உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 10

டியர் சாரு,

நலமா? என்னைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். என் பெயர் கபீர். ஐடி துறையில் வேலை பார்த்துக்கொண்டே சினிமாவும் இயக்கி வருகிறேன். இது வரை மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளேன். அதில் கடைசியாக எடுத்த திரைப்படம் 90,000 வியூஸ் வரை சென்றுள்ளது. இப்போது சிறுகதைகளும் எழுதத் தொடங்கியுள்ளேன்.

எனக்கு உங்களை அறிமுகப்படுத்தியவர் என் தந்தை. நான் கடந்த நான்கு வருடங்களாக புத்தக வாசிப்பில் ஈடுபட்டு வருகிறேன். அவர் ஒரு நாள் என்னை அழைத்து நீ நல்ல சினிமா எடுக்க வேண்டுமென்றால் வெர்னர் ஹெர்சாக் திரைப்படங்களைப் பார் மற்றும் உனக்கு வாசிப்புப் பழக்கமும் இருக்க வேண்டுமென்றார். அப்போது உங்கள் பெயரைக் குறிப்பிட்டு இவரைப் படி, தமிழில் சிறந்த எழுத்தாளர் என்றார். நான் ஏன் இவரைப் படிக்க வேண்டும் என்று கேட்டதற்கு – அவர் சொன்ன பதில்: “என் மனசுல இறுக்கமான விஷயம் நிறைய இருந்துச்சு, இவரைப் படித்த பிறகு எல்லாம் உடைஞ்சு போச்சு.”

எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் ஃபேன்சி பனியனுமில் தொடங்கினேன். அதன் பின் உங்களின் பல கட்டுரை நூல்கள் மற்றும் நாவல்களைப் படித்தேன். ராஸ லீலா தவிர மற்ற அனைத்தும் என் தந்தையின் அலமாரியில் இருந்து எடுத்தவை. அடுத்து பெட்டியோ நாவலை படிக்கும் வரிசையில் வைத்துள்ளேன்.

இவ்ளோ நாள் எழுதாமல் இப்பொது எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலில் நீங்கள் வாசகர்களுக்கு பதிலளிப்பீர்களா என்ற கேள்வி எனக்குள். நிறைய எழுதுகிறீர்கள், இதற்கெல்லாம் நேரம் இருக்குமா என்ற சந்தேகம். ஆனால் கடைசியாக நீங்கள் வலைப்பதிவில் எழுதிய “சிறந்த மாணவர்” படித்த பின் சந்தேகம் தீர்ந்தது. நானும் நீங்கள் சொன்ன “தி லாஸ்ட் மிஸ்ட்”, “தி பீச்” அதற்கு முன் ரியூ முருகாமி பற்றி சொல்லியிருந்தீர்கள்; அதனால் அவரின் ஒரு நாவலான “இன் தி மிசோ சூப்” எல்லாம் படித்தேன். முபியில் நீங்கள் பரிந்துரைத்த ஜக்கி திரைப்படத்தையும் பார்த்தேன். நீங்கள் சொல்வதைப் பின்தொடர்ந்து வருகிறேன். இனிமேல் உங்களிடம் அது பற்றிய கருத்துகளை மெயிலில் அனுப்பி விடுகிறேன்.

அடுத்து உங்களின் பயிலரங்கு பற்றியது. நீங்கள் நடத்தும் ஒர்க்க்ஷாப் வாரத்தில் எனக்குக் கல்யாணம் நடக்கவிருக்கிறது. தாலியைக் கட்டிய கையுடன் அங்கு வருவது இயலாத காரியம். எனக்கு உங்கள் வகுப்பில் கலந்துகொள்ளவும் ஆர்வம். ஆகையால் இந்த மாணவனுக்கு ஒரு விதிவிலக்கு தருவீர்களா? நீங்கள் வைத்துள்ள கட்டணத்தை விட சற்று அதிகம் தருகிறேன். எனக்கு ரெகார்டட் ஜூம் வீடியோ லிங்கை ஷேர் செய்வீர்களா சாரு? அப்படிச் செய்தால் மிக்க நன்றி. அது என் சினிமா கல்வியில் முக்கிய பங்களிக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி,
கபீர்

திருமணத்துக்கு வாழ்த்துகள் கபீர். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்.

சாரு