ஜிகிர்தண்டா

ஜிகிர்தண்டா பார்த்தவுடனே எழுதியிருக்க வேண்டும்.  இரண்டு தினங்களுக்கு முன்பே கணேஷுடன் பார்த்து விட்டேன்.  இரவு பத்து மணி காட்சிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டன.  எழுத நேரம் இல்லை.  ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்காக எழுதிக் கொண்டிருந்ததில் இரண்டு தினங்கள் ஆகி விட்டன.  தமிழ் என்றால் 2000 வார்த்தைகள் கொண்ட கட்டுரைக்கு எனக்கு 2 மணி நேரம் ஆகும்.  ஆங்கிலத்தில் இரண்டு தினங்கள் ஆகிறது.

இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கிளம்புகிறேன்.   அதற்கு முன் ஜிகிர்தண்டா பற்றி ஒருசில வார்த்தைகள்.  அந்தப் படம் பற்றி விரிவாக அந்திமழையில் எழுத இருக்கிறேன்.  என்ன விஷயம் என்றால், www.andhimazhai.com இணைய இதழில் ஆகஸ்ட் 15 முதல் கேள்வி பதில் பகுதி தொடங்க உள்ளது.  வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் அளிக்கிறேன்.  பலரும் ஜிகிர்தண்டா பற்றிக் கேட்டிருப்பதால் அதிலிருந்து தொடங்கலாம் என்று இருக்கிறேன்.  கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: q2charu@andhimazhai.com

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் www.andhimazhai.com இல் கேள்வி பதில் பகுதி வெளிவரும்.

மற்றபடி ஜிகிர்தண்டா தமிழில் நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் இரண்டாவதாக வருகிறது.  முதல், ஆரண்ய காண்டம்.  ஆனால் ஆரண்ய காண்டம் புத்திஜீவிகளுக்கான படமாக ஆகி விட்டது.  மக்கள் ரசிக்கவில்லை.  ஜிகிர்தண்டா எல்லோரையும் வசீகரித்து விட்டது.  சினிமா பற்றிய என் எழுத்துக்களைப் பயின்ற  சீரிய மாணவர் ஒருவர்தான் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நம்புகிறேன்.  பின்நவீனத்துவ சினிமா என்றால் இதுதான்.  மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படம்.  விரிவாக அந்திமழையில் எழுதுவேன்.  நண்பர்கள் தவற விடாமல் இந்தப் படத்தைப் பார்த்து விடும் படி சிபாரிசு செய்கிறேன்.  நாயகன் வந்த போது மணி ரத்னம் ஒரு மகத்தான இயக்குனராக இந்திய அளவில் தெரிய வந்தார்.  அதற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் தான் என்று ராஜேஷ் சொன்னார்.  படம் பார்த்த போது நானும் அப்படித்தான் நினைத்தேன்.

கேள்விகளை அனுப்புங்கள்.  கேள்வி பதில் தொடரின் தலைப்பு: அறம் பொருள் இன்பம்.  முதல் கேள்வியே அதகளமாக இருக்கிறது.  நம்ப முடியவில்லை.  அந்திமழையில் விளம்பரத்தைப் பார்த்து விட்டு ஒரு பெண் அப்படித்தான் கேட்டிருக்கிறார்.  மற்றவை அந்திமழையில்.

 

Comments are closed.