ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பை அமெரிக்க லெஸ்பியன் மற்றும் ட்ரான்ஸ்கிரஸிவி எழுத்தாளர் Kathy Ackerக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன். நீங்கள் எங்கெல்லாம் கேத்தியின் பெயரைத் தொட்டாலும் என் பெயரும் கூடவே வரும். கேத்தியின் வாழ்க்கை மிகவும் புரட்சிகரமானது. கலகத்தன்மை கொண்டது. அவள் அளவுக்குக் கலகம் செய்த பெண் எழுத்தாளர்கள் கம்மி. ஆனால் அவள் எழுத்து மிகவும் சலிப்பூட்டக் கூடியதாக இருக்கும்.
எனவே கேத்தி ஆக்கர் என்ற பெண் ஆளுமை, அவளது கலகம் எனக்குப் பிடிக்கும் என்றாலும் அவள் எழுத்து எனக்கு உவப்பானது அல்ல.
ஆனால் எனக்குப் பிடித்த பெண் எழுத்தாளர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் Alejandra Pizarnik. அர்ஜெண்டீனிய எழுத்தாளர். அவரது சிறுகதையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
ஆனால் இப்போது வாழும் பெண் எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்த ஒரே ஒரு பெயரைச் சொல்ல வேண்டும் என்றால் யாரைச் சொல்வேன்?
ஆனால் உடனே சொல்லி விட முடியாது. காரணம், அவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்து ஐரோப்பிய தேசம் ஒன்றில் வாழ்பவர். அவர்தான் எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று சொல்லி விட்டால், உடனே அவரை அங்கே சமூகப் பிரஷ்டம் செய்து விடுவார்கள். ஏற்கனவே மேற்கு ஐரோப்பிய நாடுகள் பனியில் மூழ்கிக் கிடப்பவை. யாரும் யாரோடும் பேச மாட்டார்கள். உறவாட மாட்டார்கள். இலங்கை போன்ற ஒரு சொர்க்கத்தை விட்டுவிட்டு தேசம் கடந்து வாழும் நிலை. அகதி வாழ்க்கை. இதற்கிடையில் சமூகப் பிரஷ்டம் வேறு செய்து தொலைத்து விட்டால் முடிந்தது கதை.
ஆனாலும் என்னுடைய எழுபத்தோரு வயதில் கூட ரகசியங்களைப் புதைத்து வைக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. இப்போது சொல்லி விடுகிறேன்.
தில்லை என்பது அவள் பெயர். அவளுடைய நாவல் இப்போது வெளிவர இருக்கிறது. ஏற்கனவே கவிதைகளையும் உரைநடையையும் படித்து பிரமித்திருக்கிறேன். இப்போது நாவல். இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தில்லை என் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை. விட்டு விட்டேன். நாவலுக்காக. இப்போது நாவல்.
நாவல் பற்றி தில்லை எழுதியிருப்பது:
‘தாயைத்தின்னி’ என்பது ஒருவகையில் நானாகவும், நானல்லாமலும் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தின் வாழ்வில் நடந்தவைகள் மட்டுமல்ல. அத்தோடு நாவலுக்குரிய புனைவுகளும் இணைந்த ஒன்று. சொல்ல வேண்டிய கதையா? அல்லது மறைத்தேவிட வேண்டிய சம்பவங்களின் தொகுப்பா? எவை என்று புரிந்துகொள்ளும் வாய்ப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன். என்னைக் கேட்டால், பலமுறை மனம் சொன்னது, சொல்லவே வேண்டியதில்லை என்று. இன்னும் பல முறை சொன்னது சொல்லியே தீரவேண்டிய சம்பவங்கள் என்று. இந்த இரண்டு மனநிலையையும் இணைத்துத்தான் இறுதி முடிவை எடுத்தேன்.
சொல்லத் தேவையில்லை என்ற மனதின் விருப்பங்களை நிறைவேற்ற பல சம்பவங்களை மறைத்துவிட்டேன். சொல்லியே தீரவேண்டும் என்ற மனதின் விருப்பங்களை நிறைவேற்ற பல சம்பவங்களை சொல்லியுமிருக்கிறேன். சொல்லுவதற்கும் தவிர்த்துவிடுவதற்கும் இடைப்பட்ட போராட்டத்தில் நான் வெற்றியடைந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், நான் நெடுநாளாக எழுதியே ஆகவேண்டும் என நினைத்த கதையொன்றை இன்று எழுதியிருக்கிறேன் என்று மட்டுமே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
தவிர்த்தும் வெளிப்படுத்தியும் இந்த நாவலில் இருக்கும் கதை தாயைத்தின்னியினுடையது என்று மட்டும் நினைக்க வேண்டாம். எனக்குள் வசித்த மூவரில் ஒருத்தியான தாயைத்தின்னிதான் கதைகளில் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறாள். மற்றைய இருவரும் தேவையான அளவில் வந்துபோகிறார்கள். அவர்கள் தங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை போலும்.
தாயைத்தின்னி துணிச்சலானவள். அவளின் துணிச்சல் எனக்குள் வசிக்கும் பிற கதாபாத்திரங்களுக்கு சாத்தியமில்லை. இந்த நாவலினூடாக தாயைத்தின்னி உங்களை சந்திப்பாள். மரங்களுடனும், வெற்று அறைகளுடனும் அவள் பேசித்திரிஞ்ச கதையை ஒரு நாவலுக்குள் புதைத்து வைத்திருக்கிறாள்.