1. முதல் முத்தம்
முதல் முத்தம் தந்தபோது
அச்சம் பரவசம் கொன்றது
முதல் முத்தம் கிடைத்தபோது
உணர்வு மரத்து நின்றது
2. பயணம்
நீ, நான், நட்சத்திரம், மரம், மலை, கடல், பூமி, கருந்துளை, புழு, பூச்சி, நாய், பூனை, சிங்கம், புலி, கரடி, அரசியல்வாதி, கோடீஸ்வரன், பிச்சைக்காரன், ரேப்பிஸ்ட், ஞானி, அஞ்ஞானி – எல்லோரும் பூஜ்யத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறோம்
3. சுழற்சி
சாலை நடுவே பெருச்சாளி
கொத்தித் தின்னும் காகம்
பார்த்துச் செல்லும் மனிதர்கள்
4. இரு பூனைகள்
ஒரு பூனை புறாவிடம்
பேசிக்கொண்டிருக்கிறது
ஒரு பூனை அணிலைப் பிடித்துத்
தின்று கொண்டிருக்கிறது
5. கண்ணாடியின் மௌனம்
நிசப்தமான ஒரு
இரவின் தனிமையில்
கண்ணாடி முன் நின்று
அவள் தன் பொய்களை
ஒவ்வொன்றாக
அவிழ்த்துப்
போட்டுக் கொண்டிருக்கிறாள்
6. பின்நவீனத்துவக் காதல்
உன் பிறந்த நாள் என்ன
கண்ணே?
சொல்ல மாட்டேன்.
சரி.
7. காத்திருப்பு
ஓர் இரவுக்கு மூவாயிரம் பாட்
சலனச் சித்திரங்களில் மட்டுமே
தென்படும் அழகி
காலையில் எழுந்தேன்
எதிரே முழு ஒப்பனையுடன்
சிற்பம் போல் அமர்ந்திருந்தாள்
’என்ன ஆயிற்று?
ஏன் கிளம்பவில்லை?
மணி என்ன?’
’மணி பதினொன்று,
உன்னிடம் சொல்லிவிட்டுப்
போகலாம் எனக் காத்திருந்தேன்.
Check your purse
மறக்க முடியாத இரவு
மறக்க முடியாத மனிதன்
கிளம்புகிறேன்’
வாடிக்கை வார்த்தைதான்
ஆனாலும் திரும்பத் திரும்ப
தாய்லாந்து வருவது
இப்போது கண்ட இந்தக்
காத்திருப்புக்காகத்தான்.