ஒரு கனவுப் பயணத்துக்கான திட்டம்

குளிர் சாதனத்தை 22 டிகிரியில்  வைத்துக் கொண்டு, மின்விசிறியையும் போட்டுக் கொண்டு, சட்டையும் போடாமல் படித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து அவந்திகா அடிக்கடி,  ”நீ என்ன பனிக் கரடியா?” என்று கேட்டு அதிர்ச்சி அடைவது வழக்கம்.  சென்ற முறை இமயம் சென்ற போது ஒரு நண்பருக்காக கோடையில் சென்றோம்.   அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவி  நாங்கள் சென்றிருந்த பாங்கோங் ஏரியில் தங்கிய போது ஆக்ஸிஜன் போதாமையால் இறந்து விட்டதால் இனிமேல் நண்பருக்கு வட இந்தியா போகவே தடை சொல்லி விட்டார்களாம் அவருடைய தர்ம பத்தினி.  இவ்வளவுக்கும் நண்பர் லக்ஸம்பர்கில் வசிக்கிறார்.  நம் தமிழ் மக்கள் எந்த ஊருக்கு, எந்த தேசத்துக்குப் போனாலும் உடல்நலம் பேணுவதே இல்லை.  காலையில் இஞ்சி, முன்மதியம் சுக்கு பானம், இரவில் கடுக்காய் பொடி சாப்பிடுங்கள் என்று நானும் தொண்டை வறளக் கத்திப் பார்க்கிறேன்.  ஒரு ஆத்மாவும் கேட்பதாக இல்லை.  சோம்பேறித்தனத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.  இது தவிர, தினமும் ஒரு மணி நேரம் ”எட்டு” போடுங்கள்.  இரண்டு நாற்காலியை எதிரும் புதிருமாக வைத்து எட்டு எட்டாக நடக்க வேண்டும்.  அரை மணி நேரம் ஒரு திசை.  அடுத்த அரை மணி எதிர்த் திசை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எட்டு போட்டு வருகிறேன்.  நாகேஸ்வர ராவ் பூங்காவில் அப்போது என்னை விசித்திரமாகப் பார்ப்பார்கள்.  இப்போது எட்டு போடுவதற்கு இரட்டை மரங்களே எனக்குக் கிடைப்பதில்லை.  சுமார் 200 பேர் எட்டு போடுகிறார்கள்.  இது தவிர, ஏபிஸி ஜூஸ் என்று சொல்லப்படுகிற ஆப்பிள், பீட்ரூட், கேரட் சாறு குடியுங்கள்.  இதோடு மாதுளையையும், நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்ளலாம்.  என் நண்பர் ஒருவர் தன் மனைவியிடம் இதை மிக்ஸியில் செய்யச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.  மூன்று மாதம் செய்து கொடுத்து விட்டு கோபித்துக் கொண்டு மனைவி அம்மா வீட்டுக்குப் போய் விட்டாராம்.  உங்கள் பேச்சைக் கேட்டு குடும்ப வாழ்க்கையே போய் விட்டது என்று புலம்பினார் நண்பர்.  அட மூனா, இரண்டு தவறு செய்திருக்கிறீர் என்றேன்.  ஒன்று, சாறு செய்வதை இவர் தான் செய்து மனைவிக்கும் தர வேண்டும்.  மனைவியின் மீது பொது ஏற்றக் கூடாது.  இரண்டாவது, இந்த ஜூஸ் செய்வதற்கு என்று தனியாக ஜூஸர் உள்ளது.  விலை 4000 ரூ.  அதில் மிகச் சுலபமாகச் செய்து விடலாம்.  இப்படியெல்லாம் உடல்நலம் பேணினால் பாங்கோங் ஏரியில் கூட உட்கார்ந்து கொண்டு என்னைப் போல் ரெமி மார்ட்டின் சாப்பிடலாம்.  சாப்பிட்டேன்.  நீங்கள் முயற்சிக்காதீர்கள். உங்கள் உயிருக்கு நான் ஜவாப் இல்லை.  ‘

எதற்காகச் சொன்னேன் என்றால், இமயமலையில் ஆக்ஸிஜன் மிகக் குறைவான லடாக் போன்ற பகுதிகளில் நான் 50 வயதுக்கு மேற்பட்ட ஒரு இந்தியப் பயணியைக் கூட காணவில்லை.  ஆனால் 70 வயது, 80 வயது ஆன ரஷ்யர்களையும், மற்ற ஐரோப்பியர்களையும் பார்த்தேன்.  ஆனால் என் நண்பர்களில் சிலர் – வயது 30 கிட்ட –  ரொம்பவே தடுமாறினார்கள்.  அதிலும் லக்ஸம்பர்க் நண்பர் மூன்று தினங்கள் பிரக்ஞையிலேயே இல்லை.  இந்தியவின் நரக வாழ்வை விட ஐரோப்பிய வாழ்க்கை சொர்க்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.  அங்கே லக்ஸம்பர்கில் தினம் ஒரு மணி நேரம் நாக்கில் நுரை தள்ளத் தள்ள ஓடலாமே?  காலையில் நேரம் இல்லாவிட்டால் மாலையில், அல்லது இரவில்.  நண்பரோ கையைக் காலை அசைத்துக் கூட இருக்க மாட்டார் போலிருக்கிறது.  பூ மாதிரி இருந்தார்.  என்ன செய்ய?  இனிமேல் நண்பர் தமிழ்நாடு வந்தால் அவரை மெரினா பீச்சில் தான் சந்திக்க இருக்கிறேன்.

விஷயத்துக்கு வருகிறேன்.  அக்டோபரில் இமயம்.  சென்ற ஆண்டு செல்லாத வழி.  பனியைப் பார்க்க வேண்டும்.  பனியில் விழுந்து புரள வேண்டும்.  அடுத்து, மார்ச்சில் நான், அராத்து, நிர்மல், ஜெகா, கணேஷ் அன்பு ஐவரும் அண்டார்க்டிகா செல்வதாகத் திட்டமிட்டிருக்கிறோம்.  மேலும் நண்பர்கள் கலந்து கொள்ளலாம்.  ஆனால் ஜலதோஷம் மூக்கடைப்பு என்றெல்லாம் சொல்லக் கூடாது.  அண்டார்க்டிகா பற்றிய அரை மணி நேரப் படம் ஒன்றை பின்வரும் இணைப்பில் பாருங்கள்.  மார்ச்சில் செல்கிறோம்…

https://www.youtube.com/watch?v=lMnzuGwa6RI

Comments are closed.