ரோலக்ஸ் வாட்ச் – கார்ல் மார்க்ஸ் மதிப்புரை

நிறைய அலைச்சல்களுக்கு இடையில் சமீபத்தில் வாசித்த நாவல் ரோலக்ஸ் வாட்ச். புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு வேகத்தில் போகிறது. வெளியீட்டு விழாவில், இந்த நாவலை ‘பின் நவீனத்துவ கிளாசிக்’ என்றார் சாரு. பின் நவீனத்துவத்தில் ஏது கிளாசிக் என்றார்கள் நண்பர்கள். போகட்டும். நாம் நாவலுக்கு வருவோம்.

தமிழில் நாவல் எனும் வடிவத்துக்கு கட்டமைக்கப்பட்டதொரு வரையறை இருக்கிறது. சிறந்த நாவல்கள் என்று பட்டியலிடப்பட்டிருக்கும் பத்து நாவல்களை எடுத்துக்கொண்டால், நாம் அவற்றுக்குள் பொதுத்தன்மை ஒன்றைக் காண முடியும். அந்த பொதுத் தன்மையின் பின்னால் இருப்பது, காலத்தால் நிற்கும் அதன் ‘கிளாசிக் தன்மை’. இங்கு காலத்தால் நிற்பது என்பதன் பொருள் என்ன? அது சொல்லும் வாழ்க்கை மற்றும் அந்த வாழ்க்கையின் மூலம் அந்நாவல் கட்டமைக்க விரும்பும் விழுமியங்களும், மானுட அன்பை நோக்கிய முன்னகர்தலும் இல்லையா?

ஆக, இவ்வாறு எழுதப்பட்டிருக்கும் நாவல்களில் நாவலாசிரியனுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அது வலிந்து திணிக்கப்பட்டது இல்லை என்றாலும், அது பிரதியின் நோக்கமாக இருக்கிறது. அது நம்மிடம் அதிகாரம் எதையும் செலுத்துவதில்லைதான். பிறகு அது நம்மிடம் கோருவது தான் என்ன? எதுவுமில்லையா? எதுவுமே இல்லையென்றால் ஒரு பிரதி படிப்பவனிடம் வெறுமையைத் தான் கையளிக்கும். ஆனால் கிளாஸிக் நாவல்கள் அவ்வாறு செய்வதில்லை. படிப்புச் செயல்பாட்டின் வழியாக அவை பண்பாட்டு விழுமியங்களை முன்வைக்கின்றன. அவற்றிற்கு ஒரு எல்லையும் உண்டு.

ஆனால் பின்நவீனத்துவத்தைத் தனது வழிமுறையாக வரித்துக்கொண்டிருக்கும் பிரதிகள், அத்தகைய முன்னேடுத்தல்களை செய்வதில்லை. ஆனால் வெறுமையிலும் நிலைப்பதில்லை. பின்பு அவை வாசகனிடம் சொல்வது தான் என்ன? அவனிடம் அவை கோருவது தான் என்ன? இது போன்ற கேள்விகளுக்கு பதில்களைக் கண்டடைவதன் வழியாகத்தான், இத்தகைய பிரதிகளை நாம் அணுகவே முடியும். இங்கு கேள்வியும் பதிலும் வேறு வேறல்ல. ஆமாம். இதுவொரு விளையாட்டு.

இந்த நாவல் தமிழின் சமகால வாழ்வின் ஒரு பகுதியைச் சொல்கிறது. அரசியலும், அதிகாரமும், தரகுவேலையும் சங்கமிக்கும் இடம்தான் நாவலின் களம். இவற்றின் எண்ணற்ற கண்ணிகளின் ஒரு முனை இந்த நாவலின் மையப் பாத்திரம். மையப் பாத்திரம் என்பது கூட, விமர்சன மொழிக்காக நான் எடுத்துக்கொள்கிற அல்லது உருவாக்கிக் கொள்கிற வார்த்தை. ஏனெனில் அப்படி ஒன்று நாவலில் இல்லை. ஒரு இலக்கியப்பிரதி தனக்குள் செயல்படுத்தியிருக்கும் அதிகார நீக்கம் அது. தன்னளவில் பின்நவீனத்துவப் பிரதியாக நாவல் தகவமைத்துக்கொள்ளும் இடமும் கூட.

நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றன. அவை கலைத்துப் போடப்பட்டிருக்கும் சமகால வாழ்வை அதனதன் அளவில் பிரதிநிதுத்துவப் படுத்துகின்றன. இங்கு சமகால வாழ்வு என்னவாக இருக்கிறது, நாம் அதை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதில் தான் இந்த நாவலை நாம் எப்படி உணர்வோம் என்பது இருக்கிறது. ஆக, படைப்பில் வாசகனின் பங்களிப்பும் முக்கியமான ஒன்று.

நாம் லட்சியவாதியா? நாம் பேசுவது தூய்மைவாதமா, அல்லது சமரசமா? வெறும் அன்பா? அல்லது அன்பென்ற பெயரில் நாம் செய்வது மண்டியிடலா? இந்த ஒவ்வொன்றிக்குப் பின்னால் இருப்பது என்ன மாதிரியான அதிகாரம்? போன்ற கேள்விகளை, அவை கேள்விகள் என்றே நாம் உணரா வண்ணம் உரையாடுகிறது நாவல். அந்த வகையில் சரவணன் சந்திரன் நம்முடன் நிகழ்த்துவது ஒரு பகடையாட்டம். நம்மை மிகத் தீவிரமாக அதில் பங்கு கொள்ள வைப்பதில் அவர் வெற்றியடைகிறார். அதனால் தான் அந்த பிரதி நம்மை விரைவாகப் படிக்க வைக்கிறது. ஏனெனில் வாசகன் பிரதியிடம் தன்னை வைத்து ஆடும் ஆட்டம் அது. படைப்பாளி விலகி நிற்கிறான்.

ஆனால் அவன் விலகி நிற்கிறானா அல்லது நழுவுகிறானா என்பதில் தான் இருக்கிறது பின் நவீனத்துவத்தின் ‘கிளாசிக் தன்மை’.

இந்த நாவலில் கிளாசிக் தன்மையில் ஓட்டை விழும் இடங்கள் என்று பார்த்தால் அவை எழுத்தாளனின் ‘சுய தணிக்கை’ வெளிப்படையாகத் தெரியும் சில இடங்கள். ‘இன்ன சாதிக்காரன்’ என்று ஒரு தரகு வேலைக்காரனை அடையாளப்படுத்தும் போது படைப்பாளி கொள்ளும் தவிப்பு ஒரு உதாரணம். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளன் பிரதியில் ஒளிந்து கொள்ள முடியாது. அது பின் நவீனத்துவப் பிரதி நிலைகொள்ளும் அரசியலுக்கு எதிரானது. நான் லீனியர் என்பது படைப்பாளிக்கு கதகதப்பைச் தரும் கம்பளியல்ல. அது அவனை விலக்கி நிறுத்துவது.

இன்னொரு முக்கியமான பண்பு, மரபான நாவல்களில் வாசகன் அடையும் ‘தரிசனத்தை’ பின் நவீனத்துவப் பிரதியில், ஒரு படைப்பாளி எவ்வாறு கையாள்கிறான் என்பது. இந்த நாவலில் கம்யூனிஸ்ட் குறித்தும், JNU குறித்தும் வரும் இடங்கள் ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளனின் மேதைமையைக் கோரும் இடங்கள்.

ஒரு சிகரெட்டை அது ‘அனுமதிக்கப்படாத சொகுசு’ என்பதால் மறைந்துகொண்டு குடிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியன், பிறகு JNU வில் என்னவாக வெளிப்படுகிறான், அங்கு அவன் அடையும் சுதந்திரம் என்பது என்னவாக இருக்கிறது என்ற விவரணைகள் இந்த நாவலில் முக்கியமான பகுதி என்று நான் கருதுகிறேன். ஒரு தரகு அரசியலாளனின் பார்வையில் JNU வில் அவர்கள் கைகொள்ளும் லட்சியவாதம் என்பது என்னவாக இருக்கிறது என்று பிரதி நம்மிடம் மேற்கொள்ளும் உரையாடல் எல்லாம் அட்டகாசம்.

ஆனால் குறிப்பிட்ட அந்த உரையாடல் என்னவாக முடிகிறது என்பது தான் முக்கியம். அந்த இடத்தில் சரவணன் சந்திரன் தத்தளிக்கிறார். சரவணன் சந்திரன் ‘முழு அர்த்தத்தில்’ எழுத்தாளர் இல்லை, அதற்கு வெளியே இருந்து எழுதும் ஒருவர் என்று சாரு சுட்டுவது இந்த ஊசலாட்டத்தைத்தான். இதைப் போன்ற விஷயங்களைத் தொடும்போது உலக அளவில் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று நான் யோசிக்கிறேன். இது படைப்பாளியை குறைத்து மதிப்பிடுவதில்லை. சரவணன் சந்திரனின் ஆளுமையை அங்கீகரித்து அவரிடம் உரையாடுவது தான்.

சரவணன் சந்திரனின் முந்தைய நாவலை நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் இந்த நாவல் தமிழ் நாவல் மொழியில் ஒரு பாய்ச்சல் தான். மிக முக்கியமாக, இதில் நாம் காணும் சமகால வாழ்வியல் கூறுகள். இதைப் படிக்கும்போது, சில இடங்களில் வணிக எழுத்தின் சாயலைக் கொண்டிருக்கிறதோ, அதனால்தான் சுவராஸ்யத்தைத் தூண்டுகிறதோ என்ற சந்தேகம் கூட வரும். அப்படி இல்லை. நாவல் நம்மிடம் மேற்கொள்ளும் உரையாடலின் தொனியில் நமக்கு ஏற்படும் பிரம்மை அது. அதற்கு பதில்களைக் கண்டடையும் எத்தனத்தில், நாம் கொஞ்சமாக முன்னகர்வோம். அந்த இடத்தில் தான் இந்தப் பிரதி தன்னை இலக்கியப் பிரதியாக நிறுவிக்கொள்கிறது. அதை உணராமல், அதன் பகடியில் நாம் கரைவோம். அப்போது தான் இது தன்னை ஒரு பின் நவீனத்துவப் பிரதியாகவும் உறுதி செய்து கொள்கிறது. அந்த வகையில் இது தமிழின் முக்கியமான ஒரு நாவல். இந்நாவல் வழங்கிய வாசிப்பு அனுபவத்துக்காக நான் சரவணன் சந்திரனை தழுவிக்கொள்கிறேன்