வாசகர் சந்திப்பு பற்றி…

நேற்றைய வாசகர் சந்திப்பு பிரமாதமாக இருந்தது. எல்லோருமே மிகப் பொறுப்பாகப் பேசினார்கள். 40 பேர். இன்னொரு இருபது பேரை அடுத்த சந்திப்பில் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். முதல் முதலாக ஒரு உள்வட்ட சந்திப்பில் இணைப்பதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. இதுவரை ஒரு மின்னஞ்சல் கூட இல்லாமல் எந்த அறிமுகமும் இல்லாமல் எப்படி என்ற தயக்கம். அப்படியும் நாலைந்து பேரை இணைத்தேன். அடுத்த சந்திப்பில் இந்த முறை இணைய முடியாதவர்களையும் இணைக்கலாம். நூறு பேர் வரை கொள்ளும்.

கோவிட் முடிந்த பிறகு கோவாவில் சந்திக்கலாமா என்று கேட்டேன். இரண்டு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. மஹாராஷ்ட்ராவில் அரபிக் கடல் ஓரமாக உள்ள சில கிராமங்கள் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள். கோவாவை விட மஹாராஷ்ட்ராவின் கடற்கரை ஓர கிராமங்கள் இன்னும் சிலாக்கியமானவை. ஏகாந்தமானவை. வட கிழக்கு மாநிலங்களும் அப்படியே. எந்த இடம் என்று பின்னர் முடிவு செய்வோம்.

நேற்றுதான் சில நண்பர்களின் முகங்களை முதல்முதலாகப் பார்க்க முடிந்தது. ஒரே ஒரு நண்பரைத் தவிர வேறு யாருக்கும் நான் மீட்டிங் ஐடியும் பாஸ்கோடும் நானாகக் கேட்டு அனுப்பவில்லை. அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. ஸ்ரீராம் கூட விடுபட்டு விட்டார். பிஸியாக இருந்திருக்கலாம். சில நண்பர்கள் ஆறரைக்குச் சந்திப்பு என்றால் ஆறு மணிக்கு ஐடி, பாஸ்கோட் கேட்டு எழுதினார்கள். அவர்களுக்கும் அனுப்பி வைத்தேன். சில நண்பர்கள் ஏன் தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்று விளக்கி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் விளக்கம் எழுத மாட்டார்கள். வர முடியவில்லையா? அவ்வளவுதான். அதற்கு மேல் விளக்கம் சொல்வதற்கு அதில் ஏதாவது இருக்கிறதா என்ன? நான் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டு, நீங்களும் செய்வதாக வாக்குறுதி கொடுத்து, பின்னர் செய்ய முடியாமல் போனால் விளக்கம் சொல்லலாம். நான் கொடுப்பதோ ஞானம். இதைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் அதில் எனக்கு என்ன பிரச்சினை? மேலும், இதிலெல்லாம் சிந்தை செலுத்தும் அளவுக்கு நேரமும் இல்லை.

இத்தனைக்கு இடையிலும் ஸ்ரீராம் நேற்று ஆர்ட் ரெவ்யூ இதழில் வந்த என் கட்டுரையின் இணைப்பை எனக்கு அனுப்பியிருந்தார். அவர் அனுப்பியிருக்கவில்லை என்றால் எனக்கு இந்த விஷயம் ஒருபோதும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒன்றரை மாதம் கழித்து ஆர்ட் ரெவ்யூ இதழ் எனக்கு லண்டனிலிருந்து தபாலில் வரும்போதுதான் தெரியும். இப்படி ஆன்லைனில் இதழ் வெளியானதும் அதை எனக்கு அனுப்புவதற்கு ஒரு நண்பர் இருக்கிறார். அடித்துச் சொல்கிறேன். வேறு யாராலும் இதைச் செய்ய முடியாது. இதழ் எப்போது வந்தது என்று நான் கேட்கவில்லை. கேட்டால் நேற்று காலையில் வந்தது என்றுதான் பதில் வந்திருக்கும். காலையிலேயே அனுப்பியிருப்பார். இப்போது கோவிட் காலம் என்பதால் மருத்துவமனை வேலை அதிகம். இன்னும் பாருங்கள், இதைப் படித்து விட்டு, “இல்லை சாரு, நேற்று மாலைதான் வெளிவந்தது” என்று சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அநேகமாக ஒரு பிரதம மந்திரியின் தனிச் செயலாளர்தான் இவ்வளவு துரிதமாகவும், இத்தனைத் துல்லியத்தோடும் செயல்படுவார். கடவுளுக்கு நன்றி.

அர்ஜுன் மோகன் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்துபவர். நேற்றுதான் முகத்தைப் பார்த்தேன். மாணவர். நான் படிக்கும் புத்தகங்களே அரிதினும் அரிதானவை. இல்லாவிட்டால் ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) புத்தகத்தை யார் படிப்பார்? இன்னும் நான் அ-காலம் தொடரில் எழுதும் சில அரபி எழுத்தாளர்களை ஆங்கிலத்திலேயே மொழிபெயர்க்கவில்லை. நான் மட்டும் எப்படிப் படித்தேன் என்றால், அந்தந்த எழுத்தாளர்களோடு எனக்குத் தனிப்பட்ட முறையில் உள்ள நட்பின் காரணமாக. அதனால் புத்தகம் வருவதற்கு முன்பே எனக்கு பிடிஎஃப் அனுப்பி விடுவார்கள். மற்றபடி அல்-ஜதீத், பானிபால் போன்ற அரபி-ஆங்கிலப் பத்திரிகைகளின் நீண்ட கால வாசகன் நான். அவற்றில் இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படாத நாவல்களின் சில பகுதிகளை மொழிபெயர்த்துத் தருகிறார்கள்.

அப்படி நான் படிக்கும் அரிதினும் அரிதான நூல்களைக் கூட பல சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் நூலகங்களிலிருந்து மின்புத்தகமாகத் தருவித்துக் கொடுப்பவர் அர்ஜுன். சில நூல்களைப் படித்தும் இருக்கிறார் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியம்.

நேற்றைய சந்திப்பு பற்றி அர்ஜுனின் கடிதம்:

Dear charu ,
Thanks a lot for allowing me to be a part of the meeting for I’ll cherish this a lot. It was a day of immense learning from M.N. Roy, lives of Iranian women, to Nagore tea and hospitality, also got glimpses of your growing days and how the Dravidian times shaped your literary inclinations and aesthetics. My hints from your talk alone left me with four filled pages. Which would take me months together to have a detailed study and synthesis. The part where you spoke about Akbar and Baburnama was the most mesmerizing one, shining a light on its intricacies and nuances! Also had an opportunity to see Mr.Araathu too…
I’d like to thank you again for providing me with the opportunity to participate in the meet, sir!

Beloved Reader,

Arjun Mohan.