சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த புத்தக விழாவைப் போல் இதுவரையில் என் வாழ்வில் வேறு எந்தப் புத்தக விழாவும் எனக்கு இந்த அளவு மனநிறைவைத் தந்ததில்லை.
காரணம், இதுவரையில் நான் இளைய தலைமுறை குறித்து மிகுந்த அதிருப்தியில் இருந்தேன். இவர்களுக்குத் தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை, இலக்கியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அளவில்தான் இருக்கிறார்கள் – இதுதான் இன்றைய இளைய தலைமுறை பற்றிய என் கணிப்பாக இருந்தது. இந்தக் கணிப்பு இந்தப் புத்தக விழாவில் தவிடுபொடியாகி விட்டது. பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரையிலான இளைஞர்கள் சுமார் ஐநூறு பேர் என்னிடம் என் புத்தகங்களைக் கொடுத்து கையெழுத்து வாங்கினார்கள். இவர்களில் யாருமே என்னிடம் தொலைபேசி எண் கேட்கவில்லை. நானாகவே இவர்களிடம் பேச்சுக் கொடுத்த போது இவர்கள் என்னுடைய எல்லா நாவல்களையும் படித்திருப்பது தெரிந்தது. ஆனால் பலருக்கும் என் ப்ளாக் பற்றித் தெரிந்திருக்கவில்லை.
(மற்றபடி தினமும் குறைந்த பட்சம் ஒரு பத்து பூமர்கள் என்னிடம் தொலைபேசி எண் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். என்னிடம் ஒரு நல்ல பழக்கம் என்னவென்றால், யார் என் தொலைபேசி எண்ணைக் கேட்டாலும் ஒரு நொடியும் சுணக்கம் இன்றி கொடுத்து விடுவேன். நான் தொலைபேசியை எடுத்தால்தானே கவலைப்பட வேண்டும்?)
ஒருநாள் இரண்டு இளைஞர்கள் என் அருகிலேயே தரையில் முட்டிக்கால் போட்டு மணிக்கணக்கில் அமர்ந்திருந்தார்கள். நான் புத்தகங்களில் கையெழுத்து இடாத நேரங்களில் என்னோடு பேசினார்கள். அவர்கள் நின்றால் நானும் எழுந்து நின்று பேசுவேன், அது எனக்கு இடைஞ்சல் என்று அவர்கள் நினைத்ததாக மறுநாள் சொன்னார்கள்.
அவர்களின் பெயர் சக்திவேல் மற்றும் ரகு. மறுநாள் அவர்கள் நால்வராக வந்தார்கள். ரூபா ஸ்ரீ மற்றும் ஷ்ருதி. இதில் ரூபா ஸ்ரீ என் நூல்களுக்கு யூட்யூபில் மதிப்புரையும் செய்திருக்கிறார் என்று அறிந்தேன்.
ஸீரோ டிகிரி நாவலும், அன்பு நாவலும் தன் வாழ்க்கையை எந்த அளவு மாற்றி அமைத்தது என்பதை ரூபா ஸ்ரீ என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த போது தாங்க முடியாமல் உடைந்து அழுது விட்டார். அந்தத் தருணத்தை என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. ஒரு இருபத்திரண்டு வயதுப் பெண்ணுக்கு நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு நாவல் இந்த அளவுக்கு அர்த்தமாகியிருக்கிறது என்பதை நினைத்தபோது என் எழுத்து காலம் கடந்து வாழும் என்பது என் வாழ்நாளிலேயே நிரூபணம் ஆகிவிட்டது என்பதை உணர்ந்தேன்.
ஷ்ருதியை கூடிய விரைவில் என் மொழிபெயர்ப்பாளராக ஆக்கும் என் திட்டத்தைச் சொன்னேன். ஆர்வத்துடன் அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்தார்.
இந்த நால்வரும் என் வாசகர் வட்டத்துக்குப் புதிய வரவு.
ரூபா ஸ்ரீயின் மதிப்புரைகள்:
அன்பு நாவல் குறித்து:
பழுப்பு நிறப் பக்கங்கள் குறித்து: