எத்தனை பேர் சீலே வருவதற்கு ஆர்வப்பட்டு எழுதினார்கள் என்று கேட்டார் நண்பர். ஒத்தர் கூட இல்லை என்றேன். ”நீங்கள் எழுதியிருக்கும் லட்சணத்தைப் பார்த்தால் வர நினைப்பவர்களுக்குக் கூட அச்சம் வந்து விடும், இப்படியா பயமுறுத்துவது, எவன் வருவான்?” என்று கேட்டிருக்கிறார் ப்ரஸன்னா. ப்ரஸன்னா அமெரிக்காவில் இருப்பவர். சென்னையிலிருந்து கடலூர் போவது போல் சாந்த்தியாகோ கிளம்பிப் போகலாம். சீலேயர்கள் அமெரிக்கர்களை தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறார்கள். அமெரிக்கா ஒரு நரகம் என்று சீலேயர்களுக்குத் தெரியாது. சீலேயின் வறுமை அவர்களை அமெரிக்காவை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. ஆனால் ஏழ்மையிலும் செம்மை என்றால் அது உலகிலேயே சீலே மட்டும்தான். அவர்களைப் போன்ற நேர்மையான மக்களைக் காண்பது அரிது. ஜப்பான் மட்டுமே சீலே அளவுக்கு வரும். நேர்மை என்று சொல்வது கூடத் தவறு. ஒருவித நளினம். எனக்குத் தமிழில் அதை சொல்லத் தெரியவில்லை. ஒருவித அமெரிக்கை. Sophistication. ஒரு டாக்ஸி டிரைவரின் கையில் அலெஹாந்த்ரோ ஸாம்ப்ராவின் Multiple Choice என்ற நாவலைப் பார்த்தேன்.
இதுதான் என்னை மீண்டும் மீண்டும் சீலேயின் பக்கம் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு முந்தின தினம்தான் அந்த நாவலை வாங்கி அன்று இரவே படித்திருந்தேன். சடுதியில் படிக்கக் கூடிய நாவல்தான். ஸீரோ டிகிரி நாவலின் ஆரம்பத்தில் கேள்வியும், அதற்குக் கீழே ஏழெட்டு பதில்களும் போட்டு, அந்த பதில்களில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இருக்கும், அது போல் நாவல் முழுவதுமே மல்ட்டிப்பிள் சாய்ஸ் வடிவத்தில் எழுதப்பட்ட நாவல்தான் ஸாம்ப்ராவின் மல்ட்டிப்பிள் சாய்ஸ். டிரைவரின் கையில் அந்த நாவலைப் பார்த்த கணம் எனக்கு எப்படி இருந்திருக்கும்? இன்னொரு விஷயம். உங்கள் பெயர் சதாசிவம். நீங்கள் நியூஜெர்ஸியில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு இலக்கிய வாசகரும் கூட. உங்களுக்குப் பிடித்த சில தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நீங்கள் இன்பச் சுற்றுலாவாக சீலே செல்கிறீர்கள். டிரைவர் கையில் இதே நாவலைப் பார்க்கிறீர்கள். அது உங்களை எதுவுமே செய்யாது. சென்னை டென் டௌனிங் பப்பில் செட் ப்ராப்பர்ட்டியாக நூற்றுக்கணக்கான புத்தகங்களை வைத்திருப்பார்கள். எல்லாம் அற்புதமான நூல்கள். அந்த மாதிரிதான் அந்த டிரைவரின் கையில் உள்ள புத்தகம் உங்களுக்கு அர்த்தமாகும் – சீலேயுடன் உங்களுக்கு எந்தவித கலாச்சாரத் தொடர்பும் இல்லை என்றால். ”டிரைவர் கையில் ஒரு புத்தகம், சீலேயர்கள் நன்கு வாசிக்கிறார்கள்” என்று உங்கள் நண்பர்களிடம் சொல்வீர்களாக இருக்கும். நீங்கள் இலக்கிய வாசகர் இல்லை, வாழ்நாளில் எந்த நூலும் படித்தவர் இல்லை என்றால் டிரைவர் கையில் இருந்த புத்தகம் உங்கள் கண்ணிலேயே படாது.
ஆனால் எனக்கு? முந்தின நாள் இரவுதான் அந்த நாவலைப் படித்திருக்கிறேன். அலெஹாந்த்ரோ ஸாம்ப்ராவின் அந்த நாவல் 25 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய ஸீரோ டிகிரி நாவலின் வடிவத்தை ஒத்திருக்கிறது. கேள்வியும் பதில்களுமாக Multiple Choice என்ற தலைப்பில், அதே வடிவத்தில் வந்திருக்கிறது. அந்த நாவல் ஒரு டிரைவரின் கையில் இருக்கிறது.
இதைத் தமிழ்ச் சூழலில் வைத்துப் பார்த்தால், ஒரு ஆட்டோ டிரைவரின் கையில் எக்ஸைல் நாவல் இருப்பதற்கு சமம். பால குமாரன் கூட இருக்கலாம். சாரு நிவேதிதா இருப்பது சாத்தியமே இல்லை. இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு. ஆனால் சீலேயில் அது நடைமுறை.
Alejandro Zambra யார்? சீலேயின் இன்றைய இலக்கிய சூப்பர் ஸ்டார் என்று நியூயார்க்கரில் செய்தி வருகிறது. ஐரோப்பிய மொழியில் எழுதினால் இதுதான் வசதி. கோவிலில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்று புருடா விடாமலேயே, உங்கள் இலக்கியத் தகுதியை வைத்தே உலகப் புகழ் அடைந்து விடலாம். சரி, சீலேயில் ஸாம்ப்ராவின் இடம் என்ன? தமிழ்நாட்டில் ஒரு அஜித் மாதிரி. ஒரு சூர்யா மாதிரி. கொண்டாட்ட நாயகன். ஆக, என்னை அங்கே ஒரு போலீஸ்காரப் பெண்ணிடம் எஸ்க்ரித்தோர் (எழுத்தாளன்) என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் டயரியை எடுத்து ஆட்டோக்ராஃப் என்கிறாள். காஃபி ஷாப்பில் போய் எஸ்க்ரித்தோர் என்றால், என்னோடு கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடு என்கிறாள், பரிசாரகி. நம்பர் கொடுத்து மாலை எனக்கு ஃபோன் செய் என்கிறாள். வேற்று மொழிக்காரன் என்றாலும், எஸ்க்ரித்தோர் என்றால் சீலேயில் சூப்பர் ஸ்டார்தான்.
நீங்கள் ஒரு எழுத்தாளன் என்று சொன்னால், உடனடியாக ஒரு சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடக் கூடிய ஒரு நாடு – ஒரே ஒரு நாடு – உலகத்தில் எங்காவது உண்டு என்றால், அது சீலே மட்டும்தான். ஃப்ரான்ஸ் கூட அல்ல. ஃப்ரான்ஸில் எக்ரிவா(ங்) என்றால் நல்ல மரியாதை கிடைக்கும். 22 ஆண்டுகளுக்கு முன் பாரிஸில் கலாமோகனுடன் ஒரு மதுபானக் கடைக்குச் சென்று குடித்த போது கடைக்காரருக்கு நாங்கள் இருவரும் எக்ரிவா(ங்) என்று தெரிந்து குடித்ததற்குக் காசு வாங்க மறுத்து விட்டார். அது மட்டும் அல்லாமல் ஒரு போத்தல் அனிஸும் கொடுத்து அனுப்பினார். அவர் ஒரு அல்ஜீரிய முதியவர். இப்போது ஃப்ரான்ஸில் என்ன நிலைமை என்று தெரியாது. எப்படியிருந்தாலும் சீலே அளவுக்கு இருக்க முடியாது.
பாப்லோ நெரூதாவின் மூன்று வீடுகளுமே ஒரு குட்டி லூவ்ர் (Louvre) ம்யூசியம் போல் இருந்தன. ஒரே வார்த்தையில் சொன்னால், இங்கே தமிழ்நாட்டில் ஒரு உச்சபட்ச ஹீரோவை எப்படிக் கொண்டாடுகிறார்களோ அந்த அளவுக்கு சீலேயில் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள்.
என் பயண வழிகாட்டி ரொபர்த்தோவின் கையில் ஹோஸே தொனோஸோவின் (Jose Donoso) நாவல் ஒன்று இருந்தது. முந்தின தினம்தான் வாங்கியதாகச் சொன்னார். ஒழிந்த பொழுதுகளில் படித்துக் கொண்டும் இருந்தார்.
சீலேயின் மீதான என் ஈர்ப்புக்கு இதெல்லாம் மட்டும் காரணம் அல்ல. என்னுடைய 25ஆவது வயதில் நான் பார்த்த Battle of Chile என்ற ஆவணப்படமும் காரணம். மூன்று பாகங்களும் சேர்த்து நாலே முக்கால் மணி நேரப் படம். இதை நீங்கள் பார்த்தால் சீலேவுக்கும் எனக்குமான கலாச்சாரத் தொடர்பைப் புரிந்து கொள்ளலாம். நானே பலமுறை எழுதி விட்டேன். திரும்பவும் எழுதினால் சலிப்பாக இருக்கும். ஒரு ஹிந்துத் துறவிக்குக் காசியோ, இமயமலையோ எப்படி முக்கியமோ அதே அளவுக்கு எனக்கு சீலே முக்கியம். டார்ச்சர் கோவிந்தன் போன்ற நண்பர்களுக்கு இதை எவ்வளவு விளக்கினாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. Battle of Chile படத்தையும் பார்க்காமல் திரும்பத் திரும்ப ஒரே கேள்வி. இத்தனை செலவு செய்து சீலே செல்ல வேண்டுமா? ஒருவருக்கு ஆறு லட்சம் ஆகும். இரண்டு பேருக்கு பத்து லட்சம். இத்தனை செலவு செய்வதை விட ஆவணப் படத்தில் சாந்த்தியாகோ நகரின் புகைப்படங்களைக் காண்பிக்கலாமே?
இதற்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை. சும்மா ஒரு முதியவர் காதல் காட்சி என்று சொல்லி காதலியுடனும் நூறு துணை நடிகைகளுடனும் மாச்சு பிச்சுவில் இடுப்பை நெளித்து நெளித்து ஆடுவதற்கு பத்து கோடி செலவு செய்கிறார்கள். நாம் ஒரு எழுத்தாளனின் வாழ்வைப் பதிவு செய்ய பத்து லட்சம் செலவு செய்வது தப்பா?
நான் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அந்த எழுத்தாளன் தன் எழுத்து வாழ்வில் ஆதர்ஸமாகக் கொள்ளும் நிலப்பகுதிக்குமான உறவுப் பிணைப்பு பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறேன். வில்லியம் பர்ரோஸை அமெரிக்காவில் பீடஃபைல் என்றார்கள். ஓரினச் சேர்க்கை அத்தனை பெரிய கிரிமினல் குற்றமாகக் கருதப்படாத மொராக்கோவை தனது தேசமாகக் கொண்டார் பர்ரோஸ். ஜெனேயின் கதையும் அதேதான். என் பிணம் கூட ஐரோப்பிய மண்ணில் புதைக்கப்படக் கூடாது என்றார் ஜெனே. என்னை ஒரு கிரிமினலாகப் பார்த்த தேசம் ஃப்ரான்ஸ்; அந்த தேசத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்றார். அவர் உடல் மொராக்கோவில்தான் புதைக்கப்பட்ட்து. அதேபோல் ஆலன் கின்ஸ்பெர்கை இந்திய ஆன்மீகம் ஈர்த்தது. அதேபோல் ஜாக் கெரோவாக்கை திபெத்திய ஜென் பௌத்தம் ஈர்த்தது. ஈர்த்தது என்றால், இவர்களெல்லாம் தங்கள் சொந்த பூமியை நிராகரித்து விட்டு தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட தேசத்திலேயே வாழ்ந்தார்கள். சிலர் நெடுங்காலம் இருந்து விட்டுத் திரும்பினார்கள். அப்படி இந்தியாவைத் தன் தேசத்தோடு இணைத்துப் பார்த்த ஒரு கவிஞர் ஒக்தாவியோ பாஸ். அது பற்றி நீங்கள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவருடைய In Light of India என்ற சிறிய நூலைப் படித்துப் பாருங்கள். இந்தியா பற்றிய உங்களுடைய புரிதலே இன்னும் சிறப்பான முறையில் மாற்றம் அடையும்.
ஆக, சீலேவுக்கும் எனக்குமான தொடர்பும் இப்படிப்பட்டதுதான். இம்மாதிரியான பின்னணியில்தான் எனக்கும் சீலேவுக்குமான தொடர்பை அணுக வேண்டும்.
35 ஆண்டுகளுக்கு முன் நான் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் என்று அந்த்தோனியோ ஸ்கார்மேத்தா (Antonio Skarmeta) பற்றிக் குறிப்பிட்டு, அவருடைய நாவல் I Dreamt the Snow was Burning பற்றி விரிவாக எழுதினேன். 30 ஆண்டுகள் சென்று சீலே போய் இறங்கியதும் செய்தித்தாளில் முதல் பக்கத்தில் – முதல் பக்கத்தில் என்பதுதான் முக்கியம் – முந்தின தினம் ஸ்கார்மேத்தா சீலே அதிபரை சந்தித்த புகைப்படமும் செய்தியும் வந்திருந்த்து. இங்கேயும் நான் முதலமைச்சரை சந்திக்கலாம். அது செய்தி அல்ல. கலெக்டரிடம் மனு கொடுக்க ஒரு விவசாயி சந்திப்பது இல்லையா, அது போன்ற ஒரு சந்திப்பே நான் முதல்வரை சந்திப்பது. ஆனால் ரஜினியோ கமலோ முதல்வரை சந்தித்தால் அது முதல் பக்கச் செய்தி. பிரதம மந்திரி பற்றிக் கேட்கவே வேண்டாம். அவருக்குத் தெரிந்த ஒரே தமிழ் எழுத்தாளர் வள்ளுவர்தான். எனவே சந்திப்பு பற்றிப் பேச்சுக்கே இடமில்லை. சினிமா ஸ்டார் என்றால் அவர் வீட்டுக்கே போய்ச் சந்திப்பார் பிரதம மந்திரி.
இப்போது புரிகிறதா, எனக்கும் சீலேவுக்குமான தொடர்பு?
பர்ரோஸை அமெரிக்க சமூகம் ஓரினச் சேர்க்கையாளன் என்று சொல்லித் துரத்தியது. அவர் மொராக்கோ வந்தார். ஆலன் கின்ஸ்பெர்கின் அமெரிக்க வாழ்க்கை அவரைப் பைத்தியமாக்கியது. அவர் இந்தியாவுக்கு வந்து துறவிகளோடு துறவியாய் அலைந்தார். கின்ஸ்பெர்கை இங்கே யாருக்கும் கவிஞன் என்று தெரியாது. அவருக்கு இங்கே அடையாளம் இல்லை. ஆனால் அவரது மனப் பிறழ்வை இந்திய ஆன்மீகம் சொஸ்தப்படுத்தியது.
அதேபோல்,
இந்தியாவில் பெயரற்ற ஒரு எழுத்தாளனான நான் சீலேயில் அடையாளமற்றவனாகவும், மொழி தெரியாதவனாகவும் இருந்தாலும் அதை என்னுடைய மண்ணாகப் புரிந்து கொள்கிறேன்.
இதெல்லாம் போக, இந்த பூமியிலேயே சீலே ஒரு பூகோள அற்புதம். அந்த நிலப்பரப்புக்கு பூமிப் பந்தில் வேறு இணையே இல்லை. சாந்த்தியாகோவிலிருந்து 30 கி.மீ. தூரம் பயணித்தால் மைனஸ் இருபது அளவுக்குக் குளிரும் எவரெஸ்ட் போன்ற மலைச் சிகரங்களும் பனிச்சறுக்கு விளையாட்டுமாக்க் கிடக்கிறது. அச்சு அசலாக இமயத்துக்கு வந்தது போலவே உணர்ந்தேன். இது தலைநகரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில். தலைநகர் சாந்த்தியாகோவிலிருந்து கீழே 60 கி.மீ. தூரம் போனால் கடல். சாந்த்தியாகோ மையம். வடக்கே பாலைவனம். உலகின் மிகவும் வறண்ட பாலை அதுதான். கீழே தெற்கே நகர்ந்தால் அண்டார்க்டிகா பனி. எந்த தேசத்தில் இப்படி இருக்கிறது? எல்லாம் ஒரே நாளில் செல்லலாம்.
இதெல்லாம் போக, டாக்டர் அயெந்தேவும் விக்தொர் ஹாராவும். அவர்களைப் பற்றி இனிமேல் எழுத வேண்டாம் எனும் அளவுக்கு எழுதி விட்டேன்.
கடைசியாக, சீலேயர்களின் ஆரோக்கியமும் ஆயுளும். எந்த எழுத்தாளனைக் கேட்டாலும் எண்பதுக்கு மேல், தொண்ணூறுக்கு மேல் என்கிறான். ஒருத்தர் 105இல் இறந்தார் (நிக்கானோர் பார்ரா). இப்போது கூட அந்த்தோனியோ ஸ்கார்மேத்தாவின் வயது 81. ஆள் பார்க்க 61 போல் தெரிகிறார். என் பயண வழிகாட்டி ரொபர்த்தோவுக்கு என் வயதுதான். காலையிலேயே தள்ளாடியபடிதான் வருவார். என்ன செஞோர் என்று கேட்டால், குளிர்கிறது இல்லையா என்பார். கையில் சிகரெட் தொடர்ந்து எரிந்தபடியே இருக்கும். இதோ இருக்கும் பல்கலைக்கழகத்துக்கு எதற்கு டாக்ஸி, நடந்தே போய் விடலாம் என்று கிளம்புவார். அஞ்சு கிலோ மீட்டர். அதிலும் அவர் வேகம்தான் எனக்கு நாக்கில் நுரை தள்ளி விடும். வேகநடைப் பந்தயக்காரர்களைப் போல் நடப்பார். கப் கப் என்று புகைத்தபடியே. இப்படியே தொண்ணூறுக்கு மேல் வாழ்கிறார்கள்.
கடைசியாக, காசு. என்னுடைய 1000 வார்த்தை கதைக்கு 2000 டாலர் கொடுத்தது ப்ராதா நிறுவனம். ஒரு வார்த்தைக்கு ரெண்டு டாலர். கிட்டத்தட்ட சீலேயில் எழுத்தாளர்களின் வருமானம் இப்படித்தான் இருக்கிறது. என் துரதிர்ஷ்டம், சிறுகதையாகப் போயிற்று. ஔரங்ஸேப் என்றால் கோடீஸ்வரன் ஆகியிருப்பேன். சீலே பயணத்துக்கு உங்களிடம் காசு கேட்டிருக்க மாட்டேன்.
இந்தக் காரணங்களால்தான் என்னைப் பற்றிய ஆவணப் படத்தில் சீலே வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
தொடக்கத்தில் வரும் யூட்யூப் இணைப்பு ப்ரஸன்னா அனுப்பியது. பாருங்கள்.