ராஸ லீலா

வெள்ளிக்கிழமை இரவு செல்வகுமார் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  கருப்புசாமி, செல்வகுமார், கணேஷ் அன்பு மற்றும் அராத்து.  இரவில் பழம் மட்டுமே சாப்பிடுவது என்ற கொள்கையின்படி சுமார் இருபது கொய்யா, ஒரு டஜன் ஆப்பிள், மாதுளை, அது இது என்று மேஜை நிறைய ரொப்பி இருந்தார் செல்வா.  எல்லாம் ஒழுங்காக சீராக வெட்டி வைத்திருந்தார்.  முழுசாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.  இவ்வளவுக்கும் வீட்டில் கத்தியையே எடுக்காதவர்.  அவருடைய அன்புக்கு நன்றி.  அராத்துவிடம் கேட்டேன், ஏன் இவ்வளவு என்று.  காலையில் பாருங்கள் என்றார்.  அதிகாலை நான்கு மணி வரை பேசிக் கொண்டிருந்தோம்.  படுக்கச் செல்லும் போது பழத்தட்டுகள் காலியாக இருந்தன.

நண்பர்களைச் சந்தித்து ரொம்ப நாள் ஆகி விட்டபடியால் இந்த திடீர் சந்திப்பு.  சந்திப்பில் முக்கியமாகப் பேசிய விஷயம், செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரம் இமயமலை செல்கிறோம்.  பத்து பேர் இருந்தால் போதும்.  புதியவர்களை சேர்க்கலாமா என்றேன்.  இன்னுமா நீங்கள் திருந்தவில்லை என்று கேட்டார் கணேஷ்.  வாயை மூடிக் கொண்டேன்.  புதிதாக வந்த யாருமே தேறவில்லை.  நீங்கள் இது போன்ற பயணங்களில் கலந்து கொள்ள வேண்டுமானால், ஒன்றிரண்டு வாசகர் வட்ட சந்திப்புகளில் கலந்து கொண்டு, நாம் பழகிய பின்னர் தான் முடியும்.  திடீரென்று முடியாது.  தேறவில்லை என்பது மட்டும் அல்லாமல் கொடூரமான நரகத்தைக் கண் முன்னே காண்பித்து விட்டு செல்கிறார்கள்.  இனிமேல் எந்த சமரசமும் இல்லை.  விதிவிலக்கு, பெங்களூர் பிரஸாத்.  சொர்க்கத்திலிருந்து கழன்று விழுந்தது போல் இருந்த Toit-இல் அவருடனான சந்திப்பு இனிமையாக இருந்தது.  கூடவே அராத்துவும் கோபாலும் இருந்தார்கள்.  கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

மேலும், என்னை நேரில் சந்திக்க விரும்புகின்ற நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் நான் சந்திக்க சித்தமாகவே இருக்கிறேன்.  சந்திப்பு அவசியம்தான்.  எழுத்தாளனை வாசகன் சந்திக்கக் கூடாது என்றெல்லாம் நான் நம்பவில்லை.  எழுத்தாளனைக் கொண்டாடாத தமிழ்ச் சமூகத்தில் இது போன்ற சந்திப்புகளாவது நிகழத்தான் வேண்டும்.  ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள்.  நீங்கள் பேசுவதையெல்லாம் கேட்பதற்கு நான் ஆள் இல்லை.  பொதுவாக, நான் good listener என்று நண்பர்களிடையேயும் வாசகர் வட்டத்திலும் பேர் எடுத்திருக்கிறேன்.  என் கேட்கும் திறன் பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் அடிக்கடி சிலாகித்துக் குறிப்பிடுவார்.   ஆனால் அதெல்லாம் உரையாடலாக இருக்கும்.  சொற்பொழிவைக் கேட்பதாக இருக்காது.  நீங்கள் ஒரு சொற்பொழிவு கொடுக்க அதைக் கேட்பதற்கு என்னைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.  ஒன்றே ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டு வாருங்கள்.  உங்களால் மூன்று ஆயுளிலும் முடிக்க முடியாத புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  அப்படிப்பட்டவனிடம் வந்து அளக்காதீர்கள்.  இன்னொரு விஷயம்.  நான் ஒரு துறவியைப் போன்றவன்.  ஆசைகள் கிடையாது.  வீடு கட்ட வேண்டும்.  கார் வாங்க வேண்டும்.  பணக்காரன் ஆக வேண்டும்.  இப்படி எந்த லௌகீக ஆசையும் கிடையாது.  இலக்கிய ரீதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை மட்டுமே எனக்கு உண்டு.  வேறு எந்த ஆசையும் கிடையாது. மட்டும் அல்லாமல், உறவு பந்தம் பாசம் எல்லாவற்றையும் துறந்தவன் நான். இல்லாவிட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நட்பு முறிந்த போது எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்.  ஆனால் என்னை அது எதுவுமே செய்யவில்லை.  இதனால் நான் நட்பாக இருந்தது பொய் என்று அர்த்தமல்ல.  நட்பில் உயிரையும் கொடுப்பேன். பிரிய வேண்டுமா? போ.  போனா போ, வந்தா வா என்ற மனோபாவம்.  அதேபோல் புகழின் மீதும் ஆசை கிடையாது.  இன்னும் சொல்லப் போனால் புகழ் எனக்குப் பிடிக்காத ஒன்று.  அதனால் நம் வாழ்க்கைக்கு எந்தப் பயனும் கிடையாது.  புகழ் ஒரு தொல்லை.  அடுத்து, இது எல்லாவற்றையும் விட  உயிரின் மீதும் எனக்கு ஆசை கிடையாது.  உயிரின் மீது ஆசை இல்லாதவர்கள் என ஞானிகளையும் கொலைகார ரவுடிகளையும்தான் பார்த்திருக்கிறேன்.  இருவருக்குமே உயிர் மீது ஆசை இல்லை. எனக்கும் அப்படியே.  நாளையே மரணம் என்றாலும் அதை முத்தமிட்டு வரவேற்கும் சித்தம் உண்டு.  ஆக, இப்படிப்பட்ட ஒருவரை சந்திக்க வரும் போது இப்படிப்பட்ட ஒருவரை சந்திக்கிறோம் என்ற பிரக்ஞை வேண்டாமா?  உங்களைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்வதா?    வாயை மூடாமல் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு நண்பரை நாங்கள் யாரும் சந்திப்பதையே தவிர்த்து வருகிறோம்.  ராஜ பிளவை என்று அவருக்குப் பட்டப் பெயரும் வைத்திருக்கிறோம்.  இவ்வளவுக்கும் என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.

எனவே, வாசகர் வட்டத்தில் உள்ள நண்பர்கள் மட்டுமே இமயமலைக்கு வரலாம்.  டிக்கட் போட வேண்டும்.  விரைவில் செல்வாவிடம் பெயர் கொடுங்கள்.  ஒன்பது நாட்கள் பயணம்.  உடலுக்கு நன்கு பயிற்சி கொடுங்கள்.  என்ன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன்.  எனக்கு 61 வயது ஆகிறது.  சமீபத்தில்தான் நானும் அராத்துவும் ஜெகாவும் தேனருவி சென்று வந்தோம்.  தேனருவி செல்வது இமயம் செல்வதை விட அதிகக் கஷ்டமாக இருந்தது.  உயிரோடு திரும்புவோமா என்றே சந்தேகம் வந்து விட்டது.  ”என் பிளட் ப்ரஷரை செக் பண்ணினால் 180 இருக்கும்” என்றார் ஜெகா.  நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், “நீங்க மட்டும் போய்ட்டு வாங்க, நானும் சாருவும் இங்கயே காத்திருக்கிறோம்” என்று அராத்துவிடம் சொல்லியிருப்பார்.  நான் வாயையே திறக்கவில்லை.

தேனருவி ஒரு அற்புதமான அனுபவம்.  எழுத வேண்டும்.  நேரம் இல்லை.  ராஸ லீலா நாவலின் இரண்டாம் பதிப்பு வெகுவிரைவில் வந்து விடும்.  அச்சுப் பிழை திருத்திக் கொண்டிருக்கிறேன்.  அதை நானே தான் செய்வது வழக்கம்.  ஏனென்றால், நான் எழுதும் விஷயங்கள் தமிழுக்குப் புதியவை என்பதால் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது.  ஒரு இடத்தில் உடல் தூய்மை, கொண்டாட்டம் என்று வந்தது.  உடல் தூய்மையில் ஏதோ தவறு இருக்கிறது.  ஆனால் என்ன வார்த்தை என்று தெரியவில்லை.  மூலப் பிரதியைப் பார்க்கலாம் என்றால் கையில் ஒரு பிரதி கூட இல்லை.  பிறகு ஒரு நண்பருக்கு ஃபோன் செய்து விசாரித்தால் உடல் துய்ப்பு என்று இருந்தது.  என்னாலேயே யூகிக்க முடியவில்லை.

ராஸ லீலா – என் எழுத்தின் உச்சம்.  ஆனால் பேசப்படவே இல்லை.  யாருக்கும் தெரியாது.  பிரதிகளும் கிடைக்கவில்லை.  உலகின் முக்கியமான நூறு நாவல்கள் என்று பட்டியல் இட்டால் ராஸ லீலா அதில் இடம் பெறும்.  இதை நான் பெருமையாகச் சொல்லவில்லை.  இதைச் சொல்லும் போது நான் ஒரு வாசகன் மட்டுமே.  இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை.  கஸான்ஸாகிஸின் ஸோர்பா தெ க்ரீக் எப்படி உலக இலக்கியத்தில் ஒரு முக்கியமான நாவலோ அப்படியே ராஸ லீலாவும்.

நான் என்னைப் பற்றி, ஸல்மான் ருஷ்டி, வி.எஸ். நைப்பால், தருண் தேஜ்பால், கஸான்ஸாகிஸ் போன்ற எழுத்தாளர்களுக்குச் சமமாகவே நினைக்கிறேன்.  சொல்லப் போனால் தஸ்தயேவ்ஸ்கி, ஆல்பர் கம்யு, மிஷெல் வெல்பெக் (Michelle Houllebecq), தாஹர் பென் ஜொலோன், Elfriede Jelinek, சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி, Jersy Kosinsky போன்ற எழுத்தாளர்களை விட நான் சிறந்த எழுத்தாளன்.  என்னால் எழுதவே முடியாத எழுத்தை எழுதியவர்கள் என மரியோ பர்கஸ் யோசா, தருண் தேஜ்பால் மற்றும் Milorad Pavic ஆகியோர் தான்.  யோசாவைப் போல் என்னால் கதை சொல்ல முடியாது.  Who killed Palomino Molero என்று ஒரு சிறிய நாவலைப் படித்தேன்.  ஒரு கொலையைப் பற்றி துப்பறியும் நாவலைப் போல் எழுதியிருக்கிறார்.   துப்பறியும் நாவல் அல்ல.  ஆனால் அந்தப் பாணியில் எழுதியிருக்கிறார்.  இப்படி என்னால் கதை சொல்ல இயலாது.  தருணின் Valley of Masks என்ற நாவல் ஒரு fable.  500 பக்கத்துக்கு என்னால் fable எழுதவே முடியாது.  ஆல்கெமி ஆஃப் டிஸையரில் முழுக்க முழுக்க செக்ஸ்.  ஆனால் valley-யில் செக்ஸே கிடையாது.  மிலோராத் பாவிச்?  டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸில் நீங்களே ஒன்றிரண்டு அத்தியாயங்களைப் படித்துப் பாருங்கள்.

ஒரு எழுத்தாளர் என்னிடம் சொன்னார், நான் எழுதிய 20 நாவல்களும் அக்னி என்று.  சொன்ன போது அவர் கண்களே அக்னியாய்த் தெரிந்தன.  ஆனால் அவர் நாவல்கள் அக்னி அல்ல.  அக்னி என்று அவர் நம்புகிறார்.  நான் சொல்வது இப்படி அல்ல.  நான் நிரூபித்திருக்கிறேன்.  எப்படி?  நமக்கு வேண்டியவர்கள், நம்மிடம் சேவகம் செய்பவர்கள் பரிந்துரை செய்து தில்லியிலிருந்து தூக்கியெறியும் பரிசுகளை வாங்கி அல்ல.   இந்திய ஆங்கில இலக்கியத்தின் பிரமுகர்கள் என் எழுத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.  இந்தியாவின் ஐம்பது சிறந்த புத்தகங்களில் ஸீரோ டிகிரியும் ஒன்று.  50 Books, 50 Writers.  Harper Collins.  சாருவின் சிறுகதைகளையும் நாவலையும் (ஒரே ஒரு நாவல்தான் ஆங்கிலத்தில் கிடைக்கிறது, ஸீரோ டிகிரி) படிக்கும் போது அவருடைய எழுத்து  வ்ளதிமீர் நபகோவைப் போல் இருக்கிறது என்று அட்லாண்டிக் ரெவ்யூவில் வாணி கபில்தேவ் எழுதியிருந்தார்.  வாணி சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட கவி.  ட்ரினிடாடைச் சேர்ந்தவர்.  நைப்பாலின் தூரத்து உறவினர்.  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  சும்மா, ”என் எழுத்து அக்னி” என்று சொன்ன லோக்கல் எழுத்தாளரைப் போல் நான் சொல்லவில்லை என்பதற்காக இதை எழுதினேன்.

ஆனாலும் சுஜாதாவைப் போல் என் எழுத்தை நீங்கள் மலம் என்று நினைக்கலாம்.  சாக்கடை, கழிவறை, போர்னோ என்றெல்லாம் நினைக்கலாம்.  அது உங்கள் உரிமை.  ஆனால் அப்படி நினைக்கும் அன்பர்கள் என்னை வந்து சந்திக்காதீர்கள்.  எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.  அப்படிச் சந்திப்பது நீங்களே உங்களை அவமானப்படுத்திக் கொள்வதைப் போல.   அதைச் செய்யாதீர்கள்.  என்னுடைய பழைய நண்பர்கள் சிலர் – முக்கியமாக ஒருவர் – இரண்டு மாதத்திற்கு ஒருமுறை டாஸ்மாக் பாரில் அமர்ந்து கொண்டு உங்களைச் சந்திக்க வேண்டும் சாரு என்று அழைக்கிறார்.  அவருக்கு என் எழுத்தில் ஒரு இம்மியளவு கூட மரியாதை இல்லை என்று எனக்கு நன்கு தெரியும்.  போய்ப் பார்த்தால் டாஸ்மாக் பாரிலேயே அடிதடி ஆகும்.  எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும்?  மேலும், அந்த மாதிரி வாழ்க்கையை நான் எப்போதோ துறந்து விட்டேன்.  ரஜினியின் சக கண்டக்டர்களுக்கு ரஜினியின் இப்போதைய உயரம் தெரியும்.  தெரிந்து தான் அவரைச் சந்திக்கிறார்கள்.  ஆனால் என் சக கண்டக்டர்கள் என்னை இன்னமும் கண்டக்டராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நான் என்ன செய்யட்டும் அதற்கு?

எனவே, நான் என்னை தஸ்தயேவ்ஸ்கியை விட பெரிய எழுத்தாளனாக நினைக்கிறேன்.  அதை என்னால் நிரூபிக்கவும் முடியும்.  செத்துப் போன எழுத்தாளன் எல்லாம் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மூட ஜென்மங்களோடு என்னால் வாதிட முடியாது.  ஜெயமோகனின் கீதை மொழிபெயர்ப்பும் உரையும் பாரதியின் கீதையை விட நன்றாக இருக்கிறது என்று எழுதினேன் அல்லவா?  அதே objectivity-யோடுதான் சொல்கிறேன், நான் தஸ்தயேவ்ஸ்கியை விடப் பெரிய எழுத்தாளன் என்று…  ராஸ லீலாவைப் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு இப்படித் தோன்றியது.  ராஸ லீலா ஒரு கதை.  அதே சமயம் அது ஒரு அறிவுக் கருவூலம்.  பல்வேறு உப பிரதிகளை வைத்துப் பின்னிப் பின்னிப் போய்க் கொண்டிருக்கிறது.  ராஸ லீலாவின் பிரதான கதையை நீங்கள் படித்து விடலாம்.  ஆனால் அதன் பின் குறிப்புகளை முழுசாகப் படிக்கவே முடியாது.  அதற்கு ஒரு ஆயுள் போதாது.  ஒரு உதாரணம்: பெருமாளுக்காக அவன் மனைவி மீரா உயிரோடு இருக்கும் விரால் மீனை அரிவாள்மனையில் நறுக்கும் போது ஒரு பின்குறிப்பு வருகிறது.  அது:

Behind your face I saw something purer and deeper, in which I was reflected. It was you I saw, in a dimension that included all the time I have left to live.  All those years were these, but also all those I lived without knowing you, waiting to know you.

அந்தோனியோனியின் இரவு என்ற படத்தில் எழுத்தாளனாக வரும் ஜியோவானி என்ற பாத்திரம் தன் மனைவி லிதியாவிடம் கூறுவது இது.

ஆக, நீங்கள் இந்தப் பின்குறிப்பைக் கடக்க அந்தோனியோனியின் இரவு படத்தைப் பார்க்க வேண்டும்.  இப்படிப்பட்ட உபபிரதிகள் எக்கச்சக்கமாக ராஸ லீலாவில் உள்ளன.  ஸீரோ டிகிரியை விடப் பல மடங்கு நல்ல நாவல் ராஸ லீலா. அது ஆங்கிலத்தில் வரும் போது நான் இப்போது சொல்வது உங்களுக்குப் புரியும்.

ராஸ லீலா விரைவில் உங்களுக்குக் கிடைக்கும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.