அ-காலம் தொடர் பற்றி: அமல்ராஜ் ஃப்ரான்சிஸ்

Ghada Al-Saman பற்றியோ Mikhael Naimy பற்றியோ இங்கு லெபனானில் யாருக்கும் எதுவும் தெரியாது. மியா கலிபா, நான்சி அஜ்ரம் (பாடகர்கள்) என்றால் கட்டுக்கட்டாகப் பேசுவார்கள். எழுத்தாளர்களின் நிலை இங்கும் அப்படித்தான். பெய்ரூட் நைட்மெயார் என்றால் கூகுள் செய்துதான் லெபனியர்களால் கண்டுபிடிக்க முடிகிறது. இங்கு இலக்கியத்தின் நிலை இதுதான். சாரு லெபனான் வந்தபோது இந்த ஊர் எழுத்தாளர்கள் பற்றிக் கதை கதையாகச் சொன்னார். ஒவ்வொரு லெபனிய எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போதும் அவருடைய கண்கள் மின்னும். அவ்வளவு ஈடுபாட்டோடு பேசுவார் சாரு. இங்கு வந்து ஒரு லெபனிய இலக்கியம் கூடப் படிக்கவில்லையே என்கிற குற்றவுணர்வைக் கிளறிவிட்டுப்போனவர் அவர்தான். பின்னர் அவர் அறிமுகம் செய்த அரபி இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்தேன். தமிழ், ரஷ்ய, ஆங்கிலத்திலிருந்து விலகி அரபி இலக்கியத்திற்குள் நுழைந்தால் அது பெரும் கிளர்ச்சியாக இருக்கிறது.

“அமல், இந்தப் பெயரைக் கொஞ்சம் பாருங்களன். இங்கு ஒவ்வொரு கிழமையும் ஆட்கள்கூடி கதைகள் சொல்வார்களாம். நாம் ஒருமுறை போய் வரலாமா?” என்று சாரு சொன்னதும் அந்தப் பெயரை எழுத்துக்கூட்டிப் படித்தேன். பெரும் வெட்கக்கேடாகப் போனது. அந்த இடம் என்னுடைய வீட்டிலிருந்து வெறும் இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கிற ஒரு புராதன கட்டடம். இங்கு வந்து இத்தனை மாதங்கள் ஆகியும், இந்தியாவிலிருந்து சாரு வந்துதான் அந்த சுவாரஷ்யமான இடத்தை எனக்கு அறிமுகப்படுத்தவேண்டியிருந்தது. எழுத்தாளர்களை நண்பர்களாகக் கொண்டவர்கள் பாக்கியசாலிகள் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் நாங்கள் இருவரும் அவ்வளவு பாக்கியம் செய்தவர்களில்லை. மறுநாளே லெபனானில் அரசிற்கெதிரான போராட்டம் ஆரம்பமானது. தெருக்கள் எல்லாம் போராட்டக்களமாக மாறியது. இளைஞர்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க revolution ஐ வலு வேகமாக முன்னெடுத்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து அந்த இடத்திற்கு அழைப்பெடுத்தேன். மூடிவிட்டோம் என்றார்கள். சாரு மிஸ்ட் இட்! இன்றுவரை அது மீண்டும் திறக்கப்படவில்லை. ஐ மிஸ்ட் இட்! அல்லது லெபனான் பற்றிய, லெபனியர்கள் பற்றிய, அரபு உலகம் பற்றிய எத்தனை எத்தனை கதைகளைக் கேட்டிருப்பேன். My bad!

ஒரு முக்கிய தகவல். இந்தக் கதை சொல்லும் வழக்கம் அரபு வாழ்க்கையின் ஒரு பராதன நிகழ்வு. இன்றுவரை, ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கிற ஒரு சில அரபிய புராதன கலைகளில் இதுவும் ஒன்று. நேற்று அந்த கட்டடத்திற்கு மறுபடியும் போனேன். “மீண்டும் எங்கள் கதைகளைச் சொல்ல ஆவலாக இருக்கிறோம்” என்று ப்ரெஞ்சிலும், அரபியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்தது. சாருவை நினைத்துக்கொண்டேன். லெபனியர்கள் பற்றிய வெறும் பாதிப்புரிதலோடு இங்கிருந்து புறப்படப் போகிறேனே என்று நினைத்த போது துயரமாக இருந்தது. இந்தத் தவறை அடுத்த நாட்டிற்குப் போகும் போது செய்துவிடக்கூடாது என்று உறுதியெடுத்துக்கொண்டேன்.

தன்னுடைய லெபனான் பயணம் பற்றி BYNGE செயலியில் சாரு எழுதும் அ-காலம் தொடரைப் படியுங்கள். லெபனானைப் பற்றி எக்கச்சக்க கதைகளைச் சொல்கிறார். கூடவே, என்னையும் அடிக்கடி பெயர் சொல்லி ஞாபகப்படுத்துவார். 

***

என்னுடைய லெபனான் பயணத் தொடர் bynge.in செயலியில் தொடராக வந்து கொண்டிருக்கிறது. இந்த மாதத்தோடு முடிந்து விடும். எழுபது எண்பதுகளில் தொண்ணூறுகளில் இருந்த இலக்கியச் சூழல் இப்போது லெபனானில் இல்லை. ஒரு புத்தகக் கடையைக் கூட அங்கே காண முடியவில்லை. ஆனால் 1990 வரை பெய்ரூத் அரபி பேசும் உலகின் கலாச்சாரக் கேந்திரமாகவே விளங்கியது. பெய்ரூத் அரபு உலகின் பாரிஸ் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் அதற்காக தமிழ்நாட்டு இலக்கியச் சூழலையும் லெபனானையும் ஒன்றாகச் சொல்ல முடியாது. இங்கே எழுத்தாளன் என்றாலே சினிமாவில் எழுதுபவன் தான். வேறு எழுத்தாளனே இங்கே இல்லை. இப்போதும் பாருங்கள், வைரமுத்துவின் மீது 17 பெண்கள் புகார் சொல்லியிருக்கிறார்கள் என்பதால்தான் விருதை எதிர்க்கிறார்களே தவிர அவருக்கு அந்த விருதை வாங்க எந்த இலக்கியத் தகுதியும் இல்லை என்பதை ஒருசிலர்தான் சொல்கிறார்கள். அவர் பாரதீய ஞானபீடம் கூட எளிதில் வாங்கியிருப்பார். இது ஒரு moralistic சமூகம் என்பதால் மட்டுமே அவருக்கு ஞானபீடம் கொடுக்கப்படாமல் இருக்கிறது. அவர் மீதுள்ள செக்ஸ் குற்றச்சாட்டு மட்டும் இல்லாதிருந்தால் அவருக்கு இந்நேரம் ஞானபீடம் கிடைத்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்தக் கேவலம் லெபனானில் இப்போதும் இல்லை. எப்போதும் வராது. படிப்பவர்களின் எண்ணிக்கைதான் அங்கே குறைந்து விட்டதே தவிர எழுத்தாளரின் மரியாதை குறையவில்லை. எழுத்தாளர் என்றால் யார் என்று அங்கே தெரிகிறது.

bynge.in இல் அ-காலம் படியுங்கள். தொடர்ந்து படித்து கடிதம் எழுதிய அமல்ராஜுக்கு நன்றி.