குமுதத்துக்கு இன்று மதியம் பன்னிரண்டு மணிக்குள் கட்டுரை போய்ச் சேர்ந்தாக வேண்டும். இன்று மாலைக்குள் எக்ஸைல் பிழை திருத்தம் முடித்துக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன். 900 பக்கத்தில் 300 பக்கம் முடித்திருக்கிறேன். அத்தனையையும் விட்டு விட்டு இதை எழுதிக் கொண்டிருப்பதற்குக் காரணம், பா. ராகவனின் யதி நாவல். இன்று காலை நாலு மணிக்கு அதைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாக அதைப் படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று மேஜையிலேயே வைத்திருக்கிறேன். இப்போது படிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்து விட்டது. அதைப் படித்த ஒரு நண்பரிடம் வேறோர் விஷயம் பேசிக் கொண்டிருந்தபோது அதே விஷயம் யதியில் இருக்கிறது என்றார் அவர். அப்போதே அதைப் படிக்க வேண்டும் என்ற பொறி தட்டியது.
ஒரு நாவல் எப்படியெல்லாம் அச்சடிக்கப்படக் கூடாதோ அப்படியெல்லாம் அச்சடிக்கப்பட்டிருந்தது. சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். என்னால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. பார்க் ஷெரட்டனுக்கு வாரம் மூன்று முறை போய்க் கொண்டிருந்த காலம் அது. ஒருநாள் செஃப்பை அழைத்தேன். தக்காளி எப்படி நறுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். இன்று வரை அவர் எனக்கு நண்பர். தக்காளி நறுக்கும் போது அதன் வாய் தாய்ச் செடியோடு ஒட்டிக் கொண்டிருக்கும் தொப்பூள் கொடியை முற்றாக நீக்க வேண்டும். இதற்கு தக்காளியை நறுக்கும் போது முனையைச் சீவி எறிய வேண்டும். இல்லாவிட்டால் பல்லிலும் நாவிலும் நெருடும். இந்த அளவுக்கு நேர்த்தி பார்ப்பவன் நான். நாம் உயிருக்குயிராய் நேசிக்கும் புத்தகங்களில் எத்தனை நேர்த்தி இருக்க வேண்டும்? நாவல் என்பது ஒரு எழுத்தாளனின் உயிர் இல்லையா? சரி, ஒரு நாவல் எப்படிப் பிரசுரிக்கப்பட வேண்டும்? க்ரியா நூல்களைப் பாருங்கள். இமையம் இன்று உலகளாவிய முறையில் தெரிய வருகிறார் என்பது இமையத்தின் எழுத்தினால் மட்டும் அல்ல. க்ரியா என்ற பதிப்பகத்தினால்தான். அவர் மட்டும் காமா சோமா பதிப்பகத்தில் வெளிவந்திருந்தால் ஒருத்தருக்கும் தெரிந்திருக்க மாட்டார். இப்படி வெளியே தெரியாமல் இருப்பவர்கள் நூறு பேர் இருப்பார்கள். பொன்னீலன், சோ. தர்மன் போன்ற பிரபலமானவர்களைக் கூட நான் அந்த நூறு பேரில்தான் சேர்ப்பேன். இமையம் உலக அளவில் தெரிய வருபவர். பொன்னீலனையும் சோ. தர்மனையும் தமிழ்நாட்டில்தான் தெரியும். அந்த அர்த்தத்தில் சொல்கிறேன்.
திலீப்குமார் என்பவர் மௌனியை விட ரெண்டு கதை அதிகமாக எழுதியிருப்பார். ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் தெரிய வந்துள்ள தமிழ் எழுத்தாளர். தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பின் எடிட்டர் அவர்தான். மேற்கத்திய நாடுகளில் தமிழ் இலக்கியம் தொடர்பாக என்ன வேண்டுமானாலும் அவர் போடும் முதல் போன் திலீப்குமார்தான். காரணம், க்ரியாவில் அவருடைய பதினைந்தே முக்கால் சிறுகதைகள் வந்ததுதான். அவருடைய கடவு என்ற சிறுகதைத் தொகுப்பு (பதினைந்தே முக்கால் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு) தமிழில் வந்துள்ள மிகச் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட்ட பத்து நூல்களில் ஒன்றாக வரக் கூடியது. அப்படி ஒரு புத்தகம் வந்து விட்டால் ஒருத்தருக்கு ஆயுள் சாதனை. உள்ளடக்கத்தைச் சொல்லவில்லை. உள்ளடக்கமெல்லாம் சும்மா அசோகமித்திரன் எழுத வேண்டாம் என்று கழித்துக் கட்டிய சமாச்சாரங்கள். நான் சொல்வது தயாரிப்புத் தரம்.
‘அடுத்தது, நற்றிணையின் புத்தகங்கள். தரத்தில் அப்பழுக்கு இல்லாதவை. அடுத்தது காலச்சுவடு. காலச்சுவடில் மட்டும் பா. ராகவனின் நாவல்கள் வந்திருந்தால் அவர் பெயர் இன்று நியூயார்க் டைம்ஸில் வந்திருக்கும். புக்கர் லிஸ்டிலும் இருந்திருக்கும். கண்ணன் அளவுக்கு எழுத்தாளர்களை ப்ரமோட் பண்ணும் பதிப்பாளர்கள் கம்மி. ஆனால் எல்லா எழுத்தாளர்களையும் அல்ல என்பதும் ஒரு முக்கியமான சமாச்சாரம். ஆனாலும் காலச்சுவடு என்ற platform மிக மிக மிக முக்கியமானது.
அதே அளவுக்கு முக்கியமானது உயிர்மை. காலச்சுவடு அளவுக்கு உலகளாவிய முறையில் வெளியே போக முடியாது என்றாலும் தமிழ் இலக்கியப் பரப்பில் elites வாசிக்கும் ஒரே தளம் உயிர்மை ஏற்படுத்திக் கொடுத்ததுதான். உங்கள் புத்தகம் உயிர்மையில் வந்து விட்டது என்றாலே அது ஒரு தனிக் கவனம் பெற்று விடும்.
இப்போது ஸீரோ டிகிரி பதிப்பகமும் இந்த ஜாம்பவான்களோடு போட்டியில் நின்று கொண்டிருக்கிறது.
ஆக, நான் சொல்ல வந்தது என்னவென்றால், பா. ராகவன் ஒரு டஜன் நாவல்களை எழுதினாலும் அவர் ஒரு கட்டுரையாளர் என்றே கருதப்படுவதன் காரணம், அவர் தேர்ந்தெடுத்த பதிப்பகம்தான். அவருடைய நாவல்கள் காலச்சுவடிலோ உயிர்மையிலோ வந்திருந்தால் அவர் இருந்திருக்கக் கூடிய இடமே வேறு. ஒருவேளை இப்போது அவர் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறாரோ அத்தனை பேரை அவர் சென்றடைந்திருக்க முடியாதாக இருக்கலாம். ஆனால் அவர் பெயர் ஒரு படைப்பாளியாக வேறோர் இடத்தில் இருந்திருக்கும். அந்த இடம் இலக்கிய மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதி.
உதாரணமாக, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பல விருதுகளைப் பெற்று பாஷா பரிஷத் விருதையெல்லாம் பெற்ற அலகிலா விளையாட்டு என்ற நாவலின் பெயரையே நான் நேற்றுதான் அவருடைய முகநூல் பதிவின் மூலம் கேள்விப்பட்டேன். நான் கேள்விப்படுவதை விடுங்கள். எனக்குப் பொது அறிவு கிடையாது. இந்த இருபது ஆண்டுகளாக அதற்கு மறுபதிப்பே கிடையாதாம் ஐயா.
இன்னொரு விஷயம், இப்போதுதான் இந்தக் கட்டுரைத் தலைப்பின் மெயின் சமாச்சாரத்துக்கு வருகிறேன். அந்த ஆயிரம் ரூபாய். பாரா அடக்கமானவர். எனவே ஒப்புக் கொள்வார். எம்.வி. வெங்கட்ராம், மௌனி, புதுமைப்பித்தன், தி.ஜா., தி.ஜ.ர., ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, கு. அழகிரிசாமி, அசோகமித்திரன், இ.பா., ஆதவன் போலவே சாரு நிவேதிதாவின் எழுத்தும் அவரை ஏதோ ஒரு இடத்தில் பாதித்திருக்கும். ஜெயமோகனும்தான். அவருக்கு முன்னே எழுதின எல்லோரும் என்று பொருள். யதி ஆயிரம் பக்க நாவல். வந்தால் பதிப்பகத்துக்கு ஒரு போனைப் போட்டு இன்ன மாதிரி சாருவுக்கு ஒரு காப்பி கொடுத்து விடுங்கள் என்று சொல்ல வேண்டுமா இல்லையா? சொல்லியிருந்தால் நான் ஏதாவது ஒரு பத்திரிகைக்கு எழுதக் கூடிய வாய்ப்பு இருக்கிறதா இல்லையா? அதனால் ரெண்டு பேருக்கு அந்த நாவல் பற்றித் தெரியும் வாய்ப்பு ஏற்படுமா இல்லையா?
நான் இப்போது பாராவின் இடத்திலிருந்து பேசுகிறேன். ஏன் சாரு, ஆயிரம் பக்கத்துக்கு நாவல் எழுதினதோடு அதைப் பிரச்சாரம் வேறு செய்ய வேண்டுமா? இதெல்லாம் நியாயமா?
என் பதில்: இங்கே தமிழ்ச் சூழலில் நாங்களெல்லாம் எழுத்தாளர் மட்டும் இல்லை. இலக்கியப் போராட்ட தியாகிகள். சுதந்திரப் போராட்ட தியாகிகள் மாதிரி. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்காவது தியாகி பென்ஷன் கொடுத்தார்கள். எங்களைப் போன்ற இலக்கியப் போராட்ட தியாகிகளுக்கு அதுவும் கிடையாது. அதோடு போகவில்லை. நாங்களே போய் எங்கள் வாரிசுகளின் புத்தகங்களையும் ஆயிரம் ரூபாய் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை. இது தகுமா?
இப்போது நான் பாரா எழுதியுள்ள முக்கியமான நாவல்களை – இறவான், அலகிலா விளையாட்டு – காசு கொடுத்த வாங்க 3000 ரூ. செலவழிக்க வேண்டும். ஸீரோ டிகிரியில் கேட்டால் கொடுப்பார்கள். ஆனால் நண்பர்கள் என்பதற்காக எவ்வளவுதான் இலவசமாக வாங்குவது? அந்த வகையில் ராம்ஜியை நான் ”உங்கள் charity பணியை நிறுத்துங்கள்” என்று சொல்லி அடிக்கடி திட்டுவதுண்டு. சென்ற ஆண்டு பாருங்கள், ஒரு அரங்கத்துக்குப் போய் 3000 ரூபாய்க்கு புதிய நாவல்களை வாங்கினேன். எல்லா இளவட்டங்கள். என் அடுத்த தலைமுறை அல்ல. பேரன் பேத்திகள். இவர்களே அல்லவா எனக்குப் புத்தகங்களைத் தர வேண்டும்? நானா என் பேரப் பிள்ளைகளின் புதினங்களைக் காசு கொடுத்து வாங்குவது? சுனில் கிருஷ்ணனின் நாவலைக் கூட காசு கொடுத்துத்தான் வாங்கினேன். பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் எழுதின மயிலன் சின்னப்பன் மட்டுமே என்னை நேரில் சந்தித்து நாவலைக் கொடுத்தார்.
காசு கொடுத்து வாங்குவதில் என்ன சிக்கல் என்றால், இளவட்டங்களுக்குத் தெரியாது, சொல்கிறேன். என் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் உயிர்மை ஆரம்பிக்கும் வரை நானேதான் அவந்திகாவின் நகைகளை விற்று விற்றுப் பதிப்பித்தேன். சொன்னால் தமிழ் சினிமா மாதிரி இருக்கிறது என்பீர்கள். ஸீரோ டிகிரி நாவலை அவந்திகாவின் தாலியை அடகு வைத்துத்தான் பதிப்பித்தேன். பிறகு அதை மீட்கவே முடியாமல் போனது. எட்டு விரல்களில் மோதிரம் அணிந்திருந்தாள். ஒவ்வொரு மோதிரமும் ஒவ்வொரு புத்தகம். இப்போது மோதிரம் வாங்கக் காசு இருக்கிறது. அவளுக்கு ஆர்வம் போய் விட்டது. நகைகளே அணிவதில்லை.
அச்சிட்ட நூல்களை எல்லோருக்கும் அனுப்பி வைப்பேன். இலவசமாகத்தான். பிறகு சுந்தர ராமசாமியிடம் காசா கேட்க முடியும்? அல்லது, அசோகமித்திரனிடம் காசு கேட்க முடியுமா? அவர்களெல்லாம் என் தகப்பன்கள். அவர்கள் மட்டும் அல்ல. மற்ற எல்லா இலக்கியவாதிகளிடமும் கொடுப்பேன். அவர்களே என்னைப் போல் பிச்சைக்காரர்கள். அவர்களிடம் எப்படிக் காசு கேட்பது? வளர்த்திக் கொண்டு போவானேன்? நான் கடவுள் பார்த்திருக்கிறீர்களா? அதில் கவிஞர் விக்ரமாதித்யன் ஒரு பிச்சைக்காரக் கூட்டத்தின் தலைவராக வருவார். அப்படி ஒரு பிச்சைக்காரக் கூட்டமாகத்தான் இருந்தோம். ஏதோ ஜெயமோகனும் நானும் அரசு ஊழியர்களாக இருந்ததால் பட்டினி கிடக்கவில்லை. அதிலும் நான் பாதியில் வேலையை விட்டு விட்டுப் பட்டினிதான் கிடக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே எழுதி விட்டேன்.
சரி, இப்போது பிரபலம் ஆகி பத்திரிகையில் எழுதுகிறேன். காசு வருகிறதா? ஒரு கட்டுரைக்கு 20000 கொடுக்கலாம். குறைந்த பட்சம் பத்தாயிரமாவது தரலாம். கிடைப்பது ஆயிரம். இந்தக் குறைந்த வருமானத்தில் நான் சக எழுத்தாளர்களின் நூல்களையும் காசு கொடுத்து வாங்குவது சாத்தியம்தானா சொல்லுங்கள்?
இதெல்லாம் யதி படிக்கும்போது ஞாபகம் வந்தது.
அது மட்டும் அல்ல. இன்று ஒரு புத்தகம் அவசரமாகத் தேவை. வரும் சனிக்கிழமை அன்று சேனனின் சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் என்ற நாவல் பற்றி ஸூமில் பேச இருக்கிறேன். நல்லவேளையாக, சேனன் லண்டனில் வசித்தாலும் பதிப்பகம் மூலமாக புத்தகத்தை எனக்குச் சேர்த்து விட்டார். அதையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல். ஆனால் அதில் பேசுவது தொடர்பாக நான் இன்னொரு புத்தகத்தையும் வாசிக்க வேண்டிய நிலை. ஷோபா சக்தியின் இச்சா நாவலையும் வாசித்தாக வேண்டும். அந்த நாவல் என்னிடம் இல்லை. ஷோபாவின் எல்லா புத்தகங்களையும் காசு கொடுத்துத்தான் வாங்கிக் கொண்டிருக்கிறேன். அவர் தன் பதிப்பகத்திடம் சொன்னால் அவர்கள் எனக்கு அனுப்பி விடுவார்கள். அவரையும் குறை சொல்ல முடியாது. அவர் அப்படிச் சொல்ல வேண்டுமானால் நூறு பேருக்குச் சொல்ல வேண்டும். என்னையும் அ. மார்க்ஸுக்குமாவது விதிவிலக்கு அளிக்கலாம். இன்றே அந்தப் புத்தகம் எனக்கு வேண்டும். யாரைப் பிடிக்கலாம் என்று யோசித்தேன். என் நண்பர்களிடம் கேட்டால் காசு செலவு இல்லாமல் வாங்கலாம். ஆனால் நாள் ஆகும். புத்தகமோ இன்றே தேவை. பனுவல் நண்பர்கள் மிக சிரத்தையாக புத்தக விற்பனை செய்கிறார்கள். அவர்களிடம் கேட்டேன். இரண்டு மணி நேரத்தில் சேர்ப்பிப்பதாகச் சொன்னார்கள். ஆனால் ஒரு ஐநூறு ரூபாயாவது ஆகும்தானே? புத்தக விலை. கொண்டு வந்து கொடுக்கும் செலவு. நல்லவேளையாக இப்போது சென்னை நகருக்குள்ளேயே என்றால், ஒரு மணி நேரத்தில் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் சேவை வந்துள்ளது.
சேனன் புத்தக மதிப்புரைக் கூட்டத்தில் பேசுவதற்கெல்லாம் நான் பணம் கேட்கவில்லை. சொந்த நாட்டை விட்டுவிட்டு ஒரு ஐரோப்பிய நாட்டில், அகதியாக, குடியுரிமை கூட இல்லாமல் வாழ நேர்வதெல்லாம் பெரும் அவலம். அதை நீங்கள் வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வாழ்வதே கொடுமை என்கிற போது சொந்த மண்ணுக்கே திரும்ப முடியாமல் தடை செய்யப்பட்டு இன்னொரு மண்ணில் வாழ்வது சொல்லில் அடங்காக் கொடுமை. எனவே அம்மாதிரி நண்பர்களிடம் நான் காசு பற்றியே பேசுவதில்லை. அவர்களது வாழ்வின் துயரத்தோடு ஒரு சிறு துளியளவு நாமும் பங்கு கொள்கிறோம் என்ற திருப்திதான்.
பாராவோடு எப்போதாவது ப்ரூ ரூமில் அமர்ந்து கேப்பச்சினோ குடித்தால் அவர்தான் பணம் தர வேண்டும். இரண்டு கேப்பச்சினோவுக்கு ஆயிரம் சரியாகி விடும். அங்கே அவ்வளவு விலை.
ஒரு புத்தகத்தை எழுதி விட்டு என்ன பேச்செல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது பாருங்கள்!