பின்வரும் கடிதம் சென்ற ஆண்டு தருண் தேஜ்பாலுக்கு நான் எழுதிய கடிதத்தின் தமிழ் வடிவம். கொஞ்சம் சுருக்கப்பட்டதும் கூட. தில்லியில் என்னைச் சந்தித்துப் பேச அழைத்திருந்தான். போவதற்கு முன் அவனுடைய நாவலையும் படித்து விட்டுப் போவதே நாகரிகம் என்று எண்ணிப் படித்தேன். அதன் விளைவுதான் இந்தக் கடிதம். ஆல்கெமியைப் படித்ததும் அவனுடைய மற்ற இரண்டு நாவல்களையும் படித்து விட்டுப் போகலாம் என்று முடிவு செய்தேன். அதையும் அவனிடம் சொன்னேன். சீக்கிரம் வா என்றான். நான் அவனுடைய மூன்று நாவல்களையும் படித்து முடிக்கும் அவன் கோவா ஜெயிலில். ஜெயிலில் போய் சந்தித்த போது, தில்லியில் சந்திக்க அழைத்தேன். நீ ஜெயிலில் வந்து சந்திக்கிறாய்” என்றான் அவனுடைய வழக்கமான சத்தமான பஞ்சாபிக் குரலில். பின் வரும் கடிதம் எக்ஸைல் நாவலின் ஆரம்பத்தில் வருகிறது. நாவலில் ஒரு இடத்தில் தருணும் ஒரு பாத்திரமாக வருகிறான்.
அராத்து, கணேஷ், கார்த்திக் மூவருக்கும் இந்த எக்ஸைலில் மிகப் பெரிய பங்கு உள்ளது. இவர்கள் மூவரும் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பெரிய க்ளாஸிக் என்று சொல்லியிருந்தால் அப்படியே நாவலைத் தூக்கி பப்ளிஷரிடம் கொடுத்திருப்பேன். அவர்கள் விமர்சித்ததால்தான் இன்னும் 300 பக்கத்தைச் சேர்த்து நாவலையும் ஆறு பாகங்களாகப் பிரித்து விட்டேன். வடிவத்தையும் மாற்றினேன். ஆக, இவர்கள் மூவருக்கும் இந்த நாவலின் உருவாக்கத்தில் பெரும் பங்கு உள்ளது. இப்போதைய நிலையில் எக்ஸைல் இரண்டு லட்சம் வார்த்தைகளில் உள்ளது. இதற்கு மேல் சேர்க்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.
டியர் தருண்,
சில ஆண்டுகளுக்கு ஒரு தமிழ்ப் பத்திரிகையில் என்னை இலக்கிய பயங்கரவாதி என்று எழுதியிருந்தார்கள். காரணம், இவர்களுடைய வழிபாட்டுக்குரிய எழுத்தாளர்களை நான் சராசரிகள் என்று சொல்கிறேன். இதேபோல், இந்திய ஆங்கில எழுத்தும் என்னை அதிகம் கவர்ந்ததில்லை. அவர்களுடைய எழுத்தையும் சராசரி என்றே சொல்ல வேண்டும்; அல்லது, அலுப்பூட்டும் எழுத்து. சமீபத்தில் அமிதாவ் கோஷின் கல்கத்தா க்ரோமோஸோம்ஸைப் படிக்க முயற்சி செய்தேன். இருபது பக்கத்தையே தாண்ட முடியவில்லை. பலராலும் வாசிக்கப்படும் Immortals of Meluha அக்ஷய் குமாரின் ஸ்பெஷல் 26-ஐப் போல் இருந்தது. அர்விந்த் அடிகாவின் வெள்ளைப் புலி பரவாயில்லை; ஆனால் அதில் இலக்கிய நயம் கம்மி. இந்த நிலையில் ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய நாவலைக் கொஞ்சம் பயத்துடன் தான் அணுகுகிறேன். மேலும், வேறொரு துறையில் புகழ் பெற்றவர்களின் நாவல்களை நான் தொடுவதே இல்லை. இந்த நிலையில் உன்னுடைய ஆல்கெமி ஆஃப் டிஸையரை நான் படிக்காமல்தான் இருந்தேன். ஆனால், தெஹல்காவின் தீவிர விசிறிகளில் நான் ஒருவன். இன்னமும் என்னிடம் அதன் tabloid பிரதிகள் இருக்கின்றன. தெஹல்கா மட்டும் அல்லாமல் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த Granma இதழ்களும் என் வசம் உள்ளன. வீடு மாற்றும் போதெல்லாம் என்னைத் தொடர்ந்து லாரிகளில் இந்த இதழ்களும் வந்து கொண்டிருப்பதால் என் மனைவி அவந்திகாவின் கோபத்துக்கும் நான் ஆளாகிக் கொண்டிருக்கிறேன். ”இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தப் பத்திரிகைகளைச் சுமந்து கொண்டிருக்கப் போகிறாய்?” என்ற கேள்விக்கு தெஹல்கா பத்திரிகை பற்றி நீண்டதொரு பிரசங்கம் பண்ணுவேன். அந்தப் பிரசங்கத்துக்குப் பயந்தே இப்போதெல்லாம் அவள் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை.
இந்த நிலையில் உன்னை தில்லியில் சந்திப்பதற்கு முன்னால் உன்னுடைய நாவலைப் படித்து விட்டு சந்தித்தால் நல்லது என்று எண்ணி சில தினங்களுக்கு முன்னால் The Alchemy of Desire நாவலை வாங்கினேன். My god… என்ன சொல்ல? மரியோ பர்கஸ் யோசாவுக்கு நோபல் கிடைத்த போது எனக்கு வாழ்த்துச் சொல்லி ஒரு நூறு மெஸேஜ் வந்திருக்கும். காரணம், முப்பது ஆண்டுகளாக யோசாவின் பெயரைத் தமிழ்நாட்டில் சொல்லி வருகிறேன் நான். யோசாவின் ஒரு டஜன் நாவல்களையும் இரண்டு இரண்டு முறை படித்திருக்கிறேன். நான் யோசாவின் தீவிர விசிறி. ஆனால் யோசா எந்தக் காலத்திலும் என் எழுத்தில் கொஞ்சமும் செல்வாக்கு செலுத்தியதில்லை. என்னை transgressive writer என்கிறார்கள். என் transgressive comrades-ஆன வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், ஜார்ஜ் பத்தாய் எல்லோரும் படு போர் என்பதால் அவர்களுடைய எழுத்தும் என்னை பாதித்ததில்லை. ஆனால் முதல் முதலாக ஒரு உயரமான, வசீகரமான, பஞ்சாபியின் எழுத்து என்னை பாதித்து விட்டது. நான் எழுதிய எக்ஸைல் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்குக் கொடுத்திருந்தேன். ஆனால் உன் ஆல்கெமியைப் படித்த பிறகு மொழிபெயர்ப்பை நிறுத்தச் சொல்லி விட்டேன். ஏனென்றால், அந்த நாவலில் பல இடங்கள் மௌனமாக இருப்பதாகத் தோன்றியது. உன் நாவலைப் படித்த பிறகுதான் இந்த எண்ணம் ஏற்பட்டது. இப்படி நடப்பது என் வாழ்வில் முதல் முறை. ஆம், தருண், ஆல்கெமி என்னை அந்த அளவு பாதித்து விட்டது. அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நான் எழுதியது போலவே உள்ளது. உதாரணமாக, அந்த நாவலின் நாயகன் படிக்கும் நாவல்கள் கூட நான் படிக்கும் நாவல்களாகவே இருக்கின்றன. உதாரணம், All About H. Hatterr.
உன்னுடைய ஆங்கிலத்தில் ஒரு நாகத்தின் வசீகரம் தெரிகிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் தெஹல்கா நிருபர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். எழுத்து என்பது பற்றிச் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்பது கேள்வி. ஓரிரு வார்த்தை என்ன, ஒரே வார்த்தையில் சொல்கிறேன் என்று சொல்லி எழுத்து என்பது மேஜிக் என்றேன். தருண், நீ ஒரு மேஜிஷியன்.
2013-இல் தருண் தேஜ்பாலுக்கு எழுதிய கடிதம்.
Comments are closed.