அதிகாரமும் விளிம்புநிலையும்…

என்னுடைய பழைய கட்டுரைத் தொகுப்புகளுக்குப் புதிய பதிப்பு கொண்டு வரும்போது அவற்றைப் படித்து, தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது என் வழக்கம்.  அப்படி நீக்கும் பகுதிகள் அதிகம் இருக்காது.  இருநூறு பக்கத்தில் பத்து பக்கம் இருக்கும்.  அந்தப் பத்து பக்கமும் ஜெயமோகனுக்கு எழுதும் மறுப்பாக இருக்கும்.  ஒரே ஒரு நூலில் மட்டும் இருநூறுக்கு நூறு பக்கம் இருந்தது.  அனைத்தையும் நீக்கி விட்டேன்.  ஏனென்றால், ஒரு சக எழுத்தாளருக்கு மறுப்பு சொல்லிக் கொண்டிருப்பதும், சண்டை போட்டுக் கொண்டிருப்பதும் என் வேலை அல்ல என்பதைத் தாமதமாகப் புரிந்து கொண்டேன்.  அதனால்தான் கடந்த பத்து ஆண்டுகளாக ஜெயமோகன் என்ன எழுதினாலும் நான் பதில் எழுதுவதில்லை.  மேலும், அவருடைய பாணியைத்தான் நான் கையாள்கிறேன்.  நான் என்ன எழுதினாலும் அவர் அதைக் கண்டு கொள்வதே இல்லை.  முழுமையாகப் புறக்கணிப்பதே அவரது பாணியாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு நடக்கிறது என்றால், சமீபத்தில் நான் குமுதத்தில் முதல்வருக்கு எழுதிய கடிதத்தை முன்வைத்து முதல்வர் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார்.  ஒன்று, எழுத்தாளர்களுக்கான வருடாந்திரப் பரிசு, இரண்டு, எழுத்தாளர்களுக்கான வீடு. அந்தக் கடிதம் குமுதத்தில் வந்ததால் சிலர் படித்திருக்க வாய்ப்பு இல்லை என்று என் தளத்திலும் வெளியிட்டேன்.  அதையும் படித்து விட்டு, அதைப் படிக்காதது போலவே, கட்சிக்காரர்கள் சொல்லித்தான் ஸ்டாலின் இதைச் செய்திருக்கிறார், எனவே பரிசுகளும் கட்சிக்காரர்களுக்குத்தான் போகும் என்பது போல் எழுதியிருந்தார் ஜெயமோகன்.  

ஜெயமோகனின் சில கட்டுரைகளைப் படித்தால் என் உடல்நலம் கெடுகிறது.  ரத்த அழுத்தம் ஏறி விடுகிறது.  அது என் ஆயுளுக்குக் கேடு.  மரணமே கூட சம்பவிக்கலாம்.  அதனால் எனக்கு மன உளைச்சலோ மன அழுத்தமோ கொடுக்கும் எந்தக் காரியத்திலும் நான் ஈடுபடுவதில்லை.  அதன் காரணமாகவே நான் தினசரிகளைப் படிப்பதையும் நிறுத்தி விட்டேன். அப்படிப்பட்ட ஒரு கட்டுரையை ஜெ. இன்று எழுதியிருக்கிறார்.  இதற்கெல்லாம் நான் பதில் எழுதாமல் இருப்பதன் காரணம், பிறகு என்னால் வேறு எந்த வேலையையும் செய்ய முடியாது.  நாள் முழுவதும் ஜெயமோகனுக்கு பதில் எழுதுவதிலேயே போய் விடும்.     

இன்றைய கட்டுரையில் அவர் மிக நுண்மையாக மற்ற எழுத்தாளர்களை – குறிப்பாக என்னை – அவமானப்படுத்தியிருக்கிறார்.  இது மேற்கோள்:

”அன்றுமின்றும் தொடர்ச்சியாக தகுதியானவர்களை முன்வைப்பது, தகுதியற்றவர்கள் விருதுபெறும்போது அதை கண்டிப்பது என்னும் இலக்கியச் செயல்பாட்டைச் செய்பவர்கள் எவர் என்று பாருங்கள். அரிதினும் அரிதாக தலைமுறைக்கு ஒருவர். பெரும்பாலும் எவரும் இதைச் செய்வதற்கு முன்வருவதில்லை. என் தலைமுறையில் நானன்றி எவர் இதைச் செய்கிறார்கள்? அடுத்த தலைமுறையில் எவர் செய்யக்கூடுமென தோன்றுகிறது? 

சாகித்ய அக்காதமி விருதுகளை விமர்சிப்பதனால் அதைப் பெறுவதில்லை என முடிவுசெய்தேன். அவ்வமைப்பின் மையப்பொறுப்புகளில் என்மேல் பெருமதிப்பு கொண்டவர்கள், என் நண்பர்கள் என்றே நான் சொல்லத்தக்கவர்கள் இருந்திருக்கிறார்கள். டெல்லி சென்றால் நான் சென்று சந்தித்தாகவேண்டிய அளவுக்கு அணுக்கம் கொண்டவர்கள்.  பலமுறை அவ்விருதை ஏற்கும்படி என்னிடம் சொல்லப்பட்டுள்ளது- நான் மறுத்துவிட்டேன்.”

மேற்கண்ட இரண்டு வெவ்வேறு பத்திகளை கவனியுங்கள்.  என் தலைமுறையில் நானன்றி எவர் இதைச் செய்கிறார்கள்?  நானெல்லாம் என்ன புல் பிடுங்கிக் கொண்டா இருந்தேன்?  என்னை ஏன் எல்லோரும் திட்டுகிறார்கள்?  வசை பாடுகிறார்கள்?  என் தலைமுறையில் நான் மட்டுமே மிக அதிகமாக விமர்சனத்தில் ஈடுபட்டவன்.  பிறரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.  ஆனால் என் அளவுக்கு இல்லை.  கமல்ஹாசன் ஒரு பொது இடத்தில் கை குலுக்கினால் கையை வெட்டிக் கொண்டு செல்கிறார் என்றால் அந்தக் கோபம் ஏன் ஏற்பட்டது?  நான் அவர் படங்களை விமர்சித்ததால்தானே?  நான் திரைத்துறையில் நுழைவதே சாத்தியம் இல்லை என்ற நிலை (அதனால் எனக்கு மயிரே போச்சு என்றாலும்) நான் தொடர்ந்து சினிமா விமர்சனம் செய்து கொண்டிருந்ததால்தானே?  நான் ஒன்றும் ஜெயமோகனைப் போல் இயக்குனர் ஷங்கரை லியனார் டோ டாவின்ஸி என்று எழுதவில்லையே?  ஒரு படத்துக்கு வசனம் எழுத யாரைக் கேட்கலாம் என்று ஷங்கர் தன் நண்பர்களிடம் (உதவியாளர்களை அல்ல) ஆலோசித்த போது ஒருவர் (அவர் என் நண்பர்) என் பெயரைக் குறிப்பிட, கண்ணிமைக்கும் நேரத்தில் ஷங்கர் சாரு வேண்டாம் என்றாராம்.  கண்ணிமைக்கும் நேரத்தில் என்பதே முக்கியம்.  ஏன்?  ஷங்கர் படங்களை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன் என்ற ஒரே காரணம்தான்.

சினிமா மட்டுமல்ல.  இன்றளவும் நான் ஒரு தீண்டத்தகாதவனாக இலக்கிய உலகில் நடத்தப்படுவதற்கு என்ன காரணம்?  25 வயதில் ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு fake நாவல் என்று சொன்ன காரணம்தானே?  இன்னொரு காரணம், என் எழுத்தில் உள்ள பாலியல் வெளிப்பாடுகள்.  உயிர்மை என் புத்தகங்களை வெளியிடும்வரை என் புத்தகங்களை நானேதானே ஐயா வெளியிட்டு வந்தேன்?  அதற்காக நானும் அவந்திகாவும் திருவல்லிக்கேணியில் தெருத்தெருவாக அச்சகங்களுக்குப் படையெடுத்த கதையை ஆயிரம் பக்கம் எழுதலாமே?  ”அவ்வளவு ஏன் கஷ்டப்பட்டீர்கள், சரோஜாதேவி புத்தகம் அச்சடிக்கும் பிரஸ்ஸில் அடித்திருக்கலாமே?” என்று குற்றாலம் இலக்கியப் பட்டறையில் கேட்டது இப்போதைய என் ஆருயர் நண்பர் ஜெயமோகன்தானே?  அதெல்லாம் அப்போதைய ரத்த ஓட்டத்தின் வேகம்.  அதையெல்லாம் நான் மறந்து விட்டேன்.  என்றாலும் நான் பட்ட சிரமங்களை உலகத்தில் இரண்டு மூன்று எழுத்தாளர்கள்தான் பட்டிருக்கிறார்கள்.  ப்யுகோவ்ஸ்கி, அதற்கும் முன்னால் மார்க்கி தெ ஸாத்.  ஸாதுக்குக் கூட அவர் எழுத்தை மதித்த பல நண்பர்கள் இருந்தார்கள்.  என் ஆரம்ப காலத்தில் ஒருத்தர் கூட இல்லை.  இன்றைக்கும் ஜெயமோகனைத் தவிர (அதற்காக ஜெயமோகனுக்கு நன்றி) வேறு எந்த எழுத்தாளரும் – வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன், சுஜாதா, கலாப்ரியா, யுவன் சந்திரசேகர் என்று நீங்கள் யாரை எடுத்தாலும் என் பெயரையே உச்சரித்தது இல்லை.  கருத்து சொல்வதை விடுங்கள்.  என் பெயரையே உச்சரித்தது இல்லை.  அதைப் பற்றி எனக்குக் கவலையும் இல்லை.  என் எழுத்தை மிக நேர்த்தியாக மதிப்பிட்டு எழுதியது இதுவரை ஜெயமோகனும் (தமிழில் பிறழ்வெழுத்து) அபிஷாஷும் மட்டுமே.

ஜெயமோகன் அடிக்கடி மற்ற எழுத்தாளர்களை மிக மோசமாக அவமதிக்கிறார்.  அது பற்றியும் எனக்குக் கவலையில்லை.  அது ஜெயமோகனின் தனிப்பட்ட பிரச்சினை.  ஆனால் இன்றும் என்னால் வாய்மூடி அமைதியாக இருக்க முடியவில்லை.  ஏனென்றால், ஒவ்வொரு பரிசுக்கும் ஒவ்வொரு விருதுக்கும் எதிர்ப்புக் குரல் எழுப்பி எல்லோரையும் பகைத்துக் கொண்டவன் நான்.  அதே சமயம் யார் விருது பெற்றாலும் ஒரு வார்த்தை பாராட்டு ஜெயமோகனின் தளத்தில் இருக்கும்.  இமையம் விருது வாங்கிய போது கூட நான் மௌனமாகவே இருந்தேன்.  ஏனென்றால், அவரது எழுத்து தலித் வாழ்க்கையை புனிதப்படுத்துகிறது.  அதைத்தான் ராஜ் கௌமதன் படிகள் பத்திரிகையில் புனித தலித் எழுத்து என்று சொல்லி நீண்ட கட்டுரை எழுதினார்.  அது தவிரவும் இமையத்தின் எழுத்து எனக்கு தட்டையாகத் தெரிகிறது. (பா.ராகவனுக்கு இந்தத் தட்டை என்ற வார்த்தை பிடிக்காது.  இன்றுதான் முகநூலில் கிண்டலடித்திருந்தார்.) தட்டை என்றால் உள்மடிப்புகள் இல்லாதது.  ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே தரக் கூடியது.  சென்ற ஆண்டு ஜெயமோகன் பட்டறையைச் சேர்ந்த ஒரு பிரபல எழுத்தாளர் சாரு ஒரு செக்ஸ் எழுத்தாளர் என்று சொல்லியிருந்தார்.  இப்போது இன்னொரு ஜெயமோகன் பட்டறை எழுத்தாளர் என்னை “இலக்கியக் கோமாளி” என்று வர்ணித்துள்ளார்.  இப்படி ஆயுள் முழுவதும் கிண்டல் செய்யப்படுபவன் நான். 

தமிழ் எழுத்தாளர்களிலேயே அதிக வசைகளைப் பெற்றுக் கொண்டிருப்பவன் நான் என்று சொல்பவர் ஜெயமோகன்.  அதுவும் தவறு.  அதுவும் நான் தான்.  ஏனென்றால், ஜெயமோகனுக்கு பத்மஸ்ரீ விருது வாங்கிக் கொடுக்க கமலும், மணி ரத்னமும், இன்னும் பல பிரபலங்களும் உண்டு.  என் நண்பர்கள் என்னைப் போலவே விளிம்பு நிலை மனிதர்கள்.  ஸாஃப்ட்வேரில் பணி புரியும் வெள்ளைச் சட்டைக் கூலிகள்.  இதுவரை நான் கோவையில் அளித்த கண்ணதாசன் விருது தவிர வேறு எந்த விருதும் வாங்கியதில்லை.  அந்த விருது கூட ஜெயமோகன் பரிந்துரைத்தது என்று என் நண்பர்கள் சொன்னார்கள்.  கிடைத்தது அத்தனையும் வசைகள், புறக்கணிப்புகள்.  ஒரு ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளனுக்கு அதுதான் கிடைக்கும். 

ஜெயமோகனின் மேற்கோளில் இரண்டாவது பத்தியோடு இந்தக் குறிப்பை முடிக்கிறேன்.

”சாகித்ய அக்காதமி விருதுகளை விமர்சிப்பதனால் அதைப் பெறுவதில்லை என முடிவுசெய்தேன். அவ்வமைப்பின் மையப்பொறுப்புகளில் என்மேல் பெருமதிப்பு கொண்டவர்கள், என் நண்பர்கள் என்றே நான் சொல்லத்தக்கவர்கள் இருந்திருக்கிறார்கள். டெல்லி சென்றால் நான் சென்று சந்தித்தாகவேண்டிய அளவுக்கு அணுக்கம் கொண்டவர்கள்.  பலமுறை அவ்விருதை ஏற்கும்படி என்னிடம் சொல்லப்பட்டுள்ளது- நான் மறுத்துவிட்டேன்…”

ஜெயமோகன் இருக்கும் இடம் இதுதான்.  சமூகப் படிநிலையில் அவருடையது ஐவரி டவரின் உச்சி.  நான் இருக்கும் இடம் சாராயக் கடை.  போலீஸ்காரர்களின் லத்தியடி கிடைக்கக் கூடிய இடம்.  அவருடையது, கனவான்கள் வீற்றிருக்கும் இடம்.  என்னுடையது- அதிகாரம் மறுக்கப்பட்ட இடம்.  விளிம்பு நிலை என்பார்கள்.  எந்தக் காலத்திலும் என்னிடம் யாரும் விருதை ஏற்கும்படி சொல்ல மாட்டார்கள்.  நான் மறுக்க வேண்டிய நிலையும் இந்த ஆயுளில் ஏற்படாது.  சாகித்ய அகாதமியின் கதவைத் தட்டுவதற்குக் கூட எனக்கு வாய்ப்பு இல்லை.  என் நண்பர்களை நான் சாராயக் கடையில்தான் சந்திக்க வேண்டியிருக்கிறது.  எனவே அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் ஜெயமோகன் என்னுடைய மொழியைப் பேசக் கூடாது.  அது அறம் அல்ல.