காப்ரியல் மார்க்கேஸ்

டியர் சாரு,

நல்லது…

பெரும் துக்கம் சாரு. நீங்கள் அறிமுகப்படுத்தியவர்தான் காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ். என் முதல் கடித்ததைப் பார்த்தால் ருசு இருக்கும்…

நான் மார்க்கேஸை  புவனோஸ் அய்ரஸில் அளப்பரிய கூட்டத்தில் எளியவனாய் நின்று பார்த்திருக்கிறேன் சாரு.  அவரைப் பார்த்த போது மனதுக்குள் சொன்னேன், “தகப்பனே, உன் அந்திமக் காலத்தில் நான் உன்னுடன் இருப்பேன்…” வாழ்க்கை பார்த்த்தீர்களா, என்னால் போக முடியவில்லை….

எனக்கு உங்கள் மேல்தான் கோபம் கோபமாக வருகிறது… மற்ற எல்லரும் மோஸ்தர் பின்னே போகும் போது நீங்கள் மட்டும் ஏன் இத்தனை உலகத்தை எனக்குக் காட்டினீர்கள். என்னைப் போன்ற எளியவனுக்கே நீங்கள் காட்டிய உலகம்… என்னால் துக்கத்தைத் தாங்க முடியவில்லை சாரு… மார்க்கேஸின் இறுதி, என்  தந்தைக்கு எனும் துக்கம்…

அத்தனைக்கும் நன்றி சாரு

ஜெகதீஷ்

    

Charu,

When I read about Gabriel Marquez death, I was only remembering you, if not for you,there is a very slim chance that I would have heard/read him. Thanks to you.

May his soul rest in peace.

Vaishu.

வைஷு,

நான் அறிமுகப்படுத்தாவிட்டாலும் எப்போதேனும் ஒருநாள் நீங்கள் மார்க்கேஸைப் படித்திருப்பீர்கள்.  சந்தேகம் இல்லை.  ஆனால் நான் உங்களுக்கு ஒரு கலைஞனை அறிமுகப்படுத்தினேன் என்றால் அது தருண் தான்.  அதில் நான் நிச்சயம் பெருமைப்படுகிறேன்.  அவனுடைய மூன்றாவது நாவலைப் படித்து விட்டீர்களா?  (நான்காவது நாவலை சிறையில் எழுதிக் கொண்டிருக்கிறான்).

சாரு

ஜெக்தீஷ்,

உங்கள் கடிதம் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதப்பட்டிருந்தது.  பல வாசகங்களை எடுத்து விட்டேன்.  ஒரு முக்கியமான விஷயம்.  இது போன்ற கலைஞர்களின் மரணம் என்னை எப்போதும் பாதிப்பதே இல்லை.  ஏனென்றால், கலைஞர்களுக்கு மரணம் இல்லை என்பதுதான்.  கண்ணதாசன் பாடியிருக்கிறானே?  கலைஞன் அவன் எழுத்தின் மூலம் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கிறான்.  பாரதம் பாடிய கலைஞனை விடவா?  எத்தனை ஆண்டுகள் என்றே யூகிக்க முடியவில்லையே?

ஆனால் பாலுவின் மரணத்துக்கு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதியதன் காரணம், அவர் முப்பது ஆண்டுகளை வீணடித்து விட்டு அப்போதுதான் ஆரம்பித்திருந்தார்.  அதனால்தான் அப்படி எழுதினேன்.  மார்க்கேஸின் மரணம் கல்யாணச் சாவு.  கொண்டாடப்பட வேண்டியது.  இருந்தாலும் இன்னொன்றும் சொல்கிறேன்.  லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மார்க்கேஸ் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் அல்ல.  மார்க்கேஸுக்கும் முன்னால் மேஜிகல் ரியலிஸத்தை எழுதிய அலெஹோ கார்ப்பெந்த்தியர் (Alejo Carpentier)  இருக்கிறார்.  கூபாவைச் சேர்ந்தவர்.  ரொம்பக் கம்மியாகவே எழுதியிருக்கிறார். ஆனாலும் மார்க்கேஸைக் காட்டிலும் உசத்திதான்.  உலக அளவில் Baroque style-இல் நாவல் எழுதிய ஒருசில கலைஞர்களில் கார்ப்பெந்த்தியரும் ஒருவர்.  ஜெர்மனியின் கட்டிடங்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.  அல்லது, செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் கட்டிடங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள் போன்றவையெல்லாம் பரோக் பாணியில் நிர்மாணிக்கப்பட்டவையே. பின்வரும் இணைப்பு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பற்றிய ஒரு ஆவணப்படம்.

http://www.bloomberg.com/video/81791604-bloomberg-ryan-s-russia-st-petersburg.html

அந்தக் கட்டிடக் கலையை எழுத்த்தில் கொண்டு வந்தவர் கார்ப்பெந்த்தியர்.  தமிழில் ப. சிங்காரத்தைச் சொல்லலாம்.  இப்போது புதிய எக்ஸைல் பரோக் பாணியில் எழுதப்பட்டதுதான்.  (அலெஹோ கார்ப்பெந்த்தியர் பற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அரைப் பக்கத்தில் ஒரு பெரிய கட்டுரை எழுதியிருக்கிறேன்.)   

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் கடவுள் என்று கொண்டாடப்பட்டவர் ஹுவான் ருல்ஃபோ  (Juan Rulfo).  மெக்ஸிகோவைச் சேர்ந்தவர். இவருடைய ஒரு சிறுகதையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  Tell them not to kill me.  இந்தக் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை நீங்கள் இந்த இணைப்பில் வாசிக்கலாம். 

http://swh.springbranchisd.com/LinkClick.aspx?fileticket=xS-SyZvT-kE%3D&tabid=30118

இவர் பெத்ரோ பராமோ என்ற மிகச் சிறிய ஒரு நாவலும் பத்துப் பனிரண்டு கதைகளும் மட்டுமே எழுதியிருக்கிறார்.  பெத்ரோ பராமோவை நான் மனப்பாடமாகச் சொல்லுவேன் என்று மார்க்கேஸ் ஒருமுறை சொல்லியிருக்கிறார் என்றால் ருல்ஃபோவைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அடுத்து, ஜூலியோ கொர்த்தஸார்.  Julio Cortazar.  லத்தீன் அமெரிக்க இலக்கியத்தைப் பொறுத்தவரை இவர் தான் என் ஆசான்.  இவருடைய Hopscotch என்ற நாவலை ஒருவர் தன் ஆயுள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கலாம்.  அப்பேர்ப்பட்ட நாவல் அது.  என்னிடம் இருந்த பிரதியை ஸீரோ டிகிரியை மொழிபெயர்த்ததற்காக ப்ரீதம் சக்ரவர்த்தியிடம் பரிசாகக் கொடுத்து விட்டேன்.  போர்ஹேஸ் எழுத்தாளர்களின் எழுத்தாளர்.  என் ஆசான்களில் ஒருவர்.  லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் நான் வாசிக்காத ஆட்கள் ஒன்றிரண்டு பேர்தான் இருக்கும்.  சமீபத்தில் மனுவெல் புய்க் (Manuel Puig)-இன் Kiss of the Spiderwoman என்ற பிரபலமான நாவலைப் படிக்க முயற்சித்தேன்.  என்னால் படிக்கவே முடியவில்லை.  அவ்வளவு போர்.  ஆனால் அந்த நாவலைப் படு சுவாரசியமான முறையில் ஆங்கிலத்தில் படமாக்கி இருக்கிறார்கள்.  படம் ஒரு க்ளாஸிக்.  இந்த இணைப்பில் நீங்கள் படத்தை ஆங்கில சப்டைட்டிலோடு பார்க்கலாம். இயக்குனர் Hector Babenco.   

https://www.youtube.com/watch?v=H_fjf01iebc

இந்தப் படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன்.  நேரமில்லை. இதில் ஓரினச் சேர்க்கையாளனாக நடிக்கும் William Hurt சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறார்.  நம்ப முடியாத நடிப்பு.  பாதத்தைத் தரையில் வைக்கும் போது கூட ஒரு திருநங்கை போலவே வைத்து நடப்பார்.  மறக்கவே முடியாத படம். 

மார்க்கேஸின் செவ்வாய்க்கிழமை பகல் தூக்கம் என்ற சிறுகதையை நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.  அதோடு அவருடைய நீண்ட பேட்டி ஒன்றையும்.  அந்தப் பேட்டி 20 ஆண்டுகளுக்கு முன் மீட்சி பத்திரிகையில் வந்தது.  மார்க்கேஸுக்கு நோபல் கிடைத்ததால்தான் உலகம் பூராவும் பிரபலம் ஆனார்.  ஆனால் எனக்கு மார்க்கேஸை விட மரியோ பர்கஸ் யோசா தான் பிடித்தமானவர்.  லத்தீன் அமெரிக்காவில் மார்க்கேஸ் ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளர் என்று நினைக்கிறேன்.  அங்கே ஜனரஞ்சக எழுத்து அவ்வளவு விசேஷமாக இருக்கிறது என்பது இதன் அர்த்தம்.  ஹூலியோ கொர்த்தஸாரும் போர்ஹேஸும்தான் நாம் கொண்டாட வேண்டிய ஆட்கள்.  கடந்த சில தினங்களாக தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் படித்துக் கொண்டிருக்கிறேன்.  முடிக்கும் வரை எதுவும் எழுதக் கூடாது என்று இருந்தேன்.  வைஷு மற்றும் உங்கள் கடிதம் இதை எழுத வைத்து விட்டது.  நான் தினசரியும் படிப்பதில்லை ஆதலால் உங்கள் இருவரின் கடிதம் வந்திருக்காவிட்டால் மார்க்கேஸின் மரணச் செய்தி கூட எனக்குத் தெரிந்திருக்காது.  இன்னொரு விஷயம்.  தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் என்னை ஈர்க்கவில்லை. பல இடங்களில் தொலைக்காட்சி சீரியல் போல் இருக்கிறது.  நபகோவ் சொன்னார், தஸ்தயேவ்ஸ்கி ஒரு சராசரி எழுத்தாளர் என்று.  அது உண்மைதானோ என்று இடியட்டைப் படிக்கும் போது தோன்றுகிறது.  ஆனால் மற்ற நாவல்களையும் படித்து விட்டுத்தான் முடிவுக்கு வர வேண்டும். இந்த மாதத்தில் எல்லாவற்றையும் முடித்து விடுவேன். 

சாரு    

   

     

    

Comments are closed.