய்க் கூட பார்த்து விட்டு வரலாம்.  இந்த மாதம் அனுப்பவில்லை.  அவந்திகா மாத ஆரம்பத்திலேயே அனுப்பியாகி விட்டதா என்றாள்.  அனுப்பியாகி விட்டது என்று பொய் சொல்லி விட்டேன்.  அந்தப் பொய்யை வேறு மெய்யாக்க வேண்டும். 

எப்போதும் மாத ஆரம்பத்தில் ஒரு நண்பர் பூனை உணவு அனுப்பி விடுவார்.  அது பதினைந்தாம் தேதியே தீர்ந்து விட்டது.  வாசகர்களிடமிருந்தும் சலனமே இல்லை.  மீண்டும் அவருக்கே போன் செய்து கேட்க லஜ்ஜையாகவும் தயக்கமாகவும் இருந்தது.  இருந்தாலும் கேட்டேன்.  ஒரு வாரத்தில் அனுப்புகிறேன் என்று சொன்னார்.  வேறொரு நண்பரிடம் கேட்டு வாங்கினேன்.  நண்பர்கள் அத்தனை பேரும் முகம் கோணாமல் செய்கிறார்கள்.  அன்போடு செய்கிறார்கள்.  அவர்களுக்காகத்தான் எழுதுகிறேன்.  ஆனால் என்னைப் பிச்சைக்காரன் என்று சொல்லும் சக எழுத்தாளர்களையும் கடந்து போக வேண்டியிருக்கிறது.  முன்பு அது அவமானமாக இருந்தது.  பின்னர் ஏதோ ஒரு புத்தகத்தில் மதர் தெரஸாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் படித்த போது அது மனதில் அப்படியே தங்கி விட்டது.

தெரஸா அப்போது அத்தனை பிரபலம் இல்லாத காலம்.  தொழுநோயாளிகளின் இல்லம் ஒன்றை அமைத்திருந்தார்.  அதைப் பராமரிக்கப் பணம் வேண்டும்.  வியாபாரிகளிடம் கேட்கலாம் என்று பஸாருக்குப் போனார்.  ஒரு சேட்டு மிகவும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் போல.  தெரஸா பணம் கேட்டதும் அவரைத் திட்டி காறித் துப்பியிருக்கிறார்.  அதற்கும் தெரஸா கலங்காமல், எனக்குக் கிடைக்க வேண்டியதைக் கொடுத்து விட்டீர்கள், என்னை நம்பியிருக்கும் குழந்தைகளுக்குக் கொடுங்கள் என்று கேட்கவும் ஆடிப் போய் விட்டார் சேட்டு.  அப்போதிருந்து அவருடைய லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தெரஸாவின் இல்லத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.  அதனால் என்னைப் பிச்சைக்காரன் என்று திட்டினாலும் பரவாயில்லை, என்னை வந்து உணவு கேட்கும் ஜீவன்களுக்கு இல்லை என்று முகம் திரும்பக் கூடாது என்று இருக்கிறேன்.  எப்படியும் இந்த வாரத்திலாவது ஷெல்டருக்கு பூனை உணவு அனுப்ப வேண்டும்.

ஹ்ருதய சூத்ரம் பற்றிக் கேட்டிருந்தேன்.  இனி அப்படிக் கேட்க மாட்டேன்.  ஏகப்பட்ட நண்பர்கள் அது பற்றி எனக்கு எழுதியிருந்தார்கள்.  எனவே வாசகர்கள்/நண்பர்களின் மௌனம் பற்றி ரொம்பவும் நாம் அலட்டிக் கொள்ளக் கூடாது என்ற பாடத்தைப் பயின்றேன்.

சில தினங்களுக்கு முன்பு ஒரு மூத்த எழுத்தாளர் ஐந்தாயிரம் ரூபாய அனுப்ப வேண்டும் என்று சொல்லி என் அக்கவுண்ட் நம்பரைக் கேட்டார்.  வேண்டாம் என்று அன்புடன் மறுத்து விட்டேன்.  நான் எழுத்தாளர்களிடமிருந்தும், மாணவர்களிடமிருந்தும், தனி வருமானம் இல்லாமல் குடும்பத்தை வீட்டில் இருந்தபடி நிர்வாகம் செய்யும் பெண்களிடமிருந்தும் நன்கொடை வாங்குவதில்லை.  எனவே இயன்றவர்கள் மட்டும் அனுப்பினால் போதும்.  மற்றவர்கள் இது குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்பட வேண்டாம்.

முடிந்தவர்கள் சந்தா/நன்கொடை அனுப்பித் தாருங்கள்.  முடிந்தவர்கள் பூனை உணவு அனுப்ப முடிந்தால் எனக்கு எழுதுங்கள் விலாசம் தருகிறேன்.  SPCAவுக்கு அனுப்ப முடிந்தாலும் நல்லதுதான்.  ஆனால் எனக்கு ஒரு வார்த்தை தெரிவித்து விடுங்கள்.  charu.nivedita.india@gmail.com

புதுமைப்பித்தன் பேச்சுக்குத் தயாராகுங்கள்.  கேள்விகள் இருந்தால் அனுப்புங்கள்.  ஒரு கேள்வியை ஏற்கனவே நேஹா அனுப்பி விட்டார்.  புதுமைப்பித்தனை முன்பு ஏன் நிராகரித்தேன், இப்போது ஏன் ஏற்கிறேன்?  அந்த நிராகரிப்புக் கட்டுரையை இப்போது நாங்கள் ஏன் படிக்கக் கூடாது?  புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இணையத்திலேயே கிடைக்கும்.  ஒன்றிரண்டையாவது படித்துப் பார்த்து விட்டு என் உரையைக் கேட்டால் இன்னும் உள்ளே போக ஏதுவாக இருக்கும். 

முடிந்தால் கீழே வரும் கார்த்திக்கின் கடிதத்தைப் படியுங்கள்.  கார்த்திக் ஒரு சமூகச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான நண்பரின் நெருங்கிய உறவினர்.   

அன்புள்ள சாரு அப்பாவிற்கு,

கடந்த இரண்டு வாரங்கள் நீங்கள் எழுதியது மற்றும் நீங்கள் வேதனையுடன் விவாதித்தது அனைத்தும் என்னை மிகவும் பாதித்தது. 

உடனடியாக எழுதவேண்டும் என்று தான் இருந்தேன். அப்படி எழுதிருந்தால் அது வெறும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாகத்தான் இருந்திருக்கும்.

ஆகையால் சில நாட்கள் பொறுத்திருந்து யோசித்து இதை எழுதுகிறேன். 

சாருவின் எழுத்து ஒரு சாமானியனுக்குச் செய்தது என்ன?

உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே அதைக் காண்பித்தல்:

============================================

என்னுடைய வேலை தேடும் வயதில், சேலம் பேருந்து நிலையத்தில் இரவு பதினோரு மணி அளவில்,  விபச்சாரத் தொழில் செய்யும் பெண்ணொருத்தி என்னைத்  தன்னுடன் வருமாறு அழைத்தாள். நானோ பயத்தில் விலகி ஓடினேன்.  என்னைத் துரத்திக் கண்டிப்பாகப் பணம் தரும்  வேண்டும் என்றும் இல்லையென்றால்  அனைவருக்கும் முன்னால்  கூச்சல் போடுவேன் என்றும் மிரட்டி என்னிடம் ரூபாய் மூவாயிரம் பறித்துச்சென்றாள். அந்த நிகழ்வை நினைத்து இரண்டு நாட்களுக்கு ஜுரம் வந்தது.  நடுத்தர வர்க்கத்தின் சுகமான கூண்டுக் கிளியாக வாழ்ந்த எனக்கு உண்மையான உலகம் அப்போது புரியவில்லை. 

சென்னை மின்சார ரயில்நிலையத்தில் சிலர் என்னை மிரட்டி பணம் பறித்தனர்.  பிறகு ஒரு நாள் நள்ளிரவில் பேருந்து நிலையத்தின் நடைமேடையில் அனைவரும் பார்க்க ஒரு ஜோடி புணர்ந்து கொண்டு இருந்தது.  இப்படி அடுக்கிக்கொண்டே  போகலாம், இவற்றைக் கண்டவுடன் என் நெஞ்சம் அதிரும், அந்த இடத்தை விட்டு ஓடுவேன், பயத்தில் கை கால்கள் நடுங்கும், இதுவே நான்.

இதையெல்லாம் கண்டு அஞ்சி அபார்ட்மெண்ட் வீட்டில் இரும்பு கேட்டை தாளிட்டு வாழும் சாமானியன் நான்.  பிறப்பிலிருந்து இன்று வரை நான் கற்ற வாழ்க்கைப் பாடம் , கூண்டு மிருகமாக வாழ்வது எப்படி?  அதை பிழைத்தல் என்று பெயரிட்டுக் கொண்டேன்.   

சாருவின் எழுத்து அந்த இரும்பு கேட்டை, அந்தக் கூண்டை உடைத்தெறிந்து என்னை மனிதன் வாழும் சமுதாயக் காட்டில் வாழ அனுப்பியது, கொண்டாட்டமாக, பயமற்ற மனநிலையில். 

உண்மையான சமுதாய பார்வைக்காக எனக்கு மீண்டும் இரு கண்கள் கொடுத்த அவர் எழுத்தை வரம் என்று தான்  சொல்லுவேன். 

நான் புத்திஜீவி அல்ல; ஆனால் இதுவரை சுமார் 800 புத்தங்கள் படித்திருப்பேன், என்னைப் பொறுத்தமட்டில் ராஸ லீலாவும் ஸிரோ டிகிரியும் என்னுடைய  RULE BOOK என்பேன். 

காரணம் அவைகள் மட்டுமே என் உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே அதைக் காண்பிக்கிறது. 

ஆசான்:

==========

தீவிரமாகப்  படித்துக் கொண்டு இருந்தால் என் மனைவி என்னிடம் கேட்கும் முதல் கேள்வி  ” என்னப்பா, சாரு ஹோம்ஒர்க் குடுத்துட்டாரா ? “

ஆம் அது உண்மை தான், சாரு என்னும் ஆசான் எனக்குக் கொடுப்பது வீட்டுப்பாடம் இல்லை வாழ்க்கை பாடம்.  பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் கூட நான்  இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. 

இதுவே என்னுடைய வாழ்வில் நான் பயிலும்  முதல் கல்வி என்பதைப் போல் உங்கள் எழுத்தைப் பின்தொடர்கிறேன். 

சென்ற ஆண்டு என் ஆசான் எனக்குக் கற்பித்தது என்ன :

Roland Barthes Mythology — வெகுஜன கலாச்சாரத்தின் நுணுக்கங்கள் மற்றும் அதை எவ்வாறு அணுக வேண்டும் என்று அறிய எனக்கு உதவிய மிக முக்கியமான நூல்.  

அதிலும்  signs, Signified &signifier என்ற  கருத்து என்னை மிகவும் பிரமிக்க வைத்தது.

Kathy Acker’s Blood and Guts in High School & Willian Burroughs Naked Lunch   — இவர்களின் எழுத்துக்கள் அமெரிக்காவின் இருண்ட வீதிகளில் பயணித்த அனுபவத்தைக் கொடுத்தது. அதன் மூலம் என்னுடைய வெளிநாட்டுக் கனவுகள் எவ்வளவு அபத்தம் என்று அறிந்து கொண்டேன்.

நிலவு தேயாத தேசம்  & கலகம் காதல் இசை — புரட்சி என்பது முகநூலில் வாந்தி எடுப்பது அல்ல; அதன் உன்னதம் என்ன என்பதைக் காண்பித்த நூல்கள் இவை.

Jean-Paul Sartre’s Nausea — ஒரு கவிதை போல் இருத்தலியல் கூற்றை என் மனதில் பதியவைத்து நூல் 

திரைப்படங்கள் பற்றிச்சொல்லவே வேண்டாம், உங்கள் எழுத்து மூலம் நான் பார்த்த படங்களைப் பற்றிப் பேசும் பொது கேட்பவர்கள் அனைவரும் கப்சிப். 

பூச்சி தொடர் பற்றி நான் என்ன சொல்வது, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவம். அதைப் பற்றி ஒரு கடிதமும் உங்களுக்கு சில மாதம் முன் அனுப்பி உள்ளேன்.

இப்போது நடந்து கொண்டு இருக்கும்  ஜூம் சந்திப்பு மூலம் அறிந்த படித்த விஷயங்கள் எழுத முடியாதவை. 

அனுதினமும்  அடங்கா அறிவுத் தாகத்துடன் உலகைக் காணவைத்தவரை மட்டுமே ஆசான் என்று என்னால் கூற முடியும். 

இதுவரை உங்களுடைய பதினைந்து நூல்களை முடித்து விட்டேன். மிகத் தீவிரமாக அனைத்தையும் படித்துவிட ஆசை கொள்கிறேன்.

பின்நவீனத்துவம் :

=================

இதை வெறும் கருத்தாகச் சொல்லாமல் வாழ்ந்து காட்டும் மனிதன் நீங்கள். 

உங்கள் வாசகன் கண்டிப்பாக உங்கள் வழியைப் பின்பற்றிவிடுவான் (இரண்டே இரண்டு புத்தகம் போதும்) அவனையே அறியாமல்.

இந்த மேஜிக் தான் உங்களின் தனிச் சிறப்பு என்பேன்.  ஒரு கருத்தைப் பன்முகத் தன்மையுடன் அணுக வேண்டும் என்ற உங்களுடைய வேதவாக்கு தான் என் வாழ்க்கை சுழல்வதற்கு அச்சாணியாக இருக்கிறது.  

வாழ்க்கையை ரசிப்பது 

======================

உணவு முதல் இசை வரை எவ்வாறு ரசிப்பது, முதலில் ரசனை என்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்தியது உங்கள் எழுத்து தான். 

கலகம் காதல் இசை படித்து விட்டு Victor jara & Cesaria Evora பாடல்களில் மூழ்கித் திளைக்கிறேன்.

சென்ற வாரம் Cesaria Evora’s Sodade பாடலுடன் என் மொட்டை மாடியில் சூர்யோதயம் கண்டேன் அப்போது எடுத்த புகைப்படத்தை இத்துடன் அனுப்புகிறேன். 

அது ஒரு sublime experience.

என்னுள் இவ்வகை  அனுபவத்தைக் கொண்டுவந்தது என் ஆசானின் எழுத்து தான். வேறென்னவாக இருக்க முடியும்?

பரீட்சை கனவு

==============

இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து சில நாட்களில் நான்  பரீட்சை எழுதுவது போல் கனவு கண்டேன். நான் என் கல்லூரிப்படிப்பை முடித்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஏன்  இந்தப் பரீட்சை கனவு என்று புரியவில்லை.  Freudஇன் கனவுகளின் விளக்கம் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்ததில் மிக முக்கிய பொறுப்பிலிருந்து விலகினால் பரீட்சை கனவு வருமாம். சற்று அலசி ஆராய்ந்தால் உங்கள் வலைத்தளத்தைப் படித்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது. அதனால்தான் எனக்குப் பரீட்சை கனவு வந்துள்ளது. இவ்வாறு என்னுடைய ஆழ்மனத்தின் வெளிப்பாடாக மாறியது உங்கள் எழுத்து. 

பின் குறிப்பு : இந்தப் பரீட்சை கனவு சந்தா கட்ட மறந்தாலும் வரும். 

எழுதிக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது ஆனால் உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை அதுவும் அசோகா எழுதும் நேரத்தில். 

முடிக்கும் முன் இதைத் தட்டச்சு செய்வதற்கு என்னை ஒருமுகப்படுத்தியது ஹ்ருதய சூத்ரம் பாடல் தான்.

நன்றி என்ற வார்த்தை போதுமா ஆசான் தந்த ஞானத்திற்கு.? 

பல்லாண்டு வாழ்ந்து பலதேசம் சுற்றி உங்களின் இலக்கிய மழை எங்கள் மேல் எப்போதும் பொழிய இறைவனை பிராத்திக்கிறேன்.

இப்படிக்கு உங்கள் மாணவன் 

கார்த்திக்.

இப்படிப்பட்ட நண்பர்களுக்காகவே இடைவெளியில்லாமல் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. 

***

கோபி கிருஷ்ணன் உரைகள் இரண்டும் தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதுங்கள். மாதச் சந்தா/ நன்கொடை அனுப்புபவர்களுக்கு அந்த உரைகள் தேவையென்றாலும் தயக்கமில்லாமல் எழுதுங்கள். சிலர் எழுதிக் கேட்டு நான் அனுப்பாமல் விட்டிருக்கலாம். அவர்களும் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

சந்தா/நன்கொடை அனுப்ப முடிந்தவர்கள் அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

அடுத்த மாதாந்திர சந்திப்பு நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு நடைபெறும்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai