சிறந்த மாணவர்

நான் எதையாவது படிக்கச் சொன்னால் இருபத்து நான்கு மணி நேரத்தில் படித்து முடித்து விடும் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். ஸ்ரீ, அப்துல் (பாண்டி), மஹாதேவன். இப்போது இந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பவர் சரவணன் சிவன்ராஜா. இவர்களிடம் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நால்வருமே முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். நால்வரில் மூன்று பேர் திருமணம் ஆகாதவர்கள். அப்படிப் பார்த்தால் திருமணம்தான் வாசிப்புக்குத் தடையாக இருக்கிறதோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஸ்ரீ அதையும் சமாளித்து விட்டாள். பிரார்த்தனையைப் பின் தொடர்ந்து… நாவல் பற்றி எழுதினேன். ஸ்ரீ, மஹாதேவன் இருவருமே ஓரிரு தினங்களில் முடித்து விட்டார்கள்.

நேற்று கடற்கரை சிறுகதை பற்றி எழுதினேன். உடனேயே அப்துல் மெஸேஜ் அனுப்பினார். ”ஏற்கனவே நீங்கள் சொல்லிப் படித்து விட்டேன். இப்போது மீண்டும் படிக்கிறேன்.” சரவணன் இந்தக் கதை பற்றி இப்படி எழுதியிருக்கிறார்:

”நீங்கள் வலைத்தளத்தில் குறிப்பிட்ட La plage கதையைப் படித்து முடித்து விட்டேன். நீங்கள் சொன்னது போல் அது கதையே அல்ல. இரண்டு முறை படித்த பின் ஒரு காட்சிப் படிமாமாக மனதில் பதிந்துவிட்டது அந்தக் கதை.”

சரவணன் சொல்லியிருப்பது மிகச் சரியான அவதானம். கதையை எழுதிய ஆலன் ராப்-க்ரியே வாசிப்பை காட்சி அனுபவமாக மாற்றக் கூடியவர். இது பற்றிப் பயிலரங்கில் விரிவாகப் பேசுவேன்.

பின்வருவது மஹாதேவனின் கடிதம்:

சுந்தர் சருக்கை எழுதிய பிரார்த்தனையை பின்தொடர்ந்து… நாவலை தமிழ் மொழிபெயர்ப்பில் வாசிச்சேன்.
முதல்ல கொஞ்சம் குழப்பமாகவும் கொஞ்சமா சலிப்படையக் கூடியதாகவும் இருந்தது… ஆனா கதைக்குள்ள போகப்போக கல்பனா அமைதியாக, தீக்ஷாவையும் குமாரியையும் மாதிரி நமக்குள்ளும் அதே ஒரு வேட்கை, தேடல் ஒன்னு உருவாச்சு. மொழின்னா என்ன? எண்கள்னா என்ன? மொழி எப்படி உருவாகுது? ஒலி எப்படி உருவாகுது? இசை என்றால் என்ன? அப்படின்னு நிறைய பக்கங்களைத் தொட்டு கொஞ்சம் குழப்பம் அடையவும், நிறைய கேள்விகளை நமக்குள்ள கேட்கவும், மௌனத்துலயே நம்மைத் தேடவும் நிறைய மெனக்கெடவும் செஞ்சுச்சு இந்த நாவல். ஆனால் கடைசில எதை நோக்கி அது நகருது என்கிறத என்னால புரிஞ்சுக்க முடியல?! உங்களால விளக்க முடிஞ்சா கொஞ்சம் நல்லா இருக்கும். இதோட தரிசனம் என்ன என்பது  குறித்த புரிதல் எனக்குக் கிடைக்கவில்லை. நாவல் எதை நோக்கிப் பயணிக்கின்றது என்பதை கடைசியா நமக்கு பார்க்க முடியல அல்லது எனக்கு அதை ஒரு உணர முடியல ….

கங்கம்மா இதுல ஒரு முக்கியமான ஒரு அங்கம் வகிச்சிருக்காங்க… குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறதாகட்டும், மூளைக்கோயில்ல வந்து பாடுறது ஆகட்டும், ஒண்டு என்ற அந்த ஒரு எண்ணை எடுத்துக்கிட்டு அவங்க பாடல் பாடறதாகட்டும்.. குழந்தைங்க கிட்ட அவங்க காண்பிக்கிற அன்பு… ஆசிரியர் என்பவர் என்ன செய்யணும் என்பதை உணர்த்துற விதமாகட்டும்… சிந்திக்க வைப்பதைத் தீவிரப்படுத்துதலாகட்டும் அது வேறொரு உலகமாதான் கற்பனையில் தோணுது… உபாத்தியா என்ற ஆசிரியர் உருவாக்குற அந்த ஒரு ஆர்வம்… அதை அவங்க புரிஞ்சுக்கிற விதம் அதைச் சொல்ற அந்த விதம் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.. நாமே அந்தக் குழந்தைப் பருவத்தில் பயணிக்கிறோம் ..

தீக்க்ஷா, குமாரி இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அனுபவங்கள் கொண்டு இருக்காங்க…. கல்பனா கூட தீக்க்ஷா இருக்கும்போது அவளுக்குக் கிடைக்கிற புரிதல்கள் எல்லாமே வேற வேற மாதிரி இருக்கு …கடைசியா கல்பனா பேச மாட்டோம் என்று நினைத்தது, வேற மாதிரி ஆகி கல்பனா பேசிட்டா… காட்டுக்குள்ள போறா… ஆனா அந்த மூணு பேருமே தொலைந்து போறாங்க என்ற ஒரு முடிவைத் தான் மனசு ஏத்துக்க மாட்டேங்குது.
 

அவ அவங்க மூணு பேரையும் கூட்டிட்டு வந்துருவா என்ற ஒரு எதிர்பார்ப்பைக் கொடுத்துச்சு. அது தவிர, கடவுள் கடவுள்னு நாம் நினைச்சுட்டு இருக்குற அந்த ஒரு படிமம் எல்லாமே வந்து பொய்யோ அப்படின்னு ஒரு விதமா யோசிக்கத் தோணுது கடவுள் என்றது மொழிதான் அப்படின்றத புரிஞ்சிக்க ஒரு அளவு பிரயத்தனப்படுது.
எப்படிப் பார்த்தாலும் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நாவல் முடிச்ச ஒரு சந்தோஷமும் அதே நேரத்துல அது உருவாக்கின பல கேள்விகளுக்கு மௌனத்துல விடை தேடுகிற ஒரு படலமும் வந்து உருவாகி இருக்குனு நினைக்கிறேன்…

மஹாதேவன்

***

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க எனக்கு அடிக்கடி வரும் மனச்சோர்வு என்னவென்றால், இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் எழுதுகிறோமே, இதை யார் படிக்கிறார்கள் என்னும் தளர்வான சிந்தனை. அதை மாற்றுகிறாற்போலவே அவ்வப்போது வரும் கடிதங்கள் பெரும் உத்சாகத்தை ஏற்படுத்தும். கனடா என்றால் என் ஞாபகத்துக்கு வருவது நந்தா என்ற நண்பரின் பெயர். நேரில் சந்தித்தது இல்லை. முழுப் பெயர் கூடத் தெரியாது. அவரிடமிருந்து இன்று வந்த வாட்ஸப் மெஸேஜ் எனக்கு மலை உச்சியில் கிடைக்கும் பிராணவாயு போல் இருந்தது.

Your reviews about Soorarai Potru, Jai Bhim etc have once again proven that you only apply “cinematic sensibilities” when evaluating movies and not the “so called” story.. thanks for being my “master”.

இதற்கு நான் “You made my day” என்று பதில் அனுப்பினேன். அதற்கு வந்த பதில்:

You have been making my days since the year 2003.. I lost my sleep due to your transgressive articles in your blog.. my depressing initial days in Canadian winter (year 2007) was made tolerable because of your novel, Zero Degree.. I am happy I found you!
Also “ Varambu Meeriya Pradhigal” and “Existentialisamum Fancy Baniyanum”..