ஒரு சந்திப்பு, ஒரு நாய்க்குட்டி, ஒரு கவிதை…

சமீபத்தில் ஒருநாள் திடீரென்று குமரகுருபரன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  கவிஞன் என்றால் என்னுள் கொண்டிருந்த பிம்பம் வேறு. பரட்டைத் தலை.  ஒல்லியான தேகம்.  பீடி.  ரப்பர் செருப்பு.  பசித்த பார்வை.  சரி, இப்போதைய கவிஞர்கள் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஆனால் பழைய கவியின் தோற்றத்திலிருந்து நேர் எதிராக இருந்து விடப் போவதில்லை. கொஞ்சம் அப்படி இப்படி மாறியிருக்கலாமே தவிர – பீடிக்கு பதிலாக சிகரெட், ரப்பர் செருப்புக்குப் பதிலாக வேறு ஒன்று என – அடிப்படைத் தோற்றப் பொலிவில் மாற்றம் இருக்காது என்று நினைத்திருந்தேன்.  ஓ மை காட்…  இந்தக் கவிஞர் குமரகுருபரன் ஏதோ சினிமா நடிகர் மாதிரி தோற்றம் கொண்டிருந்தார்.  அது போக, இதுவரை என் வாழ்வில் என்னைப் போல் ஒருவனைக் கண்டதில்லை. அப்படியென்றால், அன்பை என்னைப் போல் வெளிப்படுத்தக் கூடிய ஒரு ஆத்மாவை இதுவரை நான் பார்த்ததில்லை.  கணேஷ் அன்பு, செல்வா, பூர்ணா, அருணாசலம் என்று எத்தனையோ அன்பான நண்பர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களின் அன்பு ஆற்றொழுக்காக இருக்கும்.  அதிலும் அராத்துவின் அன்பு கொஞ்சம் ஆதி காலத்தது.  அன்பாக எல்லாவற்றையும் செய்வார்.  ஆனால் அன்பு என்று சொன்னால் கடுப்பாகி விடுவார்.  யார் இது, ஜெயமோகன் வட்டத்திலிருந்து ஓடி வந்தவரா என்பார்.

என் வாழ்வில் இப்போதுதான் என்னைப் போல் ஒருவரைப் பார்த்தேன்.  ஆர்ப்பரிக்கும் அன்பு.  அன்பின் மொத்த உருவம்.  ஒருவகையில் என்னை விட அதிகம்.  எப்படியென்றால், குமரகுருபரனும் என்னைப் போலவே ஒரு நாய் வளர்க்கிறார். பெயர் ஷெர்லாக்.  Daschund.  ஒரு டேஷண்டின் விலை 40,000 இலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை போகும்.  Depending on the pedigree certificate and breed parent history.  ஆம்.  மனிதர்களில் ஜாதி, இனம், வகுப்பு என்றெல்லாம் இருப்பது போல் நாய்களிலும் உண்டு.  நாய்களில் அதிகம்.  ஒரு பூர்ஷ்வா பெண்ணின் விரலைப் பாருங்கள்.  நீளமாக, மெல்லியதாக, நகங்கள் ஜொலிக்கும்படி இருக்கும்.  ஆண்களுக்கும் அப்படியே.  எங்கள் மூதாதையர் வனவாசிகள் என்றபடியால் என் விரல் குட்டையாக, நகம் தட்டையாக, நகத்தில் கோடுகள் விழுந்து கொடூரமாக இருக்கும்.  ஒருவரின் குல வரலாற்றை நீங்கள் அவருடைய விரல்களை வைத்துச் சொல்லி விடலாம்.   நான் வளர்க்கும் பப்பு, ஸோரோ உயர்ந்த ரகமான லாப்ரடார் மற்றும் க்ரேட் டேன் என்றாலும் அவைகளுக்குப் பெற்றோர் வரலாறு இல்லை.  அதெல்லாம் பார்த்துத்தான் வாங்க வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியாது.  அப்பன் பெயர் தெரியாத பாஸ்டர்ட் குழந்தை எல்லாம் மனிதர்களில்தான் சாத்தியம்.  ஆனால் வளர்ப்பு நாய்களில் அப்பா, அம்மா பெயர் மற்றும் வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.  இல்லாவிட்டால், ஒரு நாயின் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ சொறி சிரங்கு இருந்திருந்தால் குட்டிக்கும் வரும்.  எந்த நோய் இருந்தாலும் அது பிதுரார்ஜிதமாக வந்து விடும்.  அதற்குத்தான் பெற்றோர் வரலாறு பார்ப்பது.

குமரகுருபரன் வளர்க்கும் டாஷண்ட் ஒரிஜினல்.  பெற்றோர் வரலாறு கொண்டது.  பயங்கர ஆடம்பரமான பூர்ஷ்வா பெற்றோருக்குப் பிறந்தது.  விலை ஒன்றரை லட்சம்.  Sherlock is a pure bred long haired daschund with kennel club parent history from German.

மாலை எட்டரை மணிக்கு குமரகுருபரன் வீட்டுக்குச் சென்றேன்.  அவரிடம் இப்படி ஷெர்லாக் என்ற ஒரு அற்புதம் இருப்பது எனக்குத் தெரியாது.   போய்ப் பார்த்ததும் பரவச உணர்வில் மிதந்தேன்.  காரணம், ஷெர்லாக் என்னைப் பார்த்ததும் நீண்ட நாள் பார்க்காது இருந்த தாயைப் பிரிந்த குழந்தையைப் போல் ஓடி வந்து என் மீது ஏறிக் கொண்டது.  அந்த ஆனந்தத்தில் அங்கே இருந்த ப்ரியா தம்பியிடம் சரியாகப் பேச முடியாமல் போய் விட்டது.  (அகஸ்மாத்தாக இந்த வாரம் விகடனில் நீங்கள் எழுதியிருந்த மாதிரியே நடந்து விட்டது.  மன்னிக்கவும் ப்ரியா தம்பி.)

குமரகுருபரன் எவ்வளவு அன்பானவர் என்றால் ஷெர்லாக் இரண்டு மணி நேரம் ஆகியும் என் மடியிலிருந்து இறங்கவில்லை; நானும் அதோடு ஒன்றிப் போய் விட்டேன் என்றதும் நீங்கள் வேண்டுமானால் எடுத்துக் கொண்டு போங்கள் என்றார்.  நடுங்க வைக்கும் அன்பு என்று நினைத்துக் கொண்டேன்.  பப்பு, ஸோரோ இல்லாதிருந்தால் ஷெர்லாக்கை எடுத்துக் கொண்டு வந்திருப்பேன்.

பிறகு பேசினோம், பேசினோம், பேசினோம்.  பேசிக் கொண்டே இருந்தோம்.  குமரகுருபரனின் நண்பர் கார்த்தியும் உடன் இருந்தார்.  அதோடு, அந்திமழை அசோகனும் வந்திருந்தார்.  அதற்கு முன் அவரிடம் நான் ஃபோனில், “அசோகன், குமரகுருபரன் என்று ஒருவர் பிரமாதமாக எழுதுகிறார்.  அற்புதமான கவிதைகள். அது பற்றி அந்திமழையில் எழுதியிருக்கிறேன்.  நிச்சயம் அவருடைய புகைப்படத்தை வெளியிடுங்கள்.  முகநூலில் அவர் புகைப்படம் இருக்கிறது.  அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னேன்.  “என்னிடமே இருக்கிறது” என்றார் சிரித்துக் கொண்டே.  ஏன் சிரிக்கிறார் என்று அப்போது புரியவில்லை.  நேரில்தான் சொன்னார்.  குமரகுருபரனும் அவரும் வகுப்புத் தோழர்களாம்.  பல ஆண்டு நட்பு.

எப்போது தூங்கினேன் என்றே ஞாபகம் இல்லை.  காலையில் எழுந்த போது எட்டு மணி.  அடித்துப் பிடித்து ஆட்டோவைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.  பப்பு எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும், வாக்கிங் போக.  வாக்கிங் போனால்தான் மலஜலம். இல்லாவிட்டால் அடக்கிக் கொண்டே இருக்கும்.  நான் ஊருக்குப் போயிருந்தால்?  (எக்ஸைல் நாவலில் காண்க!)

போய் அவருடைய அறையில் அமர்ந்ததும் அவருடைய கட்டுரைத் தொகுப்பைப் புரட்டினேன்.  முதல் பக்கத்திலேயே நன்றி ஜெயமோகன் என்று போட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.  இவர் நல்லவரா, கெட்டவரா என்று ஒருக்கணம் துணுக்குற்றேன்.  நம்பலாமா வேண்டாமா?  இருப்பதா போய் விடலாமா?   சரி, கேட்டே விடுவோம் என்று கேட்டேன்.   ”ஒரு hedonist ஆக வாழ்கிறீர்கள், இது என்ன?” நீண்ட பதில் சொன்னார். சுருக்கம்:  (விரும்பிப்) படிப்பது ஜெயமோகனை; இடிப்பது…   ஸாரி…  கொண்டாடுவது சாருவை.  இது அவர் வார்த்தை அல்ல.  நான் புரிந்து கொண்டது இப்படி.

நானும் பலரைப் பார்த்திருக்கிறேன்.  ஜெயமோகனைப் படித்தால் சாருவைப் பிடிக்கவில்லை.  சாருவைப் படித்தால் ஜெயமோகனைப் பிடிக்கவில்லை.  சமீபத்தில் ஜெ.வின் நண்பர் அரங்காவுக்குப் பிடித்த புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தேன்.  எல்லாமே ஜெ. நூல்கள்.  கொஞ்சம் நாஞ்சில்.  அதோடு ஷோபா சக்தி.  இதேபோல் என்னுடைய வாசகர்களிடம் நான் தவறாமல் கேட்கும் கேள்வி: ஜெயமோகனின் எழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?  நெளிந்து கொண்டே பிடிக்காது என்பார்கள்.  ஆனால் இப்போது சமீப காலமாக ஜெ. எனக்குப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.  நேற்று முழுநாளும் அவருடைய வெண்முரசு முதல் நூலைப் படித்தேன்.  பிடித்திருந்தது.  உடனே ராஜேஷை அழைத்தேன்.  அவர் மகாபாரதத்தின் தீவிர வாசகர்.  வெண்முரசு எப்படி?  படிக்கிறீர்களா?  ஐயோ என்றார்.

இந்த சூழ்நிலையில் குமரகுருபரனுக்கு ஜெயமோகனையும் பிடிக்கும், சாருவையும் பிடிக்கும் போலிருக்கிறது.  ஆனால் அவர் வாழ்க்கை என் வாழ்க்கையை ஒத்திருக்கிறது.  A practicing hedonist.  தமிழ்நாட்டில் அப்படிப் பார்ப்பது அரிதிலும் அரிது.

மறுநாள் ஜெகாவிடமிருந்து தொலைபேசி.  கத்தர்.  குமரகுருபரனைப் பார்த்தீங்களாம்ல?  எங்க ஊருதான்.  ராஜபாளையம்.  நம்ம ஆளுதான்.  சந்திச்சா உங்களைப் பத்தித்தான் பேசிக்கிட்டு இருப்போம்.

பாராட்டுவேன் என்று நினைத்தவரைக் கடிந்து கொண்டேன். ஏனென்றால், மதுரை அருணாசலம் மட்டும் எனக்குக் குமரகுருபரனின் கவிதைகளை அறிமுகப்படுத்தி இருக்காவிட்டால் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு எனக்கு அவரைத் தெரிந்திருக்காது.  என் நண்பன் ஸாம் என்ற சாமிநாதன் மீதும் கோபமே ஏற்பட்டது.  ஸாம் குமரகுருபரனின் நெருங்கிய தோழனாம்.  அடப் பாவிகளா! ஒரு அற்புதத்தைப் பார்த்தால் எனக்கும் அதை அறிமுகப்படுத்த மாட்டீர்களா?

அந்த சந்திப்பில் குமரகுருபரன் எனக்கு ஒரு புத்தகம் பரிசளித்தார்.  அற்புதமான புத்தகம்.  1989-இல் வெளிவந்த நூல்தான்.  ஆனால் இப்போது பிரதிகள் இல்லை.  லட்ச ரூபாய் கொடுத்தாலும் இப்போது கிடைக்காது.  மர அமுதம். வன வளம் பற்றிய அரிய நூல். இ.வே.சோ.சுந்தரம் எழுதியது.

குமரகுருபரனிடம் இன்னொரு விஷயம் கவனித்தேன்.  என்னைப் போலவே இருக்கிறார் என்றேன் அல்லவா?  என்னை யாரேனும் அழைத்தால் உடனே ஆஜராகி விடுவேன்.  ஒரு செவ்வாய்க் கிழமை கணேஷ் அன்பு கோயம்பேடு – வடபழனியில் இருக்கும் ஒரு பப்பிலிருந்து அழைத்தார்.  அப்போது இரவு எட்டு பத்து.  எட்டே முக்காலுக்குள் அந்த பப்பில் இருந்தேன்.  இப்படி வரக் கூடிய ஒருவரைக் கூட இதுவரை நான் சந்தித்தது இல்லை.  அராத்து ஓரளவு பரவாயில்லை.  ஒரு தீபாவளி அன்று மாலை அழைத்த போது கூட வந்தார்.  ஸாரா போனோம்.

இன்று மாலை குமரகுருபரனை அழைத்து, ”சனிக்கிழமை பெங்களூர் போகிறேன், இன்னும் ஒரு ஆளுக்கு அந்த வீட்டில் இடம் இருக்கும், வருகிறீர்களா?” என்றேன்.  வருகிறேன், எத்தனை மணிக்குக் கிளம்ப வேண்டும் என்றார்.  இப்படி ஒரு மனிதரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை, என்னைத் தவிர.  (இப்படி சுதந்திரமாக என்னை வாழ அனுமதிக்கும் அவந்திகாவுக்கு நன்றி!)

மற்றவர்கள் என்றால் வந்துருவேன் சாரு, அன்னிக்குன்னு பார்த்துத்தான் மச்சினி வருது என்பார்கள்.  இன்னும் பத்து விதமான காரணங்கள் சொல்வார்கள்.

ஷெர்லாக்கை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன்.  பக்கத்தில் இருந்தால் பார்க்கலாம்.  மைலாப்பூருக்கும் கோடம்பாக்கத்துக்கும் ரொம்ப தூரம்.  அன்றைய தினம் காலையில் கிளம்பும் போது ஷெர்லாக்கிடம் கொஞ்சி விட்டு வரலாம் என்று தேடினேன்.  கிடைக்கவில்லை.  பிறகு குமரகுருபரனிடம் ஃபோன் போட்டுக் கேட்ட போது அது கட்டிலுக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்ததாகச் சொன்னார்.

அன்பில் குமரகுருபரன் என்னையும் தூக்கி அடித்து விட்டார்.  அவர் வீட்டுக்கு வந்த அன்பர் ஒருவர் சிக்கனை சாப்பிட்டு விட்டு எலும்பை ஷெர்லாக்குக்குக் கொடுத்திருக்கிறார்.  அதை யாரும் கவனிக்கவில்லை.  மறுநாள் அதற்கு ஜுரம் வந்து விட்டது.  நானாக இருந்தால் இதைச் சொல்லும் போது கோபத்தோடு சொல்லியிருப்பேன்.  ஒரு மு.பு.வாவது வந்து விழுந்திருக்கும்.  ஆனால் அதையும் குமரகுருபரன் சிரித்துக் கொண்டே வாத்ஸல்யமாகத்தான் சொன்னார்.  நண்பர்களே, நாயைக் கண்டதும் கல்லால் அடிப்பதை விட அபாயகரமானது எலும்பைப் போடுவது.  தெரு நாய்கள்தான் எலும்பு தின்னும்.  பப்பு, ஸோரோவுக்கு எலும்பு கொடுத்தால் ரத்தம் ரத்தமாகக் கக்கும், ஒரு வாரத்துக்கு.  அன்றைய சந்திப்பு பற்றி குமரகுருபரன் எழுதியிருந்த கவிதையை அவரது முகநூல் பக்கத்தில் பார்த்தேன்.  அது:

பாடல்கள் எல்லாவற்றிற்கும்
ஓருடல் தேவையாயிருக்கிறது
உடலற்ற பாடலொன்றைப் புனைபவன்
ஞானி அல்ல இவ்வுலகில்
உண்மையில் உடலற்ற பாடலொன்றில் தான்
முதல் காதல் பிறக்கிறது
நாம் அறிவோம்.
நாம் அதைச் சொல்லத் தயாராயில்லை
நாம் அதன் துன்பத்துக்கு நேர்ந்து கொள்ளவில்லை
நாம் தலை இழக்கக் கொஞ்சம் நேரமிருக்கிறது
அவர்கள் வெட்டும் முன்
இவ்வாறென்று எவனாவது சொல்லி இருக்கலாம்
ஒரு தலை விழுவதில்
எழுகிறது சொன்னாலும் சொல்லாமல் விட்டாலும்
எக் காதலும்.
பின் நவீனத் துவத்தில்
காதல் என்று எழுதும்போதே
இறப்பு முத்தமிடுகிறது.
அதைக் கற்றுக்கொள் என்பவனை
நீங்கள் கேலி செய்கிறீர்கள்.
ஒற்றைப் பொழுதில்
அவன் உடனிருந்த கணத்தில்
வாழ்ந்தது தமிழ்
நடு இரவில்.
விடிந்த போது இலக்கியம்
ஆட்டோ எடுத்து மைலாப்பூர் போயிருந்தது
நாய்களுக்கு உணவிடவென.

(சாருவுக்கு)

ஷெர்லாக்கை என்னுடைய ஆப்பிள் ஃபோனில் படம் எடுத்து வந்தேன்.  இங்கே அதை எப்படிக் கொண்டு வருவது என்று தெரியவில்லை.   குமரகுருபரனின் கவிதைகள் பற்றி விரைவில் விரிவாக எழுதுகிறேன்.

Comments are closed.