லத்தீன் அமெரிக்க சினிமா (மீண்டும்…)

1982, 83 என்று நினைக்கிறேன்.  வருடம் சரியாக ஞாபகம் இல்லை.  லத்தீன் அமெரிக்க சினிமா : ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதி நானே வெளியிட்டேன்.  விலை ரூபாய் 18.  அ. மார்க்ஸ் அது பற்றி “என்ன இவ்ளோ விலை?  இவர் லத்தீன் அமெரிக்காவுக்கே சென்று எழுதினாரோ?” என்று கேட்டதாகக் கேள்விப்பட்டேன்.  கிட்டத்தட்ட அப்படித்தான்.  அப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கா பற்றி எந்தப் பேச்சுமே கிடையாது.  சே குவேரா என்றால் யார் என்றும் தெரியாது.  இப்போதுதான் சினிமாக்காரர்களின் டி ஷர்ட்டில் புன்னகைக்கிறார் சே.  அப்போது பெயரே தெரியாது.  நான் படிகள் பத்திரிகையில் சேதுராமலிங்கம் என்ற பெயரில் சே பற்றி ஒரு 20 பக்க கட்டுரை எழுதியிருந்தேன்.  அதற்காக சே எழுதிய guerrilla warfare, bolivian diary என்ற இரண்டு புத்தகங்களையும் தில்லி Defense Ministry நூலகத்திலிருந்து வாங்கிப் படித்தேன்.  என் பெயரில் எழுதினால் நக்ஸலைட் என்று உள்ளே தூக்கிப் போட்டு விடுவார்கள் என்பதால் எனக்கு அந்தப் புத்தகங்களை இரவல் வாங்கித் தந்த சேதுராமலிங்கம் பெயரிலேயே எழுதினேன்.  லத்தீன் அமெரிக்க சினிமாவை இந்தியாவிலேயே முதல் முதலாக தில்லியில் திரையிட்டார்கள்.  அநேகமாக இந்திய மொழிகளிலேயே லத்தீன் அமெரிக்க சினிமா பற்றி எழுதப்பட்ட புத்தகம் அடியேனுடையதாகத்தான் இருக்கும்.  ஏனென்றால், அந்தத் திரையிடலை நானும் வெங்கட் சாமிநாதனும் மட்டுமே பார்த்தோம்.  “கமால் ஹெ பாயி…  தோ ஆத்மி கேலியே ஏக் ஃபிலம் ஃபெஸ்டிவல் சல் ரஹா ஹே?!” என்று அந்தத் திரையரங்கின் மேனேஜர் கிண்டல் செய்து விட்டு எங்களோடு மூன்றாவது ஆளாக வந்து அமர்ந்தார்.  அவர் அந்தப் படங்கள் பற்றி எழுத வாய்ப்பில்லை, சாமிநாதனும் எழுதவில்லை என்பதால் என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா புத்தகமே இந்தியாவில் லத்தீன் அமெரிக்க சினிமா பற்றி வந்த முதல் புத்தகமாக இருக்கலாம்.  இதில் எல்லாம் ஒரு பெருமையும் இல்லை.  ஒரு வெற்றுத் தகவல், அவ்வளவுதான்.  என்ன வருத்தம் என்றால், அதற்குப் பிறகு தமிழில் லத்தீன் அமெரிக்க சினிமா பற்றி வந்த புத்தகங்களில் என் புத்தகம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.  போகட்டும்.

இப்போது எக்ஸைல் என்ற மகா பெரிய வேலையை முடித்து விட்டு ஓய்வில் இருப்பதால் – ஓய்வு என்றால் இன்னொரு வேலை; ஆனால் காலக் கெடு கொண்ட வேலை அல்ல; ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலை இரண்டு ஆண்டுகளில் முடிக்கலாம் என்று இருக்கிறேன் – லத்தீன் அமெரிக்க சினிமா நூலை இன்னும் விரிவாக எழுதலாம் என்ற திட்டமிட்டிருக்கிறேன்.  இதற்கு முழுக் காரணமும் தமிழ் ஸ்டுடியோஸ் அருண் தான்.  அவர்தான் அதற்கான படங்களைத் தருவித்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்.  அதை விட முக்கியமாக, என்னை அந்த நூலை எழுதச் சொல்லி ஊக்குவித்தார்.  எனவே அவர் நடத்திக் கொண்டிருக்கும் பேசா மொழி இதழிலேயே லத்தீன் அமெரிக்க சினிமா தொடரை எழுத உத்தேசித்துள்ளேன்.  முதலில் ப்ரஸீலிய இயக்குனர் Glauber Rochaவிலிருந்து துவங்குவேன்.  பேசா மொழியை வாசிக்க இணைப்பு தருகிறேன்.  ஆகஸ்ட் 15 இதழிலிருந்து தொடர் துவங்கும்…

http://pesaamoli.com/

 

Comments are closed.