அன்புள்ள சாரு,
நானும் சிங்கப்பூரில் வசிப்பவன் தான். என் பெயர் வேண்டாம். சிங்கப்பூர் குஞ்சு பற்றி உங்களுக்கு எப்படி இப்படி உடனே புரிந்தது என்று வியப்பாயிருக்கிறது.
உங்களை நான் ஒரு எழுத்தாளன் என்பதைத் தாண்டி ஒரு ஞானியாகவே எப்போதும் பார்ப்பேன். ஒரு ஞானிக்கே, எதிரிலிருப்பவனின் அத்தனை பாசாங்குகளுக்குப்பின் உள்ள அந்த அகம்பாவம், குரூரம், எகத்தாளம் எல்லாம் தெரியும். புரியும்.
இந்த நச்சுப்பாம்பு பற்றி யாரும் இவ்வளவு எழுதியது கிடையாது. உங்களுக்கு முதலில் நன்றி.
தன்னிடம் அல்லது தன் அமைப்பிடம் எழுத வந்து, பிறகு தொடர்ந்து எழுத ஆரம்பிக்கும் எழுத்தாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, இந்த சிங்கப்பூர் குஞ்சு கொடுக்கும் மன உளைச்சல்கள் சொன்னால் தீராதவை. தன் அனுமதி இல்லாமல் எதுவும் செய்யக்கூடாது. புத்தகம் ஏதும் போட்டால்கூட நிகழ்ச்சியின் அனைத்தும் தன் அனுமதியுடன், தான் விரும்பியபடிதான் நடக்கவேண்டும். சிங்கப்பூரில் பிறந்து கொஞ்சம் எழுதத்துவங்கி, முதல் புத்தகம் போட்ட ஒரு பெண் கவிஞர் உட்பட, கண்ணீர்விட்டு கதறிய பெண் எழுத்தாளர்கள் உண்டு.
இந்த நச்சுப்பாம்புக்கு இன்னொரு பொருத்தமான பெயர் மொட்டைக்கடிதாசி மன்னன்.
சிங்கப்பூர் அரசு எப்போதும் மத, இன, மொழி, தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு. அங்குதான் இவனுக்கு தனக்குப் பிடிக்காதவர்களை பழிவாங்க வாய்ப்புக்கிடைக்கிறது. தனக்குப் பிடிக்காத அல்லது தன்னைப் பற்றி ஏதும் கமெண்டு அடித்துவிட்டார்கள் என்றால் அவ்வளவுதான். அந்த எழுத்தாளருடைய எல்லாவற்றையும் ஆராய்வான்.
கட்டுரையில், கதையில் அல்லது முகநூல் பதிவில் கூட, எங்கேனும் ஒரு வரி அல்லது ஒரு கருத்து அது புனைவாகக்கூட இருக்கலாம், அதை எடுத்துக்கொள்வார். ‘அரசாங்கத்தைக் கிண்டல் செய்யும்விதமாக’ அல்லது, ’கதையின் நாயகியின் பெயர் ஏன் இந்த இனமாக இருக்கிறது, அவர்களைக் கீழமைப்படுத்துகிறாரா எழுத்தாளர்?’ என்று அல்லது எதுவும் சிக்கவில்லை என்றால், ’கதையில் கெட்ட வார்த்தை வருகிறது’ என்று சிங்கப்பூர் அரசாங்கம் சென்ஸ்டிவ் என்று வைத்திருக்கும் அதைப் பிடித்துக்கொண்டு வரிசையாக மொட்டைக் கடிதாசியாக அரசின் எல்லாம் அமைப்புக்கும் போட்டுவிடுவான்.
பொதுவாக சிங்கப்பூரின் எந்த அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதினாலும் அவர்கள் பதில் தருவார்கள், அது வேலையின் தரக்குறியீடு. இங்குதான் இந்த மொட்டைக்கடிதாசி மன்னன் தன் வேலையைக் காண்பிப்பான். இந்த ஆள், இவ்வாறு எழுதியிருக்கிறான் என்று ஒரு கடிதத்தை பல அமைச்சகத்துக்கும் தட்டிவிடுவான். பொதுவாக சீனர்களே உயர் பதவியிலிருப்பதால், இதை விசாரிக்கும்பொருட்டு அக்கடிதத்தை தமிழ் அதிகாரிகள் அல்லது உயர் பொறுப்பிலிருப்பவர்களுக்கு அனுப்புவார்கள். அங்கிருப்பவர்களும் இருக்கும் வேலைப்பளுவில் என்ன ஏது என்று மேலும் அறிந்துகொள்ள முயலாமல் எதுக்கு வம்பு என்று அந்த எழுத்தாளரையோ புத்தகத்தையோ அல்லது அமைப்பையோ ஒரு ’இக்’ வைத்து அனுப்பிவிடுவார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர்.
உதாரணத்துக்கு, ’ஜெயமோகன், தமிழக முதல்வரைப் பற்றி தவறாக தரக்குறைவாக எழுதியவர், அவரை சிங்கப்பூருக்குள் விடக்கூடாது’ என்று ஒரு கடிதம்போடுவார். அப்படி என்ன எழுதினார் என்றால் எம்ஜிஆரை ’தொப்பித் திலகம்’ என்று ஜெயமோகன் எழுதிய கட்டுரையைக் காட்டுவார். விசாரிக்கும் குழுவுக்கு தொப்பி புரிந்து… எம்ஜிஆரைப் புரிந்து… இந்த அங்கதம் புரிந்து….இதெப்படி இருக்கு?
நீங்களும்கூட எச்சரிக்கையாயிருங்கள். கமல்ஹாசான் அவர்களைத் திட்டி வைத்திருக்கிறீர்கள். நாளை அவர் முதலமைச்சர் ஆனால், முதலமைச்சர் ஆகக்கூடியவர் என்றும் பாராமல் அவருடைய படங்களைத் திட்டி அவதூறு செய்தவர் என்று ஒரு மொட்டைக்கடிதாசி உங்களைப் பற்றிப் போகும்.
இத்தகைய கடிதம் போடவே தான் வாழ்வளித்து அல்லது வாய்ப்பளித்து எழுத்தாளராக்கியதாய் சிலரை நம்பவைத்து, பின்னணியில் வைத்திருக்கிறார் நச்சுப்பாம்பு. ஒரு கடிதத்தை பலபேர் அனுப்புவார்கள். பலபேர் அனுப்பியதால் அது உண்மையாக இருக்குமோ என்று அரசும் யோசித்துவிடும்.
அண்மையில் சிங்கப்பூர் எழுத்தாளர் ஒருவரின் கதையில் கெட்ட வார்த்தை வருகிறது அதுவும் சிங்கப்பூரைத் திட்டுவது போலவருகிறது என்ற ஒரு கருத்தை உருவாக்கி அதை நூலகத்துக்கு அனுப்பி, நூலகத்தில் அந்தப் புத்தகத்தை வாங்கக்கூடாது என்று புகார் செய்துவிட்டதாக செய்தி. மேலும் இன்னொரு எழுத்தாளரின் புத்தகத்தில், தமிழர்களைத் தவறாகக் குறிப்பிட்டதாக அதை இலக்கியப்பரிசு தேர்வுக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் புகார் மனுக்களை அனுப்பி வைத்திருக்கிறதாம் இக்குழு.
***
இந்தக் கடிதத்தைப் படித்த போது அந்த சமூக விரோதி தன் வேலையை என் விஷயத்தில் ஆரம்பித்திருப்பான் என்று தோன்றுகிறது. ஆக மொத்தத்தில் இனிமேல் என்னால் சிங்கப்பூருக்குப் போக முடியாது என்று தெரிகிறது. அரசாங்க எதிரி என்று கூட அவன் மொட்டைக் கடுதாசி போடக் கூடும். பரவாயில்லை. ஜேபியில் (ஜோஹர் பஹ்ரு) போய்த் தங்கிக் கொண்டு சிங்கப்பூர் நண்பர்களைப் பார்க்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.
இந்த சமூக விரோதியின் மொட்டைக் கடுதாசிக்கெல்லாம் பயந்து கொண்டு எழுதாமல் இருக்க முடியாது. சிறையில் இருந்து கக்கூஸில் இருக்கும் டிஷ்யூ பேப்பரில் கதை எழுதி அதை சுவிட்ஸர்லாந்துக்குக் கடத்தி நாவல் வெளியிட்ட மார்க்கி தெ சாத்-இன் பரம்பரையில் வந்தவன் நான். இந்த சில்றைப் பயல்களின் வெற்றுக் கடுதாசிக்கெல்லாமா அஞ்சுவேன்?
ஆனால் சிங்கப்பூர் எழுத்தாளர்களாகிய நீங்கள் அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து சீன அதிகாரிகளுக்கு ஒரு நீளமான விளக்கமான கடிதம் எழுத வேண்டும். அங்கே உள்ள மூத்த எழுத்தாளர் இளங்கோவனைக் கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார்.
மற்றபடி விதி விட்ட வழி.
என்னுடைய சிங்கப்பூர் நண்பர்களுக்கும் அவன் இப்போது மொட்டை ஆபாசக் கடிதங்கள் எழுத ஆரம்பித்திருப்பதாக நண்பர்கள் தெரிவிக்கின்றனர். எதற்கும் முடிவு உண்டு. தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையின் சக்கரத்தில்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. மனிதர்களையும் விலங்குகளையும் முழுசாக விழுங்கித் தின்று விடுகின்ற தாவரங்களும் இந்த பூமியில் வாழ்கின்றன. என்பதால் இப்படிப்பட்ட சமூக விரோதிகளும் இங்கே வாழ்வதற்கு நியாயம் இருக்கிறதுதான் போல. நாம்தான் இன்னும் நல்லவர்களாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்…