சந்திப்பு

நான் யாரைப் பற்றியும் அஞ்சலிக் குறிப்புகளோ பிறந்த நாள் குறிப்புகளோ எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  காரணம், அவர்களைப் பற்றி எனக்கு மிகுந்த கசப்புணர்வுகளே இருக்கின்றன.  உதாரணமாக, எனக்கு ஹாலிவுட் படங்கள் பிடிக்கும் என்பதைப் போல நல்ல பொழுதுபோக்கு என்ற முறையில் சுஜாதாவின் எழுத்து பிடிக்கும்.  தினந்தோறும் அவர் வீட்டைத் தாண்டித்தான் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போவேன்.  அவ்வப்போது கடற்கரையிலும் பார்ப்பேன்.  கண்ணுக்குக் கண் பார்த்து விட்டால் ஒரு சிறிய புன்சிரிப்போடு சரி.  அநேகமாக அவரைச் சுற்றிக் கூட்டம் இருக்கும் என்பதால் (எல்லோரும் தொண்டு கிழவர்கள்) அவர் என்னை கவனிக்க வாய்ப்பு இருக்காது.  அவரை நெருங்காததற்குக் காரணம், அவர் என் எழுத்தை ஆரம்பத்திலேயே ”கங்கையில் மிதக்கும் மஞ்சள் நிற திடப் பொருள்” என்று எழுதி விட்டார்.  ஆனால் நான் சனாதனி என்று நம்பிய பாலகுமாரன் என்னைக் கொண்டாடினார் என்பது இன்னொரு நகைமுரண்.  அவரும் நானும் ஒருவருக்கொருவர் மிகப் பிரியமான நண்பர்களாக இருந்தோம்.  அவர் தன் மரண காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் சொல்லி விட்டதால் அது அதிர்ச்சியாக இல்லை.  மேலும், அவர் தன் உடம்பை என்றுமே பேணியதில்லை என்பதாலும் அதிர்ச்சி இல்லை.  ஒரு நாளைக்கு 120 சிகரெட் குடித்திருக்கிறார்.  பல காலம்.  அதை நிறுத்திய பின்பும் உடலைப் பேணுவதில்லை.  அவர் நடைப் பயிற்சி செல்வதெல்லாம் பெரிய காமெடி.  ஆனால் அவரோடு பழகிய காலமும் இப்போதும் அவர் எழுத்தை நான் படித்ததில்லை.  அதை அவரிடம் சொல்லியும் இருக்கிறேன்.  அது பற்றி அவருக்குக் கொஞ்சம் ஆதங்கம் இருந்தது.  ஒன்றிரண்டையாவது நீ படிக்க வேண்டும் என்று அது எது என்றும் சொல்வார்.  “நான் எழுத நினைத்து எழுதாமல் விட்டதை நீ எழுதுகிறாய்… பிரமாதமாக எழுதுகிறாய்” என்று மனம் திறந்து பாராட்டுவார்.  என் வீட்டுக்குச் சற்று அருகில் இருந்த வாலியும் அப்படியே.  என்னைப் பாராட்டிய இரண்டே பிரமுகர்கள் வாலியும் பாலாவும்தான்.  வாலி விகடனில் ஒரு முழுக் கட்டுரையே எழுதியிருந்தார்.  (அது யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்பித் தரலாம்.)

அபிலாஷ் சு.ரா. பற்றி எழுதியதைப் படித்ததும் நான் சு.ரா.வைச் சந்தித்தது ஞாபகம் வந்தது.  திட்டமிட்டு சந்திக்கவில்லை.  திருவனந்தபுரம் திரைப்பட விழாவுக்குச் செல்லும் போது ஒருமுறை என்னோடு வந்த இலக்கிய நண்பர் சு.ரா.வைப் பார்க்கலாமா என்றார்.  எனக்கு யாரையும் முன்கூட்டியே தெரிவிக்காமல் சந்திப்பது பிடிக்காது என்றாலும் பயணங்களின்போது என்னை நான் மற்றவர்களுக்கு ஓரளவு ஒப்புக் கொடுத்து விடுவேன்.  அவர் சந்திக்கலாம் என்று சொன்னால் சந்திக்கலாம் என்றேன்.  அதிகாலை நேரம்.  எங்கள் வீட்டிலேயே நீங்கள் இருவரும் குளித்து சாப்பிட்டு விட்டு பிறகு சாவகாசமாகப் பேசலாமே என்றார்.  இன்று என்னுடைய 68 வயதில் கூட எனக்கு அப்படிப்பட்ட ஒரு “வசதி” இல்லை.  அம்பது பேர் இருக்கக் கூடிய வீடு நான் வசிப்பது.  ஆனால் காலையில் என்னால் சத்தமாக போன் கூடப் பேச முடியாது, ஒன்பது மணி வரை.  அவந்திகா தூங்கிக் கொண்டிருப்பாள்.  அதனால் காலை சந்திப்புகளை நான் பார்க்கில்தான் வைத்துக் கொள்வேன்.  அதிலும் ஒன்பதரை வரைதான்.  ஒன்பதரைக்கு அவந்திகாவின் போன் வந்து விடும்.  வீட்டுக்கு வா.  அன்பு அழைப்பு அல்ல.  வேலை செய்ய.  உதவி செய்ய.  காலை ஆறு மணிக்கு என்னை வீட்டில் வந்து சந்திப்பதெல்லாம் கனவில் கூட நினைக்க முடியாதது.  ஆனால் நான் தனியாக வாழ்ந்தால் இருபத்து நாலு மணி நேரமும் என்னைச் சந்திக்கக் கூடிய அளவில் என்னை வைத்திருக்கக் கூடிய ஆள்தான்.  அப்படி நான் ”கெட்டுப்” போகாமல் இருப்பதற்காகத்தான் ”காவல் தெய்வமாக” என்னைக் காத்துக் கொண்டிருக்கிறாள் அவந்திகா. 

இந்த கொரோனா எல்லாம் முடிந்த பிறகு ஒரு வாரம் கார்த்திக் வீட்டுக்குப் (மும்பை) போய் வாயேன் அம்மு என்றேன்.  இல்லை, நீ இங்கே கூத்தடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்வாய், மாட்டேன் என்று சொல்லி விட்டாள். 

என் நண்பர் ஒருவர் சொல்வார், என் அப்பா ஒரு பியர் சாப்பிட அம்பதாயிரம் ரூபாய் செலவழிக்கிறார் என்று.  நண்பர் வயது அம்பது.  அப்பா வயது எண்பது.  அவரால் இந்தியாவில் எங்கேயும் பியர் குடிக்க முடியாது.  குடித்தால் மனைவி பிடித்து விடுவார்.  பெரிய பிரச்சினை ஆகி விடும்.  ஆனால் மகன் – என் நண்பர் – தினமும் ஒரு ஃபுல் ஸ்காட்ச் அடிப்பார்.  365 நாளும்.  வீட்டில் இருந்தால் வீட்டில்.  தீபாவளி, பொங்கல் தினத்தில் கூட குடிப்பார். வீட்டிலேயே குடிப்பார்.  கூட்டுக் குடும்பம்.  அம்மா உதைக்க மாட்டாரா என்பேன்.  ம்ஹும், என்னை ஒன்றும் கேட்க மாட்டாங்க என்றார்.  உள்நாட்டில் குடித்தால் பிடித்து விடுகிறார்கள் என்று பியர் குடிப்பதற்காக அப்பா சிங்கப்பூர் போவாராம்.  அதனால்தான் அம்பதாயிரம் செலவு. 

கிட்டத்தட்ட என் நிலையும் அஃதே.  என்னைச் சந்திக்க வேண்டுமானால் காலை ஏழிலிருந்து ஒன்பது வரை நாகேஸ்வர ராவ் பூங்கா.  அதுவும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு.  வீட்டில் என் நண்பர்களைச் சந்தித்ததே இல்லை.  என் மிக நெருங்கிய நண்பர்கள் சீனி, காயத்ரி, செல்வா, ஸ்ரீராம், மற்றும் பலர்.  இவர்களை ஒரு நிமிடம் கூட என் வீட்டில் நான் சந்தித்தது இல்லை. 

காரணம் இதுதான்:  புதுமைப்பித்தனின் செல்லம்மாள் என்ற சிறுகதையை நீங்கள் படித்திருந்தால்தான் நான் இப்போது சொல்வது உங்களுக்குப் புரியும்.  இல்லாவிட்டால் கொஞ்சம் கஷ்டப்பட்டு கற்பனை செய்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.  சந்திப்பது அல்ல, ஃபோனில் கூட என்னோடு பேச முடியாது.  ஒருநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருந்த என் தோழியுடன் பேசினேன்.  காலை பத்து மணி.  கொலைக் குற்றத்துக்கு சமம்.  ஆனால் அவர் உயிரோடு இருக்கிறாரா என்று நானும் நான் உயிரோடு இருக்கிறேனா என்று அவரும் பரஸ்பரம் தெரிந்து கொள்ள விரும்பியதில் நேரம் போனது தெரியாமல் பேசி நேரம் பத்தரை ஆகி விட்டது.  அய்யய்யோ கொலை பாதகம் நடந்து விட்டதே என்று அவரிடம் “மாலை பேசுகிறேன்” என்று பொய் சொல்லி விட்டு கிச்சனுக்கு ஓடினேன்.  அசம்பாவிதம் நடந்து முடிந்து விட்டது.  காய்கறிகளை மஞ்சள் நீரில் கழுவி சுத்தம் செய்து ரொம்ப தூரத்தில் உள்ள பால்கனியில் கொண்டு போய் வைத்து வைத்துக் களைத்துப் போயிருந்தாள் அவந்திகா. 

ஏம்மா, கூப்பிட்டு இருக்கலாம்ல?

போன்ல பேசிட்டு இருக்கும்போது கூப்ட்டாதான் நீ திட்றியேப்பா?

அதனால் அன்று முழுவதும் அனத்திக் கொண்டிருந்தாள்.  ”நானே தனியாக வேலை செய்து முதுகு உடைந்து விட்டது.”

போச்சுடா.  நான் என் புத்தகங்களுக்கு அட்டைப் படம் வரையும் ஓவியருடன் ஒரு பத்து முறை பேசியிருக்கிறேன்.  பத்து முறையும் அவந்திகா அழைத்திருக்கிறாள்.  எப்படி?  செல்லம்மாளுக்கு ஓடுங்கள்.  செல்லம்மாளுக்குக் கணவர் மீது உயிர்.  கணவருக்கும் மனைவி மீது உயிர்.  இங்கேயும் அதே கதைதான்.  என் உயிர் அவந்திகாவிடம்.  அவள் உயிர் என்னிடம்.  (இருங்கள், அழைப்பு வந்து விட்டது, என்னவென்று பார்த்து விட்டுத் தொடர்கிறேன்)  ம்ம்ம்… இப்போது இரவு மணி ஒன்பதரை.  மாலை நான்கிலிருந்து அவ்வளவாக அழைப்பு இருக்காது.  ஆனாலும் சீனி பேசும் போது ஒருமுறை கூட அவந்திகாவிடமிருந்து அழைப்பு இல்லாமல் இருந்ததில்லை.  அவர் அதை இன்னும் விரிவாக என் வாழ்க்கை வரலாற்றில் எழுதுவார் என நினைக்கிறேன்.  என்னோடு பேசிய எந்த நண்பருமே இந்த அனுபவத்தை உணர்ந்திருப்பார்கள்.  கீழே தரைத் தளத்திலிருந்து சாரூ…. சாரூ…. என்ற குரல் ரொம்ப சப்தமாகக் கேட்கும்.  சப்தம் இல்லாவிட்டால் இங்கே என் அறையில் கேட்காது.  நான் போனில் இருந்தால் இதோ கூப்பிடுகிறேன் என்று கட் பண்ணிவிட்டுப் போவேன்.  பூனைக்கு இன்னொரு பாக்கெட் கீழே போடு என்பாள்.  இல்லாவிட்டால் அந்த மாதிரி வேறு ஏதாவது தேவை.  நான் இல்லாமல் அவள் செய்யக் கூடிய ஒரே வேலை சுவாசிப்பது மட்டுமே என்றால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.  (இதை அவளிடமே நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.)  இதற்காக அவளுக்கு நான் கொடுத்திருக்கும் தண்டனை, அவளை எந்த உதவிக்காகவும் அழைப்பதில்லை.  விக்கல் எடுத்துப் புரையே ஏறினாலும் நானேதான் போய் தண்ணீரை எடுத்துக் குடிப்பேன். 

செல்லம்மாளுக்கு ஓடுங்கள் என்று சொல்லி விட்டு எங்கோ போய் விட்டேன்.  நீ எங்கேயும் நகராதே என்று செல்லம்மாளிடம் சொல்லி விட்டு கம்பவுண்டரை அழைக்கப் போயிருப்பார் கணவர் பிரமநாயகம் பிள்ளை.  அதற்குள் செல்லம்மாள் கணவருக்கு தோசை போட எழுந்து விழுந்து பிரக்ஞையற்றுக் கிடப்பாள்.  அப்படி இங்கே உடல்நலப் பிரச்சினையெல்லாம் இருவருக்கும் இல்லை.  ஆனால் அவந்திகா ஒரு பெண் ட்ராஃபிக் ராமசாமி.  பெண்ணாகப் பிறந்து விட்டதாலும், அவளுடைய பணியின் எல்லை அவள் குடியிருக்கும் தெருவைச் சுற்றிலும் மட்டுமாக இருப்பதாலும் இன்னும் ஜெயமோகன் கட்டுரை எழுதும் அளவுக்குப் போகவில்லை.  பிரபலமும் ஆகவில்லை.  சாந்தோம் நெடுஞ்சாலையில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடினால் இவளுக்கு என்ன?  காலை பத்து மணிக்கு அங்கே போய் விட்டாள்.  சீஃப் மினிஸ்டர் அந்த வழியாகத்தான் போவார், நான் அவரைப் பார்க்கப் போகிறேன்.  (அதிமுக காலம்) நல்லவேளை, ஸ்டாலின் இங்கே எங்கள் ஏரியாவில் வசிக்கவில்லை.  நான் பிழைத்தேன்.  இவள் சீஃப் மினிஸ்டரைப் பார்க்கிறேன் என்றதும் கார்ப்பொரேஷன் அதிகாரிகளுக்கு உடனே செய்தி பறந்து ஆள் வந்து விட்டது.  நான் அன்று வெறும் பிஸ்கட்டைத் தின்று காலை உணவை முடித்துக் கொண்டேன்.   இந்த கதியில் இங்கே என்னைப் பார்க்க யாராவது வந்தால் நான் என்ன ஆவது? 

போனிலேயே என்னால் ஒரு அஞ்சு நிமிடம் பேச முடியவில்லை என்கிறபோது யார் என் வீட்டைத் தேடி வருவார்கள்?  ஒரு ஆத்மா எட்டிப் பார்க்காது.  அதனால் யாரையாவது சந்திக்க வேண்டுமானால் நான் கிளம்பிப் போய் விடுவேன்.  ப்ரூ ரூம்.  சவேரா ஓட்டல்.  அங்கே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கலாம். 

”சு.ரா.விடம் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருக்கலாம்.  பிரமாதமான listener” என்கிறார் அபிலாஷ்.  அந்த அபிலாஷின் கட்டுரையில் சு.ரா. என்று வருகின்ற இடம் ஒவ்வொன்றிலும் என்னைப் பொருத்திப் பார்த்துக் கொண்டேன்.  நான் சந்தித்த அன்பர்கள், நண்பர்கள் அனைவருமே தாங்கள் பிறந்து வளர்ந்ததிலிருந்து இன்று வரையிலான சுய சரிதத்தை மட்டுமே என்னிடம் சொல்கிறார்கள்.  அதுவும் காந்தியின் சரிதம் போலவோ, மணியன் பிள்ளை சரிதம் போலவோ சுவாரசியமாக இல்லாமல் செம அறுவையாக இருக்கிறது.   சமீபத்தில் அப்படி ஒருவர் பேசினார்.  அவர் பேசியதே எனக்குப் புரியவில்லை.  நாளை பேசுங்கள் என்றேன். மறுநாளும் கூப்பிட்டார்.  புரியவில்லை. தமிழில்தான் பேசினார்.  ”சீனிவாசன் என்று எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்.  அவர்தான் எனக்கு ஆப்த நண்பர்.  அவர் உங்களோடு பேசுவார்” என்றேன்.  சீனியிடம் அவர் நம்பரைக் கொடுத்தேன்.  மறுநாள் சீனிக்கு ஃபோன் பண்ணி என்ன ஆயிற்று என்றேன்.  பண்ணினேன், அவர் எடுக்கவில்லை என்றார்.  மறுநாள் அன்பர் போன் பண்ணினார்.  முந்தின நாள் சொன்னதையே சொன்னேன்.  நம்பர் குடுங்க சார், நானே பண்றேன் என்றார்.  இல்லிங்க, அவரே பண்ணுவார், நீங்க எடுங்க என்றேன். மறுபடியும் சீனியை அழைத்து உதவும்படி சொன்னேன்.  மறுநாள் சீனியிடம் என்ன என்று கேட்டேன்.  ங்கோத்தா போனை வைடா பாடு என்று திட்டும்படி ஆகி விட்டது என்றார்.  அதிர்ச்சியுடன் கேட்டால், நீங்களாக இருந்தால் இன்னும் பலவாறாகத் திட்டியிருப்பீர்கள் என்றார்.  அந்த அளவுக்கு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார் அந்த நபர்.  இத்தனைக்கும் ஒரு வங்கியில் நல்ல வேலையில் இருப்பவர்.  விஷயத்தைச் சொல்லுங்கள் என்கிறீர்களா?  விஷயமே இல்லை.  கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்திலிருந்து தப்பி வந்தவர் போல் பேசினார்.  அவ்வளவுதான்.  சொன்னதையே ஐந்து நிமிடம் போட்டு ”செய்தார்”. 

இப்படிப்பட்டவர்கள்தான் என்னோடு பேசுகிறார்கள்.  இப்படிப்பட்டவர்கள்தான் என்னைச் சந்திக்கவும் வருகிறார்கள்.  ஒரு நண்பர் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்து அவந்திகாவுக்கு எதிரே என்னிடம் கேட்கிறார், சாரு நீங்கள் bisexualதானே? 

சுருக்கமாகச் சொல்கிறேன்.  ஒரு மாமியாரின் முன்னே மருமகள் சகஜமாக போனில் பேச முடியுமா?  நேரிலும் சகஜமாகப் பேச முடியுமா?  மாமியார் இருக்கும்போது மருமகளின் கல்லூரி நண்பன் வந்தால் அவள் அவனிடம் என்னவென்று பேசுவாள்? (”டேய் மச்சி எப்பிர்ரா இருக்கே?” என்று கேட்டால் தோசைக் கரண்டியைப் பழுக்க வைத்து சூடு போட்டு விட மாட்டாளா மாமியார்?) சூப்ரண்டு தன் கைபேசியை ஜெயில் கைதியிடம் கொடுத்து, பேசு என்று சொன்னால் அவன் என்ன பேசுவான்? 

சமீபத்தில் சில நலம் விரும்பிகள் இதையெல்லாம் படித்து விட்டு, அவந்திகாவிடம் இது பற்றி விசாரிப்பதாகவும் அறிந்தேன்.  யார் என்று சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.  அம்மாதிரி ஆட்களை கடவுள் பார்த்துக் கொள்வார். 

சுந்தர ராமசாமி வீட்டில் குளித்து விட்டு காலை உணவுக்கு அமர்ந்தால் அங்கேயே தகராறு.  எல்லோரும் ஒன்று அல்ல.  நீங்கள் வேறு. நான் வேறு.  இருவரும் சிநேகமாக இருக்க முயல்வோம்.  முயற்சிப்போம்.  அவ்வளவுதான்.  நான் காலையில் வயிறு முட்ட சாப்பிடுவேன்.  மதியம் பாதி வயிறு.  இரவு பிச்சைக்காரனைப் போல் சாப்பிடுவேன்.  அன்று எனக்கு நாலு விதமான சட்னியும் ரெண்டு இட்லியும் கிடைத்தது.  அவர்கள் அனைவரும் மேட்டுக்குடி பிராமணர்கள்.  நான் சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பக் கீழே.  அந்த வயதில் பதினைந்து இட்லி சாப்பிடுவேன்.  இல்லாவிட்டால் ஆப்பமும் ஆட்டுக்கால் பாயாவும்.  இல்லாவிட்டால் பஞ்சாபி பரோட்டா மூன்று.  (நீங்கள் பாதிதான் சாப்பிட முடியும்)

சரி, சாப்பாட்டு விஷயம் ஒரு விஷயமே இல்லை.  பேசும்போதும் அவர் என்னை ஈர்க்கவில்லை.  ஒரு சமத்காரமான வியாபாரி அல்லது மிகத் தந்திரமான பிஸினஸ்மேன் மாதிரிதான் இருந்தது அவர் பேச்சு.  உதாரணமாக, என்னிடம் “உங்கள் தமிழ் நடை நன்றாக இருக்கிறது” என்றார். நான் மிகவும் நொந்து போனேன்.  மகிழவில்லை.  ஏனென்றால், அவர் இதை எழுதியிருந்தால் கொண்டாடியிருப்பேன்.  எழுதவில்லை.  அவர் உயிர் உள்ளவரை எழுதவில்லை.  எழுத மாட்டார்.  அதை எப்போதாவது என்னை நேரில் பார்த்தால் என்னிடம் சொல்லவென்று ‘ரிசர்வ்’ செய்து வைத்திருந்தார்.  அப்படியே எல்லோருக்கும் வைத்திருப்பார் போல என்று நினைத்துக் கொண்டேன்.  இல்லாவிட்டால் அதை அவர் பொதுவெளியில் எழுதியிருக்கலாமே? 

இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  ஒன்றும் ஈர்க்கவில்லை.  அவர் எங்கோ இருந்தார்.  நான் எங்கோ இருந்தேன்.  சந்திக்கவே முடியவில்லை.  ஆனால் நகுலனைச் சந்தித்தபோது பிரமாதமாக இருந்தது.  அவர் ஒரு கலைஞன்.  எந்தப் பாசாங்கும் இல்லை.  திருவனந்தபுரத்துப் பெண்களின் முலைகளிலிருந்து பேச்சைத் தொடங்கினார்.  அப்புறம் சாராயம் வந்தது.  அவர் லோக்கல்.  நான் சீமை. 

இன்னொரு முறை சு.ரா.வை ஒரு நண்பரின் வீட்டு மாலை விருந்தில் சந்திக்க நேர்ந்தது.  திண்டு போட்டு தரையில் அமர்ந்திருந்தோம். ரொம்பக் கூட்டம் இல்லை.  ஐந்தாறு பேர்தான்.  நான் சு.ரா.வுக்கு அருகில்.  மேட்டுக்குடி சூழல்.  ஃப்ரெஞ்ச் வைன்.  எல்லோரும் மிதமாக அருந்தினோம்.  ஏதோ மோடிஜி, ஐ.நா. சபைத் தலைவர், இந்து ராம் ஆகியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது போல் இருந்தது.  சுவைக்கவில்லை.

மூன்றாவது முறை, இந்தியா டுடே கூட்டு விவாதம்.  ரவிக்குமார், நான், சு.ரா., வாஸந்தி.  கவனியுங்கள்.  கூட்டு விவாதம்.  ஆனால் சு.ரா. தன் விவாதப் பொருளை எழுதி எடுத்து வந்து படித்தார்.  நான்கு பக்கம்.  கொஞ்சம் கூட நேர்மையற்ற செயலாகவும் தந்திரமாகவும் தோன்றியது.  நான் பேசியதற்கெல்லாம் தஞ்சாவூர்க் குசும்பு என்பார்களே அந்த மாதிரி குதர்க்கமாக வியாக்கியானம் செய்து என்னைக் கேலி செய்து கொண்டிருந்தார்.  என்னால் அவருக்கு சரிக்கு சரி விவாதம் செய்ய முடியாமல் அவமானமாக இருந்தது.  காரணம், அவர் விவாத பாணி இடுப்புக்குக் கீழே தாக்குவதாக இருந்தது.  இப்படி யாரை எடுத்துக் கொண்டாலும் அவமானம், கசப்பு உணர்வு என்று இருப்பதால்தான் யாரைப் பற்றியுமே எழுதுவதில்லை.  ஆனால் அசோகமித்திரன் மட்டுமே விதிவிலக்கு.  அவருக்கு என் எழுத்து கொஞ்சம் கூட பிடிக்காது என்றாலும், ஒரு நண்பனாக பிரமாதமாக மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்.  அது உரையாடலாகவே இருக்கும்.  ஒரு போதும் அங்கே தந்திரம் எட்டிப் பார்க்காது.  ஒரு கல்லூரி சிநேகிதனுடன் பேசிக் கொண்டிருப்பது போல் தோன்ற வைத்து விடுவார்.  அவர் சிரிக்காமல் நம்மைச் சிரிக்க வைத்து விடுவார்.  எதுவுமே தரமற்ற நகைச்சுவையாய் இருக்காது.  மிகத் தேர்ந்த, மிக உயர்தரமான பகடியாக இருக்கும்.  நான்கு ஐந்து மணி நேரம் கூடப் பேசிக் கொண்டிருக்கலாம்.  இதுக்கு மேல முடியாது போல இருக்கே ரவி, முதுகு வலிக்குதே என்பார்.  என்னை அவருக்கு ரவி என்றே தெரியும். 

பழகிக் கொண்டிருந்த போது என்னை மிகவும் வசீகரித்த ஒரு நண்பர் மனுஷ்ய புத்திரன்.  அது பற்றி ஒரு புத்தகமாகவே எழுதலாம்.  அதற்குப் பிறகு சீனிதான்.  அபிலாஷ் பெங்களூரில் இருப்பதால் அதிகம் பழக்கம் இல்லை.  Physical proximityயும் நட்புக்கு அவசியம் போல.  நான் சின்மயா நகரிலிருந்து மைலாப்பூருக்கு வந்ததற்குக் காரணமே மனுஷ்ய புத்திரனை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்றுதான்.  அவரும் செல்வியும் எனக்காக – அப்போது அவரிடம் கார் கூட இல்லை – தெருத் தெருவாக வீடு வீடாக எனக்கு வாடகை வீடு தேடி அலைந்ததை நான் மறக்கவில்லை.  அவருக்கு இப்போது என் மீது ஏதோ வருத்தம்.  என்ன காரணம் என்று புரியவில்லை.  நானும் கேட்கவில்லை.  எதற்குமே வற்புறுத்தக் கூடாது.  ஒரு பிரியமான நண்பனிடம் போய் அன்பைக் கொடு என்று யாசிப்பதை விடக் கேவலம் எதுவும் இல்லை.  பழகியது போதும் என்று நினைத்து விட்டார்.  போதுமா.  போதும். 

மற்றபடி சு.ரா. கொடுத்து வைத்தவர். அவரிடம் ஜெயமோகனும் அபிலாஷும் பேசினார்கள்.  ஆனால் என்னிடம் வந்து பேசுபவர்கள் அத்தனை பேருமே ஏன் சித்தப் பிரமை கொண்டவர்களைப் போல் நடந்து கொள்கிறார்கள்?  ஒருவர் என் வீட்டுக்கு வந்ததும் கேட்ட முதல் கேள்வி, இந்த வீட்டுக்கு எவ்வளவு வாடகை?

எனக்கும் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்களை நான் மலையடிவாரத்திலோ கடற்கரையிலோ சந்திக்கிறேன். இப்போது ஒன்றரை வருடமாக ஊரடங்கு காரணமாக சந்திப்பு இல்லை. 

இன்னும் சில நண்பர்கள் உண்டு.  நான் அவர்களுக்கு 20 போன் பண்ணினால் – 20 தடவைகளில் – அவர்கள் ஒருமுறை கூட திருப்பி எனக்கு போன் பண்ணி அழைத்துப் பேசியது இல்லை.  யோசித்துப் பார்த்தால் நான் மட்டுமேதான் பல ஆண்டுகளாக அவர்களுக்கு போன் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று தெரியும்.  அவர்கள் ஒருமுறை கூட என்னை அழைத்திருக்க மாட்டார்கள்.  கேட்டால், “நீங்கள் பிஸியாக இருப்பீர்கள், எதற்குத் தொந்தரவு செய்ய வேண்டும் என்றுதான்” என்பார்கள் என்றும் தெரியும்.  அவர்களோடு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறேன். 

மேலும், ஒரு transgressive writer-இன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.  இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. 

சந்தா/நன்கொடை விஷயம் கவனியுங்கள்.

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai