எக்ஸைல் பற்றி – குழலோன்

அன்புள்ள திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கு,
குழலோன் எழுதிக்கொள்வது.
உங்களின் இத்தனை ஆண்டு கால எழுத்துப் பணிக்கு மரியாதையும், பணிவும் செலுத்தி இக்கடிதத்தைத் (கட்டுரையைத்) துவங்குகிறேன்.
****—-***—
வடிவ ரீதியாகவும், தகவல் கூறுகளின் அடிப்படையிலும் அனுபவங்களைத் தெளிவாக சொல்ல முடியுமா? கடினமான மொழியினால் மட்டுமே ஒரு நிலப்பரப்பையோ அல்லது ஒரு மனித சமூகத்தையோ விரிவுபடுத்த வேண்டுமா?
மேற்கண்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் முறையே வரிசையாக “சொல்ல முடியும்” மற்றும் “அதன் மூலமாக மட்டுமே விரிவுபடுத்த வேண்டியதில்லை”என்று உங்களுடைய எக்சைல் பதில் சொல்லுகிறது.
வடிவ நேர்த்தியில் குலையாத கதைப் போக்கு:
ஒரு கதைப் போக்கு அதன் காரண காரிய நிமித்தம் கொண்டு இப்படித்தான் இயங்கிப் பயணித்துச் செல்ல வேண்டும் என்ற மரபின் மர்மத்தை கண்டறிந்து உடைக்கும் முறைமை எக். பே. பனியனும் எப்போதோ சொல்லிவிட்டது. அதன் தொடர் குறியீடாகத்தான் என்னால் எக்சைலைக் கொள்ள முடிகிறது. அதாவது புதுமையான வடிவத்தைக் கடந்து பிறந்த புதிய வடிவம்.
ஆதி மனோ நிலை என்று ஒன்று உள்ளது. அதன் உள்ளியக்கங்கள் எதுவும் அப்பட்டமான வெளியோடு உலவும் ஒரு ஸ்பஷ்ட குணாம்சம். அதை பொத்திப் பொத்தித் தான் எழுத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியமேயில்லை என்பதன் சாத்தியங்களைத் தமிழில் இதற்கு முன் யாருமே உருவாக்கியதில்லை. ஜி.நாகராஜனோ கிருஷ்ணப் பருந்தும், மோக முள்ளும் எழுதிய ஆ. மாதவன், தி.ஜா போன்றோரோ கூட இதை சரி வர செய்யவில்லை.
காலம் குறித்த பிரக்ஞையுடன் இக்கோட்பாட்டினைப் பூரணமாக எக்சைலில்தான் காண முடிகிறது.
எங்கிருந்தோ திடீரென அடுத்த அத்தியாயத்திலேயே வைத்தியப் பொருட்கள் தொடர்பான நீண்ட பட்டியல் வளருமிடம் நாவலின் உச்சம் என கருதுகிறேன். இன்றைய நோய்மை குறித்த எந்தவொரு விளக்கப் பதிவுகளும் நிகழ்ந்து கொண்டிருக்காத களத்தில் அடுத்த வேளைக்கு மருந்துண்ணும் குறை இதன் பொதிந்த படிமம் என்பேன். இதை மேலோட்டமாக ஏதோ ஒரு மளிகைப் பட்டியல் போல வாசித்துச் செல்லும் துரதிருஷ்டவசமான வாசகர்களே இந்த நாவலுக்கு  அதிகம் இருக்கக்கூடும்.
இசைக் கோப்பிலிருந்து அவிழ்ந்து வெளியேறும் அலை மொழிகளுக்கு ஒப்பானதாக எக்சைலின் வடிவத்தைச் சொல்லலாம். இது போன்ற முயற்சிகள் வெளிச்சம் பெறுவது ஒரு தேர்ந்த கலைஞனால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று. அது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கொரு நீர்மையுடைய மனப்பக்குவமான எழுத்து தெரிந்திருக்க வேண்டும்.
அலை மொழி என்றால் அதன் ஒலி ஒரு ஆசுவாசத்தை அளித்தல் அவசியம். எக்சைலின் பாகங்களும் அதைத்தான் செய்கிறது.
திவாகர் நாயாக உருக்கொள்ளும் பகுதி முக்கியமானது. ஒரு மனிதன் எப்பொழுது நாயாகிறான்? அதன் காரணார்த்தங்கள் கவனிக்க வேண்டியது. பாருங்கள். திவாகர் நாய் என்றே விளிக்கப்படும் ஒரு மனிதனின் கீழ்மை வாசிப்பில் வெளிப்படும்போதுதான் அவன் நாயானதன் தன்மை வாசகனிடம் இடைஞ்சல்களில்லாமல் கடத்தப்படுகிறது.
கொக்கரக்கோவின் மன நிலைக்கு ஏற்ப ஒரு தார்மீகமான நெறிமுறையோடு அவனின் செயல்களைப் போஷித்த முறை அலாதியானது. நாவலில் ஆங்காங்கு அது பிரதி எடுத்து ரம்மியமாக தூவப்பட்டிருக்கிறது.
இதைப் போல நாவலின் வஸ்து, வடிவத்தினால் பாதிப்படையாது மேம்பட்டிருப்பதைக் காண முடிகிறது. நாவலின் வடிவமே ஒரு வகையான தாக்கம் தான் .
தகவல்களைச் சரடாக மாற்றும் கலை:
எக்சைலை இலக்கிய நாவல் என்று நினைத்துக்கொண்டும் படிக்கலாம், உபயோகமான தகவல்களைக் கொடுக்கப்போகிறது என்று நினைத்தும் படிக்கலாம் என்ற சாதாரண வேறுபாட்டுக்கு உள்ளாக்கிவிடும் அளவுக்கு இதை சாரு பிறப்பிக்கவில்லை. படைப்பென்பது கலைஞனின் வலி. அவ்வலி அடுத்தவனிடமும் ஏற்படும்போதுதான் அவனால் அதைப் புரிந்துகொள்ளவே முடியும்.
நாவலின் உயிரூட்டமான கண்ணியை வெட்டி வெட்டி பிரிக்காமல் அதன் பிரிவுகளில் படரும் கொடிச்சுருளாக தகவல் பொருள்கள் பொதிந்திருக்கிறது.
மாதவன் யானை ஒரே கடவுளின் திடம்பைத் தவிர மற்றொன்றை ஏற்க மறுக்கும் சீவன் மட்டுமல்ல. அது உதயாவின் ஆன்ம இயல்பைத் தனக்குள் வைத்துக்கொண்டு நிற்கும் பரிணாமமடைந்த மனிதன். அவன் காதலிக்கும் பெண் ஒருவித வினோத சக்தியென்றால் அந்த சக்தியை திடம்பு போல சுமக்கும் உதயாவிற்கு அவள் மேல் இருக்கும் ஈடுபாடு மாதவன் யானையின் பருத்த உருவத்தை அவனின் மன பருமனாக மாற்றம் அடைகிறது என்று சொல்லலாம். சாரு இதைக்கூட கதையில் ஒரு செய்கை போல எழுதிக் காட்டியிருக்கிறார். ஆனால், இங்கும், குருவாயூரில் இருந்த ஒரு யானையின் சரிதம் அறிந்திராத செய்தியின் அற்புதத் தகவல் என்ற ஒற்றைப் பார்வையிலேயே படிக்கப்படுவது இலக்கியச்சோகம் என்று சொல்வேன்.
இதே போன்ற இன்னொரு உதாரணம் அந்தப் பெண்ணும், அவளுக்கு திவாகர் இழைத்த கொடுமையும்  – மானபங்கமடைந்து மாண்ட பெண்ணொருத்தியும் பாம்புகள் தாக்கி இறந்த மனிதர்களையும் இணைத்து பொருத்தமான படிமங்களாக உருவாக்கியிருக்கிறார் நாவலாசிரியர்.
தகவல்கள் எங்கிருந்தோ துவங்கி எங்கெங்கேயோ செல்கிறது.
ஒரு சரடு போல கண்ணுக்குத் தெரியாமல் தகவல்களை உள் வாங்கிக் கொண்டு நாவலின் கதையோட்டம் எடுத்துக்கொள்ள வேண்டுமேயொழிய தகவல்களைத் தனியாக மேலெழச் செய்துவிட்டு நாவலின் உயிரை கோட்டை விட்டுவிடக்கூடாது. சாரு இத்தனை சிரமமெடுத்து கவனமான எழுத்து முறையைப் பின்பற்றியும் பெரும்பாலும் இந்த கோணத்தில்தான் அணுகப்படுகிறது. நாவலாசிரியர் அவருடைய காரியத்தை சரியாகத்தான்  செய்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. .
நிலப்பரப்பின் பிரதி:
நாகூரின் அடையாளங்கள் நிறைந்த மாறாத ஒரு தனித்த நிலத்தை இந்த நாவல் உருவாக்குகிறது. நிலத்தின் வாசனையையும் அதன் மக்களையும் நம்மால் தெளிவாக காண முடிகிறதென்றால் அது ஒரு சிறந்த நாவலின் மனசாட்சியைப் பிரதிபலிப்பதன் காரணமாகத்தான்.
யதார்த்த உண்மை குறித்த அகப் புரிதல்கள் அனைத்துமே நாமும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் கூட்டு மன முயங்குதலின் வழி பிறக்கக்கூடிய ஒருவாறான அர்த்தப்புள்ளியைத் தான் குறிக்கும். அதைத்தான் காரணமெனவும் சொல்ல வேண்டும். உதயா, கொக்கரக்கோ இருவருக்குமான உறவு அத்தகைய ஒன்று. ஒருவன் அவன் சாயல்களை மற்றொருவனிடம் இடம்பெயர்க்கப் பார்க்கிறான். அவன் சாயல்கள் மற்றொருவனோடு இணைந்து இயங்குகிறது. உதயா சில நேரங்களில் கொக்கரக்கோவின் மன அமைப்பைப் பெறுவதும், அவன் மற்ற சிலரின் அமைப்புகளைத் தன்னுடையதாக மாற்றிக் கொள்வதும் இந்த உறவின் வழி கிடைக்கும் யதார்த்த செயல்பாடுகள்.
இதை அத்தனை சுலபமாக ஒரு உரைநடை எழுத்தில் கொண்டு வந்துவிட முடியாது. ஆனால், எக்சைலில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதைத்தான் கலைத் திறமை என்று சொல்ல வேண்டும்.
இவற்றைத் தவிர நிலம் குறித்த விரிவான பகுதிகள் பொய்த் தேவு சாத்தனூரை விட ஒரு மடங்கு அதிகமாகவே வரையப்பட்டிருக்கிறது.
புரிதலில் இறுதியாக:
நாவலை வாசிக்கையில் உணர்ச்சிவசப்பட வைக்கும் மன இயல்பு ஒரு நவீன கதை பாணியை நோக்கிச் செல்கிறது என்று நினைத்து மாறுவதே உண்மையான வாசிப்பின் அளவுகோல். ஆனால், சிரித்து லயித்து சிலாகிப்பதற்காகவே நாவாலாசிரியர் இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார் என்று மேலாகப் புரிந்துகொள்ளப்படுவதுதான் அதிகமாக நடைபெற வாய்ப்பிருக்கிறது.
எக்சைல் போன்ற நாவல்களை ஒரு முக்கிய இடத்தில் வைத்து உரையாடலாக்கி மேலும் பல திறவுப்பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.
****—-***—–
இந்த என்னுடைய புரிதலிலோ அல்லது கட்டுரையில் இலக்கண ரீதியாகவோ  ஏதேனும் பிழை இருந்தால் மன்னியுங்கள். நாவல் வாசித்து ஓராண்டு கடந்து விட்டது. தற்சமயம் மதிப்பீடு செய்யும் போது கைகளில் நாவலின் பிரதி இல்லை. ஆனாலும், நினைவிலிருந்தவரை ஒன்று திரட்டி எழுதியிருக்கிறேன்.  இன்னும் நிறைய எழுத வேண்டுமென்று தோணியது. நாவல் என்னிடம் இல்லாததால் முயலவில்லை.
புக்கர் பரிசுக்காக உங்கள் பெயர் ஒரு நாள் நிச்சயம் தெரிவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
நல் ஆரோக்கியங்களுடன் நீங்கள் நீண்ட  நாட்கள் வாழப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
எக்சைல் இரண்டாம் பிரதிக்காக காத்திருக்கும்,
குழலோன்.

Comments are closed.