மலையேறியின் கதை

சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு மோகன் என்ற வாசகர் எனக்குப் பின்வரும் கதையை அனுப்பியிருந்தார்.  இந்தக் கதை எதில் வருகிறது என்று யாருக்காவது தெரியுமா?  கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதியில் வருகிறது என்று எழுதாதீர்கள்.  ஒரிஜினலாக இதை எழுதியது யார், எந்த நூலில் வருகிறது என்று தெரிய வேண்டும்.

***

மலையேறி ஒருவன் பல ஆண்டு தயாரிப்புக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட சிகரத்தின் மீது ஏறும் தீர்மானத்தில் கிளம்புகிறான். உச்சியை அடையும் வேளையில் இருட்டிவிடுகிறது. எதையும் பார்க்க முடியவில்லை. எங்கும் ஒரே இருள். நிலவையும் நட்சத்திரங்களையும் மேகக் கூட்டங்கள் மறைத்து விடுகின்றன.

சிகரத்தை அடைய ஒரு சில அடிகளே இருக்கும்போது துரதிர்ஷ்டவசமாக அந்த மலையேறி கீழே விழுந்துவிடுகிறான். புவி ஈர்ப்பு விசை பெரும் வேகத்துடன் அவனை கீழே இழுக்கிறது. மரணத்தின் விளம்பிலிருந்த அந்த நேரத்தில் அவன் தன் வாழ்வைப்பற்றி நினைத்துப் பார்க்கிறான். அப்போது கீழே விழுந்துகொண்டிருந்தவன் திடீரென்று நிறுத்தப்பட்டான். நிறுத்தியது  அவன் இடுப்பிலிருந்த கயிறு. கீழே விழுந்து விடாமல் அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது அந்தக் கயிறு. அப்படியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த  அவனுக்கு அப்போது கடவுளை நோக்கி இறைஞ்சுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. கடவுளே, என்னைக் காப்பாற்றுங்கள்என்று குரல் கொடுத்தான்.

அந்தக் கணத்தில் ஆகாயத்திலிருந்து ஓர் குரல் கேட்டது. உனக்கு என்ன வேண்டும்?’

என்னைக் காப்பாற்றுங்கள் கடவுளேஎன்றான் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருந்த அந்த மலையேறி.

நீ உண்மையிலேயே நம்புகிறாயா நான் உன்னைக் காப்பாற்ற முடியும் என்று?’

நிச்சயமாக நம்புகிறேன்.

அப்படியானால் உன் இடுப்பில் செருகியுள்ள கத்தியை எடுத்து அந்தக் கயிற்றை அறுத்து விடு.

அங்கே ஒருகணம் மௌனம் நிலவுகிறது. பிறகு அந்த மலையேறி பலம் கொண்ட மட்டும் கயிற்றைத் தன் கைகளால் இறுகப் பற்றிக்கொள்கிறான்.

மறுநாள் மீட்புக் குழுவினர் அங்கே வந்தபோது ஒரு மலையேறி உறைந்த நிலையில் இறந்திருப்பதைப் பார்த்தனர். ஒரு கயிற்றில் அவன் உடல் தொங்கிக்கொண்டிருந்தது. கைகள் கயிற்றை இறுகப் பற்றியிருந்தன.

ஆனால், அவன் உடலுக்குக் கீழே பத்தடி உயரத்தில் இருந்தது தரை.

charu.nivedita.india@gmail.com

Comments are closed.