வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக்
கூடாது என்ற கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின்
வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால்
அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
அது ஒரு தவறான கருத்து.
காரணம்?
சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள். என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே சதவிகிதம்தான். எழுதாதது தொண்ணூறு சதவிகிதம். அவற்றை எழுதவும் முடியாது. ஆயுள் போதாது. ஓஷோ போன்ற ஆன்மீகவாதிகள் பேசிக்கொண்டே இருந்தது இந்தக் காரணத்தினால்தான்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நான் எப்போதும் நண்பர்கள் சூழவே இருந்தேன். அதன் காரணமாகவே எழுதியது குறைவாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் நண்பர்கள் சந்திப்பை நிறுத்தி விட்டேன். மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே சந்திப்பு. அதிலும் வெளியூர்களில்தான். இப்போது நிறைய எழுதுகிறேன்.
நண்பர்கள் சந்திப்பில் நான் கவனித்தது என்னவென்றால், என் வாசகர் வட்ட நண்பர்களைத் தவிர வேறு புதிய வாசகர்கள் யாரும் வருவதில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று, சுஜாதா சொன்னபடி எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது. இரண்டு, சாரு என்ற எழுத்தாளர் நேரில் சந்திக்கக் கூடிய நபர் அல்ல.
ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு பத்திரிகை அலுவலகத்துக்கு அங்கே பணிபுரியும் நண்பனைச் சந்திக்கப் போயிருந்தேன். அவரும் நானுமாக தேநீர் அருந்துவதற்காக வெளியே போனோம். அப்போது ஒரு நூதனமான விஷயத்தைக் கவனித்தேன். என்னைக் கண்டதும் எல்லோரும் பதுங்கிப் பதுங்கிப் போனார்கள். நண்பரிடம் அதைக் குறிப்பிட்டு காரணம் கேட்டேன். மிகுந்த நகைச்சுவை உணர்வுள்ள அந்த நண்பர், “நீங்க அடிச்சிருவீங்கன்னு பயந்துபோய்தான் அப்டிப் பதுங்குறானுவோண்ணே” என்றார்.
”அடப் பாவிகளா, அப்பேர்ப்பட்ட முரடனாய்யா நான்?” என்றேன்.
”உங்க எழுத்து அப்படித்தானேண்ணே இருக்கு?”
எனக்கு இப்படி ஒரு இமேஜ் இருக்கிறது. காரணம் என்ன தெரியுமா? எதார்த்தவாதி வெகுஜன விரோதி. என் மனம் என் வாயில் இருக்கிறது அல்லவா, அதனால்தான் அப்படி ஒரு இமேஜ். மற்றபடி நேரில் பழகுவதற்கு நான் ஒரு குழந்தையைப் போன்றவன்.
ஆக, இப்படிப்பட்ட காரணங்களால் யாரும் என்னை நெருங்குவதில்லை.
ஆனாலும் என்னை நேரில் சந்தித்துப் பழகினால் உங்களுக்குக் கிடைக்கக் கூடியது மிகவும் அதிகம். மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தால் காலை ஐந்து மணி வரை மடக்கிய கால் மடக்கியபடி பேசிக்கொண்டே இருப்பேன். சிறுநீர் கழிக்க எழுந்து கொள்வதோடு சரி. எல்லோரும் உறங்கி விடுவார்கள். ஒரே ஒருத்தர் சாமியாடியபடி அமர்ந்திருப்பார். அவர் ஒருத்தருக்காக நான் பேசிக்கொண்டிருப்பேன். அப்படித்தான் ஒருமுறை அந்த ஒருவராக என் அன்பு நண்பர் அருணாசலம் அமர்ந்திருந்தார். காலை ஐந்து மணி அப்போது. முந்தின நாள் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்த கச்சேரி. பின்நவீனத்துவக் கச்சேரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இம்மாதிரி உரையாடல்களில் என்ன பயன் என்றால், இது எதுவுமே என் எழுத்தில் கிடைக்காது.
ஒரு உதாரணம். ஏற்காட்டில் உள்ள சுரேஷ் ராஜமாணிக்கத்தின் கடல் போல் விரிந்த பயண விடுதியில் ஒரு நாள் இரவு. இரண்டு மணி இருக்கும். ஒரு நண்பர் தன் உறவுகளோடு அவருக்கு இருந்த பாசப்பிணைப்பு பற்றிச் சொல்லி அழுதுகொண்டிருந்தார். ஒரு காலத்தில் குடும்பம் பற்றிய எங்கெல்ஸின் கருத்தைச் சொல்லி (குடும்பம்தான் சொத்துரிமையின் அடிப்படை) எங்களையெல்லாம் தட்டி எழுப்பியவர்.
ஆனால் காலம் மாறி விட்டது. வயதும் ஆகி விட்டது. என் மகனுக்கு ஏதேனும் ஆகி விட்டால் நான் செத்துவிடுவேன் என்றார் அறிஞர். உடனே சுரேஷ் என்னை நோக்கி, ”நீங்கள் மரணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மரணத்தை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?” என்று கேட்டார்.
ஒரு பூனை தான் வசிக்கும் வீட்டில் உள்ள ஒருவரின் மரணத்தை அல்லது தான் வசிக்கும் தெருவில் நிகழ்ந்த ஒரு மரணத்தை எப்படி எதிர்கொள்ளுமோ அப்படித்தான் எதிர்கொள்வேன். அதாவது, அந்த மரண வீட்டை வெறுமனே வேடிக்கை பார்ப்பேன் என்றேன்.
இந்த பதிலை நான் ஒருக்கணம் கூட யோசிக்காமல் சொன்னேன்.
நான் சுரேஷிடம் சொன்னது பொய் அல்ல. ஹிரோஷிமா மியூசியத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பிணங்களின் புகைப்படங்களைப் பார்த்த போதுகூட நான் பூனை போலவேதான் வேடிக்கை பார்த்தேன். என்னோடு அப்போது கூட இருந்த தோக்யோ செந்தில்குமார் சாட்சி.
இந்த மனோநிலை எனக்கு எப்படி வந்தது?
ஜனனமும் மரணமும் சம்சார சாகரத்தில் அல்லது ஆன்மாவின் நெடும்பயணத்தில் இரண்டு புள்ளிகள் மட்டுமே என்ற ஞானத்தை அடைந்து விட்டதனால் வந்தது.
ஞானியான பட்டினத்தடிகள் தன் தாயார் இறந்த போது எப்படியெல்லாம் உருகி உருகி அழுதிருக்கிறார்?
முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?
இப்படியே பத்து பாடல்கள்.
ஆனால் தாயை விடப் பெரிதாக, என்னை ஒரு பேரரசனைப் போல் வளர்த்த என் தந்தை இறந்தபோது அவர்களது ஈமச் சடங்குகளை செய்வதற்குக் கூட நான் போகவில்லை. என் வாசகர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தேன். நான்தான் தலைச்சன். நான்தான் செய்திருக்க வேண்டும். “என்னால் இயலாது, முக்கியமான ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன், நீயே செய்து விடு” என்று என் தம்பியிடம் சொல்லி விட்டேன்.
அன்றைய நாளை மறக்க முடியாது. 26 ஜூன், 2009. ஏன் மறக்க முடியாத நாள் என்றால், அதற்கு முந்தின தினம்தான் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்திருந்தார். தேதியை கவனியுங்கள். மாதத்தின் கடைசி வாரம். அந்தத் தேதியில் மாதப் பத்திரிகையின் இறுதி வடிவம் அச்சுக்குப் போயிருக்கும். ஆனால் மைக்கேல் ஜாக்ஸனுக்கு நான் ஒரு அஞ்சலிக் கட்டுரை எழுதிக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார் எடிட்டர். நான் மைக்கேல் ஜாக்ஸனின் தீவிர விசிறி. நான் அப்போது எழுதிய அந்த அஞ்சலிக் கட்டுரையை முடிந்தால் படித்துப் பாருங்கள். உலக மொழிகளில் வேறு எங்குமே அப்படி ஒரு கட்டுரையை நீங்கள் வாசித்திருக்க முடியாது. 26 ஜூன் காலையில்தான் என் தந்தை இறந்த செய்தி வந்தது. நான் மைக்கேல் ஜாக்ஸனுக்கு அஞ்சலிக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன்.
மதியம் மூன்று மணி அளவில் எடிட்டருக்குக் கட்டுரையை அனுப்பி விட்டு, அவரைத் தொலைபேசியில் அழைத்து, “ஏதேனும் சந்தேகம் என்று என்னை அழைத்தால் நான் பதில் கொடுக்க முடியாத நிலையில் இருப்பேன்” என்றேன். ஏன் என்று கேட்டார். விஷயத்தைச் சொன்னேன். நீர் மனிதன்தானா என்றார். இல்லை, எழுத்தாளன் என்றேன்.
தி.ஜ.ரங்கநாதன் என்று ஒரு எழுத்தாளர். அவருடைய இளம் வயதில் இந்தச் சம்பவம் நடந்தது. சென்னையில் மூன்று நாள் காங்கிரஸ் மாநாடு. ரங்கநாதன் மாநாட்டு வேலைகளை மும்முரமாகச் செய்து கொண்டிருக்கிறார். காந்தி, நேரு போன்ற தலைவர்கள் வந்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டம். முப்பதுகளின் முற்பகுதியாக இருக்கலாம்.
மாநாடு முடிந்ததும் ரங்கநாதன் அவசர அவசரமாக வீட்டுக்குக் கிளம்புகிறார். இரவு பதினோரு மணி.
”மூன்று நாள் ஓடியாடி வேலை செய்திருக்கிறாய். தலைவர்களும் கிளம்பி விட்டார்கள். கொஞ்சம் ஆற அமர இருந்து சாப்பிட்டு விட்டு காலையில் போயேன்” என்கிறார் நண்பர்.
”இல்லை, நான் அவசரமாக வீட்டுக்குப் போக வேண்டும்.”
”ஏன்?”
”காலையில் என் கைக்குழந்தை தவறி விட்டது. நான் போய்தான் காரியம் செய்ய வேண்டும்.”
”அடப்பாவி, நீர் மனுஷனாய்யா?”
”இல்லை, காங்கிரஸ் தொண்டன்.”
***
ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், கடந்த இருபது ஆண்டுகளாக என் நேரடி உரையாடல்களை என் வாசகர் வட்ட நண்பர்கள் மட்டுமே அனுபவம் கொண்டார்கள். அவர்கள் மொத்தமாக ஒரு இருபது பேர் இருப்பார்கள்.
அதனால்தான் இப்போது ஒரு முடிவு செய்திருக்கிறேன். இனிமேல் என்னைச் சந்திக்க விரும்பும் நண்பர்களை அவர்கள் விரும்பும் இடத்தில் சந்திக்கிறேன். எத்தனை நாள் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு கட்டணத்தையும் நிர்ணயித்திருக்கிறேன்.
ஒரு லட்சம் ரூபாய்.
இந்தப் பணம் கூட என் லௌகீக காரியங்களுக்காக அல்ல. என் பயணங்களுக்கும் என் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்காகவும்தான். கடந்த பத்து ஆண்டுகளில் நான் மொழிபெயர்ப்புக்காக மட்டும் முப்பது லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இன்னும் செலவு செய்துகொண்டிருக்கிறேன்.
எனவே நீங்கள் தரும் ஒரு லட்சம் ரூபாய் என்பது என் கலாச்சார செயல்பாடுகளுக்காகத்தான்.
நீங்கள் ஒரு ஐந்து பேர் சேர்ந்து என்னை ஒரு விடுதிக்கு அழைக்கலாம். அங்கே இரண்டு மூன்று தினங்கள் என்னோடு சேர்ந்து உரையாடலாம். இனிமேல் நான் வாசகர் வட்ட நண்பர்களையும் இப்படித்தான் சந்திக்கலாம் என்று இருக்கிறேன். இனிமேலான சந்திப்புகள் அனைத்தும் கட்டணச் சந்திப்புகள்தான்.
எழுத்தாளர்களை நேரில் சந்திப்பது எத்தனை பெரிய பேறு என்பதை அசோகமித்திரனையும், சார்வாகனையும் சந்தித்ததிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். கடுமையான ஆஸ்துமாவில் மருந்து வாங்கவும் காசு இல்லாமல் சிரமப்படுவார் அசோகமித்திரன். அதை சிரமம் என்ற வார்த்தையால் சொல்வதெல்லாம் பைத்தியக்காரத்தனம். மூச்சு விட முடியவில்லை என்றால் அது எப்பேர்ப்பட்ட அவஸ்தை என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் அந்த நிலைமையிலும் அவர் சமரசமே செய்து கொள்ளவில்லை. அதனால்தான் என்னைப் பொருத்தவரை அசோகமித்திரன் காந்தியை விடப் பெரியவர். அவர் சமரசம் செய்து கொண்டிருந்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கலாம். வாசனின் சினிமா கம்பெனியில் இருபத்தைந்து ஆண்டுகள் ப்ரொடக்ஷன் அஸிஸ்டெண்டாக இருந்தவர்.
ஒருநாள் வாசன் அவரைத் தன் காரைத் துடைக்கச் சொன்னார். அசோகமித்திரன், “நான் ஒரு எழுத்தாளன், என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது” என்றார்.
”நீ எழுத்தாளனாக இருந்தால் இந்த இடத்தில் வேலையில் இருந்திருக்க மாட்டாயே?”
அவ்வளவுதான். அந்த க்ஷணமே வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டார் அசோகமித்திரன்.
பிறகு தன் சினிமா கம்பெனி அனுபவங்களை நாவலாக எழுதினார். அதனால் பாதிக்கப்பட்ட வாசனின் மகன் பாலசுப்ரமணியன் அசோகமித்திரனை வாழ்நாள் முழுக்க ஆனந்த விகடனில் தடை செய்து வைத்தார்.
அசோகமித்திரன் அனுபவித்த வறுமைக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாம். அந்தக் காலத்தில் விகடன்தான் எழுத்தாளர்களைப் பெருமளவு போஷித்த பத்திரிகை. கல்கி கிருஷ்ணமூர்த்தி, மணியன் போன்றவர்களெல்லாம் விகடனால் வளம் பெற்றவர்கள். கொழித்தார்கள் என்றே சொல்லலாம்.
இதையெல்லாம் நீங்கள் அசோகமித்திரனின் எழுத்திலிருந்து அறிந்து கொள்ள முடியுமா? ம்ஹும், தன் உயிரே போனாலும் தன் தனிப்பட்ட கஷ்டங்கள் பற்றி அவர் எழுத மாட்டார்.
என் இலக்கிய வாழ்விலும் லௌகீக வாழ்விலும் துளியும் சமரசமற்று வாழ்வதற்கு அசோகமித்திரனை நான் சந்தித்ததுதான் காரணம். அவர் எழுத்தை மட்டும் வாசித்திருந்தால் சமரசமற்ற வாழ்வு என்பதன் அர்த்தத்தை நான் அறிந்துகொண்டிருக்க முடியாது. அதே சமயம், லௌகீக வாழ்வையும் குடும்ப வாழ்வையும் எப்படி வாழக் கூடாது என்பதையும் நான் அசோகமித்திரனை நேரில் சந்தித்ததால்தான் அறிந்து கொண்டேன்.
விளக்குகிறேன்.
சென்னையின் மையம் தி.நகர். தி.நகரின் மையம் தி.நகர் பஸ் நிலையம். அந்த பஸ் நிலையத்துக்கு நேர் எதிரே ஒரு இரண்டு நிமிட நடை தூரத்தில் ஒரு தெரு உள்ளது. தணிகாசலம் தெரு என்று பெயர். அந்தக் காலத்தில் அது மிகவும் அமைதியான தெரு. பஸ் நிலையத்தின் இரைச்சல் எதுவும் அந்தத் தெருவில் கேட்காது. அந்தத் தெருவின் ஆரம்பத்திலேயே ஒரு அழகான மாடி வீடு. சுற்றி வர பெரிய தோட்டம் போடக் கூடிய அளவுக்கு வெற்றிடம். ஆள் பரிவாரம் இருந்தால் நல்லதொரு தோட்டம் போடலாம். அதுதான் அசோகமித்திரனின் வீடு. அங்கேதான் அவரை நான் சந்திப்பது வழக்கம். பக்கத்து வீட்டுப் பூனைக்கு உணவு கொடுத்துக்கொண்டிருப்பார். ரொம்ப காலமாக அது அவருடைய பூனை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பிற்பாடுதான் பக்கத்து வீட்டுப் பூனை என்று தெரிந்தது.
அவருடைய தந்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்த போது வாங்கிய வீடு. சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தோன்ற ஆரம்பித்த காலத்தில் ஒரு கட்டிட உரிமையாளர் அந்தத் தனி வீட்டை விலைக்கு வாங்கி அந்த இடத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டினார். அப்படிக் கட்டும்போது அந்த இடத்தின் உரிமையாளருக்கு அந்த இடத்துக்கான பணத்தோடு அந்தக் குடியிருப்பில் ஒரு வீட்டையும் கொடுப்பார்கள். அப்படி ஒரு தொகையோடு ஒரு வீடும் கிடைத்தது அசோகமித்திரனுக்கு.
பிற்பாடு பல காலம் கழித்து அவரை நான் சந்தித்த போது அவர் இன்னொரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு இருபதுக்குப் பத்து என்ற சிறிய அறையில் இருந்தார். பெரிய வீடுதான். 2000 சதுர அடியோ அதற்கு மேலோ இருக்கும். ஆனால் மகன் வீடு. மருமகள். குழந்தைகள். அசோகமித்திரனின் மனைவி. முதியவருக்குக் கிடைத்தது ஒரு சிறிய அறை. நானும் அழகியசிங்கரும் போனால் அந்தச் சிறிய அறையில் நெருக்கியடித்துக்கொண்டுதான் அமர வேண்டும்.
ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை உங்களோடு இப்போது நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
அசோகமித்திரன் தணிகாசலம் தெரு வீட்டில் இருந்த போது ஒரு பெரிய நூலகம் வைத்திருந்தார். ஆனால் இப்போது இந்தச் சிறிய அறையில் ஒரு புத்தகம் கூட இல்லை. ஆமாம், ஒரு புத்தகம் கூட இல்லை.
முதல் முறையாக அவருடைய அந்தச் சிறிய அறை இருந்த வீட்டுக்குப் போயிருந்தபோது அதை கவனித்து, மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டேன். “எங்கே சார் உங்களுடைய எல்லா புத்தகங்களும்?”
அசோகமித்திரனின் இளமைக் காலத்திலிருந்தே அவர் முகத்தில் ஒரு கைப்பு உணர்வு தங்கி விட்டது. அசோகமித்திரனின் பூர்வீகம் எது என்பது யாருக்கும் தெரியாது. ஹைதராபாதிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தவர் என்று தெரியும். அதற்கும் முன்னால்?
அசோகமித்திரன் தஞ்சாவூர்க்காரர். யாருக்கும் தெரியாது. ”ஐயோ, தஞ்சாவூர் பற்றிப் பேசாதீர்கள். நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு துயரமான காலம் அது” என்பார். அதை கதையாக எழுதியிருக்கிறார். இருவர் என்று பெயர்.
என் கேள்வியைக் கேட்டு, அவர் முகத்தில் நிரந்தரமாகவே தங்கி விட்ட கைப்பு உணர்வு வழக்கத்துக்கு அதிகமாக மேலிட என்னை மேலும் கீழுமாக நக்கலாகப் பார்த்து “இந்த அறையில புத்தகங்களையும் வச்சுக்கலாம்ங்கிறீங்க?” என்றார்.
கொஞ்ச நேரம் அமைதி.
”எல்லா புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களிடம் கொடுத்து விட்டேன்.”
இப்படி வாழக் கூடாது என்று அந்த க்ஷணம் முடிவு செய்தேன்.
ஆக, எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் அசோகமித்திரனே குரு. எப்படி வாழக் கூடாது என்பதற்கும் அசோகமித்திரனே குரு.
ஆனால் இது எதுவும் அவருடைய புத்தகங்களைப் படித்துப் பெற்றது அல்ல. நேரில் சந்தித்துப் பெற்றது. ஆகவேதான் எழுத்தாளர்களை நேரில் சந்தித்துப் பழக வேண்டும் என்று சொல்கிறேன்.
சார்வாகனை சந்தித்த்தும் இதே மாதிரிதான். ஆனால் அசோகமித்திரனோடு பல தசாப்தங்கள் நட்பு. சார்வாகனோடு ஒரே ஒரு வருடம்தான்.
இதேபோல் ஒரு தீபாவளி நேரம். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னால். 2014. அக்டோபர் கடைசி.
அவர் கதைகள் எனக்குப் பிடிக்கும். அவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தார். எங்கே இருக்கிறீர்கள் என்று பதில் கடிதம் போட்டேன். திருவான்மியூர் என்றார். நேரில் போய் விட்டேன். அப்போது அவர் வயது 85. தளர்ந்து போயிருந்தார். அடுத்த தீபாவளிக்கு இருக்க மாட்டேன் என்றார்.
அதேபோல் அடுத்த தீபாவளியைத் தாண்டினதும் டிசம்பரில் இறந்து விட்டார். நானும் அசோகமித்திரனும் அழகியசிங்கரும் போனோம். என்னால் துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் முன்னால்தானே எந்த மரணத்தையும் பூனையைப் போல் எதிர்கொள்வேன் என்றாய், இப்போது என்ன, ஒரே கட்டுரையிலேயே தடம் மாறுகிறாயே என்கிறீர்களா, இதற்கான பதிலை நேரில் சொல்கிறேன். துக்கத்தில் நெஞ்சு வலிக்கத் தொடங்கியது. அசோகமித்திரனுக்கும் தாளவில்லை. பத்தே நிமிடத்தில் மூவருமாக ஆட்டோவில் திரும்பி விட்டோம். என்னை மைலாப்பூர் வீட்டில் விட்டு விட்டு அசோகமித்திரனும் அழகியசிங்கரும் தி.நகர் கிளம்பினார்கள்.
சார்வாகனை மாதம் ஒருமுறை சந்தித்துக்கொண்டிருந்தேன். சார்வாகன் உலகப் புகழ் பெற்ற தொழுநோய் மருத்துவர். அதற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர். இயற்பெயர் சீனிவாசன். பிராமணர். அய்யர். ஆனாலும் கடவுள் நம்பிக்கை அற்றவர். அதனால்தான் சார்வாகன் என்ற புனைப்பெயர். கம்யூனிசத்தில் நம்பிக்கை உள்ளவர்.
வீட்டு வாசலில் ஏன் டாக்டர் ஸ்ரீனிவாசன் என்ற பெயர்ப் பலகை இல்லை என்று கேட்டேன்.
இந்தப் பகுதியில் உள்ள அனைவருக்குமே நான் மருத்துவன் என்று தெரியும் என்றார்.
அப்படியே பேச்சுவாக்கில் அவர் எந்த நோயாளியிடமிருந்தும் கட்டணம் வாங்கியதில்லை என்றார். ஏன் என்று கேட்டேன். ”அரசாங்கமே போதுமான அளவுக்கு ஓய்வு ஊதியம் அளிக்கிறது, பணியில் இருந்த நாட்களிலும் என் சம்பளமே அதிகம் என்ற அளவுக்கு இருந்தது. அதனால் அப்போதும் சரி, இப்போதும் சரி, கட்டணமே வாங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை” என்றார்.
தொழுநோய் மருத்துவத்தில் பல பிரிவுகள் உள்ளன. சார்வாகன் கைகளை சரி செய்யும் பிரிவில் உலகப் புகழ் பெற்ற நிபுணராக விளங்கினார்.
சார்வாகன் அதில் சில முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தார். அதாவது, தொழுநோய் குணமான பின் கை விரல்களை மீண்டும் பழையபடிக்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகள் சார்வாகன் கண்டு பிடித்தது. இதை விளக்கும் பொருட்டு உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்திருக்கிறார் சார்வாகன்.
எதையுமே எழுதியதில்லை. காரணம், தமிழ்ப் பதிப்புச் சூழல். யாரும் அவர் எழுத்தைப் பதிப்பிக்கத் தயாராக இல்லை. சார்வாகனுக்கும் இந்தக் கதைகளை இந்தச் சமூகத்துக்குக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் இல்லை.
எல்லாவற்றையும் என்னிடம் சொன்னார்.
அதில் ஒரு கதை இது:
ஒரு கருத்தரங்குக்காக சார்வாகன் மெக்ஸிகோ போனார். ஓய்வு நேரத்தில் ஒரு தொழுநோய் மருத்துவமனையைப் பார்வையிட்டார். அப்போது அங்கேயிருந்த ஒரு பெண் மருத்துவர் ஒரு தொழுநோயாளியின் கை விரல்களை சரி செய்து கொண்டிருந்தார். அது பற்றி சார்வாகனிடம் அந்தப் பெண் விளக்கினார்.
“இந்த அற்புதமான வழிமுறையைக் கண்டு பிடித்தவர் ஸ்ரீனிவாசன் என்ற அறிஞர். அவரால்தான் இந்த மனிதன் தன் கைவிரல்களைத் திரும்பப் பெற்றிருக்கிறான்.”
அந்தப் பெண் மருத்துவரின் குரல் தழுதழுக்கிறது.
அந்த ஸ்ரீனிவாசன் நான்தான் என்கிறார் சார்வாகன்.
அப்போது அந்தப் பெண்ணுக்கும் அந்த நோயாளிக்கும் எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இப்படி ஒரு நூறு கதைகள் சொன்னார் சார்வாகன்.
எதையுமே அவர் எழுதியதில்லை.
ஆகவே, எழுத்தாளனைச் சந்தித்து அவரோடு நேரில் உரையாடுவது போன்ற அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இல்லை, இப்படிப்பட்ட சந்திப்புகளால் வாசகருக்கு ஏற்படும் லௌகீகமான பயன் என்ன?
ஏனென்றால், இப்போதெல்லாம் நாம் எதைச் செய்தாலும் அதனால் ஒரு பயன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் இல்லையா?
அதற்கும் என்னிடம் பதில் இருக்கிறது. இதைப் படியுங்கள்:
காட்சி ஒன்று.
இன்று (27.10.2024) காலையில் அடையாறு காந்தி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள சங்கீதா உணவகத்தில் காஃபி குடித்து விட்டு காதுகளில் இருந்த ஏர்பாடின் மூலம் லயனல் ரிச்சியைக் கேட்டபடி என் நடைப் பயிற்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் உணவகத்தில் கடும் கூட்டமும் சாலைகள் காலியாகவும் இருந்தன. பின்னால் சைக்கிளைத் தள்ளியபடி வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் என்னைத் தொட்டு நிறுத்தினார். நான் காதுகளில் இருந்த ஏர்பாடை எடுத்து விட்டு அவரை ஏறிட்டுப் பார்த்தேன்.
அடையாறு வந்த பிறகு என் ஒரு மணி நேர நடைப் பயிற்சியில் இரண்டு பேராவது என்னை அடையாளம் கண்டு கொண்டு ஹலோ சொல்கிறார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சின்மயா நகரில் வசித்த போது இப்படி ஒரு முறை கூட நடந்ததில்லை. பிறகு மைலாப்பூர் வந்த போது வாரம் ஒருமுறை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வார். அடையாறில் தினமும். (ஒரு சமூகவியல் எதார்த்தம்: இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சின்மயா நகரில் பிராமணர்கள் இல்லை. மைலாப்பூர் நடுத்தர வர்க்க பிராமணர் பகுதி. அடையாறு காந்தி நகர் உயர் வர்க்க பிராமணர் பகுதி. இதிலிருந்து கிடைக்கும் தரவுகளை நீங்களே பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.)
இன்றைய சம்பவத்தைத் தொடர்வோம். சைக்கிளில் வந்தவர் நிச்சயம் பிராமணர் இல்லை. தோற்றத்தில் தெரியும். நெற்றியில் குங்குமமும் விபூதியும். வயது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து.
“நீங்க சாருலதாதானே?”
”இல்லை, சாரு நிவேதிதா.”
“ஹி ஹி. ஆமாம். சாரு நிவேதா. உங்களை நான் முன்பெல்லாம் டிவியில் பார்த்திருக்கிறேன். இப்போது உங்களுடைய ஹெல்த் ப்ராப்ளம்ஸ்னால கலந்திருக்கிறது இல்ல போல.”
“ம்…”
”நான் ஐஓபியில் மேனேஜராக இருக்கிறேன். சமீபத்தில்தான் என் அம்மா இறந்தார்கள். அஸ்தியை பே ஆஃப் பெங்காலில் கரைத்தேன். இதற்கிடையில் என்னை மங்களூருக்கு மாற்றல் செய்து விட்டார்கள்.”
“அடப்பாவிகளா! சென்னையிலிருந்து மங்களூர் ரொம்பத் தொலைவு ஆயிற்றே?”
(நான் ஸெலிக் பட ஹீரோ மாதிரி. யாரோடு பேசுகிறேனோ அவர் மாதிரியே ஆகி விடுவேன்.)
“ஆமாம் சார். என்ன கொடுமை பாருங்கள். சென்னையிலிருந்து மங்களூருக்கு. நான் விடுவேனா? பயங்கரமாக ஃபைட் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.”
“விடாதீங்க. இது அநியாயம். கடைசி வரை ஃபைட் பண்ணுங்க.”
”சரி சார், இப்படியே நடந்துகிட்டே பேசிட்டுப் போகலாமா?”
“இல்லிங்க, எனக்கு வேற வேலை இருக்கு. நான் இந்தப் பக்கமா கெளம்பறேன்.”
ஐஓபி மாதிரி ஒரு வங்கியில் மேனேஜராக இருக்கும் ஒருவரே இப்படி நடுத்தெருவில் ஒருத்தனை நிறுத்தி அவனை “ரேப்” பண்ணுகிறார் என்றால் மற்ற சாதாரணர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். தெருவில் நடந்து கொண்டிருக்கிறேன் என்ற ஒரே காரணத்துக்காக அவரோடு நான் பேசியபடி நேரம் செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதுவும் உரையாடல் அல்ல. அவர் கதையை நான் கேட்க வேண்டும். இவர் மனநோயாளி அல்லாமல் வேறு என்ன? நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.
உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பட்ட மனநோயாளிகளாக மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சொல்கிறேன்.
காட்சி இரண்டு
தோக்யோவில் ரொப்பங்கியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். காரை முத்து என்ற நண்பர் செலுத்திக்கொண்டிருக்கிறார். அவர் மது அருந்த மாட்டார். அதுதான் எங்களுக்கு நல்லது. காரில் அவரைத் தவிர நாங்கள் மூவர் இருந்தோம். மூவரும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்.
முத்து என்னிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்குள் வேறொரு நடைமுறை விஷயம் குறுக்கிட்டது. அதை அவசரமாக சரி செய்தாக வேண்டும். பிரச்சினை தீர்க்கப்பட்டது. பேச்சு வேறு திசையை நோக்கிச் சென்றது. பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று.
முத்து தான் கேட்ட கேள்வியைத் தொடரவில்லை. அப்படியே அதை விட்டு விட்டோம்.
நான் முத்துவிடம் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.
Listening is an art. நீங்கள் கேட்ட கேள்வியை இடையில் குறுக்கிட்ட பிரச்சினையைத் தீர்த்த பிறகு தொடர்ந்திருக்க வேண்டும். தொடரவில்லை. இனிமேல், இந்த நிமிடத்திலிருந்து இதைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் இது உதவும். இது ஒரு மிகப் பெரிய management conceptஉம் கூட. பணம் சம்பாதிக்கவும் கூட இந்த “கேட்கும் கலை”யை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக என்னைத் தவிர வேறு யாரையும் இப்படிக் கண்டதில்லை.
பிறகு ஒரு பதினைந்து நிமிடங்கள் வேறு ஏதேதோ பேச்சில் நேரம் கழிந்தது.
நான் ஒரு முக்கியமான விஷயத்தை முத்துவிடம் சொல்ல ஆரம்பித்தேன். ஆர்வமுடன் கேட்டார்.
இடையில் ஒரு விஷயம் குறுக்கிட்டது. குறுக்கிட்ட விஷயத்தைச் செய்து முடித்தோம்.
நான் ஆரம்பித்து, பாதியில் விட்டிருந்த விஷயத்தைத் தொடருங்கள் என்று முத்து சொல்வார் என்று மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்தேன். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தேன். ஏனென்றால், சற்று முன்னர்தான் அவரிடம் நான் அது பற்றிய ஒரு பாடத்தை அளித்திருந்தேன்.
கடைசி வரை – அதாவது அரை மணி நேரம் ஆகியும் முத்து கேட்கவில்லை.
அதனால் முத்துவுக்காக நான் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தேன்.
மிலரப்பா என்பவர் ஒரு திபெத்திய ஞானி. அவர் ஞானி ஆவதற்கு முன்னால் – அவருக்கு ஐந்து வயது இருக்கும்போது அவர் தந்தை இறந்து விட்டார். தந்தைக்கு விவசாய நிலம் இருந்தது. ஆனால் மிலரப்பாவின் அன்னையால் அதைப் பராமரிக்க முடியாது. அதனால் இறப்புச் சடங்கின்போது அந்த நிலங்களைத் தன் கணவரின் தம்பியிடம் ஒப்படைத்த மிலரப்பாவின் அன்னை, மிலரப்பா இளைஞனாக வளர்ந்தவுடன் அதை அவனிடம் கொடுத்து விடும்படி கேட்டுக் கொள்கிறார். மிலரப்பாவின் சித்தப்பன் அந்த நிலங்களின் மூலம் நல்ல செல்வந்தனாகிறான். மிலரப்பாவின் அன்னைக்குக் குந்துமணி நெல் கூட கொடுக்கவில்லை. மிலரப்பாவும் அவர் அன்னையும் கூலி வேலை செய்து பிழைக்கிறார்கள்.
மிலரப்பா இளைஞனாக ஆகி விட்ட சடங்கின் போது நிலங்களைத் திருப்பிக் கேட்கிறார் மிலரப்பாவின் அன்னை. அப்படியெல்லாம் எந்த நிலமும் நீ தரவில்லை என்கிறான் மிலரப்பாவின் சித்தப்பன்.
மிலரப்பாவின் அன்னை தன் மகனிடம் உன் சித்தப்பனையும் அவன் குடும்பத்தையும் நீ நிர்மூலமாக்க வேண்டும் என்று ஆணையிடுகிறாள்.
அதற்குள் மிலரப்பா சில மந்திர தந்திரங்களைக் கற்ற்றிந்திருக்கிறார். அந்த மந்திரங்களின் மூலம் தன் சித்தப்பனின் குடும்பத்தையே அழித்து விடுகிறார். முப்பதுக்கும் மேற்பட்ட பிணங்கள் விழுகின்றன.
அன்னையின் ஆணையைப் பூர்த்தி செய்து விட்ட மிலரப்பாவுக்கு லௌகீக வாழ்க்கை வெறுத்துப் போய் ஞானியாக வேண்டும் என்று கிளம்புகிறார். அவ்வாறு தன்னை ஒரு ஞானியாக மாற்றுவதற்கான தகுதி உடைய ஒரு குரு அவருக்குக் கிடைக்கிறார்.
மிலரப்பாவை ஒரு சிறிய கல்வீடு கட்டச் சொல்கிறார் குரு. ஆனால் உதவியாள் இல்லாமல் மிலரப்பா மட்டுமே கட்ட வேண்டும்.
ஆறு மாதம் கழித்து மிலரப்பா குருவிடம் சென்று கல்வீட்டைக் காண்பிக்கிறார்.
”இல்லை, நான் சொன்னபடி நீ இந்த வீட்டைக் கட்டவில்லை. அதனால் இதை இடித்து விட்டு மேற்குத் திசையில் மறுபடியும் ஒரு கல்வீட்டைக் கட்டு” என்கிறார் குரு.
என்ன விஷயம் என்றால், இடையில் சில தினங்கள் அங்கே வந்த ஒரு மனிதனின் உதவியைப் பெற்றுக்கொண்டார் மிலரப்பா.
அதனால் குரு சொன்னபடி மீண்டும் ஒரு கல்வீட்டைக் கட்டுகிறார் மிலரப்பா.
ஆறு மாதம் கடந்து குருவை அழைத்து வந்து வீட்டைக் காண்பிக்கிறார். இதையும் இடித்து விட்டு வேறு இடத்தில் வேறொரு கல்வீடு கட்டு என்கிறார் குரு.
”ஏன் குருவே? இந்த வீட்டைத் தாங்கள் சொன்னபடிதானே கட்டினேன்?”
“இல்லை, இதை நான் கிழக்குத் திசையில் கட்டச் சொன்னேன். நீ மாற்றிக் கட்டியிருக்கிறாய்.”
குரு பொய் சொல்கிறார் என்று தோன்றுகிறது மிலரப்பாவுக்கு. ஆனாலும் வேறு வழியில்லாமல் அவர் சொன்னபடி மீண்டும் ஒரு கல்வீடு கட்டுகிறார்.
ஆறு மாதம் கடந்து அந்த வீட்டை குருவிடம் காண்பிக்கிறார்.
”நான் வீடே கட்டச் சொல்லவில்லையே, ஏன் கட்டினாய்?” என்கிறார் குரு.
மனம் நொந்து போன மிலரப்பா குருவிடம் சொல்லிக்கொள்ளாமலேயே அங்கிருந்து தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டு விடுகிறார்.
இடையில் ஒரு மணல் புயல் வந்ததால் பயணத்தைத் தொடர முடியாமல் அங்கேயே தங்கி விடுகிறார்.
அதற்குள் மிலரப்பா காணாமல் போய் விட்டதாக குருவின் மகன் வந்து சொல்கிறான். குரு, தன் மகனையே அனுப்பி மிலரப்பாவை அழைத்து வரச் சொல்கிறார்.
மிலரப்பாவை அழைத்து வருகிறான் மகன்.
நான்தான் புயலை வரவழைத்து உன்னைத் தடுத்தேன் என்கிறார் குரு.
அப்படியானால் என்னை ஏன் இப்படிச் சித்ரவதை செய்தீர்கள் என்கிறார் மிலரப்பா.
நீ ஞானம் பெறுவதற்குத் தகுதியானவன். ஆனால் அதைப் பெறுவதற்கு நீ இன்னும் பல ஜென்மங்களை எடுக்க வேண்டும். இந்த ஜென்மத்திலேயே நீ ஞானி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். நீ செய்த முப்பதுக்கும் மேற்பட்ட கொலைகளின் கர்மாவை எப்படித் தீர்ப்பது? அதற்காகத்தான் உன்னை வதைத்தேன். நீயோ கடைசி நேரத்தில் பொறுமை இழந்து ஓடி விட்டாய். ஆனால் இப்போது நீ ஞானம் பெறுவதற்குத் தயாராகி விட்டாய்.
அதற்குப் பிறகு அந்த குரு “நீ பெரும் ஞானியாக வேண்டியவன், அந்த அளவுக்கு உனக்குக் கற்பிக்க எனக்குத் தகுதியில்லை” என்று சொல்லி, ஒரு குருவின் இடத்தைக் காண்பிக்கிறார். அவர்தான் இந்தியாவிலிருந்து சென்ற போகர். மிலரப்பா போகரிடமிருந்து ஞானம் பெற்ற பிறகு தன் குரு பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். மிலரப்பாவின் வரலாறும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தக் கதையை முத்துவிடம் சொன்ன நான் “இதை ஏன் உங்களிடம் சொன்னேன் தெரியுமா?” என்று கேட்டேன்.
தெரியவில்லையே என்றார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் கேட்கும் கலை பற்றிச் சொன்னேன் இல்லையா?
ஆமாம்.
அதற்குப் பிறகு நான் ஒரு கதையைத் தொடங்கினேன். ஒரு பிரச்சினை வந்தது. பிரச்சினை முடிந்தது. கதையைச் சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்கவில்லை.
இனியாவது நீங்கள் கேட்கும் கலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படி நான் முத்துவைத் தவிர வேறு யாரிடமும் சொன்னதில்லை. ஏன் முத்துவிடம் மட்டும் சொன்னேன்? முத்து மட்டுமே அதைக் கற்றுக் கொள்வார் என்று எனக்குத் தெரிந்தது.
உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
உங்களோடும் உங்கள் குடும்பத்தாரோடும் பிள்ளைகளோடும் சில தினங்கள் தங்கி நான் பேசுகிறேன். உரையாடுகிறேன். அவர்கள் வாழ்வில் மாற்றம் பிறக்கும். அவர்கள் வாழ்வு மேன்மையுறும்.
எத்தனை தினங்கள் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
உங்களுடனே நான் தங்குவேன்.
அல்லது, நீங்களே கூட உங்களுக்குப் பிரியமான இடத்தில் என்னைத் தங்க வைத்து நாம் உரையாடலாம்.
கட்டணம் ஒரு லட்சம் ரூபாய். என்னை வரவழைக்கும் பயணச் செலவையும் நீங்கள் ஏற்க வேண்டும்.
பொதுவாக ஆன்மீகவாதிகளைத்தான் இப்படி அழைப்பது வழக்கம். அதற்கு பத்து லட்சம் இருபது லட்சம் என்று கொடுக்க வேண்டும். அவர்களை நீங்கள் போய் சந்தித்தால் சில ஆயிரங்கள்தான். ஆனால் அவர்களே வந்தால் பல லட்சங்கள். அதனால் என்ன பயன்? அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாம். அவ்வளவுதான்.
அடுத்து, பிரபலங்களையும் அப்படி தங்கள் வீட்டுக்கு அழைக்கிறார்கள்.
தற்சமயம் அப்படிப் பிரபலம் ஆகியிருப்பவர் டோலி சாய்வாலா. ஒரு காலத்தில் இந்தியா என்றால் வெளிநாடுகளில் இரண்டு பிரபலங்களின் பெயர்களைச் சொல்வார்கள். காந்தி, அமிதாப் பச்சன். பிறகு அது ஷாருக் கானாக மாறியது. இப்போது அது டோலி சாய்வாலா என்று ஆகியிருக்கிறது.
சாய்வாலாவின் சிறப்பு என்ன? ரஜினி ஸ்டைலில் டீ போடுகிறார். அந்த ஸ்டைலில் டீ போடுவதற்கு இந்தியாவில் ஆயிரம் பேர் இருப்பார்கள். டோலி சாய்வாலாவை தனித்துக் காண்பிப்பது அவர் பார்ப்பதற்கு Johnny Depp மாதிரி இருக்கிறார். Of course, poor version of Johnny Depp. ஒரு சாய்வாலா ஜானி டெப் மாதிரி அலங்கரித்துக் கொள்வது கொஞ்சம் விசேஷமானதுதான். அதனால்தான் பில் கேட்ஸ் சாய்வாலாவிடம் வந்து டீ குடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இப்போது சாய்வாலாவை அரபி ஷேக்குகள் பல லட்சங்கள் கொடுத்துத் தங்கள் அரண்மனைகளுக்கு வரவழைக்கிறார்கள். சாய்வாலா அணியும் காலணிகளே பல லட்சம் பெறும். அவர் அணிந்திருக்கும் நகைகளும் அப்படியே. பிரபலமான மாடல்களும், நடிகர்களும் அவரைத் தங்கள் இல்லத்துக்கு அழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர் அப்படிச் செல்வதற்குப் பல லட்சங்களை கட்டணமாகப் பெறுகிறார்.
இதனால் கிடைப்பது என்ன?
சாய்வாலாவுடன் ஒரு புகைப்படம்.
காரணம், சாய்வாலாவின் பிராபல்யம்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறீர்கள். உண்மையில் கோடிக் கணக்கில். ஆனால் இந்தியக் கல்வி பணம் சம்பாதிக்க மட்டுமே கற்பிக்கிறது. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு வங்கி அதிகாரியைப் போன்ற குடிமகன்களாக உங்கள் பிள்ளைகளும் ஆக வேண்டுமா? அதைத்தான் நம் கல்வி நிறுவனங்கள் செய்கின்றன.
ஆனால் நான் வழங்கும் ஞானமும் அறிவும் உங்கள் பிள்ளைகளின் ஞானத்தையும் – அதே சமயம் லௌகீக வாழ்வையும் மேம்படுத்துகின்றன. அதற்கான கட்டணம் ஒரு லட்சம் ரூபாய்.
வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்கள் எனக்கான பயணச் செலவையும் வீசா ஏற்பாட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஆஹா, கட்டுரை ரொம்பவும் சீரியஸாக, ஏதோ போதனாசாலை அறிவிப்பு போல் போய் விட்டது. இதெல்லாம் வேண்டாம், நண்பர்களோடு ஜாலியாக சந்திக்கலாம் என்றாலும் விருப்பத்துடன் வருகிறேன். நாலைந்து நண்பர்கள் கூடி ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு மூன்று தினங்கள் எங்காவது ஒரு மலை வாசஸ்தலத்தில் தங்கிப் பேசலாம். கட்டணத்தை மறந்து விடாதீர்கள். இதையே வெளிநாடு வாழ் வாசகர்களும் என் அறிவிப்பாக ஏற்றுத் திட்டமிடுங்கள். வருகிறேன்.
என் பயணச் செலவுகளுக்கும் மொழிபெயர்ப்புப் பணிகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. அதனால்தான் இந்த சந்திப்புத் திட்டம். யார் முதலில் அழைக்கிறார்கள் என்பதைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com