நானும் ஆவணப்பட இயக்குனரும் வரும் ஆகஸ்ட் மத்தியில் சீலே செல்ல இருக்கிறோம். பயணமே இரண்டு தினங்கள். போக இரண்டு, வர இரண்டு. வேறு எளிய வழி இல்லை. அமெரிக்கா வழியில் சென்றால் நேரம் குறையும். ஆனால் அமெரிக்கர்களிடம் போய்த் தொங்க முடியாது. வீசாவுக்கான நேர்காணல் தேதி கிடைக்கவே மூணு மாதம் ஆகும். சீலேயில் 15 நாள். ஆக, மொத்தம் 19 நாள். எங்களோடு வர விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். போக வர டிக்கட் செலவு இரண்டரை லட்சம். எல்லாம் குத்துமதிப்புதான்.
வருபவர்களுக்கு சில அன்பு நிபந்தனைகள்: தென்னமெரிக்கா முழுவதும் யாரும் தண்ணீர் குடிப்பதில்லை. வைன், பழரசம், பியர் என்றுதான் குடிக்கிறார்கள். ஆனால் என்னால் தண்ணீர் குடிக்காமல் வாழ முடியாது. இரண்டு மணி நேரம் கூட. அதனால் நான் அரும்பாடு பட்டு வாங்கி வைத்திருக்கும் தண்ணீர் பாட்டிலைக் காலி பண்ணக் கூடாது. ஏனென்றால், எந்த சூப்பர் பஸாரிலும் தண்ணீர் பாட்டில் கிடைக்காது. தண்ணீர் என்று சொல்லி சோடாதான் கொடுப்பார்கள். அக்வா என்றாலே அங்கே சோடாதான். ஆனால் ஸ்பானிஷில் அக்வா என்றால் தண்ணீர். ஆனால் தென்னமெரிக்கர்களுக்குத் தண்ணீர் என்றாலே சோடாதான். வெறும் நீர் என்றால் உடம்பு சுகமில்லையா என்பார்கள்.
வைன் குடிக்கலாம்தான். ஆனால் வைன் குடித்தால் என் தண்ணீர்த் தாகம் மூன்று நான்கு மடங்காக அதிகரித்து விடுகிறது. நான் ஒரு தண்ணீர் அடிக்ட்.
காலையில் ஏழு மணிக்குக் கிளம்புகிறோம் என்றால் 6.55க்கு நிற்க வேண்டும். நான் கடைசியில் குளித்துக் கொள்கிறேனே என்று சொல்லக் கூடாது. கழிப்பறையில் புகை பிடிக்கக் கூடாது.
சீலேயில் நிறைய வெனிசுவலா பெண்கள் இருப்பார்கள். இந்த உலகிலேயே செக்கோஸ்லாவேகியப் பெண்களுக்கு அடுத்தபடியாக அல்லது அவர்களுக்கு நிகரான அழகிகள் வெனிசுவலா பெண்கள்தான். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சியுற்று கண்களை மூடாமல் நின்று விடக் கூடாது. பார்த்தும் பார்க்காதது போல் நடந்து கொண்டிருக்க வேண்டும். அதிலும் நிக்கர் போட்டு, அதிலும் மேல் பக்கம் கிழித்து விட்டிருப்பார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளவே கூடாது.
சீலே மூன்றாம் உலக நாடு என்பதால் கண்ட இடத்தில் சிகரெட்டைப் பிடித்துப் போடுவார்கள். இந்த விஷயத்தில் நீங்களும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம்.
நான் சாந்த்தியாகோவில் செல்லும் காஃபி ஷாப்களில் பெண்கள் இரண்டே இரண்டு ரிப்பன்கள் மட்டுமே அணிந்து உங்கள் மீது சாய்ந்து கொண்டு காஃபி கொடுப்பார்கள். ஒழுங்கு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். இந்தியப் பக்கிகள் என்று நம்மைப் பற்றித் தாய்லாந்துப் பெண்கள் சொல்கிறார்கள். கவனம். இந்தியாவின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.
விக்தோர் ஹாராவின் நிலத்துக்குச் செல்கிறோம். அவருடைய ஒரு பாடலையாவது கேட்டிருக்க வேண்டும்.
சைவ உணவு கிடைக்கவே கிடைக்காது. வாய்ப்பே இல்லை. சென்ற முறை நான் மூன்று வேளையும் ஸ்டீக் சாப்பிட இயலாமல் நிறைய பட்டினி கிடந்தேன். கிராமங்களில் அற்புதமான சாப்பாடு கிடைக்கும். அங்கே வெளுத்து வாங்கலாம். சாந்த்தியாகோ நகரம் அமெரிக்கர்களின் காலனியாகக் கிடக்கிறது, உணவு விஷயத்தில். அதனால் ஸ்டீக் மட்டும்தான் கிடைக்கும். சென்னையில் இட்லி கடைகளே இல்லாமல் திரும்பின இடமெல்லாம் பீட்ஸா கடையாகவே இருந்தால் எப்படி இருக்கும், அப்படி.
எனக்கு யோசனை எதுவும் சொல்லக் கூடாது. சென்ற முறை நடந்தது. உயரம் ஏறினால் எனக்கு மூச்சு விட முடியாது என்பதால் ஒரு மாத்திரை டப்பா வாங்கினேன். டாலரை ரூபாயால் பெருக்கி, 3000 ரூ. ஆகிறது சாரு, நாம் குஸ்கோ போய் வாங்கிக் கொள்ளலாம் என்றார் கூட வந்தவர். குஸ்கோவில் கிடைக்கவில்லை. மூச்சு விட முடியாமல் மறுநாளே நான் மட்டும் சாந்த்தியாகோ கிளம்பினேன். இம்மாதிரி அதிகப் பிரசங்கி வேலைகள் செய்யவே கூடாது. நான் ஜெயமோகன் அல்ல. ஜெயமோகன் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். நான் யார் என்ன சொன்னாலும் கேட்டு, குட்டிச் சுவரில் முட்டிக் கொண்டு மறுநாள் ப்ளாகில் திட்டி எழுதுவேன். வேண்டாம், செய்யாதீர்கள். மற்றபடி நான் பழகுவதற்கு இனியவன் தான்.
சைவ உணவு கிடைக்கவே கிடைக்காது, சொல்லி விட்டேன்.
வர விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள, charu.nivedita.india@gmail.com