மயன் மாளிகை (3)

சென்ற மாதம் நடந்த வாசகர் வட்ட சந்திப்புக்கு புதியவர் ஒருவர் வந்திருந்தார்.  இளைஞர்.  வயது 23.  மென்பொருள் துறை.  மிரட்சி கொள்ளச் செய்யும் அளவுக்குப் படித்திருக்கிறார்.  அவரையும் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் இருந்தோம்.  அராத்து இல்லை.  இளைஞர் என்னிடம் உரையாடுவதில் ஆர்வமாக இருந்தார்.  அவரிடம் என்னிடம் கேட்க குறைந்த பட்சம் நூறு கேள்விகள் இருந்தன.  அதில் ஒரு பத்தைக் கேட்டிருப்பார்.  அதற்கே ஒரு மணி நேரம் ஆயிற்று.  மற்ற எல்லோரும் எங்கள் வாய் பார்த்து அமர்ந்திருந்தனர்.  இது சம்பந்தமாக மற்றவர்கள் மறுநாள் வாசகர் வட்டத்தில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய போது இளைஞர் தன் பக்கத்து நியாயத்தைப் பக்கம் பக்கமாக எழுதினார்.  ஏய் தம்பி, செய்ய வேண்டிய அராஜகத்தை எல்லாம் செய்து விட்டு என்ன நியாயச் சுன்னி வேண்டியிருக்கிறது?  பு… என்று தான் எழுத நினைத்தேன்.  பெண்ணியவாதிகள் சண்டைக்கு வருகிறார்கள்.  நான் தொடர்ந்து எழுதி வருகிறேன்… வட்டச் சந்திப்புக்கு வரும் புதியவர்கள் செய்யும் அக்கிரமம் பற்றி.  நீயோ என் எழுத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறாய்.  அப்படி இருக்கும் போது நீ செய்யும் அக்கிரமம் பற்றி உனக்கு ஏன் புரியவில்லை?  நீயும் நானும் உரையாடுவதைப் பார்ப்பதற்காகவா மற்ற நான்கு பேரும் அங்கே வந்து குந்தியிருக்கிறார்கள்?  அவர்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?  எல்லோரும் சமமாகப் பேச வேண்டிய சூழலை உருவாக்குவதுதானே வாசகர் சந்திப்பு?  நீ செய்த விஷயத்துக்குப் பெயர் பேட்டி.  அல்லது, உனக்கு விருப்பம் இருந்தால் நீ எனக்கு மெயில் அனுப்பியிருந்தால், உன்னோடு தனியாக பத்து மணி நேரம் கூட நான் பேசியிருப்பேன்.  தனியாக.  அமேதிஸ்ட் காஃபி ஷாப் அதற்கு உகந்த இடம்.  தொந்தரவே இராது.  நான் எப்போதுமே இது போன்ற சந்திப்புகளுக்குத் தயார்.  மஹாபலிபுரம் வேண்டாம், மது வேண்டாம்…  வெறும் அமேதிஸ்ட் போதும்.   காசு கூட நான் செலவு செய்து தருவேன்.  நாள் பூராவும் என்னோடு பேசு.  ஆயிரம் கேள்வி கேள்.  அதை விட்டு விட்டு ஐந்தாறு பேர் கூடும் வாசகர் வட்டச் சந்திப்பில் வந்து நீயே நூறு கேள்வி கேட்டு என்னோடு பேசிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் என்ன கேணச் சுன்னிகளா?  இதை அவர்கள் மறுநாள் வட்டத்தில் சுட்டிக் காட்டினால் அவர்களையே திட்டுகிறாய்?  நீயெல்லாம் எங்கே உருப்படப் போகிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது. 

இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், இந்தத் தம்பியே என்னிடம் பேசிக் கொண்டிருந்ததால், மற்றவர்களையும் பேச விட வேண்டும் என்ற கண்காணிப்பு உணர்வு எனக்கு அதிகமாகி அதுவே என் மண்டையை அழுத்த ஆரம்பித்து விட்டது.  தம்பி என்னோடு முக்கால் மணி  நேரம் பேசினால் உடனே அவரை (அநாகரிமாக) துண்டித்து மற்றவர்களைப் பேச அழைத்தேன்.  கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நான் இப்படி நாட்டாமை செய்ய வேண்டியதாகி விட்டது.  இது எனக்கு அப்போது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.  23 வயதான ஒரு பையனால் அந்தச் சந்திப்பே வீணாகி விட்டது. 

அந்த உரையாடலில் நான் பதினைந்தாயிரம் ஆண்டுத் தமிழனின் வரலாற்றை  எக்ஸைலில் எழுதியிருக்கிறேன் என்று சொல்லி விட்டேன் போல.  அது பற்றி இளைஞர் மறுநாள் வாசகர் வட்டத்தில் என் கருத்தைக் கிழி கிழி என்று கிழித்து எழுத, மற்ற நண்பர்கள் சாருவையே திட்டுகிறாயா என்று கேட்டு அவரை ஓட ஓட விரட்ட  கடைசியில் அவரே வட்டத்திலிருந்து விலகுமாறு ஒரு சிறிய வன்முறை ஆயிற்று. 

15000 ஆண்டுகள் என்பது அந்த வாதத்தில் வைக்கப்பட்ட ஒரு சிறிய பிழை.  ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கென்னி ஜி என்பதற்கு பதிலாக க்ளேடர்மேன் என்று சொல்லி விட்டேன்.  அப்போது நள்ளிரவு இரண்டு மணி… தூக்கக் கலக்கத்தோடு கொலைப்பசி வேறு.  அதுபோல் நடந்த ஒரு பிழைதான் 15000.  ஆனால் அந்த இளைஞர் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையைச் சேர்ந்தவர் போல.  தமிழுக்கு 2000 வருஷத்துக்கு மேல் வரலாறே இல்லை என்று வட்டத்தில் எழுதி எனக்கு செம மாத்து விட்டார். 

இப்போது எக்ஸைலை எடிட் செய்து கொண்டிருந்த போது அந்த இடம் வந்த போது இந்த விஷயம் ஞாபகம் வந்தது.  நான் இரண்டு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகே இந்த விஷயங்களை எழுதினேன்.  இதில் நான் மேற்கத்திய பாணியைப் பின்பற்றவில்லை.  எனக்கு தொல்காப்பியரும் அகத்தியரும் (அகஸ்திய ஸம்ஹிதா), போகரும், தேரையரும்தான் ஆதாரங்கள்.  தொல்காப்பியர் எந்தக் காலம்?  அவரே தான் ஒரு தொகுப்பாசிரியர் தான் என்று சொல்கிறார்.  ஒவ்வொரு பாயிரத்தின் முடிவிலும் ”என்மனார் புலவர்” என்று முடிக்கிறார். அப்படியானால் அவருக்கு முன்பிருந்த புலவர்கள் எழுதியதையே இவர் ஆதாரமாகக் கொள்கிறார் என்றுதானே பொருள்? 

அகத்தியர், தொல்காப்பியர், தேரையர், போகர் தவிர நான் பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் கமில் ஸ்வெலபில் ஆகியோரின் ஆய்வுக் குறிப்புகளையும் வாசித்தேன்.  முதல் சங்கம் 4440 ஆண்டுகள் நீடித்திருந்தது.  89 அரசர்கள் தொடர்ச்சியாக அதை போஷித்தனர்.  இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் நீடித்தது.  49 அரசர்கள் அதை வளர்த்தனர்.  ஆக, இதற்கே 8000 ஆண்டுகள் என்றால் சங்க வரலாறு 15,000 ஆண்டுகள் நீள்கிறது என்பதில் தவறு என்ன?  தம்பி சொல்கிறார், மொழி தோன்றியே 5000 ஆண்டுகள்தான் ஆகிறதாம்.  அப்படித்தான் அவருடைய பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்தார்களாம்.   

ஏய் தம்பி, இந்த மெக்காலே புருடாவையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு வா.  2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆட்கள் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள்.   சர்வாங்க சவரம் செய்யும் நாவிதர் ஒருவர் (மருத்துவர் என்பார்கள்) மூக்கு அறுந்து போன ஒருவனைப் பலகையில் கிடத்தி, அவனுடைய நெற்றித் தோலை அறுத்து எடுத்து மூக்கில் வைத்துப் பொருத்தியதைப் பார்த்த ஒரு வெள்ளைக்காரர் இது பற்றி லண்டனுக்கு எழுதியிருக்கிறார்.  200 ஆண்டுகளுக்கு முன்னால்.  இந்த அறுவை சிகிச்சை பற்றி போகரும் தேரையரும் சொல்கிறார்கள்.  தகரத்தைத் தங்கமாக்கி இருக்கிறார்கள்.  தண்ணீரில் நடந்திருக்கிறார்கள்.  தன் கூட்டை விட்டு இன்னொரு சவத்தில் உயிர் பாய்ந்திருக்கிறார்கள். 

போகர் நவ பாஷாணத்தை எப்படிச் செய்தார்?  நவ பாஷாணம் செய்யும் போது அதன் உஷ்ணத்தில் தாவரங்கள் எரிந்து போகும்; மனிதர்களும் மாய்ந்து போவர்.  எல்லோரும் கீழே போய் விடுங்கள் என்கிறார் போகர்.  மனிதர்கள் இறங்கி விட்டனர்.  ஆனாலும் அவர் பாஷாணம் செய்யும் போது தாவரங்கள் கருகவில்லை.  அங்கே இருந்த கடம்ப மரத்தின் குளிர்ச்சி தான் காரணம் என்கிறார் போகர்.  அந்தக் கடம்ப மரத்திலிருந்து குதித்து தான் காளிங்கனை மாய்த்தான் கிருஷ்ணன்.  காளிங்கனின் விஷம் பட்டு எல்லா தாவரங்களும் கருகி விட்ட போது கடம்பம் மட்டும் அப்படியே பசுமை மாறாமல் இருந்தது. 

புத்தகத்தைப் படித்து விட்டு இதையெல்லாம் எழுதவில்லை.  கடம்பத்தைத் தேடி இந்தியா பூராவும் அலைந்தேன்.  இந்தியாவில் கடம்ப மரம் எங்கெங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.  ஒரு கடம்பங் கன்றை ஈரோட்டிலிருந்து அனுப்பி வைத்தார் ரமேஷ்.  வீட்டில் வைத்தேன்.  ஒருசில மாதங்களிலேயே தோட்டத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கிறது கடம்பம்.  தினந்தோறும் அதோடு பேசுகிறேன்.  அது சொன்ன பெருங்கதைதான் எக்ஸைல். 

எக்ஸைல் உங்களுக்குப் புரியாமல் போகலாம்.  செக்ஸ் இல்லாமல் இருக்கலாம்.  எக்ஸைலில் நீங்கள் பழைய சாருவைப் பார்க்க முடியாது.  அதில் madness இருக்காது.  எக்ஸைல் ஞானத்தை பேசுகிறது.    It’s a sober novel. 

ஒரு ரகசியத்தைச் சொல்லி விடுகிறேன்.  பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்களின் ரத்தத்தில் ஒரு விஷத்தைப் பாய்ச்சினார்கள்.  இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தியர்களால் அந்த விஷத்திலிருந்து வெளியே வர முடியாது.  ட்ராகுலாவின் கடியைப் போன்றது அந்த விஷம்.  அது என்னவென்றால், இந்தியனே, நீ ஒரு காட்டுமிராண்டி.  சிந்திக்கத் தெரியாதவன்.  அறிவியல் தெரியாதவன்.  கோழை.  ஜாதிப் பிரிவினைகளைக் கொண்டவன்.  தீண்டாமையைப் பின்பற்றியவன்.  கல்லையும் மரத்தையும் கும்பிட்டவன்.  நீ அடிமையாக வாழப் பிறந்தவன்.  நீ பெருமை என்று சொல்வதெல்லாம் இழிவானது. 

இந்தக் குற்றவுணர்வை, இந்தத் தாழ்வு மனப்பான்மையை பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்களுக்கு ஏற்படுத்தினார்கள்.  பெரியார் போன்றவர்கள் இதன் விளைவாகத் தோன்றியவர்களே.  இப்படிச் சொல்வதால் எக்ஸைலை நீங்கள் இந்துத்துவா என்று முத்திரை குத்த முடியாது.  நான் அதில் சொல்லியிருப்பது தமிழ் மரபு.  சித்தர் மரபு.  பத்தாயிரம் ஆண்டுத் தமிழர்களின் கலாச்சார வரலாறே எக்ஸைல். 

இன்னும் ஒரு வாரத்தில் முடித்து விடுவேன்.  நிர்மல், ராஜேஷ், செல்வகுமார் மூவரும் படித்து முடித்ததும் பதிப்பாளரிடம் சேர்த்து விடுவேன்.   அநேகமாக எல்லாம் முடிய ஒரு மாதம் ஆகும்.  நாவலை மீண்டும் படிக்கும் போது எனக்குள் ஏற்பட்ட உத்சாகத்துக்கு அளவே இல்லை.  எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியீட்டு விழா நடக்கும்.  ஸ்ரீவில்லிப்புத்தூருக்காகக் காத்திருக்கத் தேவையில்லை.

 

 

Comments are closed.