புத்தக விழாவில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். வயது இருபத்து மூன்று. அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சளியும் இருமலுமாக இருந்திருக்கிறது. நான் சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு அவரிடம் சென்றிருக்கிறார். பாஸ்கரனின் மருந்தில் ஒரே மாதத்தில் அவருடைய நீண்ட காலப் பிரச்சினை சரியாகி விட்டது என்றார். சரியாகி மூன்று மாதம் ஆகிறது, திரும்ப வரவே இல்லை என்று மேலும் சொன்னார். அவருடைய மனைவிக்கு அவர் வயதுக்கு வந்த நாள் முதல் குருதிப்போக்கு நாட்களில் மட்டும் அல்லாமல் அதற்கு முன் ஐந்து நாட்கள், அந்த ஐந்து நாட்கள், அதற்குப் பிறகு ஐந்து நாட்கள் என்று வயிற்று வலியும் உடம்பு வலியும் தின்றுகொண்டிருந்திருக்கிறது. வாழ்க்கையே நரகம். நண்பர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு பாஸ்கரனிடம் செல்கிறார். “நீ எதுவும் சொல்லாதே, டாக்டரே நாடி பிடித்துப் பார்த்துச் சொல்லி விடுவார்” என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறார். அதேபோல் பாஸ்கரனும் நாடி பார்த்து அந்தப் பெண்ணின் பிரச்சினையை அக்குவேறு ஆணிவேறாகச் சொன்னதும் அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி. பிறகு மருந்து கொடுக்கிறார். ஒரே மாதத்தில் அந்தப் பெண்ணின் வாழ்நாள் பிரச்சினை சரியாகி விடுகிறது. திரும்பவும் பாஸ்கரனிடம் மருந்து வாங்கச் சென்ற போது அந்தப் பெண் பாஸ்கரனிடம் பேசும் போது அழுது விடுகிறார்.
அந்த அளவுக்கு பாஸ்கரனின் சித்த மருத்துவம் வேலை செய்கிறது. இத்தனைக்கும் பாஸ்கரனின் வயது முப்பத்தொன்றுதான். நேர்மையும், குரு பக்தியும், ஆழ்ந்த அன்புமே காரணம். சித்த மருத்துவம் பாஸ்கரனின் சொத்து அல்ல. எல்லாம் போகரும் கோரக்கரும் மற்றும் இன்னோரன்ன சித்தர்களும் பாஸ்கரனின் பரம்பரை குரு புற்று மஹரிஷியும் கண்டு பிடித்துக் கொடுத்தவை. அவற்றை நமக்குத் தரும் பணியைச் செய்கிறார் பாஸ்கரன். அவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அவரது உதவியாளரின் தொலைபேசி எண்: 78260 57789
இப்போது சென்னையில் எங்கு பார்த்தாலும் ஜுரம் ஜலதோஷம் இருமல் என்று சொல்கிறார்கள். பத்தில் எட்டு பேருக்கு இந்தப் பிரச்சினை.
இதற்கு ஒரு கைமருத்துவம் சொல்கிறேன்.
ஐந்து கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை 250 மில்லி தண்ணீரில் கொதிக்க விடுங்கள். அது கொதித்துக்கொண்டிருக்கும்போது இரண்டு ஏலக்காய், மூன்று கிராம்பு, ஒரு துண்டு இஞ்சி, மூன்று மிளகு ஆகியவற்றைப் பொடி செய்து கொதிக்கும் கொய்யா இலையோடு சேருங்கள். ஒரு ஐந்து நிமிடம் கொதித்ததும் வடிகட்டிக் குடியுங்கள். மூன்று நாள். சரியாகவில்லையானால் பாஸ்கரனை அணுகுங்கள்.