ஆன்லைன் கோஷ்டி

நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு வாழ்த்துச் செய்தியைப் பார்த்தேன். என்னுடைய நண்பர் ஒருவருக்கு என்னுடைய இன்னொரு நண்பர் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியிருந்தார். இத்தனைக்கும் வாழ்த்து அனுப்பிய நண்பர் மிக நெருக்கடியான பல வேலைகளைச் செய்து வருபவர். ஒரு ஐந்து ஆள் வேலையை அவர் ஒருவரே செய்கிறார். சரியாகத் தூங்கக் கூட நேரம் இல்லை. ஃபேஸ்புக் பற்றிய பேச்சு வரும்போது கூட “எனக்கெல்லாம் எங்கே சாரு ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிக்க நேரம் இருக்கிறது? சும்மா எட்டிப் பார்ப்பது கூட இல்லை” என்று அடிக்கடி சொல்வார். அதுவும் தவிர அவர் வாழ்த்து அனுப்பிய நண்பர் இவருக்கு நெருக்கமான நண்பரும் இல்லை. இருந்தாலும் ஃபேஸ்புக்கில் வாழ்த்து.

இதெல்லாம் ஆன்லைன் கோஷ்டி என்றார் சீனி. ஆம். இப்படி ஆன்லைனில் வரிந்து கட்டிக்கொண்டு (ஒன்றுக்குமே உருப்படாத) வேலை பார்க்கும் கோஷ்டிகள் நிஜ வாழ்வில் ஒரு வேலையும் செய்வதில்லை. எங்கள் வாசகர் வட்டத்தில் ஒரு நண்பர் இருந்தார். (இப்போது இல்லை.) எந்த வேலை சொன்னாலும் செய்ய மாட்டார். ஆனால் ஃபேஸ்புக்கில் பேய் மாதிரி காமெண்ட் போட்டுக்கொண்டிருப்பார்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். ஃபேஸ்புக்கில் எனக்கு 4500 நண்பர்கள் உண்டு. இதில் நாலாயிரம் பேர் பெண்கள். காரணம், நான் ஒரு ஆண் என்பதுதான். இந்த நாலாயிரம் பேரில் ஒரு ஐநூறு பேரை மெஸெஞ்ஜரில் தொடர்பு கொண்டு க்ராஸ்வேர்ட் போட்டியில் எனக்கு வாக்கு அளிக்கக் கேட்டுக் கொண்டேன். தனித்தனியாக. இதில் ஐம்பது பேரிடமிருந்துதான் வாக்கு அளித்ததாக பதில் வந்தது. இதை நான் ஒரு கள ஆய்வு போல் செய்தேன். ஆன்லைனில் என்னதான் நடக்கிறது என்பதற்காக இதைச் செய்தேன். மீதி 450 பேரிடமிருந்து ஒரு வார்த்தை பதில் இல்லை. இந்த ஆன்லைன் செயல்வீரர்களில் ஆண் பெண் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். ஆன்லைனில் மட்டுமே இயக்கம். நிஜத்தில் பூஜ்யம்.

அதனால் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். டிசம்பர் 18 அன்று என் பிறந்த நாளில் யாரும் எனக்கு ஆன்லைனில் வாழ்த்து அனுப்ப வேண்டாம். இதை நான் ஒருவித விரக்தி மனநிலையில் எழுதுவதாகப் புரிந்து கொள்ளுங்கள்.

ஏன் இந்த விரக்தி?

ரமலான் மாதத்தில் நோம்புக் கஞ்சி கிடைக்கும். எனக்கு நோம்புக் கஞ்சி என்றால் உயிர். இருபத்தைந்து வயது வரை நாகூரில் வளர்ந்தவன். மைலாப்பூர் அப்பு தெருவில் வாழ்ந்த பத்து ஆண்டுகளில் எனக்கு ரமலான் மாதம் முழுவதும் நோம்புக் கஞ்சி கிடைத்தது. காரணம், நான் வசித்த தெரு முஸ்லீம்கள் வசிக்கும் தெரு. அதிலும் என் வீட்டு ஓனர் ஒரு அற்புதமான மனிதர். அவர் நான் வசித்த வீட்டுக்கு எதிர் வீட்டிலேயே இருந்ததால் தினமும் அனுப்பி விடுவார்.

பிறகு சாந்தோம் வந்ததும் எல்லாம் நின்று போனது. ஒரு நண்பர் இருக்கிறார். எந்த இலக்கிய விழா என்றாலும் நேரில் வந்து என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் ரமலான் மாதத்தில் எனக்கு ஒரே ஒரு நாள் நோம்புக் கஞ்சி அனுப்ப வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை. சமீபத்தில் மருத்துவர் பாஸ்கரன் நிகழ்ச்சிக்குக் கூட வந்து என் பக்கத்தில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார். நல்லவேளை, புகைப்படம் எடுக்கவில்லை. எடுக்க அழைத்திருந்தால் நோம்புக் கஞ்சி பற்றி சொல்லியிருப்பேன். தப்பினார்.

இங்கேயும் மத வித்தியாசம் இல்லாமல், எப்படி மேலே சொன்னபடி பால் வேறுபாடு இன்றி ஆண் பெண் எல்லோருமே ஆன்லைன் கோஷ்டியாகத் திரிகிறார்களோ அதேபோல், இஸ்லாமியர், கிறித்தவர், ஹிந்து என்று அனைத்து மதத்தினருமே இன்று ஆன்லைன் கோஷ்டியாக மாறி விட்டார்கள். தீபாவளிக்கும் எனக்கு எந்தப் பலகாரமும் வருவதில்லை. அதற்குக் காரணம், எல்லோரும் கடையிலிருந்து வாங்கிப் பழகி விட்டார்கள். எதற்கு சாருவுக்குக் கடையில் வாங்கிக் கொடுக்க வேண்டும்? அவரே வாங்கிக் கொள்வார். அதேபோல் ரமலான் பண்டிகைக்கும் பிரியாணி வராது. ஆனால் நான் ஒரு அரசியல்வாதியாக இருந்தால், நான் பிஜேபி கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் பிரியாணி வரும். என் நண்பர் ஒருவர் பிஜேபி அனுதாபி. எல்லோருக்கும் அவருடைய அரசியல் சார்பு தெரியும். அவர் அலுவலகத்தில் நூறு பேர் பணி புரிகிறார்கள். ரம்ஜான் பண்டிகைக்கு அந்த நூறு பேருக்கும் பிரியாணி அனுப்புவார் ஒரு இஸ்லாமிய நண்பர்.

டிசம்பர் பதினெட்டு அன்று எனக்கு ஒரு ஐநூறு பேர் வாழ்த்து அனுப்புவார்கள். ஃபேஸ்புக் மெஸஞ்ஜர் மற்றும் வாட்ஸப்பில். எல்லோருக்கும் நன்றி அனுப்புவேன். ஆனால் பிறந்த நாள் அன்று ஒரு பூங்கொத்து வராது. ஒரு கேக் வராது. ஒரு இனிப்பு வராது. எதுவுமே வராது. வெறும் வார்த்தைகள். வாழ்த்து. வாழ்த்து. வாழ்த்து. வெறும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு நான் என்ன தம்பி செய்வது? இது பற்றி நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஸீரோ டிகிரி நாவலில் வார்த்தைகளால் ஆனது வாழ்க்கை என்று ஒரு அத்தியாயமே எழுதி விட்டேன்.

இதிலெல்லாம் எனக்குப் பெரியார்தான் குரு. ஒன்றும் முடியாவிட்டால் எடைக்கு எடை வெங்காயமாவது கொடுங்கள் என்று சொல்லி விடுவார். எங்கள் ஊர்க்காரர் கருணாநிதி இன்னொரு குரு. அவருடைய பிறந்த நாளுக்கு கட்சிக்காரர்கள்தான் நிதி தர வேண்டும். எனக்குப் பெரிய நிதியெல்லாம் வேண்டாம். உங்களால் எத்தனை முடியுமோ அத்தனை அனுப்புங்கள். என்னுடைய அடுத்த பயணத்துக்கு அது உதவும். பணப் பிரச்சினையால் சீலே பயணம் ஒத்திப்போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு புத்தகத்தை சீர் செய்வதற்கு எனக்கு பதினெட்டு மணி நேரம் ஆகிறது. எழுதிய புத்தகத்தை சீர் செய்ய இத்தனை நேரம். அதுவுமே ஸ்ரீராம் ஏற்கனவே பல மணி நேரம் செலவிட்டுத் தொகுத்தது. ஆனால் அந்த 180 ரூபாய் புத்தகம் 200 பிரதி விற்றால் எனக்குக் கிடைக்கும் ராயல்டி 3600 ரூ. பத்து சதவிகிதம் ராயல்டி.

பெண்கள் தங்கள் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள். 980 விருப்பக் குறிகள். 380 இதயக் குறிகள். 180 பின்னூட்டங்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி. குறி இட்டவர்களுக்கும் கொண்டாட்டம். இப்படிப்பட்ட virtual உலகிலிருந்து நான் விலகி நிற்கிறேன். நான் சாப்பிட வேண்டும். ஊர் சுற்ற வேண்டும். எழுத வேண்டும். எல்லாமே பௌதீகச் செயல்பாடுகள். அதற்கு உங்களுடைய பௌதீக உதவி தேவை.