இந்தத் தலைப்பு சற்று ’லோடட்’ ஆக இருக்கிறது என்று நண்பர் சொன்னார். என் தலைப்புகள் எல்லாமே சட்டென்று மனதில் போய் ஒட்டிக் கொள்பவை. ஸீரோ டிகிரி. காமரூப கதைகள். ராஸ லீலா. இப்படி. ஆனால் மேலே உள்ள தலைப்பை நானே அடிக்கடி மறந்து விடுகிறேன். ஆனால் கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொன்ன கதை என்றும், கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்றும் தலைப்பு வைத்திருக்கிறேனே? மட்டுமல்லாமல் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத ரேமன் கார்வரின் what we talk about when we talk about love என்ற நாவலை நாலு பக்கம் படித்ததுதான் என்னுடைய அன்பு நாவலின் உந்துதல். அதாவது, லவ் பற்றி இப்படியா ஒருத்தன் குப்பையாக எழுதுவான் என்று எழுந்த ஆவேச உந்துதல்தான் அன்பு நாவலாக வந்தது.
பொதுவாக சீனி என் எழுத்து எதையும் பாராட்ட மாட்டார். ஒருமுறை வாய்விட்டே கேட்டு விட்டேன். ஏன் நீங்கள் என்னைப் பாராட்டுவதே இல்லை என்று. “சச்சின் டெண்டூல்கர் டபுள் செஞ்சுரியே அடித்தாலும் அதைப் பாராட்டுவார்களா? சச்சின் என்றாலே அற்புதம்தானே? உங்களுக்கு நோபல் விருதே கொடுத்தாலும் பாராட்ட மாட்டேன். நோபல் தாமதமாகக் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்வேன்.” (what a negative vib!!!) அப்படிப்பட்ட சீனியே வாய் விட்டுப் பாராட்டி விட்டார் அன்பு நாவலை. இதோ அவர் வார்த்தைகள்.
“சாரு, முடித்து விட்டேன். ஒரே அமர்வில் படித்து விட்டேன். நீண்ட நாட்கள் கழித்து தமிழில் ஒரு அற்புதமான தத்துவப் பின்புலத்துடன் ஒரு நாவல்.
தற்கால மாறி வரும் வாழ்க்கை, குடும்ப முறை, அன்பு என்ற முகமூடியை வைத்துக் கொண்டு மனப்பிறழ்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலானோர் எப்படி அடுத்தவரைக் கடித்துக் குதறுகிறார்கள் என தீவிரமாக விவரிக்கும் நாவல்.
இது ஒரு ஆட்டோஃபிக்ஷன் கிளாஸிக்!
ஆனால் எல்லோருமே புத்தகமாக வாங்குவதென்று முடிவு செய்து விட்டார்கள் போல. பிடிஎஃப் முன்பிரதிக்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை. ரொம்பவும் வேண்டிய நண்பர்கள்தான் பணம் அனுப்பினார்கள். ஜெயமோகனின் நெருங்கிய நண்பர் ஒருவர் பணம் அனுப்பினார். அவ்வளவுதான். இதை விட அவர்களிடம் நான் சீலே செல்ல பணம் கொடுங்கள் என்றாலே கொடுத்திருப்பார்கள். ஒரு நண்பர் அமெரிக்க வாழ்வின் அவலத்தைப் பற்றி எழுதியிருந்தார். எனக்கே தெரியும்தான். 3000 டாலர் சம்பளம் வாங்கினால் பத்து டாலர் கூட கையில் நிற்காது. ஆனால் நான் சொல்ல வந்தது கணவனும் மனைவியுமாக பத்தாயிரம் டாலர் சம்பளம் வாங்கும் பிரிவை. இலக்கியத்தின் மீது ஆர்வம் இல்லை. இதுவே ஒரு சித்தர் பற்றிய புத்தகம் என்றால் மிக எளிதில் ஐயாயிரம் டாலருக்கு பணம் வந்திருக்கும்.
சென்ற வாரம் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு ஃப்ரெஞ்சுத் தமிழர். டாக்டர் பட்டம் பெற்றவர். சாரு நிவேதிதா, மைலாப்பூர் என்ற இரண்டே தகவலை வைத்துக் கொண்டு, ஆறு மணி நேரம் தேடி என் வீட்டுக்கு வந்து விட்டார். ஒரு மணி நேரம் இடைவெளியே இல்லாமல் பேசினார். கொல்லிமலை சித்தரின் முகவரி வேண்டும். ஏன்? ஆன்மீக சமாச்சாரம் இல்லை. பாண்டிச்சேரியில் அவருடைய அஞ்சு கோடி பெறுமானமான வீட்டை விற்க கொல்லிமலை சித்தர் அருள் பாலிக்க வேண்டும். எனக்கு இருக்கும் பண முடையின் காரணமாக சித்தரின் முகவரியைக் கொடுத்து விட்டு ஒரு ஐநூறு யூரோ வாங்கிக் கொள்ளலாமா என நினைத்தேன். முடிவற்ற பாதை சிறுகதையைப் படித்ததால் மனசு வரவில்லை. மேலும், சித்தருக்கு துரோகம் செய்யக் கூடாது.
அன்பு என்ற இந்த நாவலைப் படித்தவர்கள் அதற்கு முன்பு எப்படி இருந்தார்களோ அப்படி இருக்க முடியாது. நாவலில் ஒரு அடல்ட் கண்டெண்ட் கிடையாது. ஔரங்ஸேபில் கூட ஓரிரு இடங்களில் வரும். இந்த நாவலில் ஒரு இடம் கூட கிடையாது. செக்ஸே கிடையாது. அன்பு மட்டும்தான். ஆனால் பதினெட்டு வயதுக்குக் கீழே உள்ளவர்கள் படிக்கக் கூடாது. படித்தால் இதயம் நொறுங்கி விடும். இதை எப்படி ஒரே வாரத்தில் சாதித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. என்னைக் குடிகாரன் என்று ஒருத்தன் சொன்ன ஒரே வார்த்தைதான் இந்த நாவலை எழுத வைத்தது. இத்தனை விரைவாக இனிமேலும் என்னால் எழுத முடியாது. உங்கள் வாழ்வில் மிக விரைவாகப் படித்த நாவல் இதுவாகத்தான் இருக்கும். சீனியும் அதைத்தான் சொன்னார். ராம்ஜியும் அதைத்தான் சொன்னார். அவர் வாழ்வில் மிக விரைவாகப் படித்த நாவல் இதுதான் என்று.
பிடிஎஃப் தேவைப்படுவோர் எழுதுங்கள். பணம் அனுப்பிய இரண்டு நண்பர்கள் மின்னஞ்சல் முகவரி எழுதவில்லை. அனுப்பினால் நாவலை பிடிஎஃப் வடிவத்தில் அனுப்புகிறேன்.
குமரேசனும் ஒரே அமர்வில் படித்து விட்டார். பறந்தது என்று செய்தி அனுப்பினார்.
பிரவீன் கடிதம்:
நாவல் வெளிவருவதற்கு முன்பே படிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும். ரோலர் கோஸ்டர் அனுபவம். ராஸ லீலாவையும் விஞ்சி விட்டது என்றே சொல்ல வேண்டும். வாழ்வைப் பற்றியும் அன்பு பற்றியும் மகத்தான ஞானத்தைக் கண்டடைய வைக்கும் நாவல். நாவலின் கடைசியில் அன்பை ஒரு கிழி கிழிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது திரும்பவும் வருகிறது. இந்த நாவல் வாழ்க்கை பற்றியும் அன்பு பற்றியுமான ஒருவரின் பார்வையையும் அணுகுமுறையையும் மாற்றி விடக் கூடியது. இதைப் படித்தவர்களின் வாழ்க்கை முன்பு இருந்ததை விட நன்றாக இருக்கும். it has given me a better insight to reshaping life itself.