மயன் மாளிகை

எக்ஸைல் 2-இல் வெற்றி அடைந்து விட்டேன்.  அதாவது, எக்ஸைல் 2-இன் பிரதியை அராத்து, கணேஷ் அன்பு, கார்த்திக் மூவரிடமும் கொடுத்திருந்தேன் அல்லவா?  மூவரும் சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரி சொன்னார்கள்… நாவல் நன்றாக இல்லை.  இதையே பலவிதமாக சுவாரசியமான முறையில் மாற்றி மாற்றி சொன்னார்கள். 

கணேஷ் சொன்னார்.  பாட்சா படத்தைப் பார்த்து விட்டு, தலைவரிடமிருந்து இன்னொரு பாட்சா வரும் என்று பார்த்த போது பாபா வந்ததைப் போல் இருக்கிறது.

அராத்து சொன்னார்.  அருமையான பொங்கல் கொடுக்கிறீர்கள்.  சாப்பிட்டேன்.  மேலும் மேலும் மேலும் மேலும் பொங்கல் பொங்கல் பொங்கல் என்று கொடுத்தால் சலிக்குமா சலிக்காதா?  எக்ஸைல் 2 அதுதான்.

அராத்து காமெண்ட்:  நாவலில் குதூகலம் இல்லை; கொண்டாட்டம் இல்லை; செக்ஸ் சுத்தமாக இல்லை.  ஒரே நாய்கள் நாய்கள் நாய்கள்… இல்லாவிட்டால் குப்பைத் தொட்டி.  இல்லாவிட்டால் பெருந்தேவி.  இல்லாவிட்டால் மீன்கள்.  பேசாமல் இந்த நாவலுக்கு ”நாய்கள் நாய்கள் நாய்கள் மற்றும் மீன்கள்” என்று பெயரிட்டிருக்கலாம்.  அப்படியே மண்டையே கலங்கிப் போகும் அளவுக்கு நாய்கள்.

அராத்து அப்படிச் சொன்ன போது எனக்குப் பெருமையில் மண்டை கனத்துப் போனது.  ஏனென்றால், ஓநாய் குலச்சின்னம் நாவலைப் பற்றி ஒரு விமர்சகர் குறிப்பிட்ட போது நாவல் முழுவதுமே ஓநாயின் ஓலம் கேட்டுக் கொண்டே  இருந்தது… நானே ஓநாயாக மாறியது போல் உணர்ந்தேன் என்றார்.    

மதுரையிலிருந்து விமானம் பிடித்து அடித்துப் பிடித்து ஓடி வந்தார் கார்த்திக் பிச்சுமணி.  அவர் நம் நிர்மலைப் போல் உலக இலக்கியம் படிப்பவர். எக்ஸைல் மூன்று பாகங்கள் உண்டு.  முதல் பாகம் புலம்பல், புலம்பல், புலம்பல்.  இரண்டாம் பாகம் ஓகே.  மூன்றாம் பாகம் அற்புதம். 

மூன்று பேருமே மூன்றாம் பாகத்தைப் புகழ்ந்தார்கள்.  ஏனென்றால், மூன்றாம் பாகம் மிகவும் புதிதாக எழுதியது.  பெண்கள் இல்லை. செக்ஸ் இல்லை. மனிதர்கள் இல்லை.  வெறும் நாய்கள், பூனைகள், மரங்கள் மற்றும் ஒரு கொலைகாரன்.  மூன்றாம் பாகத்தை மட்டும் தனிப் புத்தகமாகப் போடுங்கள்…  பிச்சுக்கிட்டுப் போகும் என்றார் அராத்து.

இந்த ஐந்த ஆண்டுகளில் முதல் முறையாக என் நண்பர்களை குழந்தைகளாகப் பார்த்தேன்.  No offence meant.  க்ளாஸிக்கை என்றால் இப்படித்தான் இருக்கும்.

”நீங்கள் முன்கூட்டியே ஒரு க்ளாஸிக் எழுதப் போகிறேன் என்று திட்டமிட்டு எழுதியிருக்கிறீர்கள்.  ராஸ லீலாவில் இந்தத் திட்டம் இல்லை… அது காட்டாற்று அருவி போல் ஓடுகிறது.  எக்ஸைலில் அது இல்லை.”  – இது அராத்து.

கார்த்திக் தருண் தேஜ்பாலின் The Alchemy of Desire, The Story of My Assassins, The Valley of Masks மூன்று நாவல்களையும் படித்திருக்கிறார். 

“தருணின் influence-ஐ எக்ஸைலில் பார்த்தீர்களா?”  – சாரு

“நிச்சயமாக.  குறிப்பாக ஆல்கெமியின் இன்ஃப்ளூயன்ஸ் வெளிப்படையாகவே தெரிகிறது.  ஆனால் ஆல்கெமி ஒரு போர்…” என்றார் கார்த்திக். 

எக்ஸைலும் போர் தான் என்ற கருத்து தொக்கி நின்றது.  க்ளாஸிக்குகளை எப்படி வாசிப்பது?  அது ராஸ லீலாவைப் போல் ஜெட் வேகத்தில் போகுமா?  யோசியுங்கள்.  எனக்கு பதில் தெரியாது. 

மூவருமே ஏகோபித்த முறையில் சொன்ன இன்னொரு கருத்து: ”இந்த நாவல் எஸ். ராமகிருஷ்ணனுக்கும் உத்தமத் தமிழ் எழுத்தாளனுக்கும் ரொம்பப் பிடிக்கும்.  இப்போதுதான் சாரு திருந்தியிருக்கிறார் என்பார் உ.த.எ.”

ம்… இப்படித்தான் எதிர்வினை வரும் என்று எனக்குத் தெரியும்.  உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  ”புதிய எக்ஸைலை முதலில் ஆங்கிலத்தில்தான் வெளியிடுவேன்.  தமிழில் வராது” என்று முன்பே எழுதியிருந்தேன் அல்லவா?  இந்தக் காரணத்தினால்தான்.   தமிழ் வாசகர்களுக்கு இன்னும் ஒரு பரோக் பாணி நாவலைப் படிக்கும் அளவுக்கு  அனுபவம் இல்லை என்று நினைக்கிறேன்.  படித்து விட்டு கருத்தைச் சொன்னால் திட்டுகிறாரே என்று கருதாதீர்கள் நண்பர்களே!  ஒருவேளை என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.  ஆனால் உலக அளவில் க்ளாஸிக்குகள் இவ்வாறாகத்தான் எழுதப் பட்டிருக்கின்றன.   எக்ஸைலில் தமிழனின் 5000 ஆண்டுக் கால கலாச்சார வரலாற்றை எழுதியிருக்கிறேன்.  அதெல்லாம் நாய்களின் ஓலத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டதே? என்றார் அராத்து. இல்லை…  ஒரு சிலருக்காவது அந்தக் கலாச்சார வரலாறு உள்ளே போகும். 

ஆங்கிலத்தில்தான் வெளியிடுவேன், தமிழில் வராது என்று சொல்லியும் இப்போது தமிழில் வெளியிடுவதன் அவசியம் என்ன?  பாலு மகேந்திரா பற்றிய என் கட்டுரையை உயிர்மையில் எழுதிய போது, உயிர்மை வெளி வர இன்னும் மூன்று தினங்கள் இருந்த போது பிச்சைக்காரனும் இன்னும் பல வாசகர்களும் “மூன்று நாட்கள் பொறுக்க வேண்டுமா?” என்று மிகுந்த ஏக்கத்துடன் எழுதியிருந்தனர்.  அதனால்தான் எக்ஸைலை தமிழில் வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். 

இப்போது மூன்று நண்பர்களின் கருத்துக்களையும் கேட்ட பிறகு வேறொரு அணுக்கமான முடிவு எடுத்தேன்.  இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலையும் எக்ஸைலையும் இரண்டு நாவல்களாக வெளியிட்டால் என்ன என்று யோசிக்கிறேன்.  இப்படிச் செய்வதென்றால் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் எடுக்கும்.  இது பற்றி உங்கள் கருத்தையும் அறிய ஆர்வமாக இருக்கிறேன்.  மூவருமே சொன்ன இன்னொரு கருத்து.  ”இந்தப் புதிய எக்ஸைலை ஆங்கிலத்தில் கொண்டாடுவார்கள்.  ஆங்கில வாசகர்களுக்கு என்றே எழுதப் பட்டது போல் உள்ளது.”

என் எழுத்தில் நீங்கள் தொடர்ந்து ஒரு விஷயத்தைக் கவனித்து இருக்கலாம்.  தாய்லாந்தாக இருந்தாலும் சரி, ஃப்ரான்ஸாக இருந்தாலும் சரி, என் எழுத்தில் அந்த நிலவியல் பற்றிய வர்ணனையே இருக்காது.  மனிதர்கள் மட்டுமே வருவர்.  ஆனால் எக்ஸைலில் நாகூரையும் மைலாப்பூரையும் அப்படியே பக்கம் பக்கமாக வர்ணித்திருக்கிறேன்.  இந்த வர்ணனை விவகாரம் எல்லாம் எனக்கே புதிது.  ஆனால் நாவலில் அந்த இடங்களை நான் உருகி உருகி எழுதினேன்.  தோய்ந்து தோய்ந்து எழுதினேன்.  அந்த எழுத்தில் வாழ்ந்தேன்.  ஆனால் மூவருக்கு அது உவக்கவில்லை.  ம்ஹும் என்று கையை விரித்து விட்டார்கள்.  ”ஆங்கில வாசகர்களுக்குப் பிடிக்கும்…”

”தருணால் கெட்டுப் போய் விட்டீர்கள்…” என்றார் கணேஷ்.  ஆனால் தில்லி நாட்குறிப்புகளை ஒரு தில்லிக்காரனோ அல்லது ஒரு வெளிநாட்டு வாசகனோ படித்தால் நிச்சயம் உருகிப் போய் விடுவான்.  இந்த அளவுக்கு ஒரு ஊரைப் பற்றிய நாவல்கள் சர்வதேச அளவிலேயே கம்மி.  தில்லி மாநகரை ஒரு தாஜ்மஹலைப் போல் பரோக் (Baroque) பாணியில் இந்த நாவலில் நிர்மாணத்திருக்கிறேன்.    கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக மலைக்கு அருகில் உள்ள பிந்து நதியின் கரையிலிருந்து ரத்தினங்களையும் தங்கத்தையும் எடுத்து வந்து பாண்டவர்களுக்காக மயன் கட்டிய மாளிகைக்கு ஒப்பானது எக்ஸைலில் வரும் தில்லி.  எனவே இதை அனுபவிக்கும் ஒரு வாசகன் எவனோ அவனுக்காகவே எக்ஸைல். 

இப்போது எக்ஸைலில் கடைசி கடைசியாக ஒருசில திருத்தங்கள் செய்வதற்காக எடுத்தேன்.  எக்ஸைலில் குணரத்தினம் என்று ஒருவர் வருகிறார்.  திடீரென்று வருகிறார்.  திடீரென்று மறைகிறார்.  அது எப்படி?  குணரத்தினத்தை உதயா எப்படி சந்திக்கிறான்?  எங்கே சந்திக்கிறான்?  அவர் யார்?  அவரை அவனுக்கு அறிமுகப்படுத்தியவன் வின்சண்ட்.  வின்சண்ட் யார்?  இன்னும் முன்னூறு பக்கம் சேர்ந்து விட்டது.  பக்கத்தைப் பற்றி யாருக்குக் கவலை?  பிரதி முழுமையாக இருக்க வேண்டும்.  எனக்கு நாவலின் பிரதி மட்டுமே முக்கியம்.  அதற்கு மட்டுமே நான் உண்மையானவனாக இருக்க வேண்டும்.  நாவல் எதை வேண்டுகிறதோ அதை நான் கொடுத்தே ஆக வேண்டும்.  வாசகரோ, தமிழ்ச் சூழலோ எதுவும் இப்போதைக்கு முக்கியம் இல்லை.  பிரதி.  அது ஒன்றே குறி.  வேறு எதிலும் என் கவனம் சிதறாது. 

charu.nivedita.india@gmail.com 

   

Comments are closed.