உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் (9) – கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி

ஜூன் 30 அன்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கின் முக்கியமான நோக்கம் என்ன? இதன் மூலம் நான் சாதிக்க நினைப்பது என்ன?

இதுவரை 75 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இதில் 50 பேர் பணமும் செலுத்து விட்டார்கள். (மற்ற நண்பர்கள் கவனிக்கவும்.) இன்னும் ஒரு 75 பேர் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன். மொத்தம் 150. இதற்கிடையில் சீனி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அரங்கத்தின் கொள்ளளவு எத்தனை? எத்தனை பேர் வரலாம்?

கொள்ளளவு 300. நான் எதிர்பார்ப்பது 350 பேர். உட்கார இடமில்லாத ஐம்பது பேர் முன்னே வந்து தரையில் அமர்ந்து கொள்ளலாம். நான் ஒரு இசைக் கலைஞனாக இருந்தால் மேடையிலே வந்து அமருங்கள் என்று பிஸ்மில்லா கானைப் போல் சொல்லியிருப்பேன். இது நின்று பேசும் பயிலரங்கம். கான் சாஹிப் போல் சொல்ல முடியாது.

ஏன் இப்படிப் பேராசைப் படுகிறேன் என்றால், என்னிடம் அள்ள அள்ளக் குறையாத செல்வம் இருக்கிறது. அதை உங்களிடம் வாரி வாரிக் கொடுக்க நினைக்கிறேன். என்னதான் ஸூம் மூலம் பார்த்தாலும் நேரில் பார்க்கும் இன்பம் தனிதான்.

சரி, என் நோக்கம் என்ன?

இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் 150 பேரில் (இதுதான் என் உத்தேச எண்ணிக்கை, இதற்கு மேல் வந்தால் மகிழ்ச்சி) ஒருவராவது உலகமே வியந்து போற்றும், அதிசயிக்கும் ஒரு படத்தை உருவாக்கி விட வேண்டும். அப்போது அவர் என் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. இலக்கணத்தையும் கலையையும் நான் கற்றுக் கொடுத்து விடுவேன். அதன்படி செய்ய வேண்டியதுதான். காப்பி அடிக்கும் வேலை அல்ல. பல்வேறு சாத்தியக்கூறுகளை உதாரணங்களுடன் விளக்குவேன். அதிலிருந்து நீங்கள் பல நூறு வழிகளை வகுத்துக் கொள்ள முடியும்.

அதற்கு முன்னோடியாக நீங்கள் பயிலரங்கில் கலந்து கொள்வதற்கு முன்பாக ஒரு சிறுகதையைப் படிக்க வேண்டும். நாலே பக்கம்தான். பெரிய கடினமான கதையும் அல்ல. போகிற போக்கில் படித்து விடலாம். ஆனால் அந்தக் கதையை உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. கதையில் ரத்தம் இல்லை. திருப்பம் இல்லை. திடுக்கிடும் சம்பவம் இல்லை. சொல்லப் போனால் எதுவுமே இல்லை. ஆனாலும் உங்களால் அந்தக் கதையை மறக்க முடியாது.

சரி, இதற்கும் உலக சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்? அதை நான் பயிலரங்கில் விளக்குவேன்.

இன்னொரு முக்கியமான விஷயம். இது மட்டுமே உலக சினிமாவின் போக்கு அல்ல. ஆயிரக்கணக்கான கதை சொல்லும் முறைகளில் இதுவும் ஒன்று. நட்சத்திரங்கள் எத்தனை உண்டோ அத்தனை கதை சொல்லும் முறைகள் உள்ளன. அதில் ஒன்று இது. அப்படி இருந்தும் ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இதை இதுவரை யாரும் கவனிக்கவில்லை. அவ்வளவுதான். இது ஒரு புள்ளி. இந்தப் புள்ளியிலிருந்து நீங்கள் கோடு போட வேண்டும். எப்படி என்று பயிலரங்கில் சொல்கிறேன்.

”இல்லை, எனக்கு சம்பவம் வேண்டும், சினிமாவை இருக்கை முனையில் அமர்ந்து பார்க்க வேண்டும்” என்று நீங்கள் விரும்பினால் அதற்கு இன்னொரு புள்ளி இருக்கிறது. அதையும் நாம் பயிலரங்கில் காணலாம்.

என் நண்பர் ஒருவரிடம் பயிலரங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு சிறிய குறிப்பேடும் ஒரு பேனாவும் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். உடனடியாகச் சம்மதித்தார். எனவே குறிப்புகள் எடுக்கக் காகிதம் தேடி நீங்கள் சிரமப்பட வேண்டாம்.

படிக்க வேண்டிய கதை கீழே. அந்த இணைப்பில் இரண்டு மொழிபெயர்ப்புகள் உள்ளன. நீங்கள் முதல் மொழிபெயர்ப்பைப் படித்தால் போதுமானது. இன்னொரு விஷயம். என்னடா இது, சாரு வீட்டுப் பாடமெல்லாம் கொடுக்கிறார் என்று நினைத்தால் படிக்காமல் விட்டு விடுங்கள். எல்லாம் உங்கள் விருப்பம்தான். எதுவும் கட்டாயம் இல்லை.

Alain Robbe-Grillet’s “La Plage” | extrafilespace (wordpress.com)