நான் என்ன செய்ய வேண்டும்?

இன்று இரண்டரை மணி அளவில் சீனி அழைத்தார்.  காலையிலேயே அவர் ஒரு காணொலியை அனுப்பியிருந்தார்.  என் சக எழுத்தாளர் பேசிய முக்கால் மணி நேரப் பேச்சு.  தத்துவம் சார்ந்த்து.  ”அதற்கு நீங்களும் நானும் பதில் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை” என்றார்.  உங்களுக்குத்தான் தெரியுமே, யார் எதைச் சொன்னாலும் எனக்கு அது சரியாகவே தோன்றும், அதிலும் சீனி சொன்னால் கேள்வியே இல்லை.  சரி, எழுதி விடுவோம் என்றேன். 

அவருடன் பேசிய போது குளித்து விட்டு வந்து ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.  அந்த நிலையில் நான் யாருடன் பேசிக்கொண்டிருக்க முடியும் என்பது போல் பார்த்தாள் மனைவி.  சாப்பிட வேண்டும். 

எல்லாம் முடித்து விட்டு யோசித்தால் நான் அந்தக் காணொலிக்கு பதில் எழுதுவது தற்கொலைக்குச் சமம் என்று தோன்றியது.

விவேகானந்தரின் வாழ்க்கையைப் பார்ப்போம்.  அவர் முப்பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.  சுமார் முப்பது வயதிலிருந்து உறங்குவது இரண்டு மணி நேரம்தான்.  மற்ற நேரம் பூராவும் கைகளில் சிகரெட்டுடன் எழுத்துதான்.  பக்தர்கள் கவலைப்பட்டுக் கேட்கும்போது, “எனக்கு இருப்பது இன்னும் ஒன்பது ஆண்டுகள், அதற்குள் முடிக்க வேண்டிய வேலை மூன்று மடங்கு இருக்கிறது, அதனால்தான் உறங்க முடியவில்லை, வேலைதான் முக்கியம்” என்பாராம்.

எனக்கு என் ஆயுள் கணக்கு தெரியும்.  அதற்குள் நான் பத்துப் பதினைந்து நாவல்களை முடிக்கலாம்.  ஆனாலும் தியாகராஜா இன்னமும் 150 பக்கங்களில் நிற்கிறது.  அசோகா முந்நூறு பக்கங்களில் தொங்கல். ரொப்பங்கி இரவுகள் முடித்தே விட்டேன்.  முடித்து ஆறு மாதம் இருக்கும்.  ஆனால் சீனியும் மற்ற நண்பர்களும் அந்த நாவல் பலகீனமாக இருக்கிறது என்று சொன்னதால் இப்போது மீண்டும் ஒருமுறை ஜப்பான் செல்கிறேன்.  இப்படி எழுத வேண்டிய நாவல்கள் வரிசை கட்டி நிற்கின்றன.  இதையெல்லாம் முடிக்காமல் தத்துவ விசாரணைகளில், சம்வாதங்களில், உரையாடல்களில் இறங்குவது சரியல்ல என்பது என் கருத்து.  இது போன்ற தத்துவ விவாதங்களில் நான் நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஈடுபட்டு விட்டேன்.  இப்போது கூட சீனியுடன் மார்க்கி தெ ஸாதை முன் வைத்து விவாதித்துக்கொண்டிருக்கிறேன்.  அது போதும் என்று தோன்றுகிறது.   

இப்படிச் சொல்வதால் தத்துவ விவாதங்கள் தேவையில்லை என்று அர்த்தமல்ல.  சீனி அனுப்பிய காணொலியில் உள்ள விவாதங்களுக்குப் பதில் சொன்னால் இலக்கிய உலகம் பயன் அடையும்தான்.  அப்படிப்பட்ட தத்துவ விவாதங்கள்தான் ஆரம்ப காலத்தில் என்னை உருவாக்கின.  ஆனால் இப்போது, இந்தத் தருணத்தில் நான் எழுதிக்கொண்டிருக்கும் புனைவுகள் முக்கியம் என்று இந்த எழுபது வயதில் நினைக்கிறேன்.  வயதுதான் இங்கே கணக்கு.  தத்துவ விவாதங்களை விட புனைவுகளில் நான் முழுக் கவனம் எடுக்க வேண்டும் என்று நினைப்பதற்கு என் வயதுதான் காரணம்.

இதை நான் சீனியை அழைத்து தொலைபேசியிலேயே பேசியிருக்க முடியும்.  ஆனாலும் இது பொதுவெளியில் பதிவு செய்யப்பட வேண்டியது என்று தோன்றியது. 

ஆர்ட்ரெவ்யூ ஏஷியா ஆசிரியர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.  வந்து ஒரு மாதம் ஆகிறது.  இன்னும் பதில் எழுதவில்லை.  ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் நான் எழுதி வந்த தொடரை மீண்டும் தொடங்கலாம் என்பதற்காகக் கூட அவர் என்னைத் தொடர்பு கொண்டிருக்கலாம்.  அல்லது, வேறு ஏதேனும் முக்கியமான காரணம் இருக்கலாம்.  அதையெல்லாம் நிறுத்தி விட்டுத்தான் சீனிக்கு நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  இன்னும் இரண்டொரு அத்தியாயங்களை எழுதினால் அந்தத் தொடர் முடிந்து விடும்.  பார்க்கலாம்.