ராஸ லீலா – Penny Penny

ராஸ லீலா இரண்டாம் பதிப்பின் பிழை திருத்த வேலை முடியும் வரை ஒரு வரி கூட எழுதக் கூடாது என்று இருந்தேன்.  முடியவில்லை.  எப்பேர்ப்பட்ட சூழலில் எழுதிக் கொண்டு இருக்கிறோம் என்று மீண்டும் ஒரு மன உளைச்சல் சூழ்ந்து வந்து பீடித்தது.  வேறு எந்த மக்களுக்காகவோ வேறு எந்த சமூகத்துக்காகவோ எனக்குத் தெரிந்த தமிழ் பாஷையில் எழுதிக் கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம் மீண்டும் வந்தது.  ஆனால் என் எழுத்தை மிகக் கவனமாக வாசிக்கும் ஒரு ஆயிரம் பேர் இருக்கிறார்களே, அவர்கள் கூட இது பற்றிப் பேசவில்லையே என்று வருத்தமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

ராஸ லீலா பதினாறாம் கதையில் Penny Penny என்ற தென்னாஃப்ரிக்கப் பாடகர் பற்றிய குறிப்பு வருகிறது.  அவ்வளவுதான்.  அதைப் பற்றி யாருக்குமே கவலை இல்லையா?  அக்கறை இல்லையா?  நான் தமிழ் சினிமா ரசிகர் பட்டாளத்தைக் கேட்கவில்லையா?  நான் கொடுக்கும் இசைக் குறிப்புகளை வெகு சிரத்தையுடன் கேட்கும் வாசகர்கள் கூட இதை கவனிக்கவில்லையா?  இது போல் ராஸ லீலாவில் ஓராயிரம் உட்குறிப்புகள், உப பிரதிகள் வருகின்றன.  இதையெல்லாம் ஓரளவுக்காவது கடந்தால்தான் நீங்கள் ராஸ லீலாவை வாசித்ததாகச் சொல்ல முடியும்.  2001 டிஸம்பர் மாதம் கிறிஸ்துமஸ் வாரத்தில் பாரிஸ் நகரில் கலாமோகனின்  இல்லத்தில் அவரும் நானும் இரவு முழுவதும் ஆஃப்ரிக்க இசையையும் எம்.கே.டி.யையும் கேட்டுக் கொண்டிருந்தோம்.   பக்கத்து வீட்டு ஆள் கதவைத் தட்டி இடைஞ்சலாக இருக்கிறது என்று சொன்ன போது இந்த கிறிஸ்துமஸ் வாரத்தில் மட்டும் கொண்டாட அனுமதியுங்கள்; வாருங்கள், நீங்களும் வந்து எங்களோடு இந்த இசையைக் கேளுங்கள் என்று கலாமோகன் சொல்ல, அந்த ஆளும் எங்களோடு அமர்ந்து கொஞ்சம் Penny Penny-ஐயும் கொஞ்சம் எம்.கே.டி.யையும் கேட்டு விட்டுப் போனார்.

2001-க்குப் பிறகு நான் பென்னி பென்னியை மறந்து விட்டேன்.  ராஸ லீலாவை எழுதும் போது என் குறிப்புகளை வைத்து எழுதியதால் பென்னி பென்னியை மறக்கவில்லை.  அதற்குப் பிறகு நான் வேறோர் உலகத்துக்குப் போய் விட்டேன்.  காமரூப கதைகள்.  உயிரையும் வாழ்வையும் பணயம் வைத்து எழுதிய கதை.  போகட்டும்.  இப்போது ராஸ லீலாவில் பிழை திருத்தம் செய்யும் போது பென்னி பென்னியைப் பார்த்தேன்.  உடனே யூட்யூபில் போட்டால்… மை காட்… இப்படி ஒரு இசையா!  என்ன ரகளை! என்ன ஒரு கொண்டாட்டம்! என்ன துள்ளல்!  ராஸ லீலா படித்தவர்கள் கூட, வாசகர் வட்டத்தில் கூட ஏன் இதை யாரும் குறிப்பிடவில்லை?

Penny Penny-இன் இந்தப் பாடலைக் கேளுங்கள். பென்னி பென்னியின் புகைப்படம் பின் வரும் முதல் இணைப்பில் உள்ளது.

http://www.npr.org/2014/02/06/272638152/before-he-joined-congress-a-south-african-janitors-disco-past

https://www.youtube.com/watch?v=IUQFtd49hgA&hd=1#!

ராஸ லீலாவைப் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு இன்னொன்றும் தோன்றியது.  என்னால் இனிமேல் அப்படி ஒரு நாவலை எழுத முடியாது.  அப்போது எழுதிய சாரு இப்போது இல்லை.  இனியும் வர முடியாது.  இனிமேல் என்னால் வாரத்தில் மூன்று நாள் குடிக்க முடியாது.  ராஸ லீலா முழுவதும் ஒரே குடியும் கூத்துமாக இருக்கிறது.  பக்கத்துக்குப் பக்கம் பெண்கள் வேறு.  அந்த வாழ்க்கைக்குள் இனி என்னால் செல்லவே முடியாது.  நாவலின் ஒவ்வொரு வார்த்தையிலும் துள்ளிக் கொண்டு தெரியும் தெனாவெட்டும் இப்போது என்னிடம் இல்லை.

ராஸ லீலாவுக்கும் புதிய எக்ஸைலுக்கும் காத்திருங்கள்.  புதிய எக்ஸைலை எப்படி முடிக்கலாம் என்றே இத்தனை நாள் காத்திருந்தேன்.  நண்பர்களுக்குப் படிக்கக் கொடுத்த பிரதிகளில் முடிவு இல்லை.  அஞ்சலி என்ற பாத்திரம் முழு கற்பனை என்பதாலும் எனக்குக் கற்பனைக் கதைகள் எழுத வராது என்பதாலும் எப்படி முடிக்கலாம் என்று குழம்பி, வரும் போது வரட்டும் என்று விட்டு விட்டேன்.  பத்திரிகையில் வெளியிடத் தேவையில்லாத விஷயங்களை ரத்து செய்வதற்கு kill என்று சொல்வார்கள்.  அப்படி அஞ்சலியைக் கொன்று விடலாமா என்று யோசித்தேன்.  பிறகு அது சினிமாத்தனமாக இருக்குமே என்று காத்திருந்தேன்.  எனக்கு தியானத்தின் போதும், உறக்கத்திலும் கதை நடக்கும்.  அப்போதுதான் அஞ்சலியின் முடிவு தெரிந்தது.  நாளையே முடிவை எழுதி பதிப்பகத்திடம் கொடுத்து விடுவேன்.  அதோடு, நாவலில் மனிதர்களுக்குச் சமமாக நிறைய மிருகங்களும் வருகின்றன.  யானை, பூனை, நாய், கிளி காகம் போன்ற பட்சிகள், பாம்பு, மீன்கள் இன்ன பிற.  இதில் காகங்களை என்ன செய்வது என்று குழப்பம்.  அப்படியே விட்டு விடவும் முடியாது.  காகங்கள் ஒரு கேரக்டரோடு ரொம்பவே இணைந்து விட்டதால் அப்படியே விட்டு விட முடியாது.  காகங்களுக்கும் ஒரு நேர்த்தியான முடிவு கிடைத்தது.

The End.

 

Comments are closed.