புத்தக விழா மகாத்மியங்கள்

ஒரு வாசகியின் கடிதம்: ”ஸீரோ டிகிரி அரங்கில் வந்து பார்த்தால் உங்களை ஹக் பண்ணலாமா?  கிஸ் பண்ணலாமா?”

நான் எழுதிய பதில்: “அம்மணி, ஒரு துறவி என்பவன் சமூகத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவன்.  ஆனால் இப்போது எனக்கு சில கடமைகள் உள்ளன.  ரிஸ்க் எடுக்க முடியாது.  கொரோனா காரணமாக நாலு அடி எட்ட நின்றே பேசவும்.” 

இன்று மாலை நான்கு மணிக்கு சந்திப்போம்.  எல்லோரும் புத்தகம் வாங்கவும் தமக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், எழுத்தாளராக இருந்தால் புத்தகங்களில் கையெழுத்துப் போடவும் வருகிறார்கள்.  ஆனால் நான் வருவது முக்கியமாக அந்தக் கருப்பட்டி லாடுகளை வாங்கி வருவதற்காகத்தான்.  நானும் எத்தனையோ எழுதிப் பார்த்தேன்.  யாரும் அசைகிற மாதிரி தெரியவில்லை.  என் நண்பர் ராம் மட்டுமே ஒரு டப்பா அனுப்பி வைத்தார்.  அதை ஒரே நாளில் காலி பண்ணி விட்டேன்.  அத்தனை அட்டகாசமாக இருந்தது.  இன்னொரு நண்பர் ஷுகருக்கு ஒரு சக்தி வாய்ந்த மருந்து கொடுத்து விடுவதால் ஷுகர் பற்றியும் கவலை இல்லை.  அதனால் இன்று வந்ததும் முதல் வேலையாக அந்தக் கருப்பட்டி லாடுகள் எங்கே கிடைக்கும் என்று பார்த்து ரெண்டு மூணு கிலோ அள்ளி விட வேண்டியதுதான்.  அப்படியே அந்த எலந்தவடையும் என்ன ஆனது என்று பார்க்க வேண்டும்.  எலந்த வடை இல்லாமல் ஒரு புத்தக விழாவா?  ஸீரோ டிகிரி மற்றும் கருப்பட்டி லாடு கிடைக்கும் இடம் தவிர வேறு அந்தண்டை இந்தண்டை நகர மாட்டேன். 

அராத்து மந்தஹாசினியை முடித்து பதிப்பகத்துக்கும் எனக்கும் அனுப்பி வைத்தார்.  முன்பெல்லாம் எடுத்த எடுப்பில் படித்து விடுவேன்.  ஆனால் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலை முடிக்காமல் மற்ற எதுவும் செய்வதில்லை என்று வைராக்கியம்.  அதற்கிடையில் எக்ஸைல் பிழை திருத்தம். 

இதையெல்லாம் பரிகாரம் என்றே எடுத்துக் கொள்கிறேன்.  ஹராகிரி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஆனால் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி தன் உயிரினும் மேலான வாளையும் விற்று விட்ட ஒரு சாமுராய் மூங்கிலால் ஒரு வாள் செய்து இடுப்பில் செருகியிருந்தான்.  ஜப்பானின் அக்காலத்திய வறுமை நம் கற்பனைக்கும் எட்டாதது.  குழந்தையின் பசி போக்கவே அதை அவன் செய்ய வேண்டி ஆனது.  ஆனால் ஒரு கட்டத்தில் அவன் ஹராகிரி செய்ய வேண்டிய நிலை.  உள்ளே இருப்பதோ மூங்கில் வாள்.  ஆனால் வேறு வழியின்றி அந்த மூங்கில் வாளாலேயே ஹராகிரி செய்து கொள்வான்.  இது ஒரு ஜப்பானிய கிளாசிக்கில் வருகிறது.

எக்ஸைல் பிழை திருத்தம் அப்படித்தான் இருக்கிறது.  யாருடைய தவறும் இல்லை. ஆரம்பத்திலேயே இத்தனை பிழைகள் என்று தெரிந்திருந்தால் திரும்பவே தட்டச்சு செய்திருக்கலாம்.  ஆனால் எனக்கு இதெல்லாம் நடுவில்தான் நடக்கும்.  பாதி வழி வந்து விட்டேன்.  இப்போது பார்த்து பக்கத்துக்கு இருபது junk.  ஒரு எழுத்துருவிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றும்போது நடக்கும் குளறுபடி.  இதை நான் செய்துதான் தீர வேண்டும்.  கடந்த மூன்று ஆண்டுகளும் பிழை திருத்தத்திலேயே கழிந்தது.  இப்போது எக்ஸைல்.  ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க முயற்சி செய்கிறேன்.  இதோடு இந்தக் கொடுமையிலிருந்து எனக்கு விடுதலை.  இனிமேல் இந்த conversion பிரச்சினையே கிடையாது.  இனி எழுதுவதெல்லாம் புதியவைதான். 

ராகவனின் மூன்று ஆயிரம் பக்கப் புத்தகங்கள் இப்படி மறுபதிப்புக்கு அச்சாகும் போது வேலை ஒரு நொடியில் முடிந்தது.  எல்லா நூல்களும் சேர்ந்து ஆறாயிரம் பக்கம்.  எனக்கு இப்படி வந்து மாட்டியது.  அதனால்தான் சொன்னேன், பரிகாரம் என்று.  ஞானி மிலரப்பாவின் கதையைப் படித்தால் உங்களுக்கு விளங்கும்.  குரு அவரைக் கன்னாபின்னாவென்று வாட்டி எடுக்கிறார்.  கொடுமை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஓடி விடுகிறார் ஞானி மிலரப்பா.  அவரைப் பிடித்து வந்த குரு, ”நீ செய்வது பிராயச்சித்தம்.  நீ செய்த முப்பது கொலைகளுக்கு யார் பிராயச்சித்தம் செய்வது.  நீதான் அந்தப் பாவத்தின் கறைகளைத் துடைக்க வேண்டும்” என்றார்.  அப்படித்தான் இதெல்லாம்.  இதிலிருந்து ஓடி விடக் கூடாது.  அவருக்கு சுலபமாக நடந்ததே, எனக்கு இப்படி மூங்கில் ஹராகிரியாக இருக்கிறதே என்றெல்லாம் சுணங்கக் கூடாது. 

எல்லாமே உங்களுக்காகத்தான்.  என் புத்தகங்களில் பிழை எதுவும் இருக்கக் கூடாது என்பதே என் நோக்கம்.  இன்னும் ஒரு வாரத்தில் இதை முடித்து விட்டு நாவலில் புகுந்து விடுவேன்.  ஏப்ரல் முடிவுக்குள் நாவலை முடித்தாக வேண்டும் என்று கெடு.