துணுக்கு 1
ஆவணப் படத்துக்கான படப்பிடிப்புக்காக என் வீட்டுக்கு எதிரில் உள்ள பார்க்குக்குப் போனோம். மாலை நேரம். அங்கே கைலி அணிந்த ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். கசாப்புக் கடையில் வேலை செய்பவராக அல்லது வெங்காய மண்டி ஓனராகவோ இருக்கலாம். அப்படி ஒரு தோற்றம். ஆனால் கிட்டத்தில் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவர் ஒரு மைலாப்பூர் பிராமணர் என்று. மைலாப்பூர் பிராமணர்கள் எந்த காஸ்ட்யூமில் இருந்தாலும் சொல்லி விடுவேன்.
காவலாளி இங்கே படம் பிடிக்கக் கூடாதே என்று புன்சிரிப்புடன் சொன்னார். இளைஞர். எனக்கு நன்கு தெரிந்தவர். அப்படியானால் வாருங்கள், நாகேஸ்வர ராவ் பூங்காவில் எடுத்துக் கொள்ளலாம் என்று கிளம்பினேன். உடனே காவலாளி, பரவால்ல சார், பார்க் பெயர் வராமல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த போது கைலிக்காரர் வெளியே நின்று கொண்டிருந்தார். சீனியிடம் ஏதோ பேசினார்.
பிறகு சீனி என்னிடம் சொன்னார். கைலிக்காரர் கேட்டாராம், ”இவர் க்ரீன் லேபிள் ஸ்காட்ச் குடிப்பவர் ஆயிற்றே, அதெல்லாம் கூட படத்தில் வருமா?” என்று.
5000 ஆண்டுகளாக பிராமணர்கள் உயர்ந்த இடத்தையே தக்க வைத்துக் கொண்டிருப்பது இதனால்தான். உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.
எனக்கு விஸ்கி பிடிக்காது என்பது கைலிக்காரருக்குத் தெரியாது போல. ப்ளாக் லேபிள், கோல்ட் லேபிள்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். க்ரீன் லேபிள் இருக்கிறதா, தெரியவில்லை. நான் இத்தனை விளம்பரப்படுத்தியும் ரெமி மார்ட்டின் இன்னும் விளிம்புநிலை மதுவாகவே இருப்பதன் காரணம் புரியவில்லை.
துணுக்கு 2
ஆவணப் படத்தில் சில உலகத் தரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. உலகத் தரம் என்றால், அரிதினும் அரிதான, மிரட்டலான காட்சிகள் என்று பொருள். அதையெல்லாம் நான் முழு நீளப் புனைவு சினிமாவுக்காக என்று வைத்திருந்தேன். ஆவணப் படம் முந்திக் கொண்டது.
படப்பிடிப்பில் சில கலாட்டாக்களும் நடந்தன. இயல்பாக நடங்கள் என்றார் இயக்குனர். இதுதானே இயல்பு என்றேன்.
கொஞ்சம் பழைய வேஷ்டியில் இருங்கள், பட்டு வேஷ்டியெல்லாம் செயற்கையாக இருக்கும் என்றார் இயக்குனர்.
”எப்போதும் பட்டு வேஷ்டியில்தானே இருப்பது வழக்கம். சினிமாவுக்காக மாற்றிக் கொள்ள முடியாது” என்றேன்.
பின் குறிப்பு: ஆவணப் படத்துக்கு இன்னும் போதுமான அளவுக்கு நிதி உதவி கிடைக்கவில்லை. சரி, பழையபடி சாந்த்தியாகோ போய்ச் சேர்ந்த பிறகு அங்கிருந்து எழுதுகிறேன். கல் நகரும்.