நண்பர்கள்…

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துகிறேன்.  நூறு முறை எழுதி விட்டேன்.  இது நூற்று ஒன்றாவது முறை.   முன்பெல்லாம் அலைபேசியை இரவில் ஆஃப் செய்யாமல் கீழே உள்ள என் அறையில் வைத்து விட்டு மாடிக்குச் சென்று உறங்குவது வழக்கம்.  பிறகு நடைப் பயிற்சிக்குப் போகும் போதுதான் இரவில் ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம்.  (இப்போதெல்லாம் இரவு பத்து மணிக்கு அலைபேசியை ஆஃப் செய்து விடுகிறேன்.  அதன் பிறகு காலை ஆறு மணிக்குத்தான் அதைத் திறப்பது.)

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் உயிர்மைக்கு என் மாதாந்திரக் கட்டுரையைக் கொடுக்க வேண்டியிருந்தது.  பொதுவாக நான் (மாதப் பத்திரிகை என்றால்) கெடு முடிவதற்கு நாலைந்து தினங்களுக்கு முன்பே கொடுத்து விடும் வழக்கம் உள்ளவன்.  வாரப் பத்திரிகை என்றாலும் கூட இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னால் கொடுத்து விடுவேன்.  கடைசி நேரம் வரை இழுத்தடிப்பது – கடைசி நேரப் பதற்றம் –  எனக்குப் பிடிக்காது.  ஆனாலும் சமயங்களில் விதியின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கும்.  பத்திரிகை 26-ஆம் தேதி அச்சுக்குப் போகும் என்றால் அதற்கு ஓரிரண்டு தினங்களுக்கு முன்பு ஏதேனும் நடந்திருக்கும்.  மைக்கேல் ஜாக்ஸனின் மரணத்தைப் போல.  விட முடியுமா?  ஜாக்ஸன் என்னுடைய வாழ்நாள் ஆதர்சம்.  அந்த மாதிரி ஏதோ ஒரு கட்டுரையை காட்டுத்தனமான வேகத்துடன் எழுதிக் கொண்டிருந்தேன்.  காலையில் வழக்கம் போல் நடைப் பயிற்சிக்கும் செல்லவில்லை.  தியானத்துக்கும் ஜூட்.  ஏழு மணி அளவில் ஏதோ வேலையாக அலைபேசியைப் பார்த்த போது காலை நான்கு மணிக்கு என் தம்பி அழைத்திருந்தது தெரிந்தது.  பொதுவாக மரணச் செய்தி என்றால் மட்டுமே என் குடும்பத்தாரிடமிருந்து எனக்கு ஃபோன் வரும்.   ஆனால் என் தம்பியை அழைத்துப் பேசும் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை.  முந்தின தினமே உயிர்மை அச்சுக்குப் போயிருக்க வேண்டும்.  இந்தக் கடைசி நேரக் கட்டுரையால் தாமதம்.  மதியத்துக்குள் கட்டுரை போயாக வேண்டும். இரவுக்குள் உயிர்மை அச்சகத்துக்குப் போக வேண்டும்.   விறுவிறு என்று கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தேன்.

ஒன்பது மணி அளவில் திரும்பவும் தம்பியின் அழைப்பு.  நைனா இறந்துட்டாங்கண்ணே.  காலைலயே கூப்பிட்டேன்.

சரி…  பாடியை எப்போ எடுக்கிறதா இருக்கீங்க?  ஏன்னா ரொம்ப அவசரமா ஒரு கட்டுரை எழுதிக்கிட்டிருக்கேன்.  அது முடிஞ்சாத்தான் நான் கிளம்ப முடியும்.

மதியம் ரெண்டு மூணு மணிக்கு எடுப்பாங்கன்னு நினைக்கிறேன்ணே…

சரி… ஓகே.  அதுக்குள்ள முடிச்சுடுவேன்.  ஆனா அங்கே வேங்கைவாசல் வரை வர்றதுக்கே ரெண்டு மணி நேரம் எடுக்கும்.  முயற்சி பண்றேன்.  ஆனா நேரம் ஆயிடுச்சுன்னா எனக்காகக் காத்திருக்க வேண்டாம்.  அது நல்லா இருக்காது.  முடிச்சதும் ஓடி வந்துர்றேன்.

சரிண்ணே.

என்னைப் பற்றி அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.  அதனால் அதிர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால் வேறு ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.  அதைத்தான் சொல்லப் போகிறேன்.

கட்டுரையை சற்றே வேகத்துடன் எழுதி மதியம் ஒரு மணிக்கு முடித்தேன்.  ஹமீதை அழைத்தேன்.

ஹமீத்…  கட்டுரையில் ஏதாவது சந்தேகம் இருந்தா நீங்களே சரி பண்ணிக்குங்க…  எங்க அப்பா காலைல இறந்துட்டார்.  கட்டுரையை முடிச்சுட்டுத்தான் போகணும்னு இருந்தேன்.  அனுப்பிட்டேன்.  வந்துருச்சான்னு மட்டும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.

அதிர்ச்சியுடன் அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு இப்போது ஞாபகம் இல்லை.  கட்டுரை வந்து சேர்ந்ததை உறுதிப் படுத்தினார்.

மூன்று மணிக்குள் வேங்கை வாசல் சேர்ந்தோம், நானும் அவந்திகாவும்.  இன்னும் சில உறவினர்களுக்காக நைனா காத்திருந்தார்.

காலை, மதியம் இரண்டு வேளையும் சாப்பிடவில்லை.  இரவு சாப்பிடும் போது பத்து மணி ஆகி விட்டது.

சுஜாதா வீட்டுக்கு சாருவோடு நான் போகவில்லை; சாருவின் ஞாபகம் பிழை பட்டது என்று நம்முடைய folklore ஸ்காலரைப் போல் ஹமீது சொல்ல மாட்டார்.  ஏனென்றால், எழுத்தாளர்களுக்குள் உள்ள பிணக்குகளில் வன்மம் இல்லை.  உதாரணமாக, இணையதளத்தில் என்னைக் காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சிக் கொண்டிருந்த ராஜ மார்த்தாண்ட சோழன் ஒருநாள் கிழக்கு பதிப்பக அலுவலகத்தில் நான் நின்ற போது ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.  “நானும் கிழக்கில்தான் இருக்கிறேன்.  கொஞ்சம் பொறு, வருகிறேன்.”  முப்பது ஆண்டுக் கால நண்பன்.  ஆனாலும் எனக்கு செம கோபம்.  எனக்குத் தமிழே எழுதத் தெரியவில்லை என்று சொல்லும் இவன் ஏன் என்னைப் பார்க்க வேண்டும்?  என்னோடு பேச வேண்டும்?  வீம்புடன் வந்து விட்டேன்.  ஆனாலும் அவன் மீது எனக்கு அன்பு மேலிட்டது.  எப்படிக் கொஞ்சமும் வன்மம் இல்லாமல், மனதில் பகைமை இல்லாமல் என்னைப் பார்த்ததும் ஃபோனில் அழைக்கிறான், எடுக்கவில்லை என்றதும் குறுஞ்செய்தி அனுப்புகிறான் என்று நினைத்துக் கொண்டேன்.

எத்தனையோ சண்டைகள் போட்டிருந்தாலும் ஜெயமோகனும் இப்படியே.  அவரிடம் கொஞ்சம் கூட வன்மம், பகைமை என்ற எண்ணங்களே கிடையாது.  தன்னுடைய அசட்டுச் சிரிப்பு பற்றி சமீபத்தில் எழுதியிருந்தார்.  அவர் வெகுளியும் கூட என்றே நான் நினைக்கிறேன்.  அந்த வெகுளித்தனத்தை மறைக்கத்தான் ரொம்ப சிரமப்பட்டு ஆவேசக் கட்டுரைகள் எழுதுகிறாரோ என்று கூட ஐயுறுகிறேன்.

போகட்டும், சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன்.  நான் நான்கு தினங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று கள ஆய்வு செய்து விட்டு நேற்று சென்னை வந்தேன்.  அந்திமழைக்கு கேள்வி பதில் பகுதிக்கு எழுத வேண்டும்.  நேற்று முழுவதும் எழுதினேன்.  முக்கால்வாசி முடித்து விட்டேன்.  நேற்று எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் எதையும் எடுக்கவில்லை.  ஸ்ரீவில்லிபுத்தூரில் நான் தங்கியிருந்த போது என்னை கவனித்துக் கொண்ட நண்பர்களை அழைத்து நன்றி சொல்லவில்லை. டாக்ஸிக்கும் ஓட்டலுக்கும் பல ஆயிரங்கள் செலவாகியிருக்கும். வழியில் மதுரையில் ஒரு நாள் தங்கினேன்.  அங்கேயும் என்னை கவனித்துக் கொண்ட நண்பர்களை அழைத்து ஒரு நன்றி சொல்லவில்லை.  பூர்ணசந்திரன் இரண்டு முறை நேற்று அழைத்தார்.  ஃபோனையே எடுக்கவில்லை.  நான் மதுரை சென்றால் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளும் ஒருசில நண்பர்களில் ஒருவர் பூர்ணா.    சனி இரவு இரண்டு மணி வரை என்னோடு பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆத்மார்த்தி, டிமிட்ரி, பூர்ணா, அருணாசலம், விஷ்வா, மனாசே ராஜா, மருது.  மறுநாள் சரவணனும், மருதுவும், அருணாசலமும் முழுநாளும் என்னோடு இருந்தார்கள்.  ஞாயிறு இரவு பதினோரு மணிக்கு என்னை ரயில் ஏற்றி விடும் வரை அவர்கள் மூன்று பேரும் என்னோடு இருந்தார்கள். மூன்று பேர் தங்கக் கூடிய லக்‌ஷுரி அறைக்குப் பணம் கொடுத்தவர் அருணாசலம்.  நானும் ராகவனும் சென்னை திரும்ப ரயிலில் பயணச் சீட்டு எடுத்துக் கொடுத்தவர் அருணாசலம். நேற்று வந்ததும் அருணாசலத்துக்கு ஃபோன் போட்டு நான் சௌகர்யமாக வந்து சேர்ந்ததை சொல்ல வேண்டியதுதான் என் நாகரீகம், கடமை.  ஆனால் நான் செய்யவில்லை.  அந்திமழைக்குக் கேள்வி பதில் எழுதிக் கொண்டிருந்தேன்.   ஒரு ஃபோன் பேச எவ்வளவு நேரம் ஆகி விடப் போகிறது என்கிறீர்களா?  ஒரு ஃபோன் இல்லை.  ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர் குமாருக்கு ஃபோன் போட வேண்டும்.  செலவு ரூ.25000/- ஐத் தாண்டியிருக்கும்.  மதுரை வரை டாக்ஸியில் வந்தோம்.  என்னை ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்பு மழையில் மூழ்கடித்த சங்கருக்கு போன் செய்யவில்லை.

இவ்வளவுக்கும் நான் எப்படி ஊருக்குப் போய்ச் சேர்ந்தேன் என்ற ஆர்வத்தில் அருணாசலமே நேற்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.  ”ரயில் குறித்த நேரத்தில் போய்ச் சேர்ந்ததா?  பயணம் சௌகர்யமாக இருந்ததா?  உங்களோடு செலவிட்ட நேரம் அற்புதமானது.”  இதற்கும் பதில் அனுப்பவில்லை.  அந்திமழை.  அந்திமழை.  அந்திமழை.  இந்தக் கேள்வி பதில் சம்பந்தமாக ஒரு சந்தேகத்துக்கு மட்டும் ராஜேஷை தொலைபேசியில் அழைத்தேன்.  அவரும் எடுத்தார்.  கடவுள் என் பக்கம் என்று நினைத்துக் கொண்டேன்.

பூர்ணா இரண்டு முறை அழைத்தார்.  இன்று காலை பப்பு, ஸோரோவுக்கு மீன் தீர்ந்து விட்டது.  வாரம் ஒருமுறை வாங்கி, சுத்தப்படுத்தி, உப்பு மஞ்சள் பொடி கலந்து வாழை இலையில் வைத்து ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்.  பப்பு, ஸோரோவுக்கு மீன் வாங்கினால் எனக்கும் சேர்த்து வாங்கிக் கொள்வேன்.  வாரம் ஒருமுறை எனக்கும் மீன்.  ஒன்பது மணிக்கு பூங்காவிலிருந்து கொலைப்பசியுடன் வந்தேன்.  நேற்று இரவு ஒரே ஒரு ஆப்பிள் மட்டுமே சாப்பிட்டிருந்தேன்.  இரவில் பழம் மட்டுமே உணவு.  அவந்திகா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.   உடனே சாப்பிட முடியாது.  பப்பு, ஸோரோவை வாக்கிங் அழைத்துக் கொண்டு போக வேண்டும்.  நான் வரும் வரை மலஜலத்தை அடக்கிக் கொண்டு கிடக்கும் பப்பு.  நான் ஊரில் இருந்தால் தோட்டத்தில் மலஜலம் போகாது.  இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக வாக்கிங் அழைத்துச் சென்றேன்.  பப்பு இன்னும் ரெண்டு தெருக்களுக்கு இழுத்தது.  மறுத்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்.  கொலைப் பசி.

நேராக சமையலறைக்கு வந்து மொடக்கத்தான் கீரையை ஆய்ந்து, மிக்ஸியில் போட்டு அரைத்து, தோசை மாவில் கலந்து கரைத்தேன்.  பிறகு தக்காளி, வெங்காயம், மிளகாய் எல்லாம் மிக்ஸியில் அடித்து தாளித்து சட்னி செய்தேன்.  மூன்று தோசை சாப்பிட்டேன்.  இட்லி ஊற்றி சாப்பிடும் அளவுக்குப் பசி தாங்காது.  சாப்பிட்டு முடித்த போது மணி பத்து.  என் காலைச் சாப்பாட்டு நேரம் எட்டிலிருந்து எட்டரை.  அது இந்த ஜென்மத்தில் வாய்க்காது போல் தோன்றுகிறது.  நான் உண்டு முடித்த போது பசியுடன் உள்ளே நுழைந்தாள் அவந்திகா.  ”தோசை போட்டால் சாப்பிடுகிறாயா?” என்றேன்.  ம் என்றாள்.  மூன்று தோசை போட்டேன்.  அதைச் சாப்பிடாமல் ஏதோ படிவங்களை நிரப்பிக் கொண்டிருந்தாள்.  எல்லாம் என் வேலைதான்.  மாதாமாதம் கட்ட வேண்டிய தொகைக்கான படிவங்கள்.  தோசை எல்லாம் படு மோசமாக ஆறிய பிறகு வந்து அதைச் சாப்பிட்டாள்.

மணி பத்தரை.  பூர்ணாவின் ஃபோன்.  எடுத்துப் பேச முடியவில்லை.  பப்பு பசியுடன் வந்து வந்து கேட்டது.  ஸோரோவும் பசியுடன் மாடு முட்டுவது போல் என்னை வந்து முட்டியது.  இரண்டுக்கும் பெடிக்ரியில் மீன் எண்ணெய் கலந்து கொடுத்தேன்.  மணி பதினொன்று.

அவசர அவசரமாக மீன் மார்க்கெட்டுக்கு ஓடினேன்.  நொச்சிக் குப்பம்.   உடுப்பாச்சி மீன்.  மீனைக் கழுவினேன். மேரினேட் செய்து வைத்தேன். வெங்காயம்.  பூண்டு.  இஞ்சி.  கொத்துமல்லிக் கீரை. தக்காளி.  ஒவ்வொன்றாக நறுக்கி வைத்தேன்.

மாடியில் மீன்களுக்கு உணவிட்டு விட்டு ஒரு மணிக்குக் கீழே இறங்கிய அவந்திகா நான் நறுக்கி வைத்தவற்றை எடுத்து சமைக்க ஆரம்பித்தாள்.  நான் அடுப்பில் அரிசியைக் களைந்து குக்கரில் வைத்தேன்.  பிறகு அவளுக்காக முட்டைக் கோஸ் நறுக்கினேன்.  அடுத்து, முளைக்கீரையை நன்றாகக் கழுவி நறுக்கினேன்.  குளிக்கக் கிளம்பிய போது மணி இரண்டு.  சாப்பிடும் போது மணி மூன்று.

இடையில் – பனிரண்டு மணி இருக்கும் – பூர்ணாவுக்கு ஃபோன் செய்து, “தினமுமே நான் மதியம் ஒருமணி வரை சமையலறையில்தான் இருப்பேன்.  தவறாக எண்ண வேண்டாம்” என்று சொன்னேன்.

மூன்று மணிக்கு சாப்பிட்டு விட்டு அந்திமழைக்கான கேள்வி பதில் பகுதியை முடித்து விடலாம் என்று அமர்ந்தால், ”ஏன் என் ஃபோனை எடுப்பதே இல்லை, என்னைத் தவிர்க்கிறீர்களா?” என்று என் நண்பரிடமிருந்து காலையில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்ததைப் பார்த்தேன்.  பிறகு மூன்று மணி அளவில் அதே நண்பரிடமிருந்து, “என்னைத் தவிர்ப்பதற்காகத்தான் நீங்கள் whats app.ஐயே திறக்கவில்லையா?” என்று கேட்டு ஒரு குறுஞ்செய்தி.

அந்திமழைக்குக் கேள்வி பதில் எழுதுவதை ஒதுக்கி வைத்து விட்டு இந்தக் கச்சடா விஷயத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் 15-ஆம் தேதிக்குள் லத்தீன் அமெரிக்க சினிமா தொடருக்காக இரண்டு படங்கள் பார்க்க வேண்டும்.  அதை விட முக்கியமாக, Glauber Rocha, Jorge Sanjines, Tomas Gutierrez Alea, Antonio Skarmeta போன்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்க வேண்டும்.  சுமார் 300 பக்க நூல்.

எனக்கு மன உளைச்சல் தருபவர்கள் எதிரிகள் அல்ல; நண்பர்கள் என்று நூறு முறை எழுதி விட்டேன்.  ம்ஹும்.  எதிரிகளுக்குப் புரிகிறது.  நண்பர்களுக்குப் புரியவில்லை.  நிச்சயம் ஸாரி சொல்லி ஐந்து குறுஞ்செய்தி வரும்.

Comments are closed.