அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு – டீஸர்
அன்பு நாவலை பத்து நாட்களில் சாரு எழுதியிருக்கிறார். அதுவல்ல அதிசயம். நாவலின் ஒவ்வொரு வார்த்தையுமே ஒவ்வொரு அணுகுண்டைத் தாங்கி வருகிறது. சாமி வந்தது போல் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு உக்கிரம். சாருவின் நாவல்களை என்னுடைய ரசனையின்படி இவ்வாறு வரிசைப் படுத்துவேன். எக்ஸைல், ராஸ லீலா, ஒளரங்ஸேப், தேகம், காமரூப கதைகள், ஸீரோ டிகிரி, ஃபேன்சி பனியன்.
வாதையைக் கொண்டாட்டமாக எழுதியது ராஸ லீலா. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உற்சாகமாகவும் கூடவே, சக உயிரினங்களையும் விருட்சங்களையும் நேசிக்கச் சொன்னது எக்ஸைல்.
அன்பு நாவலை சாருவின் ஆகச் சிறப்பான எழுத்தாகக் கருதுகிறேன். குடும்ப அமைப்பின் தளைகளை, கீழ்மைகளை சொன்ன பாற்கடல் (லா.ச.ரா.), அடுத்த தலைமுறை சிறுகதையில் வரும் அம்மா, 1948 நாவலில் வரும் அம்மா, மாலதி குறுநாவலில் வரும் அம்மா (அசோகமித்திரன்) இவர்களை எல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்குவது அன்பு நாவலில் வரும் வைதேகி.இந்தியக் குடும்பம், இந்தியத் தாய் முதலிய புனிதங்களின் மேல் காறி உமிழ்ந்திருக்கிறார் சாரு. கடவுள்களையே தொட அஞ்சாத எம்.வி. வெங்கட்ராம் (காதுகள்) கூட தன் மனைவியை விமர்சித்து எழுதியதில்லை. அன்னாடும் தன் கூடப் புழங்கும் வைதேகி, புவனேஸ்வரி, உலகளந்தான் என ஒவ்வொருவரையும் துப்பாக்கி எடுத்து சுடுகிறான் பெருமாள். அவனைச் சுற்றி ப்ரேதங்கள். கூடவே பெருமாளின் ப்ரேதமும்.
ஸ்ட்ரெஸ் என்று ஒரு அத்தியாயம். படிக்கப் படிக்க நம்மால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவ்வளவு உக்கிரம்.
இவ்வளவு களேபரத்தின் மத்தியிலும் பெருமாளின் நிலைமையப் பார்த்து நமக்கு அவ்வளவு சிரிப்பு வருகிறது.கூப்பிட்டக் குரல் என்று ஒரு அத்தியாயம். கத்தியை எடுத்து தன் கழுத்தைத் தானே அறுத்தக் கொள்கிறார் சாரு. எழுத்து மட்டுமே உயிர் மூச்சு என்று துறவு மனநிலையில் வாழ்பவரால் மட்டுமே இந்த நாவலை எழுத முடியும்.
ஸ்ரீராம்
***
இந்த நாவலின் மென்பிரதி தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதவும். இன்னும் மூன்று நான்கு நாட்கள் மட்டுமே இந்த வாய்ப்பு. புத்தகம் வந்த பிறகு மென்பிரதியை அனுப்ப இயலாது.
charu.nivedita.india@gmail.com
வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு – Charu Nivedita (charuonline.com)
தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்தவன்: வளன் அரசு – Charu Nivedita (charuonline.com)