உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 8

ஜூன் 30 அன்று காலை பத்து மணிக்கு பயிலரங்கம் ஆரம்பித்து விடும். நான் ஜூன் 29ஆம் தேதி மாலை திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி அருகில் உள்ள ஒரு பண்ணை இல்லத்தில் தங்குவேன். அன்று இரவு யாரையும் சந்திக்க மாட்டேன். மறுநாள் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் பேச வேண்டும். நான் நேரம் தவறாமையை மிகப் பிடிவாதத்துடன் கடைப்பிடிப்பவன். இந்திய நேரம் என்பதெல்லாம் என்னிடம் செல்லுபடி ஆகாது. பத்து என்றால் பத்து மணிக்கே தொடங்கி விடுவேன். மிஷல் ஃபூக்கோ பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அவ்வப்போது உலகப் புகழ் பெற்ற ஸோர்போன் பல்கலைக்கழகத்திலும் வகுப்பு எடுப்பார். அந்த வகுப்புக்கு யார் வேண்டுமானாலும் போகலாம். ஒரு ஐநூறு பேர் அமரத்தக்க ஆடிட்டோரியம் மாதிரி இருக்கும். காலை ஒன்பது மணிக்கு ஃபூக்கோவின் வகுப்பு என்றால் ஆறு மணிக்கே வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுவார்கள் என்று என்னிடம் ஸோர்போனில் சொன்னார்கள். ஸோர்போன் மாணவர் என்றாலும் மாணவர் அல்லாத ஒருவர் போய் வரிசையில் முதலில் நின்றால் அவருக்குத்தான் முதல் வரிசை. ஸோர்போன் மாணவருக்கு அல்ல. அப்படி நிறைய பேர் இடம் இல்லாமல் திரும்பிச் செல்வார்களாம்.

தமிழ்நாடு ஃப்ரான்ஸ் அல்ல என்று எனக்குத் தெரியும். ஆனாலும் சொல்கிறேன். நூறு பேர் வருகிறீர்கள் என்றால் நூறு பேரும் 9.55க்கு வந்து சேர்ந்தால் உள்ளே நுழைந்து இடம் பிடிப்பதில் சிக்கல் ஏற்படும். முதலில் வருபவருக்கே முதல் வரிசை. அடுத்தடுத்து வருபவர்களுக்கு அடுத்தடுத்த வரிசை. பத்து மணிக்கு வருவோர் கடைசி வரிசையில்தான் அமர வேண்டியிருக்கும். உங்கள் வசதிக்காக இதைச் சொன்னேன்.

பதினொன்றரை மணிக்கு தேநீர் இடைவேளை. (நான் தேநீர் அருந்த மாட்டேன். காஃபிக்கு என்ன ஏற்பாடு என்று கேட்க வேண்டும். இல்லாவிட்டால் முன்கூட்டியே ஃப்ளாஸ்கில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.) ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை மதிய உணவு. பயிலரங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வடை பாயசத்துடன் கல்யாண சாப்பாடு போடுவதாக எஸ்.கே.பி. கல்லூரி நிர்வாகி சொல்லியிருக்கிறார். அவருக்கும் எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி நிர்வாகத்துக்கும் என் நன்றி. பிறகு மூன்றரை மணிக்கு தேநீர்.

இந்தப் பயிலரங்கு பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இது போன்ற பல பயிலரங்குகளை கேரளத்தில் நடத்தியிருக்கிறேன். திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா ஃபில்ம் அகாதமியில் ஒரு முழு நாளும், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நான்கு நாள்களும் நான் நடத்திய பயிலரங்குகள் தெளிவாக ஞாபகம் உள்ளன. எல்லாம் பதினைந்து ஆண்டுகள் இருக்கும். ஆனால் அது எதுவும் தமிழர்களை வந்து சேரவில்லை. தமிழ்நாட்டில் சினிமா பற்றிய என் புத்தகங்கள் மட்டுமே உள்ளன.

1978இலிருந்து தொடர்ந்து நான் சர்வதேச சினிமாவின் ஆர்வலனாக இருந்து வந்திருக்கிறேன். இத்தனை காலமாக நான் சேகரித்து வைத்திருக்கும் சினிமா அறிவை புத்தகமாக எழுத வேண்டுமானால் பத்துப் பதினைந்து நூல்கள் வரும். இப்போதைய நிலையில் அது எனக்கு சாத்தியம் இல்லை. எழுதத் தொடங்கி பாதியில் நிற்கும் நாவல்களை முடித்தாக வேண்டும். எனவே என்னுடைய இந்த நாற்பத்தாறு ஆண்டு சினிமா அனுபவங்களை உங்களிடம் நான் வார்த்துக் கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்குக் கிடைக்கக் கூடியது, என்னுடைய நாற்பத்தாறு ஆண்டு சினிமா அனுபவத்தை ஒரே நாளில் பெற்றுக் கொண்டு விட முடியும். சரி, அந்த அனுபவத்தினால் என்ன லௌகீகமான பலன்? ஐம்பது லட்சம் ரூபாயில் உலகமே வியந்து பாராட்டக்கூடிய ஒரு திரைப்படத்தை உங்களால் உருவாக்க முடியும். அதற்கான கதை? நான் ஒரு பத்து கதைகள் சொல்கிறேன். அதை முன்னுதாரணமாகக் கொண்டு நீங்கள் உங்களுக்கான கதையை உருவாக்கிக் கொள்ளலாம். வாழ்விலிருந்தே தேடி எடுத்துக் கொள்ளலாம்.

தேவை தொழில்நுட்பம் அல்ல. அது இங்கே போதும் போதும் என்று கொட்டிக் கிடக்கிறது. ஜக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு சினிமா ஒளிப்பதிவாளர் அல்ல. திருமணங்களில் விடியோ எடுத்துக் கொடுப்பவர். ஆனாலும் ஜக்கி உலக அளவில் பேசப்படுகிறது. ”அது செக்ஸ் பற்றி அல்லவா பேசுகிறது? எனக்கு அந்த சப்ஜெக்ட் வேண்டாம்” என்கிறீர்களா? சரி. செக்ஸே இல்லாத ஒரு திரைப்படமும் இன்று ஜக்கியை விட அதிக அளவில் புகழ் பெற்றிருக்கிறது. அது போன்ற ஒரு நூறு படங்களை உங்களால் உருவாக்க முடியும். அந்தக் கலையை நான் கற்பிக்கப் போகிறேன். ஆம், அது ஒரு கலை என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். அது பற்றித்தான் என்னுடைய நாற்பத்தாறு ஆண்டு சினிமா அனுபவத்தை உங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் போகிறேன்.

இனி ஒருமுறை இது போன்ற பயிலரங்கு செய்ய மாட்டேன். இது ஒன்று போதும். என் தொழில் எழுத்து. அதில் செய்ய வேண்டிய பணி ஏராளமாகக் காத்துக் கிடக்கிறது. சாருவுக்கு சினிமா பற்றி என்ன தெரியும் என்று சிலர் ஃபேஸ்புக்கில் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் என் சினிமா நூல்களைத்தான் படிக்க வேண்டும். ஒருவர் இரண்டு துறைகளில் வல்லுனராக இருக்க முடியும். அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி பல துறைகளில் வல்லுநர். இரண்டு டஜன் நூல்கள் எழுதியிருக்கிறார். மிகப் பெரிய, மிக முக்கியமான எழுத்தாளர். ஜோதிடர். யோகா ஆசிரியர். ஓவியர். இன்னும் பல.

உலக சினிமா குறித்த திருவண்ணாமலை பயிலரங்குக்கு உங்களை அழைக்கிறேன். ஜூன் 30. ஞாயிற்றுக்கிழமை. என்னுடைய நாற்பத்தாறு ஆண்டு சினிமா அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நன்கொடை: குறைந்த பட்சம் 2000 ரூ. மாணவர்களுக்கு: 1000 ரூ.

தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

Mobile: 95975 00949