அன்புள்ள அருண்,
ஆனந்த் பட்வர்தனின் படங்கள் பற்றி நான் எதுவும் எழுத முடியாது என்பதற்கான காரணங்களை விளக்கி நேற்று உங்களுக்கு ஒரு பத்து பக்கங்களில் கடிதம் எழுதினேன். ஆனால் கடைசியில் இரவு ஒன்பது மணி அளவில் நைட் ஷோ ஜிகிர்தண்டா பார்க்கப் போகும் அவசரத்தில் அதுவரை தட்டச்சு செய்ததைப் பாதுக்காத்து வைக்காமல் கணினியை மூடி விட்டேன் போலிருக்கிறது. அந்தப் பக்கங்களை இப்போது எங்கும் காணோம். ஆனாலும் நேற்று எழுதியதையெல்லாம் மீண்டும் ஒருமுறை சேர்த்து எழுத முயற்சி செய்கிறேன்.
ஆனந்த் பட்வர்தனின் Waves of Revolution (1975), Prisoners of Conscience (1978), In the Name of God (1991), Jai Bhim Comrade (2012) ஆகிய நான்கு படங்களையும் பார்த்தேன். சக மனிதன் எப்படி வாழ்கிறான் என்பது பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படங்கள் இவை. அப்துல் கலாம் போன்றவர்கள் வல்லரசுக் கனவை மத்திய தர வர்க்கத்தினரிடையே விதைத்து நீர் ஊற்றி வருகின்றனவர். ஆனால் எதார்த்தம் எப்படி இருக்கிறது என்பதற்குத் தெள்ளத் தெளிவாக சாட்சியம் கூறுகிறது ஜெய் பீம் காம்ரேட். மனித மலத்தை மனிதர்களே சுத்தம் செய்து, சுமந்து திரியும் அவலம் இன்றைக்கும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நடுத்தர வர்க்கத்திற்கோ பெருமுதலாளிகளால் நடத்தப்படும் ஊடகங்களுக்கோ இது பற்றிய எந்தக் கவலையும் இல்லை. அரசாங்கமோ நீங்கள் சிகரெட் குடிக்காமல் இருந்தால் எல்லாம் சரியாகும் என்று திரும்பத் திரும்பப் புளுகிக் கொண்டிருக்கிறது. இதேபோல் பல்லாயிரம் முறை தனது செவிகளில் வந்து விழும் இந்த வார்த்தைகளையே குடிமகனும் காலப் போக்கில் நம்ப ஆரம்பித்து விடுகிறான்.
ஆனால் ஆனந்த் பட்வர்தனின் மிகப் பெரிய குறைபாடு என்று நான் அவதானிப்பது என்னவென்றால், அதிகாரம் பற்றிய அவரது புரிதலில் அடிப்படையான கோளாறு இருக்கிறது என்பதுதான். அவருடைய முதல் ஆவணப்படமான Waves of Revolution இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனத்துக்கு முன்பாக பீஹாரில் உருவான மக்கள் எழுச்சியைப் பற்றியது. உயிரைப் பணயம் வைத்து, ரகசியமான முறையில் எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம். ஏனென்றால், ஜனநாயக இந்தியாவில் ஏற்பட்ட ஒரே ஒரு சர்வாதிகார ஆட்சி பற்றிய ஆவணப் பதிவு அது. ஆனால், என்னுடைய கேள்வி என்னவென்றால், பீஹாரில் ஜெயப்பிரகாஷ் நாராயணின் தலைமையிலான மக்கள் புரட்சி இந்திராவின் ராணுவத்தாலும் போலீஸாலும் கொடூரமாக ஒடுக்கப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆட்சியைப் பிடித்ததும் புரட்சியாளர்கள் இந்திராவாக மாறி இருப்பார்கள். ஜேபியைச் சொல்லவில்லை. அவர் காந்தியின் மாணவர். மற்றவர்கள்? மக்கள்? இந்திராவின் சர்வாதிகார ஆட்சியில் போலீஸும் ராணுவமும் தங்களின் விரல் நகங்களைப் பிடுங்கியது பற்றி கிளர்ச்சியாளர்களும், கம்யூனிஸ்டுகளும் நேரடியாக சாட்சியம் சொல்வதை ஆனந்த் இதுதான் ரஷ்யாவில் நடந்தது. சினாவில் நடந்தது. செக்கோஸ்லாவியாவில் நடந்தது. போலந்தில் நடந்தது. கிழக்கு ஜெர்மனியில் நடந்தது. கூபா மட்டுமே விதி விலக்கு. இந்த நாடுகளில் கம்யூனிஸ்டுகள் நடத்திய கொடுமைகளையெல்லாம் படம் எடுக்க ஒரு லட்சம் ஆனந்த் பட்வர்தன் போதாது. ஏனென்றால், ஸ்டாலினின் ஆட்சியில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். 1933-இல் மக்கள் விரோதிகள், எதிர்ப் புரட்சியாளர்கள் என்று சொல்லப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த நான்கு லட்சம் பேரை கட்சியிலிருந்து வெளியேற்றினார் ஸ்டாலின். அவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள். 1932-33இல் உக்ரேனில் சுதந்திரம் கேட்டார்கள் என்பதற்காக அங்கே உணவு செல்வதற்குத் தடை போட்டார் ஸ்டாலின். விளைவாக 70 லட்சம் பேர் பட்டினியால் செத்தார்கள். மாவோ ஆட்சியில் இருந்த 31 ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்கள் 60 லட்சம். ஹிட்லரின் 11 ஆண்டு ஆட்சியில் கொல்லப்பட்டவர்கள் 90 லட்சம். ஆனால் இதையெல்லாம் விட கொடுமை கம்பூச்சியாவில் நடந்தது. பால் பாட் (Pol Pot) ஆட்சி செய்தது வெறும் ஐந்தே ஆண்டுகள். சித்ரவதை செய்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சம். பசியாலும் நோயாலும் செத்தவர்கள் 20 லட்சம். செல்வந்தர்களின் குழந்தைகளின் கால்களைப் பிடித்து உயரே தூக்கி மரத்திலோ தூண்களிலோ சுவற்றிலோ அடித்துக் கொன்றார்கள் பால் பாட்டுகள்.
திரும்பத் திரும்ப நான் சொல்ல வருவது என்னவென்றால், இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற தேசங்களில் சமூகக் கட்டுமானத்தில், இந்த தேசங்களில் உள்ளது போன்ற சமூகப் பிரக்ஞை கட்டமைக்கப்பட்ட மனிதக் கூட்டத்துக்கு அதிகாரம் கிடைத்தால் அது பால் பாட் செய்ததையே செய்யும். இந்திராவாக இருந்தாலும் சரி, இந்திராவின் போலீஸால் நகங்கள் பிடுங்கப்பட்ட காம்ரேடுகளாக இருந்தாலும் சரி. ரஷ்யாவில் ஸ்டாலினின் போலீஸால் சைபீரியப் பனிப் பாலைகளுக்கு அனுப்பப்பட்ட வர்க்க எதிரிகளின் துயரமான கதைகளை எவ்வளவோ எழுதியிருக்கிறார்கள். உடனடியாக ஞாபகத்துக்கு வருவது அலெக்ஸாண்டர் ஸோல்ஷெனிட்ஸன். அவருடைய குலாக் ஆர்ச்பிலாகோ என்ற ஒரே ஒரு நாவலையாவது படித்துப் பார்த்து விட்டு கம்யூனிஸம் பற்றிப் பேசலாம் என்று ஆனந்திடம் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.
கம்யூனிசத்தின் மிகப் பெரிய குறைபாடு, அது சர்வாதிகார ஆட்சி முறையை அடிப்படையாக வைக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சி அமைப்பு ஸ்டாலின், மாவோ போன்ற கொடுங்கோலர்களைத் தான் உருவாக்கும். அதிலும் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளிலேயே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் கம்யூனிசம் வந்தால் அது நிச்சயமாக இன்னொரு பால் பாட் கம்பூச்சியாகவாகத்தான் போகும்.
மேலும், இந்தியர்களின் உளவியல் பற்றிய எந்த விசாரணையும் ஆனந்தின் ஆவணப் படங்களில் இல்லை. அவருடைய படத்தில் மனித மலத்தை அள்ளுகிறாள் ஒருத்தி. அவளிடத்தில் அதிகாரத்தைக் கொடுத்தால் அவள் இந்திரா காந்தியாக மாறுவாள். இதுதான் இந்தியர்களின் மனோபாவம் என்கிறேன். இது பற்றியதுதான் என்னுடைய வரப் போகும் எக்ஸைல் நாவல். அதில் உதயா என்ற கதைசொல்லிக்கு கொழும்பு நகரில் கிடைக்கும் அனுபவங்கள்தான் அந்த நாவலின் மையப் புள்ளி. வெளிவந்ததும் படித்துப் பாருங்கள்.
இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் சௌஜன்யமான சமூகச் சூழலைப் பற்றி யோசியுங்கள் என்கிறேன். அங்கே பெண்கள் இரவில் தனியாக நடமாட முடிகிறது. வன்கலவி, பெண்கள் மீதான வன்முறை என்பது அறவே இல்லை என்று சொல்லலாம். இதைப் படித்து விட்டு அங்கே வசிக்கும் தமிழ்ச் சீலர்கள், இங்கே நடப்பது உனக்கு என்ன தெரியும் என்று என்னைக் கேட்கலாம். அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இங்கே இந்தியாவில் பெண்கள் தனியாக நடமாடவே முடியாது. நட்டுக் கொண்டிருக்கும் சாமானைக் கொண்டு வந்து இடிப்பான்கள். கேலி செய்வான்கள். சீண்டுவான்கள். கை போடுவான்கள். பெண் தனியாகவும் இவன்கள் கூட்டமாகவும் இருந்தால் வன்கலவி செய்து கொன்று விடுவான்கள். இதனால் பெண்கள் இரவில் இங்கே தனியாக எங்கேயும் வெளியிலேயே செல்ல முடியவில்லை. வட இந்திய கிராமங்களில் பெண்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ள வெளியே போனால் வன்கலவி செய்து புளியமரத்தில் தொங்க விட்டு விடுகிறான்கள். இந்தியாவில் பெரும்பான்மையினர் இன்னும் காட்டுமிராண்டிக் காலத்திலேயே வாழ்கிறார்கள். மேட்டுக்குடியினரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. நட்சத்திர ஓட்டல்களில் கூட உங்கள் கைபேசி தொலைவதற்கு சாத்தியம் இருக்கிறது. அடுத்தவன் பொருளை அபகரிப்பது என்பது சர்வசகஜமாக எல்லோருடைய மனதிலும் பதிந்து போய் இருக்கிறது. சிறு குழந்தையிலிருந்தே பெற்றோரால் சிறார்கள் இதற்குப் பயிற்றுவிக்கப் படுகிறார்கள்; நேரடியாகவோ மறைமுகமாகவோ.
ஜப்பானுக்குப் போய் வரும் என் நண்பர்கள் அந்த நாட்டை பூலோக சொர்க்கம் என்கிறார்கள். முக்கியமாக, மக்களின் மனோபாவம்தான். என்னுடைய நீண்ட நாள் தோழியான எழுத்தாளர் சிவகாமி ஜப்பானில் மூன்றரை ஆண்டுக் காலம் வசித்தவர். ஒருமுறை அவர் டாக்ஸி பிடித்து ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் செல்கிறார். நடத்துனரிடம் அழைப்பிதழைக் காண்பிக்கிறார், முகவரிக்காக. போக வேண்டிய இடம் வந்ததும் காசு கொடுத்தால் நடத்துனர் மறுத்து விடுகிறார். ஏன் என்று கேட்டால், அதற்கு நடத்துனர் இப்படிச் சொன்னாராம். “அழைப்பிதழைப் பார்த்த போது அதில் நிகழ்ச்சி ஆறு மணி என்று இருந்தது. இப்போது மணி 6.10. வழியில் போக்குவரத்துத் தடங்கலும் இல்லை. நான் தான் தவறான வழியில் வந்து தாமதம் செய்து விட்டேன். எனவே காசு வாங்கிக் கொள்ள மாட்டேன்.” இதேபோல் ஆயிரக் கணக்கான சம்பவங்கள்.
ஏழையோ பணக்காரனோ இந்தியாவில் எல்லோரிடமும் ஒருவிதமான கீழ்மை மனோபாவம் காணப்படுகிறது. அடுத்தவன் பொருளை அபகரி, ஏமாற்று, அடுத்தவனைத் துன்புறுத்து – இதுதான் அந்தக் கீழ்மை மனோபாவம்.
ஆனால் ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது. ஜெர்மனியில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை 8.5 யூரோக்களாக நிர்ணயித்து உள்ளது. வரும் ஜனவரி முதல் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும். எட்டு மணி நேர வேலைக்கு ரூ.5,600. மாத ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய். கம்யூனிச சர்வாதிகாரம் இல்லாமலேயே மக்கள் நல அரசுகள் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், கார்ல் மார்க்ஸோ எங்கெல்ஸோ அல்ல. அங்கே இருந்த தத்துவப் பாரம்பரியம்தான் அதற்குக் காரணம். ”நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்; ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் தருவேன்” என்பதுதான் ஐரோப்பியச் சிந்தனை மரபின் அடிப்படை. ஆனால் ”நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்கள் உயிரைப் பறிக்கும் உரிமை எனக்கு உண்டு” என்று சொல்வது கம்யூனிசம்.
ஐரோப்பாவில் ஒரு தொழிலாளியின் மாத ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய் என்றால் இங்கே இந்தியாவில் அரசுத் துறையில் பத்து மணி நேர வேலைக்கு தினக்கூலி 300 ரூ. இது நடப்பது அஞ்சல் துறையில். இவர்கள் அரசு ஊழியர் என்ற பிரிவில் வராத, பணி நிரந்தரமோ வேறு எந்த சலுகைகளோ இல்லாத தினக்கூலிகள். கிட்டத்தட்ட கொத்தடிமைகள்தான். கழிப்பறை, மின்விசிறி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் அஞ்சலி துறையில் இப்படி ஒரு அக்கிரமம் நடந்து வருகிறது. மக்ஸிம் கார்க்கி தாய் நாவலில் எழுதியது போன்ற காட்சிகளை அஞ்சல் துறையில் இந்த தினக்கூலிகள் வேலை செய்யும் இருட்கிடங்குகளில் நீங்கள் பார்க்கலாம்.
ஆனால் ஆனந்த் பட்வர்தன் போல் நான் இதை ஒரு ஆவணப்படமாக எடுத்து என்ன பயன்? ஒன்று, நான் அடிமையாக இருப்பேன். அல்லது, அடுத்தவனை அடிமைப்படுத்துவேன். இதுதான் இந்தியர்களின் மனோபாவமாக இருக்கிறது. இந்த மனோபாவத்தை எதிர்கொள்ளாமல் வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு படம் எடுத்தால் அது ஆனந்த் பட்வர்தனின் படத்தைப் போல் தான் இருக்கும். நான் மேலே குறிப்பிட்ட அஞ்சல் துறை அவலத்தைப் போல்தான் ஜார் காலத்திய ரஷ்யா இருந்தது. இதை விட பயங்கரமான நிலைமை. ஸ்டாலின் வந்தார். எல்லாம் பொதுவுடைமை ஆயிற்று. குறைந்த பட்ச ஊதியம். எல்லோருக்கும் ரொட்டி. எல்லோருக்கும் வோட்கா. ரஷ்யாவே ஒரு பிரம்மாண்டமான மாட்டுப் பண்ணை ஆயிற்று. எல்லோரும் வோட்காவைக் குடித்து ரொட்டியைத் தின்றார்கள். யாரும் வேலை செய்யவில்லை. உற்பத்தி குறைந்தது. பொருளாதாரம் வீழ்ந்தது. சுதந்திரமும் இல்லை. எழுபது ஆண்டுகளில் கம்யூனிஸக் கனவுலகம் தகர்ந்தது. தருண் தேஜ்பாலின் The Valley of Masks என்ற நாவலில் இது ஒரு fable-ஆக மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. அந்த நாவலில் கம்யூனிஸம் என்பது தெளிவாக இருக்காது. மனித மாண்பை இழந்த வறட்டுத் தத்துவங்களும் வறட்டுக் கோட்பாடுகளும் ஒரு மனிதக் கூட்டத்தை எப்படி முகமும் ஆத்மாவும் அற்ற பொம்மைகளாக ஆக்கும் என்பதே அந்த நாவலின் கரு. அதை ஒருமுறை அவசியம் படித்துப் பாருங்கள். நான் ஏன் ஆனந்த் பட்வர்தனின் படங்களை மறுதலிக்கிறேன் என்பது புரியும்.
ஆனந்தின் படங்களில் எனக்கு ஒருதலைப்பட்ட அரசியல் பிரச்சாரமே தெரிகிறது. இந்தியாவின் பிரச்சினையை அவர் கம்யூனிஸ்டுகளின் கோணத்திலிருந்து பார்க்கிறார். இப்போதைய இந்திய அவலத்துக்கு மாற்று ஒரு போதும் கம்யூனிஸமாகாது. கம்யூனிஸம் வந்தால் அது இந்தியாவை மீட்கவே முடியாத பேரழிவில் கொண்டு போய் விடும்.
ஆனால் ஒன்று… அவசரநிலை காலகட்டத்தை அல்லது அதற்கு முந்தைய மக்களின் எழுச்சியை அவர் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறையிலேயே கூட ஒரு புனைவு சார்ந்த முழு நீளப்படமாக எடுத்திருந்தால் அதை நாம் ரசித்திருக்க முடியும்; ஒரே ஒரு நிபந்தனை. அந்தப் படம் இந்தோனிஷிய இயக்குனர் Garin Nugraho-வின் A Poet என்ற படத்தைப் போன்ற கவித்துவத்தையும் அழகியலையும் கொண்டிருக்க வேண்டும். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் என் நினைவை விட்டு அகலவில்லை. இந்தப் படத்தைப் பற்றி விரிவாக ஏற்கனவே எழுதியிருக்கிறேன். உலக சினிமா பற்றிய என் தொகுப்பு ஒன்றில் அந்தக் கட்டுரை இருக்கும். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 1965 அக்டோபர் முதல் தேதி ஏழு ராணுவ ஜெனரல்கள் கொல்லப்பட்டார்கள். இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்பட்டது. அப்போதைய அதிபராக இருந்த ஜெனரல் சுஹார்த்தோ கம்யூனிஸ்டுகள் என்று சந்தேகப்பட்டவர்களையெல்லாம் கைது செய்து தீர்த்துக் கட்டினார். பல்லாயிரம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டார்கள். அப்போது Takengon என்ற கிராமத்தில் வசித்து வந்த கவிஞரான இப்ரஹீம் காதிர் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஆனால் கொல்லப்படவில்லை. 28 தினங்கள் அவர் சிறையில் இருந்தார். அப்போது சுமார் ஐந்து லட்சம் பேர் ராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தன் கண்களால் கண்டார். சிறையில் அவருடைய வேலை தூக்கு மாட்டப்பட்டு கொல்லப்படுபவர்களின் தலையில் சாக்கு மாட்டுவது. உலகின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாக இந்தப் படம் கருதப்படுவதற்குக் காரணம், இரண்டே இரண்டு சிறை செல்களிலும், சிப்பாய்களின் நடைபாதையும் தான் படம் முழுவதும் நடக்கிறது. வசனங்களாலும் பாடல்களாலும்தான் கதை சொல்லப்படுகிறது. Didong என்ற இந்தோனேஷியாவின் பாரம்பரிய இசை வடிவம். இதில் didong பாடகர் தனது பாடல்களின் மூலமாகக் கதை சொல்வார். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் காதிரின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இப்ரஹீம் காதிரே அவரது பாத்திரத்தில் நடித்துப் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட ஆவணப்படம் மாதிரிதான். ஆனால் இதில் இருக்கும் அழகியலும் கவித்துவமும் இந்தப் படத்தை ஒரு அற்புதமான கலை அனுபவமாகவும் மாற்றுகிறது. இப்படிச் சொல்வதால் ஆனந்தின் படங்களில் அழகியல் இல்லை என்று சொல்வதாக அர்த்தப்பட்டு விடக் கூடாது. ஆனந்தின் படங்கள் இந்திய எதார்த்தத்தை மிக மேலோட்டமாகவும், அதில் உள்ள உள்முரண்கள் பற்றிய பிரக்ஞை இல்லாமலும், ஒருதலைப்பட்சமாகவும், கம்யூனிஸக் கண்ணாடி அணிந்தும் பார்த்திருக்கின்றன என்பதுதான் என் குற்றச்சாட்டு. மற்றபடி இந்திராவின் அவசரகால நிலையைப் பற்றி கரின் நுக்ரஹோவின் ”ஒரு கவிஞன்” பாணியில் அமைந்த ஒரு படத்தையே ஆனந்த் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அதைச் சொல்ல நான் யார்? இப்போதைய அளவில் ஆனந்தின் படங்களில் உள்ள உணர்ச்சிகர ரொமாண்டிசிஸம் எனக்கு ஏற்புடையதல்ல என்பதால் அவர் படங்களை நான் நிராகரிக்கிறேன். Waves of Revolution படத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் தனக்கு முன்னே குழுமியுள்ள உள்ள லட்சக் கணக்கான மக்களைப் பார்த்து அவர்களின் ஜாதிகளை விட்டு ஒழியுங்கள் என்று கூறுகிறார். அந்தப் பொதுமக்களில் ஒருவர் தன் பூணூலை அறுத்து எறிகிறார். 1975-இல் நடந்த சம்பவம். நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது இந்தியாவில் சாதி முரண்பாடுகள் எப்படி இருக்கின்றன? பிராமணர்கள் பூணூலை அறுத்துப் போட்டு விட்டு அமெரிக்கா போய் விட்டனர். சாதி ஒழிந்து விட்டதா? நாற்பது ஆண்டுகளில் சாதி முரண்பாடு இன்னும் இறுக்கமாகி விட்டது. சாதி ஒடுக்குமுறை இன்னும் அதிகமாகி விட்டது. இதைத்தான் ஆனந்த் romanticize செய்கிறார் என்று குறிப்பிட்டேன்.
ஆனந்தின் மற்ற படங்களையும் பார்த்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. இப்போது எழுதியிருப்பவை ஆரம்பத்தில் குறிப்பிட்ட நான்கு படங்களைப் பற்றி மட்டுமே. ராம் கே நாம் படத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. புதிய எக்ஸைலில் இதைத்தான் பிரதானமாக விவாதித்திருக்கிறேன் என்பதால் இங்கே மீண்டும் அதைப் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை.
சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லி விட்டதாகத் தோன்றவில்லை. இருந்தாலும் முடிக்கிறேன். ஒரே வாக்கியத்தில் சொன்னால், மனதுக்குப் ப்ரீதியில்லாத விஷயங்களை இதுவரை செய்ததில்லை. எனவே ஆனந்த் பட்வர்தன் பற்றி இப்போதைக்கு வேண்டாம். எல்லாப் படங்களையும் பார்த்து விட்டு ஒருவேளை எழுதலாம்.
அன்புடன்,
சாரு நிவேதிதா
8.4.2014.
Comments are closed.