நான்தான் ஔரங்ஸேப்… ஒரு சந்தேகம்…

பேய் வேகத்தில் ஔரங்ஸேப் நாவலின் செப்பனிடும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்.  நிச்சயமாகச் சொல்கிறேன், இதுவரை நான் எழுதியதில் இந்த நாவல் உச்சமாக இருக்கும்.  பிஞ்ஜில் வெளியாகி இருப்பது பக்க வரையறைகளுக்கு உட்பட்டு எழுதியது.  இப்போதுதான் அது முழுமையாகிக் கொண்டிருக்கிறது. 

எடிட்டிங்கில் என்னைத் தவிர ஐந்து பேர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.  ஃபைஸ் காதிரி, கொள்ளு நதீம், ப்ரஸன்னா, பிச்சைக்காரன்.  மற்றொருவர் பெயரை இப்போதைக்கு வெளியே சொல்ல முடியாது.  அவருக்கு அன்புத் தொல்லை கொடுத்து நிறுத்துமாறு சொல்வார்கள், என் நலம் விரும்பிகள்.  நாவல் வேலை முடிந்ததும் சொல்கிறேன்.

செப்பனிடும் வேலை முழுமையான பிறகு, மீண்டும் கடைசியாக நாவலில் சில விஷயங்களைச் சேர்ப்பேன்.  அது இறுதிக் கட்ட வேலை.  இந்த ஐவருக்குமே அச்சில் வந்த நாவலில் சில பகுதிகள் புதிதாக இருக்கும்.  அப்பகுதிகளுக்கு எடிட்டிங் தேவையில்லை. 

நேற்று ஒரு சந்தேகம் எழுந்தது.  ஜஹானாரா தன் தம்பி ஔரங்ஸேபை நீ என்று விளித்திருப்பாரா, நீங்களா?  அது போக, தன் கதையை எழுத்தாளனிடம் சொல்லும்போது அவர் ஔரங்ஸேபைப் பற்றிக் குறிப்பிடும்போது அவன் இவன் என்று சொல்வாரா, அவர் இவரா? 

அவந்திகா எங்கள் மகன் கார்த்திக்கை பிறரிடம் குறிப்பிடும்போது அவர் இவர் என்கிறாள்.  எனக்கோ அது அசூயையாக இருக்கிறது.  நேரில் கூட வாடா போடா எல்லாம் கிடையாது.  வாப்பா, போப்பா தான்.  வா போ கூடக் கிடையாது. 

நாகூரில் முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளை வாங்க போங்க என்றுதான் சொல்வார்கள்.  சாப்டிங்கிளா, வாரிங்களா, போறீங்களாதான்.  நாம் போய் அவர்களிடம் ரஃபி எங்கே போயிருக்கிறான் என்று கேட்டால், தரஹாவுக்குப் போயிருக்காஹா, வருவாஹா என்பார்கள் பெண்டுகள்.  உட்காருங்க தம்பி, இதோ தம்பி வந்திருவாரு, அது வரைக்கும் தேத்தண்ணி சாப்பிடுங்க என்பார் வாப்பா. 

இதுதான் குழப்பம்.  அரச குடும்பத்துப் பெண்ணான ஜஹானாரா தன் தம்பி குறித்து எழுத்தாளனிடம் அவன் இவன் என்பாரா, உரையாடலின்போது ஒருமையில் பேசுவாரா, மரியாதையாகவா?

இது குறித்து, ஃபைஸ் காதிரிக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன்.  அவர் ஒருமையிலேயே அழைக்கலாம் என்றார்.  கொள்ளு நதீம் வேறு மாதிரி நினைக்கிறார்.  அநேகமாக, நதீம் சொல்வது போல்தான் முடிவெடுப்பேன் என்று நினைக்கிறேன்.  ஏனென்றால், ஓரளவுக்காவது மூல மொழியில் சொல்வது போலவே தமிழிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.  கொள்ளு நதீம் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.  இன்னும் நான் தீர்மானமாக முடிவு செய்யவில்லை.  நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லலாம்.

அன்பின் சாரு!

தாங்கள் ஃபைஸ் காதிரிக்கு அனுப்பியிருந்த குரல் ஒலிப்பதிவைக் கேட்டேன். அதற்கு பதிலளிக்கும் முன்னர் என்னைப் பற்றிய சிறு குறிப்பு. அதன் பின்னணியில் என் கருத்தை / என் தரப்பை அறிய முடியும். நான் தொடரச்சியாக ஒரு பதினான்கு ஆண்டுகள் (1997 -2012) அறபு நாட்டு எண்ணெய் வயலில் பணிபுரிந்தேன். அதைக் குறித்தெல்லாம்கூட இந்த நாவலில் ஔரங்கசேப் விமர்சித்திருப்பார், அது சரியும்கூட. இந்தியாவில் உரிய வாய்ப்பில்லாமல் போனதால்தான் Indian Diaspora என்கிற வகையில் நம் மக்கள் தொகையில் 3% – 4% வெளியில் கிடக்க வேண்டியதாகிவிட்டது. இது உலக நடப்பில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத சதவிகிதம். ஒரு கெட்டதில் நடந்த நல்லது என்று நான் கருதுவது என்னவென்றால், நான் பணிபுரிந்த எண்ணெய் வயலில் 100 – 150 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தோம். Passport Custodian என்பது எனக்குரிய பணி, இது மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் வந்தது. உள்ளே வரும் தொழிலாளிகளிடமிருக்கும் கடவுச் சீட்டை வாங்கிக் கொண்டு சௌதி அரேபிய நாட்டு work permit (இகாமா கார்டு) கொடுத்து விடுவது, இந்த இரண்டில் ஒன்று தொழிலாளியிடமும், மற்ற ஆவணம் கம்பெனியிடமும் இருக்க வேண்டும், இது விதி, மீறப்படக் கூடாதது. அந்த வகையில் என் பணிச்சூழலில் நாள்தோறும் இந்த நூற்றுக் கணக்கான நாடுகளிலுள்ள தொழிலாளிகளிடம் நேரடித் தொடர்பில் இருந்திருக்கிறேன், ஒருநாள் விடாமல், அதே ஒரு பன்னாட்டு கிராமமாக இருக்கும்.

அதுபோக ஆண்டுக்கொருமுறை ஹஜ் புனித யாத்திரைக்காக உலக முஸ்லிம்கள் மெக்கா வருவார்கள். கொரானாவுக்கு முன்பு அது 40 – 50 இலட்சம் பேர்கள் கூடும் உலகின் மிக முக்கியமான திருவிழா. மெக்கா போவதும் அங்குள்ள பேராலயத்தில் தொழுவதும் முஸ்லிம்களின் வாழ்நாள் கனவு. நானும் அதைச் செய்வேன், ஆனால் அப்படி கூடிய மக்களை, குறிப்பாக அவர்களின் முகங்களை உள்வாங்கியிருக்கிறேன், புரிந்தச் சொற்கள், புரியாத ஒலிக்குறிப்புகளை என்னால் மீட்டெடுக்க முடியும். அந்த வகையில் மரியாதைக்கான ‘ர்’ விகுதி என்பது நிலவுடைமையும், மன்னர் முறையும் கூடிய மரபில் மட்டுமே உள்ளது என்று நினைக்கிறேன். சார்! என்று நாம் இங்கு சாதாரணமாக அழைக்கும் சொல்கூட இங்கிலாந்து காலனிய எச்சம், அதே ஆங்கிலம் பேசக்கூடிய அமெரிக்காவில் இந்த சார் / மோர் என்பது இல்லை. அரபுகளிடம்கூட இந்த மரியாதை பன்மை விகுதி இல்லை, இன்னும் சொல்லப் போனால் மலிக் என்கிற மன்னரைக் குறிக்கும் சொல்கூட அயல்மொழிச் சொல் என்கின்றனர். அதே நேரம் பக்கத்திலிருக்கும் ஈரானில் இரண்டாயிரமாண்டு கால மன்னராட்சி முறை நீடித்த பண்பாடு. அந்தப் பக்கம் எகிப்திலும் மன்னராட்சி இருந்தது. அவையெல்லாம் இந்த 19/20-ஆம் நூற்றாண்டில்தான் மக்களாட்சியாக மாறியது. நாகூர் முஸ்லிம்கள் பேசும் மொழியை மேற்கோள் காட்டியிருந்தீர்கள், எனக்கு இங்கு இந்தியர்களில் ஹைத்ராபாதிகளுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது. நிஜாமின் செல்வாக்கிற்குட்பட்ட பகுதி, லக்னௌகாரங்களும் இதேபோல்தான். எங்கெல்லாம் – பீஜப்பூர், அஜ்மீர் – நம்ம ஆற்காடு நவாபுகள், மைசூர் சுல்தான்கள் என இந்த பகுதியிலிருந்த மக்கள், சாதாரண பாமரர்ளும் சற்று மரியாதையுடனே பேசுவார்கள். பொருளாதார அலகுப்படி வர்க்கநிலையில் மேல்நிலையிலுள்ள மக்களும் இவ்வாறு மரியாதையுடனே பேசுவது இன்று வரை நடைமுறையிலுள்ளது. அப்பாவேகூட மகனைப் பார்த்து இன்றைக்கும் தாங்கள் சாப்பிட்டீர்களா, தங்களின் படிப்பு எப்படி போகிறது, உங்களுடைய பணி / வணிகம் எப்படி போகிறது என மரியாதையாகத்தான் பேசுவார்.

அதுபோக ஔரங்கசேப் வயதில் இளையவராக இருந்தாலும் – ஜஹானாரா, ரோஷனாரா  – இரு அக்காக்களும் ஔரங்கசேப்பை அவன் / இவன் என்று அழைத்திருக்க வாய்ப்பில்லை. முகலாயப் பண்பாடு என்பது பாரசீக செல்வாக்கில் இருந்த ஒன்று.

சுகுமாரனின் பெருவலி, அருந்ததி ராயின் பெருமகிழ்வின் பேரவை என தமிழிலும் முகலாயப் பின்னணி கொண்ட நாவல்களிலும் சிறிதும், பெரிதுமாக வந்திருக்கின்றன. எனவே சாண்டில்யனும், கல்கியும் எழுதியது வணிக எழுத்தாக இருந்தாலும் பாமர மொழி, அரச மொழி, சந்தைமொழி வேறுபாட்டை சுட்டக்கூடிய விளிகளை பயன்படுத்தலாம்.

அவ்வளவு ஏன் – ஃபைஸ் காதிரி நானறிந்து உருது பேசக்கூடிய உயர்குல மொழியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார், ஆனால் இங்கு சென்னையில், ராயப்பேட்டையில், பெரியமேட்டின் லப்பை முஸ்லிம்கள் புழங்கிக் கொண்டிருப்பது படுமட்டமான உருது மொழி. மயிலாப்பூர் மாமியும், வடசென்னை குப்பத்து மொழியும் தமிழே என்றாலும் வேறுபாடு இருக்கத்தானே செய்கிறது, அது இலக்கியத்தில் பதிவாகும்போது இருப்பது இருக்கிற மாதிரி வருவதுதானே முறை, சமன்படுத்துகிறேன் என்பீர்களா?

இது என் கருத்து மட்டுமே, தங்களின் முடிவு எதுவாக இருந்தாலும் எனக்கு ஏற்புடையதே…

நன்றி