காளியின் நர்த்தனம்…

இணைய தளத்தின் பக்கம் வந்து ஒரு மாதம் இருக்கும். ஸ்ரீராம்தான் என் உரைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் ஏஷியன் ரெவ்யூ இதழுக்காக மை லைஃப், மை டெக்ஸ்ட் என்ற என் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தேன். இருபது அத்தியாயங்கள் எழுதி விட்டேன். ஆங்கிலத்தில் எழுதுவதால் நேரம் எடுக்கிறது. தமிழ் என்றால் சிந்தனை வேகத்துக்கு கை பாயும். ஆங்கிலத்தில் கை காத்திருக்கிறது.

இடையில் இன்று ஒரு சம்பவம் நடந்தது. நான் 1999 இல் எழுதிய உன்னத சங்கீதம் என்ற சிறுகதையை நந்தினி கிருஷ்ணன் மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். எழுதி சரியாக இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நான் அந்தக் கதையை ஒருமுறை கூட படித்ததில்லை. ஆனால் இந்தக் கதைக்காகத்தான் என்னை இலங்கைத் தமிழர்கள் பலரும் ஓட ஓட விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதையில் ஒரே ஒரு இடத்தில் வரும் 13 என்ற எண்ணைத் தூக்கி விட்டு 21 என்று போட்டு விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தக் கதையை நான் லொலிதாவுக்கு மாற்றாக எழுதினேன். வ்ளமீர் நொபகோவ் லொலிதாவின் வயதை 21 என்று மாற்றினால்தான் என்னாலும் மாற்ற முடியும். அதற்கு வாய்ப்பு இல்லை. நொபகோவ் இப்போது உயிருடன் இல்லை.

நந்தினியின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு மாதிரியே தெரியவில்லை. ஆங்கிலத்திலேயே எழுதியது போல் உள்ளது. பரவசக் கூத்து என்று சொல்லலாம். (உடனே பலரும் எனக்கு நந்தினியின் தொலைபேசி எண் கேட்டு போன் பண்ணுவார்கள். என் உயிர் உள்ளவரை என் எழுத்துக்களை மட்டுமே நந்தினி மொழிபெயர்க்க வேண்டும், ஒழிந்த நேரத்தில் அவர் நாவலையும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ஸ்ரீ வெங்கடாஜலபதியிடம் நான் மனமுருகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.)

இந்தப் பதிவை ஏன் எழுதத் தொடங்கினேன் என்றால், அந்தக் கதையைப் படித்து விட்டு மிரண்டு விட்டேன். இப்போது அந்தக் கதையை என்னால் எழுத முடியாது. அந்த தைரியம் இப்போது என்னிடம் இல்லை. யாரோ மார்க்கி தெ ஸாதோ, வில்லியம் பர்ரோஸோ, சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியோ எழுதிய கதை போல் இருந்தது. இப்படி ஒரு கதை 1999இல் எழுதியிருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருந்தது.

இருபத்தைந்து ஆண்டுகள் ஆகி விட்ட போதும் இந்தக் கதையை இத்தனை ஆர்ப்பாட்டமாக மொழிபெயர்த்திருக்கும் நந்தினியை என் வாழ்நாளில் என்றுமே மறக்க மாட்டேன். மொழிபெயர்ப்பு காளியின் நர்த்தனம் போல் இருக்கிறது. ஆவேச நடனம். கடலின் ஆர்ப்பரிப்பு.

இன்றைய நிலையில் சர்வதேச அளவில் கூட – Words without Borders போன்ற பத்திரிகைகள் கூட இந்தக் கதையைப் பிரசுரிக்குமா என்று தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி என்ற வார்த்தை என் உணர்வுகளைக் கடத்துமா என்று தெரியவில்லை நந்தினி… உனக்கு என் வாழ்நாள் முழுதும் நன்றி பாராட்டுவேன்.