வரும் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 1, இந்திய நேரம் காலை ஆறு மணி) புதுமைப்பித்தன் பற்றிய என் உரைக்குத் தயாராகுங்கள். புதுமைப்பித்தனின் கதைகள் இணையத்திலும் கிடைக்கும். ஐந்து கதையாவது படித்திருந்தால் நல்லது.
***
என் எழுத்துக்கு யாரிடமிருந்து எதிர்வினை வருகிறதோ இல்லையோ என் நண்பர் பாலசுப்ரமணியனிடமிருந்து குறைந்த பட்சம் ஐந்து கடிதங்களாவது வந்து விடும். பாராட்டும் கடிதங்கள் அல்ல, எதிர்வினைகள். பல சமயங்களில் அவர் கொடுக்கும் விவரங்கள் எனக்குப் பெரிதும் உதவி செய்திருக்கின்றன. கடுமையான படிப்பாளி என்பதால் நிறைய மேல் விவரங்களையும் தருவார். மோடி ஆதரவாளர் என்பதால் என்னை விமர்சித்தும் எழுதுவார்.
எனக்கு இப்படிப் பல கடிதங்கள் எழுதுவது போலவே ஜெயமோகனுக்கும் எழுதுவாரா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. ஏனென்றால், ஜெயமோகனையும் தீவிரமாக வாசிக்கிறார். அவ்வப்போது அவர் அனுப்பும் ஜெ. லிங்குகளையும் வைத்து அப்படி முடிவு செய்கிறேன். ஒரு சமயம் ”என்ன நீங்கள் ஜே.என்.யூ. ஆள் மாதிரி பேசுகிறீர்கள்?” என்று கேட்டு எழுதினார். அதை நான் ஒரு வசையாகவே எடுத்துக் கொண்டேன். எனக்கு அந்தக் கல்வி நிறுவனம் மீது எந்த மரியாதையும் இல்லை. இந்தியாவில் உள்ள பல மேட்டுக்குடி கல்வி நிலையங்களைப் போல் அதுவும் ஒன்று. உடனே ஜே.என்.யூ.வில் பரம ஏழைகளும் படிக்கிறார்கள் என்று நிரூபணங்களை அனுப்பாதீர்கள். ஏன் நான் நீட் பற்றியெல்லாம் இதுவரை ஒரு வார்த்தை எழுதவில்லை என்றால், இங்கே கல்வித் துறையே புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது. உடம்பு பூராவும் புற்று நோயில் செல்லரித்துப் போய் விட்ட நிலையில், தலையில் உள்ள பேனுக்கு என்னய்யா மருந்து என்பதே என் கருத்து. இன்னமும் இந்தியாவின் ஏழைக் குழந்தைக்கும் பணக்கார, நடுத்தர வர்க்கக் குழந்தைக்கும் சமமான கல்வி கிடைக்கிறதா? சொல்லுங்கள். கீழே பத்ரி சேஷாத்ரி எழுதியுள்ள பதிவை அப்படியே தருகிறேன். படித்துப் பாருங்கள்.
”…எனவே மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்வரையில் மாற்றுக் கல்வியைத் தருவது மட்டும்தான் ஒரே வழி. இக்கல்வி, ஒன்று வீட்டுக்கல்வி (Home Schooling) அல்லது இணையவழிக் கல்வி (Internet based Education). வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால்தான் என்னைப் போன்ற ஒருசிலர் மார்ச் மாதம் முதற்கொண்டே இணையவழிக் கல்வியின் அவசியம் குறித்துப் பேசிவந்தோம்.
இன்றைய நிலை என்ன? எனக்குத் தெரிந்த மூன்று பள்ளிக்கூடங்களை எடுத்துக்காட்டாக உங்கள்முன் வைக்கிறேன். ஒன்று அதிகக் கட்டணம் வாங்கும் சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி. மிகக் குறைந்த மாணவர்களைக் கொண்டது. மார்ச் இறுதியிலேயே இணையவழிக் கல்வியை ஆரம்பித்துவிட்டனர். ஆசிரியர்களும் சிரமப்பட்டனர், மாணவர்களும் சிரமப்பட்டனர். ஆசிரியர்கள் ஒருவழியாக இணையம் வழியாகக் கற்றுக்கொடுக்க இப்போது தேறிவிட்டனர்.
பெரும்பாலானவர்கள் வீட்டில் மாணவர்களுக்கென்று தனிக்கணினி உள்ளது. ஆனால் சிலர் செல்பேசி மட்டுமே வைத்துள்ளனர். பணம் ஒரு பிரச்னை இல்லை என்றாலும், மாணவர்களில் ஒரு சிலருக்கு இன்றும் செல்பேசிவாயிலான இணைய இணைப்புதான். எனவே இணைப்பின் தரம் படு சுமார். ஓரிருவர் வீட்டில் இன்வெர்டர் இல்லை – எனவே மின்வெட்டு ஏற்பட்டால் அன்று வகுப்புக்கு வரமாட்டார்கள். ஆனால் இவர்களைத்தவிர மற்ற அனைவருமே இணையம் வாயிலான கல்விக்குத் தயாராகிவிட்டார்கள்.
இன்னொரு பள்ளி, கிராமப்புறத்தில் உள்ள தனியார் பள்ளி. குறைந்த கட்டணம் வாங்கும் பள்ளி. அந்த ஊரில் அதிவேக இணைய இணைப்பு என்பதே கிடையாது. செல்பேசி இணைப்பு மட்டுமே சாத்தியம். கிட்டத்தட்ட எந்த மாணவர் வீட்டிலும் கணினி கிடையாது. தாயின் செல்பேசிதான் குழந்தையின் கல்விச்சாதனம். அன்றைய டேடா வசதி தீர்ந்துவிட்டால் இணைப்பின் வேகம் படுமோசமாகிவிடும். ஆசிரியர்களிடமும் கணினி கிடையாது. அவர்களுக்கும் டேடா பிரச்னை உண்டு. தனி அறை வசதி கிடையாது. மொட்டை மாடியில் இருந்தபடி, பறவைகள் இரையும், நாய்கள் குரைக்கும் சத்தத்துக்கிடையே, பாடம் நடத்தவேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் மீறி அவர்கள் பாடம் நடத்துகிறார்கள். மாணவர்கள் மிகக் கடினமான சூழ்நிலையில் ஏதோ கற்றுக்கொண்டிருக்கிறார்கள். வரும் மாதங்களில் இது எப்படிச் செல்லும் என்று தெரியவில்லை. சில பெற்றோர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தமுடியாத காரணத்தால், அல்லது செலுத்த விரும்பாத காரணத்தால், தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் கொண்டுபோய் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.
மூன்றாவதாக, இந்த அரசுப்பள்ளிகள். எங்கள் வீட்டிலிருந்து 750 மீட்டர் தொலைவில் ஒரு மாநகராட்சி அரசுப் பள்ளி உள்ளது. எங்கள் பகுதியில் சில மாணவர்கள் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் தாங்களாக ஒன்றுமே செய்யவில்லை. மாணவர்கள் பெரும்பாலும் தெருவில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நிறுத்தி, பள்ளிக்கூடத்திலிருந்து தொடர்பு கொண்டார்களா, எதையாவது படிக்கிறீர்களா என்று கேட்டால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்கிறார்கள். அதே பொருளாதாரச் சூழ்நிலையில் இருக்கும், அருகில் உள்ள மிகச் சுமாரான தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவர்களிடம் கேட்டால், ஏதோ நடப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். ஒருசிலருக்கு வாட்சப் மூலம் ஏதோ சொல்லிக்கொடுக்கப்படுகிறது. ஏதோ பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. தாய் தந்தையிடம் கேட்டுப் படித்துக்கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அரசுப் பள்ளியில் இந்தச் சின்ன விஷயம்கூட நடைபெறவில்லை என்பதுதான் வருத்தமே.
மாநில அரசு கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கல்வி தொ.கா என்று ஏதோ பாடம் நடத்துவதாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் நம் மாணவர்களுக்குத் தேவை ஆசிரியருடனான உரையாடல். பெரிய அளவுக்குப் பாடம் ஏதும் நடத்தவேண்டாம். ஒரு நாளைக்கு 2, 3 அல்லது 4 மணி நேரம், மாணவர்கள் அவரவர் வயதுக்கு ஏற்றவாறு ஆசிரியர்களுடன் பேசிக்கொண்டிருக்கவேண்டும். கூடவே கொஞ்சம் கற்றல் நடந்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை.
நான் புதிய தலைமுறை தொ.காவில் ஒரு விவாதத்தில் கலந்துகொண்டேன். அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், இணையவழிக் கல்வி பயனற்றது என்றார். அதே நேரம், தங்கள் மாணவர்கள் தெருவில் ஆடு மாடுகளின் பின்னால் போய்க்கொண்டிருப்பார்களோ என்று மனம் பதைபதைக்கிறது என்றார். பிறகு அரசு வற்புறுத்தினால், கட்டாயமாக இணையவழிக் கல்வி அளிப்போம், அதையும் மற்ற அனைவரையும்விடச் சிறப்பாகச் செய்வோம் என்றார். இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று அறிய ஆவல்.
இந்தக் கொடுந்தொற்று ஒன்றை வெளிப்படையாகக் காண்பித்திருக்கிறது. பெரும் சீர்குலைவு ஏற்படும்போது, முதலில் கலங்கித் தவித்தாலும், தனியார் கல்வி அமைப்புகள் ஏதோ ஒருவழியில் ஏதேனும் ஒரு தீர்வைத் தேடிப் போகிறார்கள். அரசுக் கல்வி அமைப்புகள், தங்களுக்கும் தீர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுபோல அனைத்தையும் அரசு அதிகாரிகள்மீது போட்டுவிடுகிறார்கள். அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ஆயிரம் பிரச்னைகள். இறுதியில் தீர்வு என்று எதுவுமே கிடைப்பதில்லை.”
பத்ரி சேஷாத்ரியின் இந்த நீண்ட மேற்கோளிலிருந்து தமிழகத்தின் கல்விநிலை உங்களுக்கு மிக நன்றாகத் தெரிய வரும். இதைத்தான் நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக ஆங்கிலத்திலேயே படித்து, பள்ளியிலும் 75 சதவிகிதம் மதிப்பெண் (அந்தக் காலத்தில்) எடுத்து, புத்திசாலிப் பையன் என்று பள்ளியில் பெயர் எடுத்த எனக்கே நாலு வாக்கியம் ஆங்கிலத்தில் எழுத வரவில்லை. சென்ற சனிக்கிழமை அன்று ArtReview Asia பத்திரிகையின் அடுத்த பத்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பு வித்யா சுபாஷிடமிருந்து வந்ததை ARA ஆசிரியருக்கு அனுப்பி வைத்தேன். நேற்று மாலை பல சந்தேகங்கள் கேட்டு ஆசிரியரிடமிருந்து கடிதம். ஒரு ஆயிரம் வார்த்தைகளில் ஆங்கிலத்தில் பதில் எழுத வேண்டியிருந்தது. விழி பிதுங்கி விட்டது. தமிழில் எழுதும்போது சிந்தனையும் கணினித் திரையில் விழும் எழுத்தும் ஒரே சமயத்தில் நடக்கும். சில வேளைகளில் சிந்திக்கும் முன்பே எழுத்து வந்து விழுகிறதோ என்று நினைக்கும் அளவுக்கு வேகம். அலாவுதீனின் அடிமை பூதம் போல் என் மொழி எனக்குக் கை கொடுக்கும். மனோ வேகம் காற்று வேகம். ஆனால் ஐம்பது ஆண்டுகளாக ஆங்கிலத்தில் புழங்கியும் நேற்று அப்படி ஒரு அனுபவம். ஒரு அரிசி மூட்டையைத் தலையில் சுமப்பது போல் இருந்தது. ஒரு இடத்தில் ரசனை சீரழிந்து விட்டது என்று எழுத வேண்டியிருந்தது. சீரழிவு தெரியும். ரசனைக்கு என்ன ஆங்கிலம்? டேஸ்ட் என்று எழுதுவது அபத்தம். அல்லது, ரசனை சீரழிந்து விட்டது என்பதை ஆங்கிலத்தில் வேறு மாதிரியாக எழுதலாம் அல்லவா? Pellets என்ற வார்த்தையைப் பயன்படுத்தி எழுதலாம்; ரசணையுணர்வு மொண்ணையாகி விட்டது என்று. அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாது. தருண் என்றால் ஒரு சின்ன போன் மெஸேஜில் கூட அத்தனை கவித்துவமாக எழுதுகிறார்.
எதற்குச் சொல்கிறேன் என்றால் என்னைப் போல் சேரிகளிலிருந்து வந்தவர்களால் – இப்போதைய கல்வி முறையில் மேட்டுக்குடி பக்கம் நெருங்கவே முடியவில்லை. இல்லாவிட்டால் ஒன்றேணா புத்தகம் எழுதிய அருந்ததி ராய் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளராக மிளிர்ந்து கொண்டிருக்கும்போது இங்கே தமிழில் நூறு புத்தகங்களைத் தாண்டி விட்ட நாங்கள் பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருப்போமா? உடனே எழுத்தாளர்கள் எல்லோரும் சண்டைக்கு வராதீர்கள். சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கிய முகவர் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். எஸ்.ரா. இதுவரை எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டியிருக்கும். ஆனால் ஒரு புத்தகத்தைப் பற்றிக் கூட சென்னையின் இந்து ஆங்கில நாளிதழில் மதிப்புரை வந்ததில்லை. எனக்கும் அப்படித்தான். ஒரு வரி வந்ததில்லை. ஆங்கில மொழிபெயர்க்கப்பட்டு உலகப் புகழ் பெற்று விட்ட ஸீரோ டிகிரி பற்றிக் கூட இதுவரை ஒரு வரி வந்ததில்லை. சென்னையிலிருந்து வரும் மற்ற எல்லா ஆங்கில தினசரிகளிலும் ஸீரோ டிகிரி பற்றி மதிப்புரை வந்தது. இத்தனைக்கும் அந்த நாவல் இந்தியாவில் வெளிவந்த 50 முக்கிய நூல்களில் ஒன்றாக ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்னும் இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், ப. சிங்காரம். இரண்டாமவர் பற்றிய கட்டுரையை நான் எழுதியிருக்கிறேன். இவ்வளவு வந்தும் ஆங்கில இந்துவின் சென்னைப் பதிப்பில் ஒரு வரி வரவில்லை. மார்ஜினல் மேன் நாவலுக்கு வெளிநாட்டுப் பத்திரிகைகள் மதிப்புரை எழுதின. இங்கே சென்னையில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும் மதிப்புரை இல்லை. எஸ்.ரா.வுக்கும் இதே நிலைதான். ஜெயமோகனுக்கும் அப்படித்தான் ஆகியிருக்கும். ஆனால் அவர் அதிர்ஷ்டசாலி. நாகர்கோவிலில் வசிக்கிறார். நீங்கள் தமிழ் இலக்கியவாதியாக இருந்தால் நாகர்கோவிலில் பிறந்து அங்கே வசிக்க வேண்டும். அப்போதுதான் உருப்பட முடியும். இல்லாவிட்டால் தேற முடியாது. ஒரு காலத்தில் கும்பகோணம் இலக்கியத்தின் புனிதபூமியாக விளங்கியது. இன்று தமிழ் இலக்கியத்தின் ஹெட்குவார்ட்டர்ஸ் நாகர்கோவில். ஒன்று அல்ல, இரண்டு. கூபாவும் அமெரிக்காவும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பது போல ரெண்டும் பக்கத்துப் பக்கத்துத் தெரு. ரெண்டும் ரெண்டு ராணுவத் தளம் போல. சரி, நமக்கு எதுக்கு அந்த வம்பெல்லாம். நாமெல்லாம் ஏதோ அங்கோலா, எத்தியோப்பியா மாதிரி உதிரி நாடுகள். ஆங்கில ஹிண்டுவில் ஒரு நாகர்கோவில்காரர் பெரிய இடத்தில் இருக்கிறார். பொதுவாக ஆங்கில ஹிண்டுவில் இருப்பவர்களுக்குத் தமிழ் இந்துவில் மிகப் பெரிய இடத்தில் இருக்கும் சமஸின் பெயரே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நாமே வாயைத் திறந்து கேட்டால் கூட அப்டியா என்பார்கள். இத்தனைக்கும் ஆனானப்பட்ட அசோகமித்திரனின் புதல்வரே ஆங்கில இந்துவில்தான் பணி புரிகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் நாகர்கோவில்காரர்கள் மகா கெட்டிக்காரர்கள். அவர்களைப் போன்ற கெட்டிக்காரர்களை உலகிலேயே பார்க்க முடியாது. ஆங்கில இந்துவில் ஒரு நாகர்கோவில் இருப்பதால் ஜெயமோகன் பற்றிய செய்தி மட்டும் அதில் இடம் பெற்று விடும். பத்திரிகையாளர் நாகர்கோவில்காரர் என்பதால் மட்டும் அல்ல; அவர் ஜெ.வின் தீவிர விசிறியும் கூட. அதோடு போனால் பரவாயில்லையே? சாரு நிவேதிதாவைக் கொஞ்சமும் பிடிக்காது. அதனால் அடியேனின் பெயர் தப்பித் தவறிக் கூட வந்து விடாமல் பார்த்துக் கொள்வார். எனக்குத்தான் எங்கெங்கெல்லாம் நலம் விரும்பிகள் இருக்கிறார்கள் பாருங்கள்.
சரி, எஸ்.ரா. எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளாதவர். அவருடைய 200 புத்தகங்களில் ஒன்றைப் பற்றிக் கூட ஆங்கில இந்துவில் வந்ததில்லை. வம்புக்குப் போகாவிட்டால் என்ன? தமிழில் எழுதுவதே ஒரு தகுதிக் குறைவுதானே? அப்படித்தான் ஆங்கில இந்து நினைக்கிறது. மேலும், ஆங்கில இந்துவில் ஒரு வரி வந்து விட்டால் அதைப் பார்த்து நோபல் பரிசு கொடுத்து விடுவார்கள் இல்லையா, அதனாலும் இருக்கலாம். ஆனால் இதே ஆங்கில இந்துவில் ஒரு இருபத்தைந்து வயது கோவிந்தன் நாயரின் மலையாள நாவல் திருவனந்தபுரத்தில் வெளிவந்தது என்றால், அரைப் பக்கத்துக்கு சென்னை ஆங்கில இந்துவில் மதிப்புரை வெளிவரும். மர்மம் என்ன? சென்னை ஆங்கில இந்து அலுவலகத்தில் உள்ள மலையாளிகள். அவர்கள்தான் அப்படிச் செய்கிறார்கள். ஆனால் அதே ஆங்கில இந்து சென்னை அலுவலகத்தில் உள்ள தமிழர்களுக்கு சாரு நிவேதிதாவைப் பிடிக்காது, எஸ்.ரா. யார் என்றே தெரியாது. ஒரு வார்த்தை வராது. எனக்கு 67 வயது ஆகி விட்டது. இன்றைய தேதி வரை சென்னை ஆங்கிலப் பதிப்பில் என் புத்தகம் பற்றி ஒரு வார்த்தை வந்ததில்லை. இனிமேல் வந்தால் பூனைப் பீயைத் துடைத்துப் போட வேண்டியதுதான்.
ஆக, இப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலில் ஜே.என்.யூ. பற்றியெல்லாம் எனக்குக் கொஞ்சமும் மரியாதை கிடையாது. இந்தியா என்றாலே கேவலம் என்று நினைக்கின்ற, படித்த மேட்டுக்குடி வர்க்கத்தினர் படிக்கும் கல்வி நிறுவனம். இந்தியாவில் கிடைக்கும் மிக மிக முட்டாள்தனமான மேற்கத்திய கல்வி முறையின் விளைப்பயன்கள் அவர்கள். அங்கே எனக்குப் பிடித்த ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் தத்துவம் பயின்றால் இன்றைய தத்துவத் துறையின் சூப்பர் ஸ்டாரான Slavoj Žižek ஜே.என்.யூ.வில் வந்து உரையாற்றுவார். அப்படிப்பட்ட நவீனத் தன்மை அங்கே உள்ள பாடத்திட்டத்தில் உண்டு.
என்றைக்கு இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் சமமான கல்வி கிடைக்கிறதோ அப்போதுதான் இந்தியா பற்றி நல்ல விதமாக எழுதுவேன். சென்ற பருவத்தில் ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் வெளிவந்த என் கட்டுரையைப் படித்து விட்டு சில நண்பர்கள் ஏன் இந்தியா பற்றி பிரிட்டிஷ் பத்திரிகையில் போய் கெட்டதாகவே எழுதுகிறீர்கள் என்று கேட்டார்கள். நேற்று அனுப்பிய கட்டுரை வெளிவந்தாலும் கேட்பார்கள். ஆம், மன்னியுங்கள், இந்தியா பற்றிச் சொல்ல என்னிடம் நல்லதாக எதுவும் இல்லை. நான்கு ஆண்டுகளாக ArtRevew Asiaவில் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஓவியம், சிற்பம் போன்ற கலைகளுக்கான ஜர்னல் அது. அதில் தமிழ்நாட்டின் கோவில் சிற்பங்கள், ஓவியங்கள், கட்டிடக் கலை போன்றவற்றின் மேன்மை பற்றியெல்லாம் எழுதலாம். ரொம்பப் பொருத்தமாக இருக்கும். ஆனால் நான் என்ன தொல்பொருள் ஆய்வாளனா? அல்லது, வரலாற்றுப் பேராசிரியனா? அதைத்தான் ஆனந்த குமாரசாமி ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் எழுதிக் குவித்திருக்கிறாரே? அவருடைய நூல்களில் நீங்கள் படிக்க வேண்டியது தெ டான்ஸ் ஆஃப் ஷிவா. இந்த நூலை என்னுடைய பயிற்சிக் காலத்தில் படித்திருக்கிறேன். அது என்ன பயிற்சிக் காலம்? நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே ஒருவர் எழுத்தாளனாக வேண்டுமானால் தெ டான்ஸ் ஆஃப் ஷிவா போல் இருநூறு அத்தியாவசிய நூல்களைப் படித்து விட்டுத்தான் முதல் வாக்கியத்தையே எழுத வேண்டும். இப்போது போல் இணைய தளத்தில் ரெண்டு கதை எழுதி விட்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சண்டியராக அலைய முடியாது. பருப்பெடுத்து விடுவார்கள். ஒரு எழுத்தாளன் என்றால் அவனுக்கு நடனம், சினிமா, ஓவியம், உலக இலக்கியம், சிற்பம் பற்றியெல்லாம் அடிப்படை ஞானம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த காலம் அது. அந்தப் பயிற்சிக் காலம் ஒவ்வொரு ஆளுக்கும் மாறுபடும். சிலருக்கு மூன்று ஆண்டு. சிலருக்கு ஆயுள் முழுவதும். நான் ஆயுள் category. இன்னமும் பயிற்சிக் காலம் முடியவில்லை. முடியாமலேயே இத்தனையும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இப்போதும் நான் நம்புகிறேன், டான்ஸ் ஆஃப் ஷிவா நூலைப் படிக்காதவர் ஒரு அற்புதத்தைத் தவற விட்டவரே ஆவார். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு சமூகமும் இனக்குழுவும் மனித குலத்தின் மேம்பாட்டுக்காகத் தனது பங்களிப்பைச் செலுத்திக் கொண்டேதான் இருக்கிறது. இதில் இந்தியா ஒரு தொன்மையான சமூகம். எனவே இயல்பாகவே அதன் பங்களிப்பு அதிகமாகத்தான் இருக்க முடியும். அந்தப் பங்களிப்பின் உச்சம் எது? இந்தியத்தன்மை. இந்தியத்தன்மை என்றால் என்ன? எல்லா உயிர்களும் ஒன்றுதான். எல்லா உயிர்களிடத்திலும் உறைந்திருக்கும் அந்த ஒன்றுதான் பிரபஞ்ச கதியிலும் நிறைந்திருக்கிறது. டான்ஸ் ஆஃப் ஷிவா புத்தகத்தின் சாரம் இது. இதைத்தான் இந்து நெறியும், பௌத்தமும் சொல்கின்றன. அதே சமயம், இன்றைய இந்தியா எப்படி இருக்கிறது? இதற்கு நாம் வி.எஸ்.நைப்பாலைப் படிக்க வேண்டும். இந்திய வம்சாவளியாக இருந்தாலும் முழுக்க முழுக்க ஒரு ஐரோப்பியனின் மனநிலையைக் கொண்டவர். குறிப்பாக அவரது India: A Wounded Civilization என்ற நூல். இதுவும் என்னுடைய பயிற்சிக் காலத்தில் படித்ததுதான். ஆரம்ப மூன்றாண்டுப் பயிற்சி. குமாரசாமியைப் படிக்கச் சொன்னது வெங்கட் சாமிநாதன். நைப்பாலைப் படிக்கச் சொன்னது தமிழவன்.
இந்த நூலை நான் 1980 வாக்கில் படித்ததாக ஞாபகம். இந்த நாட்டுக்கு ஹிந்துஸ்தான் என்பதற்குப் பதிலாக கக்கூஸ்தான் என்று பெயர் வைக்கலாம் என்று ஒரு இடத்தில் எழுதியிருப்பார். திருவல்லிக்கேணியில் பெரிய தெருவின் முனையில் உள்ள பொதுக் கக்கூஸைப் பார்த்து விட்டுத்தான் அப்படி எழுதுவதாக அந்த நூலிலேயே குறிப்பிடுகிறார். நான் சொல்வதில் உங்களுக்கு ஆட்சேபணை, கோபம் போன்றவை ஏதாவது இருந்தால் சென்னையில் நடக்கும் புத்தக விழாவில் அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளைப் போய்ப் பாருங்கள், அப்புறம் தெரியும். இந்தியா பூராவும் இதே நிலைதான். நூற்றுக்குத் தொண்ணூறு பெண்கள் வீட்டை விட்டு வெளியே போனால் தண்ணீரே குடிப்பதில்லை என்பது இதை வாசிக்கும் ஆண்களுக்குத் தெரியுமா? உங்கள் வீட்டுப் பெண்டிரையும் சேர்த்தே சொல்கிறேன். ஏனென்றால், வெளியிடங்களில் ஆண்களுக்கே கழிப்பறை வசதி இல்லை; இருந்தாலும் பெரும் மலக்கிடங்காக இருக்கிறது. இந்த நிலையில் பெண்களைப் பற்றி யாருக்குக் கவலை? இந்தப் பிரச்சினையினாலேயே பெண்கள் வெளியே போனால் தண்ணீரே குடிப்பதில்லை. அரை லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்று மீதி கால் லிட்டரைத் திரும்பக் கொண்டு வந்து விடுகிறார்கள். பெரிய பெரிய மேட்டுக்குடிப் பெண்களிடமே இதை நான் கேட்டிருக்கிறேன். இதுதான் நிலைமை. யார் தனிப்பட்ட முறையில் வேன் வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் சுதந்திரமாக நீர் அருந்த முடியும். தமிழ்நாட்டில் ஒரே ஒரு பெண்மணிதான் தனியாக வேன் வைத்திருந்தார். யார் என்று சொல்லத் தேவையில்லை. இப்படி பெண்கள் மிகக் குறைந்த அளவில் தண்ணீர் அருந்துவதால் அவர்களுக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பிரபலமான பள்ளிக்குப் போயிருந்தேன். மாலை ஐந்து மணி என்பதால் மாணவர்கள் இல்லை. ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பள்ளி. ஆண் பெண் இரு பாலரும் படிக்கிறார்கள். கூட ஒரு ஆசிரியர் வந்தார். கழிப்பறைக்குப் போக வேண்டும் என்றேன். கடைசியில் அழைத்துக் கொண்டு போனார். இங்கே வார்த்தைகளில் எழுதித் தெரிவிக்க முடியாத அளவு கொலைநாற்றம். ஆயிரம் மாணவர்களின் கழிவு. ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. என்ன சார் இது என்றேன். தண்ணீர்ப் பஞ்சம் என்றார். இதுதான் இந்தியா. இந்த நாட்டைப் பற்றி நான் எப்படி ஐயா பிரிட்டிஷ் பத்திரிகைக்கு நல்லதாக எழுத முடியும்?
சர்ச்சில் சொன்னதாகச் சொல்வார்கள், நாங்கள் வந்து விட்டால் இந்தியாவைக் கொள்ளைக்காரர்கள்தான் ஆள்வார்கள் என்று. அந்த ஆள் சொன்னதுதானே நடக்கிறது? ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்று பிறந்த குழந்தைகளுக்குப் பாரபட்சம் காட்டும் ஒரு கல்விமுறையைக் கொண்ட ஒரு தேசத்தைப் பற்றி நான் என்ன நல்லதை எழுத முடியும்? இங்கே உள்ள கற்சிலைகளைப் பற்றியும், கோவில்களைப் பற்றியும், சிற்பம், ஓவியம், கட்டிடக் கலை பற்றியும் எழுதத்தான் மற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்களே, நான் எதற்கு? யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற வழியில் வந்த எனக்கு இந்தியா மீது என்ன தனிப்பட்ட பாசம் இருக்க முடியும்? அதிலும் பொய்ப்பாசம். ஒரு பெண் தனியாக நடக்க முடியாத நாடு இது. இந்த நாட்டைப் பற்றி என்ன நல்லதாக எழுத முடியும்? உங்களால் முடிந்ததை இந்த நாட்டுக்கு நல்லது பண்ணுங்கள். என்னால் ஆனதை என் மொழிக்கும் சமூகத்துக்கும் என் அருகில் உள்ள ஜீவராசிகளுக்கும் செய்து கொண்டிருக்கிறேன். மற்றபடி இருக்கின்ற நிலைமையை எழுதுவதுதான் என் வேலையே ஒழிய, போதை மருந்து கடத்தி ஜெயிலிலே இருக்கின்ற ஒருவனைப் பற்றி அவன் மாவட்ட கலெக்டராக இருக்கிறான் என்று பொய் எழுத முடியாது. அதுதான் தேசப்பற்று என்று நீங்கள் எண்ணினால் அதற்கு நான் ஆள் இல்லை.
ArtReview Asia ஆண்டுக்கு நான்கு இதழ். இதுவரை 16 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இதில் க.நா.சு., செல்லப்பா, தஞ்சை ப்ரகாஷ், ஜெயமோகன், ந. முத்துசாமி போன்றவர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இரண்டு மூன்று கட்டுரைகள் கோவில் சிற்பங்கள். மற்றவை நைப்பால் பாணி விமர்சனங்கள்தான். இந்தியாவில் வாழ முடியாமல்தானே படித்தவர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு ஓடுகிறார்கள்? சரி, தேச பக்தியில் பொங்குபவர்களை நோக்கி ஒரே ஒரு எளிமையான கேள்வி கேட்கிறேன். அமெரிக்காவுக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றவர்களை இந்தியாவுக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேல் இருக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். ஓடியே போய் விடுவார்கள். இந்தியா மனிதர்கள் வாழக் கூடிய இடம் என்ற தகுதியை முற்றிலுமாக இழந்து கொண்டு வருகிறது. இதை யாராவது ஒருவர் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
மேலும், இந்தப் பதிவில் எடிட்டிங் பற்றியும் ஒரு குறிப்பு சேர்க்க வேண்டும். ArtRevew Asia எடிட்டர் என்னிடம் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு நான் முன்பு எழுதிய கட்டுரையை விட அதிகமான அளவில் பதில்களை எழுத வேண்டியிருந்தது பற்றிக் குறிப்பிட்டேன். ஆனால் எடிட்டர் என் கட்டுரையில் பல அத்தியாவசிய விவரங்களைச் சேர்த்திருந்தார். உதாரணமாக, நான் தமிழ் வாசகர்களுக்கு எழுதுவதைப் போல, என் நண்பர் அபிலாஷ் சந்திரன் என்று எழுதி விட்டேன். அது இன்றைய மாணவர் பற்றிய மேற்கோள் என்பதால் அபிலாஷ் ஆங்கிலப் பேராசிரியர் என்ற விவரமும் கொடுத்திருந்தேன். திருத்தி வந்த கட்டுரையில், எழுத்தாளரும் பெங்களூரு க்றைஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியருமான அபிலாஷ் சந்திரன் என்று இருந்தது. அடப்பாவி, எவ்வளவு தூரம் வரி வரியாகப் பார்த்து விவரங்களைச் சேகரித்திருக்கிறார் பாருங்கள். இன்னொரு இடத்தில் ஒரு வருடத்தை – வழக்கம் போல் – தவறாக எழுதி விட்டேன். அதையும் சரி செய்திருந்தார். இப்படிப்பட்ட எடிட்டர்கள் தமிழில் முன்பு இருந்தார்கள். இப்போது இல்லை. பதிப்பகங்கள் எல்லாம் எழுத்தாளர்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே அச்சுக்கு அனுப்பி விடுகின்றன. தமிழில் க்ரியா ராமகிருஷ்ணனும் சி. மோகனும் அற்புதமான எடிட்டர்கள். சுகுமாரனும் பெருமாள் முருகனும் நல்ல எடிட்டர்கள். நானும் திறமையான எடிட்டர் என்றாலும் என் நூலை என்னால் எடிட் செய்ய முடிவதில்லை. ராஸ லீலா நாவலை தினமலர் ரமேஷ்தான் முழுமையாக எடிட் செய்து கொடுத்தார். ஆக, இப்போதைக்கு க்ரியா, காலச்சுவடு, ஸீரோ டிகிரி பதிப்பகம் போன்ற ஒருசில பதிப்பகங்களே நூல்களை எடிட் செய்கின்றன. ஜெயமோகனும் எஸ்.ரா.வும் எடிட்டிங் பற்றிக் கவலையே படுவதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் எழுதும் வேகத்தைப் பார்த்தால் அவர்களுக்கு ஒரு எடிட்டிங் டீமையே போட வேண்டியிருக்கும். இங்கேதான் ஒரு எடிட்டருக்கே பிரச்சினையாக இருக்கிறதே? டீமுக்கு எங்கே போக?
என்னுடைய பேச்சுக்கள் அடங்கிய காணொலியை அனுப்புவதற்கு எனக்குப் பணம் அனுப்பிய பலருடைய மின்னஞ்சல் முகவரி இல்லை. அவர்கள் எனக்குத் தங்களின் மின்னஞ்சல் முகவரி தந்தால் அந்தக் காணொலிகளை அனுப்ப இயலும்.
charu.nivedita.india@gmail.com
19.10.2020.
***
கோபி கிருஷ்ணன் உரைகள் இரண்டும் தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதுங்கள். மாதச் சந்தா/ நன்கொடை அனுப்புபவர்களுக்கு அந்த உரைகள் தேவையென்றாலும் தயக்கமில்லாமல் எழுதுங்கள். சிலர் எழுதிக் கேட்டு நான் அனுப்பாமல் விட்டிருக்கலாம். அவர்களும் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com
சந்தா/நன்கொடை அனுப்ப முடிந்தவர்கள் அனுப்ப முயற்சி செய்யுங்கள்.
அடுத்த மாதாந்திர சந்திப்பு நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு நடைபெறும்.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai